நல்ல இளைஞர்கள் நாட்டின் தேவை

வீட்டுக்கு ஓர் மரம் வளர்ப்போம் என்ற கொள்கை வெளியீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டோர் வீட்டுக்கு ஓர் மதம் வளர்ப்போம் என்று சொல்லி வீதிதொறும் வளர்க்கின்றார் கருத்து பேதம்'' - அந்நாளில் அடியேன் ஒரு கவியரங்கில் தூவிய நெல் விதைகள் இவை.
Updated on
4 min read

வீட்டுக்கு ஓர் மரம் வளர்ப்போம் என்ற கொள்கை வெளியீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டோர் வீட்டுக்கு ஓர் மதம் வளர்ப்போம் என்று சொல்லி வீதிதொறும் வளர்க்கின்றார் கருத்து பேதம்'' - அந்நாளில் அடியேன் ஒரு கவியரங்கில் தூவிய நெல் விதைகள் இவை.

அதே கதைதான் இன்றும். துறைதோறும் இளைஞர்கள் பங்குபெற வேண்டும் என்ற கருத்தும் தாறுமாறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. அரசியல் தலைவர்களோ அவரவர் வீட்டு இளைஞர்களையே ஆட்சிப் பொறுப்புகளில் ஏற்றி அலங்கோலப்படுத்தி வருகிறார்கள்.

வடக்கே சமையல் எரிவாயு உருளைகளைக் காவல் நிலையம் வழி வினியோகம் செய்ய உத்தரவு இடுகிறார் ஒரு அரசியல் வாரிசு. அங்கு பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டினால், செத்த பிறகு விசாரணைக் கமிஷன் போடலாம் என்கிறார் அந்த முதல்வர். நல்ல யோசனை.

இன்னொரு அகில ஈசுவரப் புத்திரரோ அப்பாவின் ஒக்கலில் உட்கார்ந்துகொண்டு சித்தப்பா, மனைவி சகிதம் ஆட்சி நடத்துகிறார். தமது கட்சிக் குண்டர்களின் துப்பாக்கிக் குண்டுக் கலாசாரத்தைக் கண்டு கொண்டதாகவே இல்லை. "எட்டே கால்' லட்சணம்தாம் போங்கள். என்ன புரியவில்லையா? எட்டே கால் என்ற எண்ணினைத் தமிழில் "அவ' என்ற எழுத்துகளால் குறிப்பது ஒளவையார் பாடம் ஆயிற்றே, தெரியாதா? ""எமக்குத் தொழில் ஊழல், இமைப்பொழுதும் கொள்ளை அடித்தல்'' என்பதே அவர்கள் வேதம். ஏதோ அவர்களும் "தேசத் தொண்டு' ஆற்றி வருகிறார்கள்.

நேற்று அடிமை இந்தியா, இன்று ஜனநாயக இந்தியா, நாளைக்கே "கார்ப்பரேட் இந்தியா' என்ற புதுச் சித்தாந்தம் முளைத்துவிட்டது. அடுத்த தேர்தலுக்கு கார்ப்பரேட்டு நிதி ஆதாரத்தில் தேர்தலில் நிற்பானேன்? கார்ப்பரேட்டுகளையே நிறுத்தி விடலாமே? அதற்காகத்தான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இன்றைய அரசியலார் தங்கள் பெண்டாட்டி, பிள்ளைகள், மாமனார், மாமியார் பெயர்களில் வீட்டு முகவரியிலேயே வர்த்தக அலுவலகங்கள் நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் நிரந்தர ஊதியம் - வருமானம் வரும் பிறிதொரு வர்த்தகத்தில் அல்லது தொழிலில் ஈடுபடக்கூடாது. ஆட்சியாளருக்கு இந்த "விதி' பாதகம் இல்லையோ?

