பெயருக்குத்தான் தலைமை!
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர், எஸ்எஸ்எல்சி படித்தவர்கள், கல்லூரிகளில் ஓராண்டு பியூசி வகுப்பைப் படித்த பிறகே உயர்கல்வியில் சேர முடியும். அப்போது கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இப்படிப்பில்


கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர், எஸ்எஸ்எல்சி படித்தவர்கள், கல்லூரிகளில் ஓராண்டு பியூசி வகுப்பைப் படித்த பிறகே உயர்கல்வியில் சேர முடியும். அப்போது கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இப்படிப்பில் சேர போட்டி இருந்தது. இதையடுத்து, அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற கொள்கையோடு 1978-ல் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் உயர்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியைக் கொண்டு வந்தார். கல்லூரியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த பியூசி படிப்பும் நீக்கப்பட்டது. இதேநேரத்தில், பாலிடெக்னிக், ஐடிஐக்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் வகையில் உயர்ந்த நோக்கில் தொழிற்கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேல்நிலைப் பள்ளிகளில் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் முதுகலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அடுத்தடுத்த சில ஆண்டுகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனால், உரிய தகுதி பெற்றிருந்தும் பதவி உயர்வு கிடைக்க சரிவர வாய்ப்பில்லாமல் இருந்து வருகின்றனர்.
பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெறுவோர் அடுத்த 10 ஆண்டுகளிலேயே கூட மாவட்ட கல்வி அலுவலராகவும், அதற்கடுத்த சில ஆண்டுகளில் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணி நியமனம் பெற்றுவிடுகின்றனர். ஆனால், 1979-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பலர், ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்குப் பின்னரே தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற முடிகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர் போன்ற பதவி உயர்வுகள் அளிக்கப்படும்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5; முதுகலை ஆசிரியர்களுக்கு 2 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. இதனால், பட்டதாரி ஆசிரியர்கள் எளிதில் பதவி உயர்வு பெற்றுவிடுகின்றனர். முதுகலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டும்போது கூட பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு கீழே பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள், இப்போது சில மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பணியாற்றி வருவதாக மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி இயக்ககங்கள் அமைத்தால் இப்பிரச்னை தீரும். இதுதொடர்பாக பல ஆண்டுகளாகப் போராடியும் அரசின் நடவடிக்கைதான் இல்லை என்கின்றனர் அவர்கள்.
முறைசாராக் கல்வி போன்ற செயல்பாடுகள் குறைவாக உள்ள துறைகளுக்குக் கூட இயக்ககங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், மேல்நிலைப் பள்ளிகளுக்கான இயக்ககம் அமைப்பதில் மட்டும், தமிழக அரசு மௌனம் சாதித்து வருகிறது.
தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைவிட, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையும் கூடுதலாகவே உள்ளது. காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சம்பளம் அளித்தல், மாணவர்களுக்கு அரசின் சலுகைகள், ஊக்கத்தொகை, விலையில்லா சைக்கிள்கள் உள்ளிட்ட கல்வி உதவிகளைப் பெற்றுத் தருதல், பொதுத்தேர்வு நடத்துதல் உள்ளிட்ட எண்ணற்றப் பணிகள் நாள்தோறும் காத்திருக்கின்றன.
பணிச்சுமைகளோடு போராடிவரும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதற்கான உயர்பதவி பெறும் சூழ்நிலையும் உருவாவதில்லை.
எனவே, பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்ககம், தனி கல்வி அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என்றே இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், ஓய்வு பெறும் நேரத்தில் தங்களுக்குக் கீழ் பணிபுரிந்தவர்களிடையே அடிபணிந்து பணிபுரியாமல், பதவி உயர்வு பெற்று கௌரவமாகப் பணியாற்றலாம் என்று ஆசைப்படுகின்றனர்.
மத்திய அரசுத் துறைகள், கல்லூரிக் கல்வித் துறைகளில் பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும், தகுதியானவர்களுக்கு உயர்பதவிக்கு இணையான ஊதியம் வழங்கி கௌரவப்படுத்துகின்றனர். இருப்பினும், மேல்நிலைக் கல்வியில் இதுபோன்ற நிலை கிடையாது.
மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளம் இடுவது மேல்நிலைக் கல்விதான். டீன் ஏஜ் மாணவர்களின் மனங்களை ஒருநிலைப்படுத்தி, கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் இவர்களின் நிலை பரிதாபமாகவே உள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்களும் அரசியல் தலையீடு, மாணவர்களின் வழக்கமான குறும்புத்தனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுடனே நாள்தோறும் பணியாற்றும் நிலையும் நீடிக்கிறது.
எம்ஜிஆர் உருவாக்கிய மேல்நிலைக் கல்விக்கு தமிழக அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்றே தலைமை ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...