பிரான்ஸ் நாட்டில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் அனைவருக்கும் பொதுவான மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசே நிதியளிக்கும் சட்டப்பூர்வமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (எஸ்.எச்.ஐ.) மூலமாக மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் ஒரே நாளில் கொண்டுவரப்பட்டதல்ல. சுமார் 60 ஆண்டுகளாக படிப்படியாக உருமாறி, பல நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது.
1947-ம் ஆண்டில் முதன் முதலாக தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்துகிற மருத்துவ மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை பிரான்ஸ் அரசு அமல்படுத்தியது. 1961-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளும் பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டது. 1996-ல் சொந்தமாகத் தொழில் செய்வோருக்கும் சுகாதாரத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
உலகின் மிகச் சிறந்தது என்று பிரான்சின் சுகாதாரத் திட்டத்தை உலக சுகாதார அமைப்பு 2000-ம் ஆண்டில் அறிவித்தது. உலகின் மிகச் சிறந்த திட்டம் என்பதற்காக இதில் குறைகளே இல்லை என்று கருதிவிடக்கூடாது. இதற்கென சில தனித்தன்மைகளும் பெருமைகளும் இருந்தாலும், பல மாற்றங்கள் அவசியம். அதனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் நாடுகள், பிரான்ஸின் திட்டத்தை அப்படியே காப்பியடிக்க முடியாது.
பிரான்ஸின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடி. முதலில் கூறியபடி, எஸ்எச்ஐ என்கிற சட்டப்பூர்வ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்த மக்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், மருத்துவச் சிகிச்சைக்கான அனைத்துச் செலவுகளுக்கான தொகையையும் இந்தத் திட்டம் வழங்காது. அந்த நாடு அளிக்கும் புள்ளி விவரங்களின்படி நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவுகளில் சுமார் 80 சதவிகிதத்தை மட்டுமே அரசு வழங்குகிறது. மீதி இருபது சதவிகிதத்தை மக்கள் தங்களது சட்டைப் பையில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும்.
காப்பீட்டுச் சுமையைப் பகிர்ந்து கொள்வது பிரான்ஸின் சட்டப்பூர்வ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு சிகிச்சையின்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு பிற கட்டணங்களை மக்கள் கட்ட வேண்டியிருக்கிறது.
சிகிச்சைக்கு ஆகும் முழுச் செலவையும் அரசின் சட்டப்பூர்வ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தருவதில்லை. இதைப் பூர்த்தி செய்வதற்காக விருப்ப சுகாதாரக் காப்பீடு (வி.எச்.ஐ.) என்கிற இன்னொரு காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதைப் பயன்படுத்தி மீதித் தொகைக்கு காப்பீடு செய்து கொள்ள முடியும். இந்தக் காப்பீட்டுத் திட்டமும் சிகிச்சைக்கான செலவை முழுமையாகத் தந்துவிடுவதில்லை. மீதிப் பணத்தை மக்கள்தான் கட்ட வேண்டும்.
மேலோட்டமாகப் பார்த்தால், மருத்துவச் செலவில் 80 சதவிகிதத்தை அரசே அளித்துவிடுவது போலவும் மீதி 20 சதவிகிதத்தை மட்டும் மக்கள் செலுத்துவது போலவும் தோன்றும். ஆனால் உற்று நோக்கினால், அரசு செலுத்துவதாகக் கூறப்படும் அந்த 80 சதவிகிதத்தையும் மறைமுகமாக மக்களே செலுத்துகின்றனர் என்பதுதான் உண்மை. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி முழுவதும் மக்களிடமிருந்துதான் திரட்டப்படுகிறது.
தொழிலாளர்களும், அவர்களுக்கு வேலை வழங்குவோரும் தங்களது வருவாயில் ஒரு பகுதியை காப்பீட்டுத் திட்டத்துக்கு வழங்க வேண்டும். இதை வசூலிப்பதற்காகவே வருவாயைப் பொறுத்து, "பொது சமூகப் பங்களிப்பு' என்கிற சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மருந்துத் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மொத்த லாபத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியை வரியாகச் செலுத்த வேண்டும். புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்களுக்கு "பாவ' வரி விதிக்கப்படுகிறது.
சுகாதாரத் துறைக்காக பிரான்ஸ் செலவிடும் தொகை, அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 11 சதவிகிதமாகும். இதில் 79 சதவிகிதத்தை அரசே வழங்குகிறது. மொத்த வருவாயில் இது 14.2 சதவிகிதம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கான கட்டணங்களைப் பேச்சுவார்த்தைகள் மூலம் அரசே நிர்ணயிக்கிறது. சேவையின் தரம் மற்றும் திறனை மேம்படுத்துவதற்காக டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை இருக்கிறது. டாக்டர்கள் மற்றும் மருத்துவத் துறைசார்ந்த பிறருடன் பேச்சு நடத்தப்பட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டதும் அது தொடர்பான நிர்வாக உத்தரவுகளும், சட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.
