ஒளிபடைத்த கண்கள் வேண்டும்

அண்மைக் காலமாக, பள்ளி செல்லும் மாணவர்களில் கணிசமானவர்கள் -

அண்மைக் காலமாக, பள்ளி செல்லும் மாணவர்களில் கணிசமானவர்கள் - அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் - கண்ணாடி அணிவதைப் பார்த்திருக்கலாம். இதைக் கண் மருத்துவர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹைதராபாதில் செப்டம்பர் 17-20 வரை  நடைபெற்ற 9-வது உலக சபை மாநாட்டில் "குழந்தைகளின் பார்வைக் குறைபாடு'க்கு முக்கியத்துவம் தந்து பேசப்பட்டது. பார்வையிழப்பைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய அமைப்பு (ஐ.ஏ.பி.பி.) இந்த மாநாட்டை நடத்தியது.

 குழந்தைகளின் பார்வைக் குறைபாடு அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதித்துவிடக்கூடாது. வகுப்பில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதுவதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை, படிக்க முடியவில்லை என்றால் அந்த மாணவனின் கல்வி முதலில் பாதிப்புக்குள்ளாகிறது. பல வேளைகளில் மனதளவிலும் பாதிப்புகள் நேர்கின்றன. எனவே பார்வைக் குறைபாடு முற்றும்வரை விட்டுவிட்டு பிறகு வருந்துவதைவிட  கண்களைப் பரிசோதிப்பது மிகமிக நல்லது. குழந்தை ஆரோக்கியமாகவே இருந்தாலும் சோதிப்பதால் தீமை ஏதும் இல்லை.

 பார்வைக் குறைபாடு இருந்தால் கண்ணை ஆய்வு செய்து தகுந்த கண்ணாடியை அணியச் செய்வதன் மூலம் தெளிவான பார்வையைத் தர முடியும்.

 உரிய நேரத்தில் கண்ணாடி போடாவிடில் நாளடைவில் கண் "சோம்பேறிக் கண்'ணாகி பார்வைக் குறைவு ஏற்படும்; இறுதியில் நிரந்தரப் பார்வையிழப்பையும் கூட ஏற்படுத்திவிடும்.

 தங்களுக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது என்று குழந்தைகளுக்குத் தெரியாது. நாம்தான் அவர்களைக் கவனித்து வரவேண்டும். ஒரு குழந்தை படிப்பில் மந்தமாக, தொடர்ந்து மதிப்பெண் குறைவாக வாங்கிவந்தால் பார்வைத் திறனை முதலில் பரிசோதிக்க வேண்டும். நோட்டில் எழுதும்போது தெளிவாக எழுதாமல் கிறுக்கிவைத்தாலும் கவனம் செலுத்த வேண்டும்.

 ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணைச் சுருக்கிப் பார்த்தாலோ, ஒரு கண்ணை மூடி மற்றொரு கண்ணால் பார்த்தாலோ, தலையைச் சற்றுச்  சாய்த்துப் பார்த்தாலோ, அடிக்கடி கண்ணைத் தேய்த்துப் பார்த்தாலோ பார்வைக் குறைவா என்று சோதிக்க வேண்டும்.

 எழுதும்போதும் படிக்கும்போதும் புத்தகத்தை மிக அருகில் வைத்துப் படித்தாலும் கவனம் செலுத்த வேண்டும். கண்ணில் அடிக்கடி கண்கட்டி ஏற்பட்டாலும் ஆய்வு செய்ய வேண்டும்.

 பள்ளிக்கூடத்துக்குச் சென்று வீடு திரும்பிய பிறகு "தலைவலிக்கிறது' என்று அடிக்கடி சொன்னாலும் கண்களைப் பரிசோதிக்க வேண்டும்.

 தொலைக்காட்சிப் பெட்டிக்கு மிக அருகில் சென்று உட்கார்ந்து பார்த்தால் குழந்தையைத் திட்டக்கூடாது; ஆர்வமாகப் பார்க்கிறது என்றும் சும்மா இருந்துவிடக் கூடாது. பார்வைக் குறைபாடு  காரணமா என்று ஆய்வு செய்வது நல்லது. படம் தெளிவாகத் தெரியவேண்டிகூட குழந்தை இப்படி அருகில்போய் உட்காரலாம்.

 பார்வைக் குறைவுக்கு கண்ணாடிதான் அற்புதமான தீர்வு. குறைந்த செலவில் கண்ணாடி அணியச் செய்து நல்ல பார்வையைக் கொடுக்கலாம். குழந்தைகளில் சிலர் கண்ணாடி வாங்குவதோடு சரி, தொடர்ந்து போடுவது கிடையாது. தொடர்ச்சியாகப் போடாவிட்டாலும் கண்கோளாறு அதிகமாகிவிடும்; வெளித் தோற்றத்துக்கு நல்ல நிலையில் இருப்பதைப் போலத் தோன்றினாலும் "சோம்பேறிக் கண்ணாகி' பார்வையிழப்பு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு கண்ணாடி அணிந்தாலும் பார்வை கிடைக்காது.

 குளிக்கும் நேரம், தூங்கும் நேரம் தவிர பிற நேரங்களில் கண்ணாடி அணிவது அவசியம் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

 குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பார்வைக்குறைவை பெற்றோர்தான் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். கண்ணாடி அணிவதன் பயனையும் அவ்விதமே உணர்த்த வேண்டும். இத்தகவலை வகுப்பு ஆசிரியர்களிடமும் தெரிவிப்பதன் மூலம் தொடர்ந்து கண்ணாடி அணிவதைப் பழக்கமாக்கிவிட முடியும்.

 கண் ஒரு நுட்பமான உறுப்பு. அதை முறையாகப் பாதுகாப்பதன் மூலம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். தொலைக்காட்சியை அதிக நேரம் வைத்தகண் வாங்காமல் பார்ப்பதை மாற்றி குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்க்கும்படி ஒழுங்குபடுத்த வேண்டும். அப்படிப் பார்க்கும் நேரத்திலும் அடிக்கடி பெட்டியைவிட்டு கண்ணை எடுத்து தொலைவில் உள்ள பொருளைப் பார்க்கச் சொல்ல வேண்டும்.

 தொலைக்காட்சி பெட்டியிலிருந்து குறைந்தது 12 அடி தொலைவில் அமர்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும். அந்த அறையில் உள்ள விளக்கிலிருந்து ஒளி நம் கண் மீது நேரடியாக விழாமல் இருக்கும்வகையில் விளக்கை அமைக்க வேண்டும்.

 குழந்தைகளுக்குக் கண்பார்வையை வலுப்படுத்தும் கீரைகள், காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றை உண்ணக் கொடுக்க வேண்டும். நவீன நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும்.

 விளையாடும்போது கவனமாக விளையாடச்  சொல்ல வேண்டும்.

 "ஓடி விளையாடு பாப்பா' என்று பாரதி சொன்னதைப் போல குழந்தை ஓடியாடவும் வேண்டும், "ஒளி படைத்த கண்ணினாய் வா' என்று பாடியதற்கு ஏற்ப துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் மிக்க ஒளிமிக்க கண்ணுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

 (இன்று உலக பார்வை தினம்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com