கோனாகிச் சாத்திரத்தை ஆளும் மாண்போர்

12-21-12 என்ற நாளை நினைவு இருக்கிறதா? மாதம், நாள், ஆண்டு என்று திருப்பி வாசியுங்கள். புரியும். இந்த உலகம் அழியப் போவதாக அமெரிக்கப் பழங்குடி "மாய' இனத்தவர் எழுதிவைத்த நாள் டிசம்பர் 21, 2012.
Updated on
4 min read

12-21-12 என்ற நாளை நினைவு இருக்கிறதா? மாதம், நாள், ஆண்டு என்று திருப்பி வாசியுங்கள். புரியும். இந்த உலகம் அழியப் போவதாக அமெரிக்கப் பழங்குடி "மாய' இனத்தவர் எழுதிவைத்த நாள் டிசம்பர் 21, 2012. இன்றைக்கும் இதற்கு ஹீப்ரூ மொழியில் எண்கணித நிபுணர்கள் "பரம பிதா வருகை' என்றே பொருள் சொல்கிறார்கள். உண்மையில் கிறித்துமஸ் நாளை ஒட்டித்தான் அமைகிறது. ஆனால், மயன் சோதிடப்படி உலகம் அழியவில்லை.

ஒவ்வோராண்டும் டிசம்பர் 21 குளிர் சந்தி நாளில் பால்வீதி அண்ட மையம் - சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஏறத்தாழ நேர்கோட்டில் இணைகின்றன. அதிலும் சூரியன் நம் பால்வீதி அண்டத்தின் நேர் மையத்தில் இயங்குகிறது. விஞ்ஞானிகள் சொன்ன பூகம்பங்கள், சூறாவளிகள், சுனாமிகள் எல்லாம் பூமிப் பொருக்கில் வந்து போயின.

சூரியன் தென்கோடியில் இயங்கும் இறுதிநாள். தட்சிணாயண இறுதி, குளிர்சந்தி. அன்று முதல் சூரியன் தனுசு உடுக்கணத்தில் நுழைந்து வடக்கு நோக்கிய சஞ்சாரம் (உத்தராயணம்) தொடங்குகிறது. சங்க காலத்தில் குளிர்சந்தியில் சூரியனும் அமாவாசைச் சந்திரனும் மகர உடுக்கணத்தில் இயங்கின. அந்த அமாவாசை தினமே மகரப் பொங்கல். "தெய்'வத் திங்கள் "தை' ஆனது.

பூமியின் சுழற்சி அச்சு 71.5 ஆண்டுகளுக்கு ஒரு பாகை வீதம் தள்ளாடி வட்டம் போடுகிறது. அதனால் ஏறத்தாழ 2,150 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் குளிர்சந்தி நாள் ஒவ்வொரு உடுக்கணமாக 30 பாகை முன்னேறி வருகிறது என்பதே வானவியல் உண்மை.

ஆக, புதிய "தை' மாதத் தொடக்கமாக தமிழ் நாட்காட்டிகள் டிசம்பர் 21 எனத் திருத்தப்பட வேண்டும். வானவியல் நாட்காட்டியைத் திருத்தினோமோ இல்லையோ, வாழ்வியல் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு விட்டோம்.

"தைஇத் திங்கள் தண்கயம் போல' (புறநானூறு 70).

"பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' (குறுந்தொகை 196).

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்' (நற்றிணை 80).

"தைஇத் தண்கயம் போல' (ஐங்குறுநூறு 84).

"தையில் நீராடிய தவம்' (கலித்தொகை 59) என்று எல்லாம் வரும் பண்டைய தைந் நீராடல் பழக்கம் இன்று மார்கழி நீராடல் ஆனதே.

ஏற்கெனவே அந்த வகையில் வேனல் சமநோக்கு நாள் மீன உடுக்கணத்தில் மார்ச் 21 அன்று வரும். தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமும் பங்குனி அமாவாசை என்று திருத்தி அமைக்க வேண்டிவரும்.

