/

ஆதர்ஷ் ஊழலுக்கு அடுத்த ஊழல்...

கேந்திரிய வித்யாலயம் என்பது 1965-ல் தொடங்கப்பட்ட மத்திய (அரசின்) உயர்நிலைப் பள்ளிக்கூட முறையாகும். அதன் முக்கிய நோக்கம் மத்திய அரசின் நிர்வாகத்திலும் ராணுவப் பாதுகாப்பு அமைப்புகளிலும் பணிபுரிபவர்கள் ஊ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:28 pm

இரா. செழியன்

கேந்திரிய வித்யாலயம் என்பது 1965-ல் தொடங்கப்பட்ட மத்திய (அரசின்) உயர்நிலைப் பள்ளிக்கூட முறையாகும். அதன் முக்கிய நோக்கம் மத்திய அரசின் நிர்வாகத்திலும் ராணுவப் பாதுகாப்பு அமைப்புகளிலும் பணிபுரிபவர்கள் ஊர்விட்டு மற்றொரு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டால் அவர்களுடைய பள்ளிப்பருவக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து உயர்நிலைப் பள்ளிக் கல்விப்பயிற்சி அரசாங்கத்தால் தரப்பட வேண்டும் என்பதாகும்.

 கேந்திரியப் பள்ளிக்கூடங்களைச் செம்மைப்பட நடத்துவதற்கு, கேந்திரிய வித்யாலய சந்ததம் என்ற மேல்மட்ட தலைமை அமைப்பு 1965-ல் இந்திய அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டது. அதன் தலைவராக மத்தியக் கல்வி அமைச்சர் நியமிக்கப்படுகிறார்.

 தற்பொழுது இந்தியாவில் இருக்கும் 1,087 மத்திய பள்ளிக்கூடங்களில் 10.8 லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். இப் பள்ளிக்கூடங்களில் எட்டாவது வகுப்பு வரை மாணவர்களிடமிருந்து மாதச் சம்பளம் எதுவும் வாங்குவதில்லை.

 12-ம் வகுப்புவரை பெண்கள், ஆதிதிராவிட - பழங்குடி இனத்தினர், "கே.வி.' பள்ளிகளின் பணியாளர்கள் ஆகியவர்களைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து எத்தகைய பணமும் வசூலிப்பதில்லை.

 2010 வரை உயர்நிலைப் பள்ளிகளின் இறுதித் தேர்வில் உயர்தரமான தனியார் பள்ளிகள் சில 92 சதவிகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்றாலும், கேந்திரியப் பள்ளிகளில் 96 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர் என்று கல்வி அமைச்சர் கபில் சிபல் ஒருமுறை பெருமைப்பட்டார்.

 இவ்வாறு கல்விப் பயிற்சியில் கேந்திரியப் பள்ளிகள் சிறப்புற வளர்ந்ததற்கான காரணங்களை இங்கு ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

 ஆயினும், கேந்திரியப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் கடும் போட்டி மத்திய அரசு ஊழியர்கள், ராணுவம் சார்ந்த துறைகள் ஆகியவற்றில் பணிபுரிவோர் அல்லாத பெற்றோர்களிடையேயும் இருக்கிறது.

 மத்திய அரசாங்க - ராணுவப் பணியாளர்களின் பிள்ளைகளுக்குச் சிறந்த முறையில் கல்விப் பயிற்சித் தருவதைக் குறிக்கோளாக வைத்து கேந்திரியப் பள்ளிகள் தொடங்கப்பட்ட போதிலும் மற்றவர்களுக்கும் கேந்திரியப் பள்ளிகளில் சில இடங்கள் தரும் முறை நீண்ட காலமாக இருந்து வந்தது. 1998-ல், மத்தியக் கல்வி அமைச்சராகப் பதவி வகிப்பவர் ஆண்டு ஒன்றுக்கு 1,000 மாணவர்களைத் தன் பொறுப்பில் சேர்க்கலாம் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இணை அமைச்சர் 100 மாணவர்களையும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 2 மாணவர்களையும் சேர்க்கலாம் என்று அனுமதி தரப்பட்டது.

 ஆயினும் இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இவ்வாறு மாணவர்களைச் சேர்க்கும் அனுமதி முறை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங் (2004-2009) காலத்தில் அனுமதி வழங்கும் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, 1,200 மாணவர்கள்வரை அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

 ஆயினும் அனுமதி பெற்ற மாணவர்கள் சேர்ப்பு பற்றி மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது.

