மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இன்னமும் புரியவில்லையா காங்கிரஸூக்கு?

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கையை மெல்ல மெல்ல மக்கள் இழந்து வருவதையே 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அட

Updated On :20 செப்டம்பர் 2012, 12:42 am

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கையை மெல்ல மெல்ல மக்கள் இழந்து வருவதையே 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருக்கிறது.

 விலைவாசி உயர்வு தொடங்கி, மெகா ஊழல் வரை அனைத்துப் பிரச்னைகளுக்குமான மக்களின் கோபம்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

 மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஒருபுறம் ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை அறிவிப்பதாகக் கூறிக்கொண்டாலும், மறுபுறம் அவர்களது வாழ்க்கைக்கு உலை வைக்கும் கொள்கைகளில் விடாப்பிடியாக இருப்பது, விலைவாசியைத் தாறுமாறாக ஏற அனுமதித்திருப்பது போன்ற நடவடிக்கைகள் நடுத்தர, சாமானிய மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.

 ஒண்டுவதற்கு ஓர் இடமும், உணவுக்கும் பிச்சையெடுக்காமல் தினசரி பிழைப்பு நடத்தவும் குறைந்தபட்சம் 150 ரூபாயாவது தேவை என்ற நிலைக்கு சாமானியன் தள்ளப்பட்டு நிறைய நாள்களாகின்றன. இதில், தினசரி உயரும் விலைவாசியால் மக்களின் துன்பமும் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 பெட்ரோல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் வசம் விட்டதே, விலைவாசி உயர்வுக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது என்பதையும், அதுவே காங்கிரஸின் சரிவுக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது என்பதையும் இன்னமும் காங்கிரஸ் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

 விலைவாசி உயர்வும் தோல்விக்கு ஒரு காரணமே என்ற சோனியா காந்தி, வேட்பாளர் தேர்வு சரியில்லாமல் இருந்ததே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறியிருப்பது, மக்கள் தந்த முடிவை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

 வேட்பாளர்கள் பற்றிய கவலை மக்களுக்கு இருந்திருந்தால், ஒரு சிலர் தவிர, காங்கிரஸின் பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது.

 முகம் தெரியாத ஒருவரை வேட்பாளர் என்று மாநிலக் கட்சிகள் அறிவித்தாலும், வேட்பாளரின் வெற்றியும், தோல்வியும், அக் கட்சியின் தலைவர் மீதான நம்பிக்கையாலும் அல்லது நம்பிக்கையின்மையாலும், ஆளும்கட்சி மீதிருந்த கோபத்தாலும்தான் மக்களால் தீர்மானிக்கப்படுகிறது. இதே நிலைப்பாடு காங்கிரஸýக்கும் பொருந்தும். எவ்வளவு தெரிந்த முகங்களாக இருந்தாலும், தேவையில்லையென்றால் தூக்கியெறிய மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதுதான் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்.

 இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என அடுத்தடுத்து வந்த இரு தலைவர்களின் மீதும் இருந்த நம்பிக்கை, சோனியா காந்தி மீது கடந்த மக்களவைத் தேர்தல் வரையும் இருந்த நம்பிக்கை, இன்றைக்கு மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் இல்லாமல் போனது. மாநில அரசியல் வேறு, தேசிய அரசியல் வேறுதான்.

 மக்களுக்கு காங்கிரஸ் அல்லாத வேறு கட்சியைத் தேர்வு செய்யும் வாய்ப்பும், நன்கு பரிச்சயமான கட்சியும், கட்சித் தலைமையும் மாநிலத்தில் கிடைக்கிறது. ஆனால், தன்வசம் இருந்த கோவாவை படுமோசமாகக் காங்கிரஸ் இழந்திருப்பது, அவர்களது வீழ்ச்சி தொடங்கியிருப்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.

 காங்கிரஸôல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தில், படுதோல்வியை அளித்து மக்கள் ராகுல் காந்திக்குப் பாடம் புகட்டியிருக்கிறார்கள். குஜராத், இமாசலப் பிரதேசத்தில் இந்த ஆண்டே நடைபெறும் தேர்தல்களில் இது நிச்சயம் எதிரொலிக்கும். அடுத்தாண்டு இன்னும் பல மாநிலங்களின் தேர்தல்களிலும் எதிரொலிக்கக்கூடும்.

 உத்தரப் பிரதேச தோல்விக்குத் தான் பொறுப்பேற்பதாக ராகுல் காந்தி பெருந்தன்மையோடு அறிவித்தாலும், அந்த தோல்விக்குக் காரணம் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு சரியில்லை என்று கூறியிருக்கிறார்.

 ஆனால், ராகுலின் ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் காங்கிரஸ் ஏற்கவில்லை. அவரைத் தேற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறது.

 அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அடுத்த பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் - பிரதமர் மன்மோகன் சிங் உள்பட -அனைவருமே வெளிப்படுத்தி வரும் சூழலில், இதுபோன்ற முடிவை காங்கிரஸ் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றும் எண்ணம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை மறுத்திருக்கிறார் சோனியா காந்தி.

 மக்களிடம் நன்மதிப்பைப் பெறும் முயற்சியில் பிரதமர் தோற்றார் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்தாலும், அதே ரீதியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுத் தோற்ற ராகுலுக்கும் மக்களிடம் என்ன மதிப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுமே!

 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இன்னும் 2 ஆண்டுகள் அவகாசம் இருப்பதாகப் பதில் கூறியிருக்கிறார் சோனியா காந்தி. ஆம், அவர் நம்புகிறார், காங்கிரஸின் இந்தத் தோல்வி இன்னும் 2 ஆண்டுகளுக்குள் மக்களால் மறக்கப்பட்டுவிடும் என்று.

 காங்கிரஸின் இந்தத் தோல்விகள் வேண்டுமானாலும் மறக்கப்படலாம், அன்றாடம் மக்கள் வாழ்வதற்கான போராட்டமும் மறக்கப்படும் என்று இன்னமும் காங்கிரஸ் நம்புகிறதா என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.