தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஏரிகள் யாருக்குச் சொந்தம்?

வெப்ப மண்டல நாடுகளில் நீர்ப்பாசனம், வேளாண் அபிவிருத்தியின் முதுகெலும்பாகும். பாசன வசதியற்ற வேளாண்மை விளைச்சல் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவே. தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் (130.27 லட்சம் ஹெக்டேர்)

Updated On :26 செப்டம்பர் 2012, 5:53 am

வெப்ப மண்டல நாடுகளில் நீர்ப்பாசனம், வேளாண் அபிவிருத்தியின் முதுகெலும்பாகும். பாசன வசதியற்ற வேளாண்மை விளைச்சல் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவே.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் (130.27 லட்சம் ஹெக்டேர்) 52.4 லட்சம் ஹெக்டேர் சாகுபடி நிலமாகவும் 29.3 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனம் பெரும் நிலமாகவும் உள்ளது.

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து - நாடு சுதந்திரம் பெற்று வேளாண்மையில் பசுமைப் புரட்சி (1965 முதல்) ஏற்படும் வரை - ஆறுகளை நம்பி உள்ள கால்வாய்ப் பாசனமும், ஏரிப்பாசனமும் வேளாண்மையின் இரு கண்களாக விளங்கின.

இவை இரண்டின் பாசனப் பரப்பும் 1960-களில் முறையே 8.8 லட்சம் ஹெக்டேர் மற்றும் 9.1 லட்சம் ஹெக்டேர் ஆகும்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இதுமுறையே 7.3 லட்சம் ஹெக்டேர் மற்றும் 5.1 லட்சம் ஹெக்டேர் ஆகக் குறைந்துவிட்டது.

இதே சூழ்நிலையில், 1960-களில் 6.4 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்த கிணற்றுப் பாசனம் கடந்த 10 ஆண்டுகளில் 14.6 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது. இதில் ஓர் முக்கிய கேள்வி: இக்கிணறுகளுக்கு எங்கிருந்து நீர் கிடைக்கிறது என்பதே.

ஆறுகள் மூலம் நீர்பெறும் கால்வாய்களும், ஏரிகளும் இல்லையெனில் கிணற்றுப் பாசனம் தனித்து இயங்க இயலாது. விளங்கக் கூறின், ஆறுகளும், ஏரிகளும் இல்லை எனில், நீரற்ற வறண்ட கிணறுகளை மட்டுமே காண முடியும்.

தமிழகத்தில் இப்போது 41,262 ஏரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஏரிகள் கிராமப் பஞ்சாயத்துகளாலும், மீதமுள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப் பணித்துறையாலும் பராமரிக்கப்படுகின்றன. "பராமரிப்பு' என்பது இவ்விரு வகைகளிலும் வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளது.

இந்த 41 ஆயிரத்து 262 ஏரிகளில் 100 சதவிகிதம் தன்னிறைவு பெற்று அனைத்துப் பராமரிப்பு மற்றும் அந்தந்த ஏரிப்பாசன விவசாயிகளின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட ஏரிகளாக இல்லை.

அனைத்து ஏரிகளும் 20% முதல் 50% வரை தூர்ந்துபோய் உள்ளன. பெருவாரியான ஏரிகளில் நீர் செல்ல உரிய மதகுகள் இல்லை. இருந்தாலும் அவை சரிவர இயங்குவதில்லை.

இதேநிலை உபரி நீர் செல்லும் கலிங்குகளுக்கும் பொருந்தும். அநேக ஏரிகளின் கரைகள் மிகவும் பலவீனமாக உள்ளன.

ஏரிகளில் ஆக்கிரமிப்பு என்பது எல்லா இடங்களிலும் உள்ளது.

உண்மையில் சாதாரண விவசாயி முதற்கொண்டு பேரளவு வசதி படைத்த தொழில் முனைவோர் மற்றும் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் ஆகிய அனைவரும் "ஏரிகள் ஆக்கிரமிப்பின்' அங்கத்தினர்களாவர்.

ஏரிகளின் "பராமரிப்பு' என்பது நிதிப்பற்றாக்குறையால் ஏட்டளவில் பார்க்கின்ற சொல்லாகவே உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இடுபொருள்களின் விலை ஏற்றம், 100 நாள் வேலைத் திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைக்காமை, தொடர்ந்து நிகழும் இயற்கைச் சீற்றங்களால் பயிர் விளைச்சலில் பாதிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாகக் கஷ்டப்பட்டு விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை இன்மை போன்ற காரணங்களால் வேளாண்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் 100-லிருந்து 50 சதவிகிதத்துக்கும் கீழே சென்றுவிட்டது.

இப்போது நடைபெறும் விவசாயம் வேறு வழி இல்லாமல், வேறு எங்கும் செல்ல இயலாத நிலையில் உள்ள விவசாயிகளால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் வேளாண் சாகுபடியில் மிகப் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டால் சிறிதும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இச்சூழ்நிலையில், ஏரிப்பாசனத்தில் மேம்பட்ட நிலையினை உருவாக்க தமிழகத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 5,000 பொதுப் பணித்துறை ஏரிகளைப் புனரமைக்க ரூ.2,500 கோடி பெறப்பட்டு கடந்த 2007 முதல் இத்திட்டம் 24 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினால் பெருவாரியான விவசாயிகள் பலன்பெற்று வருகின்றனர்.