இன்றைய ஏப்ரல் 15 என்பது சங்க காலச் சித்திரை அடிப்படையில் அமைந்த பழங்கணக்கு. சூரியன் மேட உடுக்கணத்தில் இயங்கும்போது முழுநிலா "கன்னி' உடுக்கணத்தில் "ஆல்ஃபா வர்ஜினிஸ்' ஆகிய "ஸ்பைக்கா' நட்சத்திரத்தில் அமைந்தது. அந்த விண்மீனின் பெயரே சித்திரை. மாதத்தின் பெயராகவும் வழங்கிற்று.

உள்ளபடியே, தமிழர் காலக்கணக்கு ஒளியிலும், வெப்பத்திலும் தொடங்கும். விடியல், பகலின் தொடக்கம். மாதமோ, வளர்பிறையில் ஆரம்பம். ஆண்டுக் கணக்கும் வேனலில் தொடங்கும். அதாவது இரவும் பகலும் சம அளவாக அமைகிற மார்ச் 21 சமநோக்கு நாள். அதனாலேயே தமிழ்ப் புத்தாண்டு பங்குனி அமாவாசையே.

ஆங்கிலேயர்களுக்கு நட்ட நடுராத்திரியில் நாள் கணக்கு (இரவு 12 மணி) தொடங்கும். மாதமும் தேய்பிறையில் ஆரம்பிக்கும். ஆங்கில நாட்காட்டியும் பிரபஞ்ச நடுக்கோட்டின் தென்கோடியில் அமையும் குளிர்சந்தி அன்று தொடங்கும். அதாவது டிசம்பர் 21 என்ற தினத்தை ஒட்டி அமையும்.

இப்போதைக்கு அந்தக் கணக்கு கிடக்கட்டும். 2012 தேசியக் கணித ஆண்டு அல்லவா? உலகப் புகழ்பெற்ற தமிழகக் கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த நாள் டிசம்பர் 22 (1887).

அறிவியல் கவிஞர் பாரதி பிறந்த நாளும் இதே டிசம்பர் 11 (1882) ஆயிற்றே.

இருவருமே குறைந்த ஆயுளில் நிறைந்த பெருமை சேர்த்த தமிழர்கள்.

உலக மாசுத் தடுப்பு நாள் (டிசம்பர் 2). சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் (டிசம்பர் 9). மனித உரிமைகள் தினம் (டிசம்பர் 10) என்று நல்ல தினங்களைக் கூட அனைத்து ஊடகங்களும் இனி பண்டிகைகளாகக் கொண்டாடலாம்.

சாதி, மத, மொழி, இன, நாட்டு விடுதலைக்காகப் போராடி உயிர் இழந்தவர்கள் வரலாற்றில் பலர் இருக்கக் கூடும். அதிலும் அறிவியல் தொழில்நுட்பத்திற்காக உயிர் நீத்தவர்களை உலக அளவில் மனித இனமே போற்றும்.

1742 டிசம்பர் 9 அன்று பிறந்த காரல் ஷீல்லி என்ற சுவிட்சர்லாந்து வேதியியலார் பற்றிப் பலருக்கும் தெரியாது. ஆக்சிஜன், குளோரின், பேரியம், மாங்கனீஸ், டங்ஸ்டன், மாலிப்டினம் போன்ற பல தனிமங்களைக் கண்டுபிடித்த மேதாவி. ஆனால், சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என்று நாக்கில் தடவி ருசி பார்ப்பைதப்போல, எதையும் முதலில் நாக்கில் தொட்டுச் சுவைத்துப் பார்ப்பாராம். ஒருமுறை "புருசிக் அமிலம்' எனப்படும் ஹைடிரஜன் சயனைடு கரைசலைச் சப்பிப் பார்த்தும்கூட மனுஷன் பிழைத்துக் கொண்டார். ஆனால் பாதரசம், காரீயம் ஆகிய கன உலோக வேதிமங்களைப் பல முறை சுவைத்தார். 1786 மே 21 அன்று இறந்துபோனார், இந்த வேதியியல் தியாகி.

இனிப்புக் காற்று என்றால் என்ன தெரியுமா? நைட்ரஸ் ஆக்சைடு. ஆனால், 1772-ஆம் ஆண்டு இதைக் கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி என்ற ஆங்கில வேதியியலார் வாழ்க்கை இனிப்பாக இல்லை. மத விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகவும், பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகளை ஆதரித்ததாகவும் அவரது வீடு வன்முறையாளர்களின் நெருப்புக்கு இரை ஆனது.

