மூதறிஞர் ம.ரா.போ. குருசாமி மறைந்தார் என்பதனைக் கேட்டவுடன் மனம் தேம்பித் தேம்பி அழுகிறது. தொண்ணூறு வயது. பழுத்த பழம்தான். அந்தப் பழத்தோடு பண்போடு கூடிய பழுத்த தமிழ்ப்புலமையும் போய்விட்டதே!
இப்பொழுது கோவையே வெறுமை அடைந்துவிட்டது போன்ற மனக் கலக்கம் அல்லவா உண்டாகிறது?
பச்சையப்பன் கல்லூரியில் "தமிழ் ஆனர்ஸ்' பயின்ற முதல் அணி மு.வ. மாணவர்களில் வேங்கடசாமி, இரகுநாயகம், டாக்டர் ரா. சீனிவாசன் ஆகியோர் முன்னரே மறைந்துவிட்டனர். இப்பொழுது எஞ்சி இருந்த ஒருவரும் போய்விட்டார்.
1957 ஆம் ஆண்டு புகுமுக வகுப்புப் படித்தபோது எனக்கு ம.ரா.போ. எழுதிய "வாழ்வும் வழியும்' என்னும் நூல் பாடமாக இருந்தது. அன்று அவர் எழுத்து எனக்கு அறிமுகமாயிற்று. பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை படித்தபோது அவரது "சிலப்பதிகாரச் செய்தி' என்னும் நூலைப் படித்தேன். அது கூறிய செய்தியாலும் நடையாலும் என்னைப் பெரிதும் கவர்ந்தது. 1967 இல் திருப்பத்தூரில் நடந்த இலக்கிய விழாவின்போது நேரில் சந்தித்தேன். அவரது புலமையும் பண்பும் என்னை அவர் வயப்படுத்தின. அந்தத் தொடர்பு வளர்ந்து மலர்ந்தது.
ஏதோ வேலையாகச் சென்னைக்கு வந்தவர் பேருந்துகளும் இயங்காத ஒரு வேலைநிறுத்த நாளில், எனக்கு முனைவர் பட்ட நேர்முகத் தேர்வு பச்சையப்பன் கல்லூரியில் நிகழ்வதனை அறிந்து நடந்தே வந்து கலந்துகொண்ட அந்த எளிமையையும் தேர்வு முடிந்த பின் என் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து என் இல்லத்திற்கு வந்து ஒருநாள் தங்கிச் சென்ற அன்பையும் இப்பொழுது எண்ணுகிறேன். கண்கள் ஈரமாகின்றன.
தமக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக இறுதிநாள் வரை கதர் ஆடையை மட்டுமே உடுத்திய காந்தியவாதி அவர். தம் மக்களுள் ஒரு பெண்ணுக்குச் சிலம்பில் வரும் மாதவியைப் போற்றும் வகையில் மாதவி என்றும், ஒரு பையனுக்கு விவேகானந்தரைப் போற்றும் வகையில் நரேந்திரசிவா என்றும் பெயர் வைத்துத் தம் தேசியப்பற்றையும் தமிழ்ப்பற்றையும் புலப்படுத்தியவர். நல்லினி, எழில், அரவணன், செந்திலருள் ஆகியோர் மற்றப் பிள்ளைகள் ஆவர்.
ம.ரா.போ. குருசாமி 15-6-1922 அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மமுசாபுரம் என்னும் ஊரில் இராம. இராக்கப்பருக்கும் அன்னம்மைக்கும் மகனாகப் பிறந்தவர். இளமையிலேயே தந்தையை இழந்த அவருக்குத் தந்தையின் இடத்தில் இருந்து அவரை வளர்த்து ஆளாக்கி அவையத்து முந்தியிருக்கச் செய்தவர் தமையனார் ம.ரா. சண்முகசுந்தரம் ஆவார். பால கணபதி என்று மற்றோர் அண்ணனும் உண்டு. தமக்கையும் தங்கையும் இருந்தனர். தங்கை சாரதாமணி பத்து வயதிலேயே இறந்துவிட்டார். சென்னை மயிலாப்பூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் பச்சையப்பன் கல்லூரியில் "தமிழ் ஆனர்ஸ்' படிப்பையும் பெற்றவர். அவர் கல்லூரி நாட்களிலேயே சிறந்த பேச்சாளராகவும் கட்டுரையாளராகவும் திகழ்ந்தவர். அவர் பல்லாண்டுகள் கோவை பூ.சா.கோ. கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க., மோசூர் கந்தசாமி முதலியார், மு.வ., அ.ச.ஞா., மொ.அ. துரை அரங்கனார், பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ., சிலம்புச்செல்வர் ம.பொ.சி., பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் போன்ற தமிழ்ச்சான்றோர்களோடு நெருங்கிப் பழகியவர். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்களோடு நெருங்கிப்பழகி அதே நெருக்கத்தை அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களிடம் காட்டிய அன்புப்பிழம்பு அவர்!