இருப்பினும் இத்திட்டம் சாராத மூன்றுவிதமான இடையூறுகளால் விவசாயிகள் இன்னும் வேதனையில் உள்ளனர்.

அதாவது, ஏரியின் நீர் கொள்ளும் பகுதியிலுள்ள வண்டல் மண்ணை வயல்களுக்கு உரமாக இட வருவாய்த்துறையினரால் செயற்கையாக உருவாக்கப்படும் தடை; பல ஏரிகளில் வளர்க்கப்படுகிற மீன்கள் மூலம் பெறப்படும் குத்தகை வருவாயினை (தமிழக அரசு ஜனவரி 2011-ல் வருவாய் பயன்பாட்டுக்குரிய சட்டம் இயற்றிய பின்பும்) ஏரிப்பாசன விவசாய சங்கங்களால் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலை; மற்றும் பெருவாரியான ஏரிகளில் மரங்கள் மற்றும் எரிகட்டைகள் (முள் மரங்கள்) தாராளமாக இருந்தும் அவற்றை ஏலம் மூலம் விற்று அதன் வருவாயை ஏரிகள் பராமரிப்புக்குப் பயன்படுத்த இயலாத அளவில் வனவளர்ப்புத் துறைனர், அரசின் பல ஆண்டுகளுக்கு முந்தைய சட்டம் மற்றும் விதிகளைக் காண்பித்து ஏரிப்பாசன விவசாயிகளை ஏரிக்குள் அனுமதிக்காதது ஆகியவை ஏரிப்பாசன முன்னேற்றத்தின் முக்கிய இடையூறுகளாக உள்ளன.

உண்மையில், தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மைச் சட்டம் 2000-ன்படி ஒவ்வொரு ஏரியும் அந்தந்த ஏரியைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் சொத்து ஆகும்; அந்த ஏரிகளின் பராமரிப்பு மற்றும் வருவாய் பெருக்கத்துக்கான உரிய விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது; மீன்பிடி வருவாயில் 50 சதவிகிதத்தை ஏரிப்பாசன சங்கங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்; ஏரிகளின் வண்டல் மண்ணை அந்தந்த ஊர் எல்லைக்குள் பயன்படுத்திக் கொள்ள எவ்விதத் தடையும் இல்லை.

இவற்றைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, துணை இயக்குநரிடமிருந்து அறிய முடிந்தது.

இதுவரை எந்தவொரு ஏரியிலிருந்தும் மேற்கூறப்பட்ட மூன்று நிலைகளிலும் (வண்டல் மண் எடுத்தல், மரங்கள் வெட்டிக் கொள்ளுதல், மீன்பிடி வருவாய்ப் பகிர்வு) எவ்விதப் பயனையும் எந்த ஓர் ஏரிப் பாசனச் சங்கமும் பெற இயலவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் சாரமாவது:

"தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதி 6(1) 1959-ன் படி எந்த ஒரு விவசாய நபரும் தனக்குத் தேவையான வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதற்கு விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியும், மண் குவாரி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியும் ஒரே வருவாய் கிராமம் அல்லது அருகில் அமைந்துள்ள கிராமத்தில் அமையப் பெற்றிருந்தால் மேற்படி விவரங்களைச் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், துணை இயக்குநர் கனிமம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவர்களுக்குத் தெரிவித்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.'

இது தவிர, ஏரிகளில் மரங்கள் வளர்க்க 9.3.1984-ல் காடுகள் மற்றும் மீன்வளத்துறைக்குத் தமிழக அரசு ஒரு நிலை ஆணையை அறிவித்து ஏரிகளில் மரம் வளர்க்க ஊக்குவித்தது.

இந்த ஆணை அரசின் 2000-வது ஆண்டு சட்டப்படி தகுதியற்றதாகிவிட்டது. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் பழைய நிலை ஆணையைக் காண்பித்து விவசாயிகளை ஏரிகளிலிருந்து கிடைக்கும் மர விற்பனை வருவாயைப் பெற இயலாமல் தடுத்து வருகின்றனர்.

எனவே ஏரிகள் யாருக்குச் சொந்தம் என்பதில் இம்மூன்று துறைகளான (வருவாய், வனம் மற்றும் கனிமவளம், மீன்துறை) தலையீட்டால் மிகவும் தெளிவற்ற நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏரிகளைப் பராமரிக்க அவர்கள் விரும்பவில்லை.

மேற்கூறப்பட்ட விவரங்களை உரிய அதிகாரிகள் ஆராய்ந்து, சட்டத்தின் நுணுக்கங்களை ஏரிப்பாசன விவசாயிகள் புரிந்துகொண்டு செயல்படும் நிலையை உருவாக்கினால் மட்டுமே வரும் காலத்தில் ஏரிப்பாசனம் தழைக்க வழி உண்டு.

இல்லையெனில், அப்பாவி விவசாயிகளுக்கு ஏரிகளின் மூலம் எந்தப் பயனும் கிடைக்காத சூழ்நிலை உருவாகி ஏரிப்பாசனம் வெகு விரைவில் அழிந்தொழியும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.