ஆனால், நைட்ரஸ் ஆக்சைடிற்கு "சிரிப்பூட்டும் வாயு' என்று வேறு ஒரு பட்டப் பெயரும் உண்டு. நரம்பு மண்டலத்தை மெலிதாகத் தாக்கும் வாயு. இது, பல் பிடுங்கும்போது தரப்படும் மயக்க மருந்து. 1844 டிசம்பர் 11 அன்று ஹோராஸ் வெல்ஸ் என்ற அமெரிக்க மருத்துவரால் பரீட்சார்த்தமாகக் கையாளப்பட்டது. ஆனால், இந்தப் பயன்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சர் ஹம்பிரி டேவி என்ற ஆங்கில விஞ்ஞானி. 1778 டிசம்பர் 17 அன்று பிறந்தவர். இவர் நிலக்கரிச் சுரங்கங்களில் கையாளத் தகும் தீப்பற்றாத பாதுகாப்பு விளக்கு ஒன்றைக் கண்டுபிடித்த சாதனையாளர்.

எப்படியோ, நைட்ரஜன் டிரை குளோரைடு வாயு விபத்தில் கண்பார்வை இழந்தார். பிறகும் சும்மா இருந்தாரா மனிதர்? மைக்கேல் ஃபாரடே என்ற பிரபல விஞ்ஞானியைத் தன் சகாவாக இணைத்துக்கொண்டு ஆய்வுகள் தொடர்ந்தார். மின்னாக்கி "டைனமோ' இயந்திரத்தைக் கண்டுபிடித்த இந்த மேதையும் அதே விஷவாயு விபத்தில் கண் இழந்தாராமே! ஏற்கெனவே 1812-ஆம் ஆண்டு பியரி லூயிஸ் டுலாங் என்னும் விஞ்ஞானி தனது இரண்டு விரல்களையும் கண்ணையும் இந்த வாயுத் தயாரிப்பின்போது பறி கொடுத்தது தெரியாதோ என்னவோ?

வேதியியலில் தொடங்கி விண்ணை அளக்க முனைந்தவர் ஜூன்-ஃபிராங்கோய் டி ரோசியர் என்னும் பிரெஞ்சு இயற்பியலார். 1781 டிசம்பர் 11 பாரீஸ் நகரில் சொந்த அருங்காட்சியகம் ஒன்றை நிறுவி அதில் இயற்பியல் பரிசோதனைகள் நடத்தி வந்தார். 1783 நவம்பர் 21 அன்று ஹைடிரஜன் வாயு எரித்த வெப்பக் காற்று நிறைந்த பலூனில் 3,000 அடி உயரம் வரை பறந்து உலக சாதனை படைத்தார். அத்துடன் விடவில்லை. ஆர்வம் மிகுதியால் பிரான்சிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சி 1785 ஜூன் 15 அன்று விபரீதமாக முடிந்தது. பலூன் நிலை தடுமாறி ஏறத்தாழ 1,500 அடி உயரத்தில் நடுவானில் வெடித்து, பாவம் உயிர் இழந்தார்.

இன்றைக்கு 39 கிலோமீட்டர் விண்வெளி விளிம்பில் பறந்த ஆஸ்திரிய வீரர் பறக்கும் குடையால் சுமுகமாகத் தரை இறங்கி இருக்கிறார். ஆனால், ஓட்டோ லிலியெந்தால் என்ற ஜெர்மானிய இளைஞர் ""சின்னச்சின்ன சாதனைகளேனும் செய்ய வேணும்'' என்பாராம்.

1896-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று ராட்சதப் பட்டாம்பூச்சி மாதிரியான விண் சறுக்கியை இரண்டு புயங்களிலும் கட்டிக்கொண்டார் லிலியெந்தால். 17 மீட்டர் மலை ரினோவ் குன்றுகளின் உச்சியில் இருந்து காற்றில் சறுக்கி இறங்கினார். நான்காவது தடவை பறந்தபோது, மனிதர் முதுகெலும்பு அடிபட்டு காயம் அடைந்தார், மறுநாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தும் போனார்.

