வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கயிறுமேல் நடைபோடும் ரிசர்வ் வங்கி!

பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் ஜனவரி 24-ம் தேதி வெளியிட்ட நிதி மற்றும் கடன் கொள்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையை வெளியிடுவதற்கு முன

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:53 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் ஜனவரி 24-ம் தேதி வெளியிட்ட நிதி மற்றும் கடன் கொள்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையை வெளியிடுவதற்கு முன், வழக்கமாக இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளைவிட, இந்த முறை வர்த்தக உலகில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

காரணம், இதற்கு முந்தைய கொள்கை அறிவிப்பில் (டிசம்பர் 2011) ரிசர்வ் வங்கி "ரெப்போ ரேட்டை'யோ (வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம்) அல்லது "சி.ஆர்.ஆர்.' (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு) விகிதத்தையோ தொடவே இல்லை.

இந்நிலையில், இந்த முறை "ரெப்போ' வட்டிவிகிதம் கண்டிப்பாக கால் சதவிகிதமாவது குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வணிக மற்றும் தொழில் சம்மேளனங்களிடையே மேலோங்கி இருந்தது. அதேபோல், சி.ஆர்.ஆர். என்கிற ரொக்க கையிருப்பு விகிதமும் குறைக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

புதிய கடன் கொள்கையில் "ரெப்போ' ரேட் குறைக்கப்படவில்லை. சி.ஆர்.ஆர். அரை சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, சுமார் 32,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளின் கையிருப்பு அதிகரிக்கும்.

இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவை மட்டுமல்லாமல் தொழில் கடன், நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் கடன்களையும் வங்கிகள் தாராளமாக வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையின் பின்னணி என்ன? சர்வதேசப் பொருளாதாரம் மீட்சி அடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாறாக, பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கடன் புதைகுழியில் சிக்கித் தவிக்கின்றன.

இந்தியாவிலும் வளர்ச்சி விகிதம் மெல்ல, மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது. வளர்ச்சி 7 சதவிகிதத்தைத் தாண்டாது என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கோடிட்டுக் காட்டி இருந்தது. அதையே, புதிய நிதி மற்றும் கடன் கொள்கை உறுதி செய்துள்ளது. உலக வங்கியும் இதே கணிப்பை சில தினங்களுக்கு முன் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களில், இந்தியப் பொருளாதாரத்தில் சாதகமான அம்சங்கள் என்ன என்றால் இரண்டே இரண்டு செய்திகளைச் சொல்லலாம். ஒன்று, தொழிற்சாலைகளில் உற்பத்தி கடந்த நவம்பர் மாதத்தில் 5.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இரண்டாவது, ஒட்டுமொத்த பணவீக்கம் டிசம்பரில் கணிசமாகக் குறைந்துள்ளது. நவம்பரில் 9.11 சதவிகிதமாக இருந்த பணவீக்க விகிதம் டிசம்பரில் 7.47 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இந்தச் சூழலில் கூட பணவீக்கத்தைப் பற்றிய கவலை இனி இல்லை என்று சொல்லிவிட முடியாது. காரணம், உணவுப் பண்டங்கள் அல்லாத தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களின் விலைகள் குறையவில்லை. ஒட்டுமொத்தப் பணவீக்கம் குறைந்திருப்பது எதனால் என்றால், காய்கறிகள் மற்றும் பருவம் சார்ந்த பொருள்களின் விலை குறைந்திருப்பதால் மட்டுமே. எனவே, பணவீக்கம் மீண்டும் உயர்ந்து விடுமோ என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது. ரூபாயின் மதிப்பு குறைந்துவருவதும் இந்தக் கவலைக்கு தூபம் போடுகிறது.

அதேநேரம், ஓரிரு மாதங்களுக்கு முன் இருந்த நிலையோடு ஒப்பிடுகையில், பணவீக்க விகிதம் குறைந்திருப்பது கண்கூடு. இந்நிலையில், வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே ரிசர்வ் வங்கியின் பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த நோக்கம் ஈடேறும் வகையில், ரிசர்வ் வங்கி இப்போது சி.ஆர்.ஆர். விகிதத்தை 6 சதவிகிதத்திலிருந்து ஐந்தரை சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது.

சி.ஆர்.ஆர். என்பது என்ன? ஒரு வங்கி நூறு ரூபாய் டெபாசிட் திரட்டினால், அந்த நூறு ரூபாயையும் கடன் கொடுப்பதற்குப் பயன்படுத்த முடியாது. அதில் 24 ரூபாயை எஸ்.எல்.ஆர். (கடன் அனுமதி விகிதம்) என்கிற சட்டப்படி ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தை ரொக்கமாக வைத்திருக்க வேண்டியதில்லை. அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தால், அந்தப் பத்திரங்களையும் எஸ்.எல்.ஆர்.ஆக 24 சதவிகித அளவுக்கு ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்து வைக்கலாம்.

இதுதவிர, ரொக்கமாகக் குறிப்பிட்ட சதவிகிதத்தை வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்து வைக்க வேண்டும். இதுதான் சி.ஆர்.ஆர். எனப்படுகிறது. இதுவரை 6 சதவிகிதமாக இருந்த சி.ஆர்.ஆர். 28-1-2012 முதல் ஐந்தரை சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32,000 கோடி அளவுக்கு வங்கிகளின் நிதி ஆதாரம் அதிகரிக்கும் என்பதால் இது வரவேற்கத் தகுந்த நடவடிக்கை ஆகும்.