 2011-ல் விவரம் கேட்கும் சட்டம் வந்ததும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 2 மாணவர்களைச் சேர்க்கலாம் என்பது கைவிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் முன்பு ஆண்டுக்கு 2 மாணவர்களைச் சேர்ப்பதற்கான உரிமை தரப்பட்டிருந்து நீக்கப்பட்டாலும், திடீரென்று இந்த ஆண்டு 2012 ஜூலை 19-ம் நாள் நடைபெற்ற கேந்திரியப் பள்ளிகளின் தலைமை அமைப்பான சந்ததன் கூட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 மாணவர்களைச் சேர்ப்பதற்கான அனுமதி தரப்பட்டுள்ளதாக அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.

 இந்தத் தீர்மானத்தின் விளைவாக, மொத்தம் உள்ள 800 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்துப் பார்த்தால், புதிதாக 4,800 மாணவர்களைச் சேர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

 தற்பொழுது, அரசாங்க-ராணுவப் பணியாளர்களுக்கு அப்பாற்பட்டு, கல்வி அமைச்சர் சிபலுக்கு 1,000 மாணவர்கள், இணை அமைச்சர் புரந்தேஸ்வரி அம்மையாருக்கு 100 மாணவர்கள், 800 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 4,800 மாணவர்கள் என ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பள்ளிக்கூடங்களிலிருந்து அப்பாற்பட்டு, அரசியல் பதவியாளர்களுக்கு மாற்றப்படுகிறது.

 கேந்திரியப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 மாணவர்கள் என்று அனுமதி தந்ததும், மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவைகள் - மேலவை உறுப்பினர்கள் தங்கட்கும் அத்தகைய உரிமை தரப்பட வேண்டும் என்று கேட்பார்கள். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் உள்ள சட்டப்பேரவை - மேலவைகளில் மொத்தம் 5,000 உறுப்பினர்களுக்கு மேலாக இருக்கின்றனர். ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் ஒரு மாணவரைச் சேர்ப்பது என்றாலும் மேலும் 5,000 இடங்கள் தேவைப்படும்.

 ஆக கல்வி அமைச்சர், இணை அமைச்சர் நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 ஆயிரம் இடங்களுக்கு மேல் ஒதுக்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது.

 கேந்திரியப் பள்ளிக்கூடமுறை வந்ததற்குக் காரணம் அரசாங்க - ராணுவ அமைப்புகளில் உள்ளவர்கள் திடீரென்று ஊர்விட்டு ஊர் மாற்றப்பட்டால், அவர்கள் வீட்டுக் குழந்தைகள் படிப்பு பாழாகிவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் செய்யப்பட்டதாகும்.

 ஆயினும், புதிதாக வரும் 10,000 மாணவர்களுக்குமேல் சேர்க்கப்படும் அனுமதி முறையில், அந்த அனுமதிகள்மீது அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்களின் குடும்பப் பிள்ளைகளுக்கு மட்டும் அவை பயன்படுத்தப்படும் என்று கூற முடியாது.

 பெரும்பாலாக அனுமதி பெற்றவர்கள் தமக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் பல குளறுபடிகள் - குற்றச்சாட்டுகள் எழலாம். கேந்திரியப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதற்கான அடிப்படைக் குறிக்கோள் மறக்கப்பட்டுவிடும்.

 சென்னை போன்ற மாநகரங்களில் சிறப்பான பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி ஆகியவற்றில் ஒரு மாணவனைச் சேர்க்கவேண்டுமென்றால், நன்கொடை என்பது 1 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய்வரை முன்பு இருந்தது. இப்பொழுதைய விலைவாசிகள் உயர்ந்துவிட்ட நிலைமையில், பெரிய ஊழல்கள் பெருகிவிட்ட காலப்போக்கில் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் எந்த அளவு கருப்புப் பணம் நன்கொடைகளாக மாறும் என்று இப்பொழுது தெரியாமற் போகலாம்.

 கார்கில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை - அவைகளில் கட்டப்பட்ட வீடுகளை அவைகளுக்கு உரிய குடும்பத்தினருக்குச் சேர்க்காமல் மந்திரிகள்-அதிகாரிகள் தத்தமக்கு வேண்டியவர்களுக்குத் தான்தோன்றித்தனமாக ஒதுக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு கடுமையான ஆதர்ஷ் ஊழலாக வெளிப்பட்டது. கல்வித் துறையில் கல்வி அமைச்சர் கபில் சிபல் தந்துள்ள ஆபத்தான அனுமதிகள், 10,000 மடங்கு அதிகமான ஊழல்களை ஆண்டுதோறும் உண்டாக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.