ஏதாயினும், இவரது சாகசங்களால் உந்தப்பட்டவர்கள்தாம் ரைட் சகோதரர்கள். சரியாக 109 ஆண்டுகளுக்கு முன்னால் 1903 டிசம்பர் 17 அன்று அமெரிக்காவில் வட கரோலினா மாகாணத்தில் கிட்டி ஹாக் என்ற இடத்தில் முதன்முதலாக விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர். ஆர்வில் ரைட் 12 நொடிகளில் 120 அடி தூரம் வரை பறந்தார். தரைக்கு மேலே 10 அடி உயரத்திற்கு மட்டுமே எழும்பியது அந்த முதல் விமானம். அதன் வேகம் மணிக்கு 11 கிலோமீட்டர் அவ்வளவுதான். இன்றோ மணிக்கு 1,000 கிலோமீட்டரில் பறக்கும் அதிவேக விமானங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்த ரைட் சகோதரர்கள் ஆரம்பத்தில் வெறும் சைக்கிள் கடை நடத்தி வந்தார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லை?

வானில் பறப்பது இருக்கட்டும். தரையில் வேகமான வண்டி ஓட்டலாம் என்றால் சைக்கிளைக் கண்டுபிடித்த கார்ல் டிரெய்ஸ் எனும் ஜெர்மானியர் தான் நினைவுக்கு வருகிறார். 1851 டிசம்பர் 10 அன்று பிறந்தவர். இவர் "பெடல்', சங்கிலி போன்ற எந்தவித உதிரிப் பாகங்களும் இல்லாத இரு சக்கர வண்டியைத் தயாரித்தார். அதற்கு "வெலாசிபீடி' என்று பெயர். அதாவது "வேகப் பாதம்'. ஆதி சைக்கிள், மிதிவண்டி அல்ல.

ஒரு வயதுக் குழந்தை அமர்ந்தபடி கீழே விழாமல் நடமாட உதவும் சக்கர இருக்கை இன்று வந்து இருக்கிறதே, அதே மாதிரி. தரையில் காலூன்றி உந்தி உந்தித் தள்ளித்தான் ஓட்ட வேண்டும். அதில் இரண்டு சக்கரங்களும் இருக்கையும் மட்டும்தான்.

ஆனால் 1839-ஆம் ஆண்டு முழுமையான சைக்கிளை வடிவமைத்தார் கிர்க் பேட்ரிக் மேக்மில்லன் என்னும் ஸ்காட்லாந்து நிபுணர். மரக் கட்டைகளால் உருவானது. பழைய மாட்டு வண்டி மாதிரி இரும்புப் பட்டை அடித்த மரச் சக்கரங்கள். தம் சொந்த கிராமமான கீயர் எனும் இடத்தில் இருந்து 65 மைல் தொலைவில் கிளாஸ்கோ நகரம் வரை ஓட்டிச் சென்றார். மிகப் பெரும் சாதனை.

1842 ஜூன் மாதத்தில் ஒரு நாள் சைக்கிளில் ஒரு சிறுமி மீது மோதிக் காயப்படுத்தி விட்டார். ஊர் மக்கள் திரண்டு முதுகில் "டின்' கட்டாத குறை. "சக்கரப் பிசாசு' என்றொரு பட்டப் பெயரும் வைத்து விட்டார்கள். வாய்ச் சொல் அர்ச்சனையோடு விட்டால் பரவாயில்லையே. நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றம் சென்றார்கள்.

ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதிக்கு நேர்ந்த ஒரு விபரீத எண்ணம் சைக்கிள் மீது மோகம் பிறந்தது. சைக்கிளை எண் 8 வடிவப் பாதையில் ஓட்டிக் காட்டச் சொன்னாராம். மேக்மில்லன் இயல்பாகவே ஓட்டினார்.

அது கண்டு மகிழ்ந்த நீதிபதி தண்டித்தாரோ என்னவோ, அவரை நண்பராக்கிக் கொண்டாராம். இதே வழியைப் பின்பற்றினால் இன்றைய நீதிபதிகள் நிலை தர்ம சங்கடம் ஆகிவிடுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com