"வரதராஜனாரிடம் தமிழ் பயிலும் மாணாக்கர் சிலர் என்னிடம் வருவர். அவருள் குறிக்கத் தக்கவர் வேங்கடசாமி, இரகுநாயகன், குருசாமி முதலியோர். இவர்கள் தொண்டால் வருங்காலத் தமிழ்நாடு நன்கு அமையும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டாகியிருக்கிறது' என்பது திரு.வி.க எழுதியுள்ள குறிப்பு.
"இவருடைய புலமையிலே எனக்கு மிகுந்த கவர்ச்சி உண்டு. படித்ததற்கு அதிகமாகவும் அறிவுத்திறனை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் பெற்றவர்' என்று இவருடைய அறிவுத் திறனைக் கொண்டாடியுள்ளார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
அறிஞர் ம.ரா.போ., "குருவை மறவாத சாமி'யாகத் (குருசாமியாகத்) திகழ்ந்தார். பேராசிரியர் அ.ச.ஞா.வின் எண்பதாம் ஆண்டு நிறைவையொட்டிக் கோவையில் மிகச் சிறப்பாக விழா நடைபெற்றது. அவர் எழுதிய "இராமன் பன்முகநோக்கில்' என்னும் நூல் ஒன்றினைச் சிறப்பாக வெளியிட்டு அவருக்குப் பொன்முடிப்பும் தந்து பெருமைப்படுத்தினர்.
டாக்டர் மு.வ.வின் நூற்றாண்டு விழா பல இடங்களில் நடைபெற்றிருந்தாலும் முதன்முதலில் நடைபெற்றது கோவையில்தான். அதற்குக் காரணம் ம.ரா.போ.தான்.
தம் ஆசிரியர்களின் புகழைப் பரப்பி அதில் மகிழ்ச்சி அடைந்த தூய மாணவ நெஞ்சம் அவரது நெஞ்சம். அவர் "ரசனை' இதழில் தம்மை உருவாக்கியவர்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் "குருமுகம்' என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. அதனைப் படித்த என் உள்ளம் நெகிழ்ந்தது. இந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது ஏன் தரப்படவில்லை என்பது பலரது மனதிலும் எழும்புகின்ற விடை கிடைக்காத கேள்வி.
தம் நாவலுக்கு "முருங்கைமரம்' என்று தாம் வைத்த பெயரை இவருடைய கருத்தினை ஏற்று "செந்தாமரை' என்று மாற்றினார் மு.வ. என்பது இருவரது பண்பினையும் காட்டுகிறது.
தம் ஆசிரியர் புகழ் விளங்க வேண்டும் என்னும் பேருள்ளம் கொண்டவர் ம.ரா.போ. குருசாமி ஆவார். மு. வரதராசன் என்று முழுப்பெயரோடுதான் அவர் எழுத்துகள் வந்தன. அப்பெயரைச் சுருக்கி மு.வ. என்று அமைத்ததும் ம.ரா.போ.தான்.
மு.வ.வின் "செந்தாமரை' அச்சானபோது ம.ரா.போ. "சக்தி' காரியாலயத்தில் துணையாசிரியராகவும் நூல் பதிப்பாசிரியராகவும் இருந்தார். "செந்தாமரை'க்கு அட்டைப்படம் தயாரிக்கும் பொறுப்பை மு.வ. அவரிடம் ஒப்படைத்தார். அட்டையில் ஆசிரியர் பெயர் மு.வ. என்று மட்டுமே அமைக்கப்பட்டது. அதனைக் கண்ட மு.வ., "இது என்ன மு.வ. என்று மட்டும் இருக்கிறது?' என்று சற்றுச் சூடாகவே கேட்டார்.
அதற்கு, "ஜி.பி.எஸ். என்றால் உலகம் எல்லாம் ஜார்ஜ் பெர்னாட் ஷா என்று தெரிவதுபோல எங்கள் பேராசிரியர் பெயர் மு.வ. என்று சொன்னாலே தெரிய வேண்டும் என்பது என் ஆசை' என்றார். அதனைக் கேட்ட மு.வ. "ஆசை, ஆசை, பேராசை. அதை முதலில் மாற்று' என்று கடிந்து சொன்னார். "சரி' என்று சொன்ன போதிலும் ம.ரா.போ.வின் மனம் அதற்கு உடன்படவில்லை.
அடுத்த நாள் ஏதோ காரணத்தால் மு.வ.வைச் சந்திக்கவில்லை. மறுநாள் சந்தித்தபோது, "பெயரை மாற்றினாயா, இல்லையா?' என்றார் மு.வ.
