சிந்தனைத் திணிப்பு வேண்டாம்
பிளஸ்-2 தேர்வுகள் நிறைவடைந்து, விடைத்தாள்கள் திருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகளுக்காக மாணவர்களைவிட அவர்களின் பெற்றோர்கள் உத்தேச கட்-ஆப் மதிப்பெண்களை கையில் வைத்து கடந்த கால பொறியிய


பிளஸ்-2 தேர்வுகள் நிறைவடைந்து, விடைத்தாள்கள் திருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகளுக்காக மாணவர்களைவிட அவர்களின் பெற்றோர்கள் உத்தேச கட்-ஆப் மதிப்பெண்களை கையில் வைத்து கடந்த கால பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளின் கட்-ஆப் ரேஞ்சைக் கவனத்துடன் அலசி ஆராய்ந்து வரும் நேரம்.
மேல்படிப்பு குறித்து வீடுகள்தோறும் பெற்றோர்கள், நண்பர்கள் என ஆளாளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி பிளஸ்-2 தேர்வு பெற்ற மாணவர்களை ஒரு வழி ஆக்கிவிடும் காலகட்டம் இது.
தேர்வு முடிவுகள் வராத நிலையிலும் கல்லூரிகளில் அட்வான்ஸ் கொடுத்து இடத்தை ரிசர்வ் செய்துள்ள பெற்றோர்களும் அதிகம். பொதுவாகவே, மேல்படிப்புக்கு மட்டுமல்ல, பிள்ளைகள் எல்.கே.ஜி. சேர்ந்ததில் இருந்து இந்தப் படிப்பு குறித்த ஆலோசனைகள், மாணவர்கள் ஒரு வேலைக்குச் செல்வது வரை தொடர்ந்து நிழல்போல் வருவது என்பது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.
பள்ளிகளில் சேர்க்கும்பொழுதே பொறியாளர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை அல்லது கனவை, தங்களின் மகன் அல்லது மகளின் தோளில் ஏற்றி அவர்களின் தோள்வலியைக் கூட பொருட்படுத்தாது சுமக்கச் சொல்லி வருவதே பெற்றோர் பலரின் செயலாக இருந்து வருகிறது.
பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, பக்கத்து வீட்டில் நன்றாகப் படித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்த மாணவனைக் காட்டி, அவனைப்போல் படிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற வழக்கமான மந்திரம்தான், பல குடும்பங்களின் தாரக மந்திரம்.
இந்த மந்திரம், பிள்ளைகள் மனதில் அனிச்சை செயல் போல் பதிவாகி, எப்படியாவது பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிடுகிறது.
இப்படிப்பட்ட நிலையில், பொறியியல், மருத்துவம் போன்றவை தவிர்த்த மற்ற படிப்புகள் குறித்து, மாணவர்கள் மத்தியில் ஒரு தெளிவான பார்வை இல்லாமலேயே போய்விடுகிறது. எத்தனையோ படிப்புகள், அதுவும் படித்தவுடனே வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் பட்டய படிப்புகள் என எண்ணற்ற படிப்புகள் இன்றைய கல்விச் சந்தையில் குவிந்து கிடந்தாலும். அந்தப் படிப்புகளுக்கு பொறியியல் போன்று கிராக்கி இருப்பதில்லை என்பதுதான் வேதனை.
தங்களுக்குத் தெரிந்தவரின் மகன் அல்லது மகள் பொறியியல் படித்து இன்று கைநிறையச் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற பிரமிப்புதான் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறதே தவிர, எண்ணிக்கையில் அடங்காத பொறியியல் படித்த மாணவர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்வதைக் கவனத்தில் கொள்வதில்லை.
பெற்றோர்கள், அவர்களுடைய பிள்ளைகளின் மனதில் சிறுவயதில் விதைத்த பொறியியல் என்ற செடி அந்த மாணவன், பிளஸ்-2 முடித்த சமயத்தில் நல்ல மரமாக வளர்ந்துவிடுவதால், அந்த மாணவனும் எப்படியாவது பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்று துடிப்பதும் அதிகரித்து வருகிறது.
இப்படி குடும்பமும், சொந்தமும், அக்கம்பக்கமும் ஒவ்வொரு மாணவனையும் பொறியியல் படிப்புக்காக தயார்படுத்தி இருக்கின்ற நிலையில், பிளஸ்-2 தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்க முடியாத நிலையில், குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும்கூட வேறு வழியின்றி மாணவர்களும், பெற்றோர்களும் ஏதாவது ஒரு கல்லூரியில் அவர்கள் கேட்கும் கட்டணத்தைச் செலுத்தி படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். அங்கு அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்குமா என்பதைக்கூட யோசிப்பதில்லை. தனது பிள்ளை என்ஜினீயரிங் படிக்கப் போகிறான் என்பது மட்டுமே அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். இது ஒரு சமூக அந்தஸ்தாகிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி குறைவான மதிப்பெண்கள் பெற்று ஏதோ ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பதைவிட தனது பிள்ளைகளின் திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்குரிய கல்வியைக் கற்க பெற்றோர்களும் விரும்புவதில்லை. மாணவர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையில், பணத்தைச் செலவழித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களால், பொறியியல் கல்லூரிகளிலும் தனது திறனை வெளிப்படுத்த இயலாமல் போகிறது.
இதனால் ஏராளமானவர்கள் தங்கள் கல்வியை தொலைத்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துள்ள விவரங்கள் ஏராளம். உலகியல் நடப்புகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் திறன் பெற்றவர்கள் இன்றைய மாணவர்கள். அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால் அவர்களின் எண்ணங்களை மாணவர்களின் மனதில் திணிப்பதுதான், பிரச்னையாகி வருகிறது.
இதன் காரணமாக தங்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. நாளிதழ்களும் கல்லூரிகளின் புதிய பாடப்பிரிவுகளை தொகுத்து வழங்கி வருகின்றன.
எத்தனையோ கல்வித்துறை வல்லுநர்கள் நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மாணவர்களுக்கு அடுத்து அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது தானாகவே தெரிந்துவிடும். எனவே, பெற்றோர்களே பிள்ளைகளைச் சிந்திக்க விடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...