இதன்மூலம் மூன்று தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்குக் கடன் கிடைப்பது எளிதாகும். இரண்டாவதாக, வங்கிகளுக்கு இதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். ரிசர்வ் வங்கியில் முடங்கியிருந்த பணம், வங்கிகளின் கைக்கு மாறியிருப்பதால் வங்கிகள் அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்து லாபம் ஈட்டலாம். ஆகையால்தான், இந்தக் கொள்கை அறிவிப்பு வந்த அடுத்த கணமே பங்குச் சந்தையில் எழுச்சி ஏற்பட்டது. வங்கிகளின் பங்குகள் விலை உயர்ந்தது.

மூன்றாவதாக - மிக முக்கியமாக - பொருளாதார வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும். எப்படி என்றால், வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தொழில் கடன் உரிய நேரத்தில், உரிய அளவில் கிடைத்தால், அது எப்போதுமே தொழில் துறைக்குச் சாதகமாக அமையும். உதாரணத்துக்கு, வாகனக் கடன்கள் கிடைத்தால், இரு சக்கர வண்டிகள், மோட்டார் கார்களின் விற்பனை அதிகரிக்கும். விற்பனை அதிகரித்தால், அவற்றின் உற்பத்தி அதிகரிக்கும்; உற்பத்தி அதிகரித்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். முதலீடு உருவாகும்.

வீட்டுக்கடன் அதிகரிக்கும்போதும், இதேபோல் சங்கிலித் தொடர்போல் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது.

சரி, கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படவில்லையே, ஏன்? என்கிற கேள்வி எழுகிறது. பணவீக்கம் ஓரளவு குறைந்திருந்தாலும், மீண்டும் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை என்கிற ஸ்திரமான நிலையை நாம் இன்னும் எட்டவில்லை. ஆகையால்தான் வட்டி விகிதத்தைக் குறைக்கும் விஷயத்தில் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை உணர்வோடு செயல்படுகிறது. நடப்பு நிதி ஆண்டு முடியும்வரை பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கும் என்று கடன்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் மாதங்களில் 7 சதவிகிதத்துக்கும் குறைவாக பணவீக்கம் சரியும்பட்சத்தில் ரெப்போ ரேட் படிப்படியாகக் குறையக் கூடும். மேலும் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான பொருளாதாரத் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கப் போகிறது என்பதையும் பாரத ரிசர்வ் வங்கி கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்பது வெளிப்படை.

இது ஒருபுறம் இருக்க, அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் மற்றும் நிதி கொள்கையில், ஒரு புதிய அம்சம் இடம்பெற்றுள்ளது. இது பலரது புருவங்களை உயர்த்தினால் ஆச்சரியம் இல்லை. "டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது; மாறாக, அந்தப் பொறுப்பை டீசல் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனங்களிடமே விட்டுவிட வேண்டும்' என்கிற ரிசர்வ் வங்கியின் பரிந்துரைதான் அது.

2010-ம் ஆண்டு, ஜூன் மாதம் 26-ம் தேதி முதல் பெட்ரோல் விலையைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

அதன்பிறகு, ஏறக்குறைய மாதாமாதம் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். இந்நிலையில் டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமே விட்டுவிட்டால், நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே சிரமமாக இருக்கிறது.

காரணம், பெட்ரோல் விலையாவது பெரும்பாலும் போக்குவரத்து செலவுகள் சார்ந்த விஷயம். டீசல் விலை அப்படி அல்ல. சரக்குகளின் விலை, குறிப்பாக காய்கறிகள், மளிகைப் பொருள்கள் முதல் தொழிற்சாலை உற்பத்திப் பண்டங்கள்வரை வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அனைத்துவகைப் பொருள்களின் விலையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியது டீசல் விலை.

ஒருபக்கம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது ரிசர்வ் வங்கி. இன்னொருபக்கம், டீசல் விலையை சந்தை சார்புடையதாக மாற்றிவிட வேண்டும் என பரிந்துரைக்கிறது. அப்படிச் செய்தால் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, பணவீக்கம் மீண்டும் உயர்ந்துவிடும் என்பது ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதது அல்ல. அதை எளிய மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இதை ரிசர்வ் வங்கி பார்க்கிறது என்று தோன்றுகிறது. அது தவிர மத்திய அரசின் பெருகி வரும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், டீசலுக்குத் தரப்படும் மானியத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கருதக்கூடும். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் விளைவாக உணவுக்கான மானியம் கணிசமாக உயர உள்ளது. இதுவும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும்.

சர்வதேச அளவில் யூரோ பிராந்தியங்களில் பொருளாதாரச் சிக்கல் நீடிக்கிறது. இது இந்திய ஏற்றுமதியைப் பாதிக்கும். ஈரான் நாட்டில் புகைந்து கொண்டிருக்கும் சண்டை, சச்சரவு மேலும் தீவிரமடைந்தால், பெட்ரோல் விலை உயரக் கூடும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான், ரிசர்வ் வங்கி டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமே விட்டுவிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. எனினும், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.