பிரான்ஸின் சுகாதாரக் கட்டமைப்புகள் இருவகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்ப சுகாதார வசதிகள் அனைத்தும் சுயமாகத் தொழில் செய்யும் டாக்டர்களைக் கொண்ட ஆம்புலன்ஸ் போன்ற நடமாடும் அமைப்புகள் மூலமாகவே மக்களுக்குக் கிடைத்து விடுகின்றன. இரண்டாம் நிலை சுகாதார வசதிகளுக்கு நடமாடும் அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
1990-களின் இறுதியில் சுகாதாரத் துறையில் "வாயில் காக்கும் நடைமுறை' செயல்படுத்தப்பட்டதில் இருந்து, பொது மருத்துவம் செய்யும் டாக்டர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இந்தத் திட்டப்படி நோயாளிகள் அனைவரும் பொது மருத்துவம் செய்யும் டாக்டர்களிடம் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். அதன் பிறகு தேவைக்கேற்ப சிறப்பு மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். சுயமாகத் தொழில் செய்யும் மருந்தாளுனர்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் மருந்துகளின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை சட்டப்பூர்வ மருத்துவக் காப்பீட்டு திட்டமே வைத்திருக்கிறது.
அரசு மருத்துவமனைகள், லாப நோக்கம் இல்லாத தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நோக்கிலான தனியார் மருத்துவமனைகள் ஆகியவை மருத்துவச் சேவையளித்து வருகின்றன.
மருத்துவமனைகளின் பெரும்பாலான சேவைகள் மற்றும் பொருள்களைச் சட்டப்பூர்வ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்குகிறது. ஒரு மருத்துவமனைக்கு என்னென்ன சேவைகள், பொருள்களை வழங்கலாம் என்கிற பட்டியலை அரசே தயாரித்து அளிக்கிறது. எல்லா மருத்துவச் சேவைகள் மற்றும் மருந்துகள் பெறுவதற்கான காப்பீடு ஒரே அளவாக இருப்பதில்லை. உதாரணத்துக்கு சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்கு 50 சதவிகித காப்பீடு வழங்கப்படுகிறதென்றால், இதய அறுவைச் சிகிச்சைக்கு 70 சதவிகிதம் வழங்கப்படலாம்.
பிரான்ஸின் சுகாதாரத் திட்டம் அரசு, தனியார், காப்பீட்டுத் துறை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படும் சட்டப்பூர்வ சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இதனால், கிட்டத்தட்ட அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துவிடுகிறார்கள். இதுபோக, தேவையென்றால் பிற தனியார் காப்பீட்டு திட்டங்களில் சேருவது அவரவர் விருப்பம்.
புறநோயாளிகளைக் கவனிப்பதில் பெரும்பாலும் தனியாரே ஈடுபட்டிருக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் அரசிடமும், லாப நோக்கமற்ற தனியார் வசமும் உள்ளன. தனியார் பங்களிப்பு இருந்தாலும் சுகாதாரத் துறையில் முக்கியப் பங்காற்றுவது அரசே.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எல்லா நாடுகளையும் பீடித்திருக்கும் "மானியக் குறைப்பு' வியாதி பிரான்ஸ் சுகாதாரத் துறையையும் விட்டுவைக்கவில்லை. சட்டப்பூர்வ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான செலவைக் குறைக்கும் முயற்சியில் அந் நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், அனைவருக்கும் மருத்துவ வசதிகளைக் கிடைக்கச் செய்வது, பாரபட்சமற்ற காத்திருப்பு இல்லாத வகையிலான சேவை போன்றவற்றில் பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத் திட்டம் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் திருத்தப்பட வேண்டிய பல அம்சங்கள் இங்கு இருக்கின்றன. ஆம்புலன்ஸ் சேவை அளிப்போருக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
பிற நாடுகளைப் போலவே, மருத்துவத் துறைக்கு அளவுக்கு மீறிச் செலவு செய்து கொண்டிருப்பதா என அரசு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலமாக அரசு சித்திரவதை செய்வதாக மக்கள் புலம்புகிறார்கள்.
பிரான்ஸ் சுகாதாரத் திட்டத்தின் மற்றொரு முக்கியமான குறை, கட்டணம் செலுத்தும் நடைமுறை. சிகிச்சை பெறும் நோயாளிகள் முதலில் மருத்துவமனைக் கட்டணங்களைச் செலுத்திவிட வேண்டும். சட்டப்பூர்வ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விருப்பக் காப்பீட்டுத் திட்டம் போன்றவை மூலமாக இந்தப் பணம் திருப்பியளிக்கப்படும்.
இந்த நடைமுறை பிரான்ஸýக்கு வேண்டுமானால் பொருந்தி வரலாம். ஆனால், ஏழைகள் அதிகம் வசிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. இந்தத் திட்டத்தில் மக்களும் குறிப்பிட்ட அளவு கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால், சுகாதாரத் திட்டங்களைக் காப்பீட்டு ரீதியில் அணுகுவதை விட, அனைத்து வகையான மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்று, சேவைகளை நேரடியாக அளிப்பதே சிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