மும்பா தேவி அருள் பாலிக்கும் இந்தியப் பொருளாதாரத் தலைநகரில் தலித் மாணவர் விடுதிகளுக்கான கூடாரங்கள் "இளைய பாரத'த்தினால் அபகரிக்கப்பட்டுவிட்டதாம். அதே வளாகத்தில் தனியார் அடுக்குமனை வியாபார ஒட்டகம்வேறு தலையை நுழைத்து நிமிர்ந்தும் ஆயிற்று. அதன் திமில் மேல், தில்லியின் முடிசூடா இளவரசர் நிழலும் சப்பணம் இட்டு அமர்ந்து இருக்கிறதாம். மூன்று தலைமுறைக்கு முந்திய முப்பாட்டனார் பெயரைச் சொல்லியே முப்பது ஆண்டுகளாகத் தக்க வைத்துக் கொண்ட சாமர்த்தியம் வேறு யாருக்கு வரும்?

டாக்டர் கலாம் போன்றவர்களோ தமது சொந்த ஊரில் சொந்த இல்லத்தைச் சொந்தச் செலவில் அருங்காட்சியகம் ஆக உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்நாளில் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்றார்கள். இன்றோ, அமைச்சர் வீட்டு அடுப்படியும் அதிகாரம் பண்ணும்போல! தொலைபேசியில் அழைத்துச் சொன்னாலே போதும். காவல்துறை ராஜ விசுவாசகமாக நடந்து கொள்கிறது. எழுத்துபூர்வமான புகார், விசாரணை, விவாதம் என்று இல்லாமல் நேரடி கைது நடவடிக்கை மேற்கொள்கிறதே. 120 கோடி ஜனங்களுக்கும் இந்த மாதிரி லாட்டரி கிடைத்தால் நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் குறையுமே!

இந்தச் சந்தர்ப்பத்தில் எமது கசந்த அனுபவத்தையும் சொல்லிவிடுகிறேன். "நம்பிக்கை' ஆயுள் காப்பீடு என்ற அந்த நம்பகத்தன்மை அற்ற நிறுவனத்தின் மோசடித்தனம். இரண்டு ஆண்டுகளாக, காப்புறுதி முதன்மை ஆவணத்தை எமக்கு அனுப்பவும் இல்லை.

"மேசைக்கு மேசைக்கு' என்ற இன்னொரு "பெயர் போன' தனியார் அஞ்சல் தூதன் வழி ஆவணம் எமக்கு அனுப்பப்பட்டதாகப் பதிவுசெய்து வைத்து இருக்கிறார்கள். அதில் இன்னொரு விசேஷம். கைக்கு வராத ஆவணத்தில் எம் கையெழுத்தையும் போலியாகத் தாங்களே இட்டு வைத்து இருந்தார்களே. என்ன சொல்ல?

சரி, கட்டிய 20,000 பணத்தையாவது திருப்பித் தாருங்கள் என்று கேட்க நேர்ந்தது. என் கணக்கில் 12,000 மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்கள். நல்ல கதை. வெறுமனே வீட்டு உண்டியலில் போட்டுவைத்தால் கூட பணம் குறையாமல் இருந்திருக்கும். அவர்களிடம் கேட்டால், முதல் 10,000 பணத்தில் 8,000 ரூபாயைத் தங்கள் கண்ணாடி மாளிகை கட்டுவதற்கு உபயோகிப்பது வழக்கமாம்.

உயிருடன் இருப்பவர்க்கே ஆயுள் காப்புறுதி தராதவர்கள், நமக்குப் பிறகு யாருக்குத் தருவார்கள். "அம்பா(ள்)நீ எடுத்துக்கொள்' என்றுதான் சகித்துக்கொள்ள வேண்டும்.

மின்திறன், நிலக்கரி, அலைக்கற்றை, எரிவாயு என இத்தகைய தொழில் அதிபர்களிடம் நம் நாடு வாழ்நாள் குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் அரச வாரிசுகளும் மந்திரிகளின் புத்திர பாக்கியங்களும் இணையம்வழி நடத்தும் மாயப் பணப் பரிவர்த்தனைகள் சொல்லி மாளாது.