"ஐயா, தப்பு நடந்துவிட்டது. அட்டைப்படம் பிளாக் செய்துவிட்டார்கள். இனி மாற்றுவது என்றால் பிளாக் செய்ய மேலும் செலவாகும். தொலைகிறது. அப்படியே இருந்துவிடட்டுமே' என்று வேண்டுமென்றே பொய் சொன்னார். இப்படிப் பொய்சொல்லி ஆசிரியரின் புகழ் வளர்த்த மாணாக்கர் முதலும் கடைசியுமாக ம.ரா.போ. ஒருவராகத்தான் இருப்பார்.
சிலம்புச்செல்வர் மா.பொ.சியின் சிலப்பதிகாரச் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர்பால் ஈர்க்கப்பட்டவர். ம.பொ.சி. மறையும்வரை அவரிடத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தவர். தாம் வை. கோவிந்தன் அவர்களிடம் "சக்தி' காரியாலயத்தில் பணியாற்றியபோது அவருடைய ஆதரவுடன் இரவு நேரத்தில் அச்சகத்தில் இருந்து ம.பொ.சி நடத்திய "தமிழ்முரசு' வெளிவருவதற்கும் துணைநின்றுள்ளார்.
அவர் தமிழுக்குப் பயனுள்ள ஆக்கப்பணிகளைச் செய்வதில் முனைப்புக் காட்டியவர். அவரது முயற்சியால்தான் கோவைக் கம்பன் அறநிலை வாயிலாக அமரர் அ.ச.ஞா.வை உரையாசிரியர் குழுவின் நெறியாளராகவும் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் கொண்ட உரையுடன் கூடிய கம்ப ராமாயணப் பதிப்பு வெளிவந்தது.
அருட்செல்வர் மகாலிங்கம் முயற்சியால், தமிழ்ச் சிந்தனை வளத்தினைக் காட்டும் தமிழ் ஞானிகள் முப்பதுபேர் குறித்து முப்பது அறிஞர்கள் எழுதிய நூல்கள் "ஞானபரம்பரை' என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தன. அந்தப் பணிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து தக்கவர்களைத் தேர்ந்தெடுத்துத் தலைப்புக் கொடுத்து எழுதச் செய்தவர் ம.ரா.போ. குருசாமிதான்.
தமிழில் அறிவியல் செய்திகளை வழங்கும் தரமான இதழாகக் கோவையிலிருந்து வெளிவந்த "கலைக்கதிர்' இதழின் பொறுப்பாசிரியராகச் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளும் காந்தியத்தைப் பரப்பும் "சர்வோதயம்' இதழின் பொறுப்பாசிரியராகப் பத்து ஆண்டுகளும் பணிபுரிந்த தொண்டு சிறப்பானது. கோவையில் இயங்கிவரும் இலக்கிய அமைப்புகள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு நிலையில் இறுதிவரை தொடர்புகொண்டிருந்தார்.
இறுதி மூச்சு இருக்கும்வரை தமிழ்த்தொண்டு செய்த இந்த அறிஞரை நாடி வந்த விருதுகள் பல. குன்றக்குடி ஆதீனம் "நூலறி புலவர்' என்றும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் "தமிழ்ச்செம்மல்' என்றும், அவினாசிலிங்கம் நினைவு அறநிலை "தமிழண்ணல்' என்றும் பட்டங்கள் தந்துள்ளன. கபிலர் விருது, சேக்கிழார் விருது, குலபதி முன்ஷி விருது, ஆதித்தனார் விருது ஆகியவற்றை திருக்கோவிலூர்ப் பண்பாட்டுக்கழகம், சென்னைச் சேக்கிழார் ஆராய்ச்சி மையம், பாரதிய வித்யா பவன் ஆகியவை வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளன.
இசைஞானி இளையராஜா இலக்கியப் பெருமன்றம் பாவலர் வரதராசன் பெயரால் அமைந்த "தமிழ் அறிஞர்' விருதினையும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணமுடிப்பினையும் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் திருக்கரங்களால் வழங்கிச் சிறப்பித்தது.
இருபதுக்கு மேற்பட்ட நூல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வரைந்த கை ஓய்ந்துவிட்டது. சங்க இலக்கியம், சிலம்பு, கம்பராமாயணம் ஆகியவற்றின் உயர்வுகளைப் பேசிய வாய் அடங்கிவிட்டது. ஆசிரியர்களைத் தெய்வமாகப் போற்றியவர் தெய்வமாகிவிட்டார். முற்றி இருந்த கனிதான் உதிர்ந்தது. அது இயல்புதான் என்றாலும் மனம் அதனை ஏற்க முடியாமல் தவிக்கிறது. காரணம் உதிர்ந்தது சாதாரணக் கனி அன்று, தமிழ்க்கனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