தொலைபேசி வழி கேட்டதும் வெளிநாட்டு வங்கிப் பணத்தை வீட்டுக்கே வந்து பட்டுவாடா செய்யும் ஹவாலா ஆசாமிகள்வேறு, நம் நாட்டில் உலா வருகிறார்களாம். "நடமாடும் ஏ.டி.எம்.' (வங்கிப் பணம் வழங்கி) நபர்கள். கோடிக்கணக்கில் புரளுகிறதாம். அந்த நாலெழுத்து வங்கியின் தலைமைக் கணினி மறைத்து வைத்து இருந்த கறுப்புப் புதையல் விவகாரம் மெல்லத் துகில் உரியப்பட்டு வருகிறது. இந்த வில்லங்கத்தில் மத்திய ஆட்சியில் புதிதாகப் பொறுப்பு ஏற்ற அமைச்சர் ஒருவரின் கைங்கரியம் வேறு இருக்கிறதாமே!

பட்டியலில் 700 அன்னிய வங்கிக் கணக்காளர்கள். அனைவரும் திரௌபதி அவதாரம் இல்லை. பலரும் தேசத் திருடர்கள். அவர்களை அகில உலகத்திற்கும் அம்பலப்படுத்தலாம். தப்பு இல்லை. அரசாங்கத்தின் கிருஷ்ண பரமாத்மாக்களோ, அந்தரங்கத்தை வெளியிட ஏனோ மறுக்கிறார்கள். "இவர்கள் ஜாக்கிரதை' என்ற எச்சரிக்கைப் பலகை தொங்கவிட அரசுக்கு என்ன தயக்கமோ?

திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தங்கவேலு என்ற கைதி, சிறைக் கம்பிகளை முகச் சவர பிளேடு ஒன்றினால் சத்தம் வராமல் அறுத்துத் தப்பித்துவிட்டான். அவனை மீண்டும் பிடித்துவந்த காவல் துறை, நிலைய வாசல்படியில் பொது மக்கள் பார்வைக்கு நிறுத்தியது.

ஆளும் கட்சியின் இன்னொரு மேதாவி உறுப்பினர் தனிக்கூட்டத்தில் பேசிய எழுச்சி உரை அரங்கேறும் நேரத்தைக் கவனியுங்கள். கட்சித் தலையும் ஆட்சித் தலையும் "மாண்புமிகு'க்களுடன் குளிர் அரங்கில் கூடித் தேர்தல் வாக்குறுதிகளைப் பிரேதப் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் தருணம். தில்லியில் உட்கார்ந்து கடலை தின்பதால் பலன் இல்லையாம்.

முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமாம். இவர்களால் குளுகுளு மகிழுந்து வண்டி விட்டு இறங்கி நடக்க வேறு முடியாதே. எதிர்க் கட்சிக்காவது ஓடி ஆடிப் பிரசாரம் செய்ய ராஷ்ட்ரிய சேவகர்கள் இருக்கிறார்கள் என்று புலம்பித் தள்ளி இருக்கிறார் அந்த உறுப்பினர்.

இணைய வலைத்தளத்தில் ஆபாசத் தொடர்புக் காட்சிகளில் சிக்கித் தலைமறைவு ஆன நாணயஸ்தர் மீண்டும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆகிவிட்டார். மனைவி பேரில் பல கோடி வில்லங்கத்தில் மாட்டிக்கொண்ட உறுப்பினர், இன்று மத்திய அமைச்சராக "ஞானஸ்நானம்' பெற்றுவிட்டார்.

கொலைக் குற்றம் தொடர்பான உறவினர்க்கு அடைக்கலம் தந்தவர் புதிய அமைச்சர் ஆகிறார். தனியார் வர்த்தக நிறுவனத்தோடு சமரசத்திற்கு "ஒத்துப் போகாத' நல்ல அமைச்சர் ஒருவர், பதவி மாற்றப்படுகிறார். அங்கு அறிவியல் தொழில்நுட்பத் துறை, ஏதோ தீண்டத்தகாதது மாதிரியான சித்திரிப்பு நடக்கிறது. மேல்படி வருமானம் இல்லாத துறை, அதனால் ஒப்புக்குச் சப்பாணிபோல இழிவுபடுத்தப்படுகிறதே?

எப்படியோ, பதவி ஏற்ற நாலே நாளில் எரிவாயு விலைவாசியை ஏற்றித் தம் கட்சி விசுவாசத்தைத் தலைமைக்கு "அர்ப்பண்' செய்கிறார் ஒரு அமைச்சர். அத்துடன் "விமானி' என்ற பெயர் தாங்கிய இளைய அமைச்சர் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கவனித்துக்கொள்வாராம். வயது 35 மட்டுமே. வடக்கே முதல்வரின் தங்கச்சி மாப்பிள்ளை இந்த இளவட்டம். ""அம்மா சொன்னபடி கேட்பேன்'' என்று முதலிலேயே சத்திய வாக்கு மூலம் அருளி விட்டார். அப்புறம் எப்படி அரசியல் சாசனப்படி நடப்பார்களோ?

பொதுவாக, ஒரு நல்ல அரசு அதிகாரி தம் துறையில் அல்லது அலுவலகத்தில் தனது மகனையோ, மகளையோ பணியில் அமர்த்தக் கூச்சப்படுவார். ஏன் என்றால் அந்த உறவினர்க்குப் பதவி உயர்வு, அபரிமிதமான மரியாதை, விசேடச் சலுகைகள் என்று எல்லாம் தானாகவே வந்து மேசையைத் தட்டும். "ஐஸ் கிரீம்' குளிப்பாட்டு நடக்கும். வலிய வந்து அன்பளிப்புகள் வழங்கப்படும். பதிலுக்குப் பிரதி உபகாரம் கருதி, தலையைச் சொறிந்து நிற்கும் ஒரு கூட்டம். இது ஒருவகை ஆதாய ஊழல்தானே.

எப்படியோ, ஓய்வுபெற்ற பின், வருவாய் ஆய்வுப் பணி, இந்திய அரசுப் பணி, காவல் பணி, ராணுவப் பணி என்று பணிபுரிந்த பல துறை அதிகாரிகள் சமீப காலமாகவே அறச்சீற்றம் கொண்டு இருப்பதை மறுக்க இயலாது.

குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற டாக்டர் அப்துல் கலாம் ஒரு முறை ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு வருகை புரிந்தார். அங்கு மைய உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே கலந்து உரையாடினார். ஒரு மாணவரிடம், ""படித்து எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். ""அரசியல்வாதி ஆகணும்'' என்றார் அந்த மாணவர். ""ஏன் பலரும் டாக்டர், எஞ்சினீயர், கலெக்டர் ஆகணும் என்பார்களே? நீங்கள் அரசியல்வாதி ஆகி என்ன செய்வீர்கள்?'' கலாம் தொடர்ந்தார். ""தீவிரவாதத்தை ஒழிப்பேன்'' என்றார் அந்த இளம் மாணவர்.

ஊழல்வாதிகள் மத்தியில் நல்ல இளைஞர்கள் கெட்டுப் போய்விடாமல் இருந்தால் சரி. ""ரிஷிகேசத்து யோகி ஒருவரிடம் அமெரிக்கப் பெண்ணொருத்தி ஞானத்தைக் கற்றுக்கொள்ள வந்தாள். விளைவு? யோகி காமத்தைக் கற்றுக் கொண்டார்'' என்பார் கண்ணதாசனார். எதிர்கால அரசியல் இந்த "செப்பு மொழி' மாதிரி ஆகிவிடக் கூடாதே.

இதுதான் நம் தேசியப் பிரார்த்தனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com