தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

"கடமை விவசாயம்' செய்கிறோமே...

இன்றைய உலகம் நவீனமயமாகிக் கொண்டிருக்கிறது. உலக வளங்களைத் தத்தமது அறிவாற்றலால் பெருவாரியான மக்கள் பயன்படுத்தி இன்புறத்தகுந்த பல்லாயிரக்கணக்கான தொழில் நுட்பங்களைப் பேரறிவாளர்கள் உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்து வருகிறார்கள்.

Updated On :25 அக்டோபர் 2012, 7:42 pm

இன்றைய உலகம் நவீனமயமாகிக் கொண்டிருக்கிறது. உலக வளங்களைத் தத்தமது அறிவாற்றலால் பெருவாரியான மக்கள் பயன்படுத்தி இன்புறத்தகுந்த பல்லாயிரக்கணக்கான தொழில் நுட்பங்களைப் பேரறிவாளர்கள் உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்து வருகிறார்கள்.

இருப்பினும், அனைவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலையை இன்னும் உருவாக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது தேவையற்ற ஆசையும், அனுபவிக்க இயலாத அளவு சொத்துகளைச் சேர்த்து முடக்கி வைப்பதுமே ஆகும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத் தேவை அறிவுபூர்வமான உழைப்பும், அவ் உழைப்பினால் பெறப்படும் பலன்களுமே. ஆனால், மனித சக்தியாகிய இந்த உழைப்பு பல நிலைகளில் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுவதுடன், ஆக்க சக்தியாக மாற வேண்டிய உழைப்பு அழிவு சக்தியாக பல நேரங்களில் மாறிவிடுகிறது. உதாரணம், பல்வேறு வகையான போராட்டங்கள். அப்போராட்டங்கள் எழாமல் அடிப்படையிலேயே தடுக்கக்கூடிய செயல்களை "அரசுகள்' மேற்கொள்ளாததால் இனிமையான மனித வாழ்க்கை பலருக்குத் துயர் நிறைந்ததாக மாறிவிடுகிறது.

உதாரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையம். "பாதிக்கப்படுவோம்' என எதிர்பார்க்கின்ற அனைத்து மக்களுக்கும் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினால் போராட்டங்கள் பலனற்றதாகிவிடும். அங்குள்ள மக்களுக்கு முழுச் சுகாதார வசதி, இலவசக் கல்வி, தரமான சாலை வசதி போன்ற பல்வேறு அத்தியாவசியத் திட்டங்களைப் பாதிக்கப்படுகின்ற இடங்களில் உருவாக்கினால் அங்குள்ள மக்களும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

பல்லாயிரம் கோடி ரூபாயைத் தேவையில்லாமல் "கடன் தள்ளுபடி' என ஒட்டுமொத்தமாகச் செயல்படுத்தும் மத்திய - மாநில அரசுகளுக்கு அனைவரும் ஏற்கும் வகையில் நியாயமான அடிப்படைத் தேவைக்கு நிதி ஒதுக்குவது இயலாததல்ல.

ஆட்சியாளர்களும் பல்வேறு சூழ்நிலைகளில் ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தாங்கள் நினைக்கின்ற பயனற்ற பல திட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பதால் மக்களை மகிழ்விப்பதற்குப் பதிலாக ஆட்சியாளர்களே பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இப்போதைய நிலையில் பெருவாரியான மக்கள் பயனடையும் வகையில், உற்பத்தியைக் கெடுக்காமல் உற்பத்திக்குப் பலனளிக்கும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும் அரசியல்வாதிகளே நல்ல ஆட்சியாளர்களாவர்.

நீர்ப்பாசனம் முதற்கொண்டு பாமர மக்களின் வாழ்வில் வளம் பெரும் வகையிலான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி நாடே மெச்சுகின்ற வகையில் செயல்படுகின்ற குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியும், பின் தங்கிய பிகார் மாநிலத்தை முன்னேற்றுவதில் வெற்றிகண்டுவரும் நிதீஷ் குமாரும் நல்லாட்சியாளர்களுக்கு சில உதாரணங்கள்.

அனைத்து வளங்களையும் உள்ளடக்கியிருந்தும், முன்னேற்றத் திட்டங்களை முந்தைய ஆட்சியாளர்கள் சரிவரச் செயல்படுத்தாததால் நக்சல்பாரிகளின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள பிகார் அரசு தற்போது முன்னேறும் மாநிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

நம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமைத்தன்மையை அனைவரும் அறிவர். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கூறிய முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று "தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக முன்னேற்றுவது' என்பதாகும்.

இவ்வாக்குறுதியை உண்மையாகவே செயல்படுத்திட பல வாய்ப்புகள் இருந்தபோதிலும் அவற்றை எல்லாம் இதுவரை திறம்படப் பயன்படுத்தவில்லை. இதனால் பல்வேறு மூல வளங்கள் நம் தமிழகத்தில் திறம்படப் பயன்படுத்திக் கொள்ளப்படாமல் வீணடிக்கப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, நீர்வள ஆதாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதிலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணா நிலை. தமிழகத்தின் மூன்று முக்கிய நீர்ப்பாசன ஆதாரங்களாக ஆறுகள், ஏரிகள் மற்றும் கிணறுகள் உள்ளன. இவைகளுள் சில ஆறுகளின் பாசன மேம்பாடு அண்டை மாநிலங்களான கர்நாடகம் (காவிரி), ஆந்திரம் (பாலாறு) மற்றும் கேரளம் (பெரியாறு) ஆகியவற்றின் தயவை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை தொடர்கிறது.

இருப்பினும், நம் மாநிலத்தின் மழை மூலம் முழுமையாக வளம் பெறுபவை ஏரிகள். எங்கெல்லாம் ஏரிகள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் கிணற்றுப் பாசனமும் சிறப்பாகச் செயல்படுகின்றது.

ஆனால், தமிழக ஏரிப்பாசனத்தின் நிலை தற்போது மெச்சத்தகுந்த நிலையில் இல்லை என்பதே உண்மை. மிக முக்கியமாக, ஆண்டுதோறும் பெய்கின்ற வடகிழக்குப் பருவமழை மூலம் அனைத்து ஏரிகளின் சாகுபடி நிலங்களிலும் பெருவாரியாக நெல் மட்டுமே முக்கியப் பயிராக சாகுபடியாகிறது.

தமிழ்நாட்டில் 41,000-க்கும் மேற்பட்ட ஏரிகளின் பாசனப் பரப்பு 10 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமாகும். இது காவிரி டெல்டா சாகுபடி பரப்பைவிட இரு மடங்கு அதிகமாகும்.

தமிழக ஏரிப்பாசனம் சிறப்பிழந்து இருப்பதற்கான காரணங்கள் பலவாயினும் இரு முக்கிய காரணங்கள் ஏரிகளின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளன.

ஒன்று, "ஏரிகள் அனைத்தும் அதை உபயோகிப்பவர்களின் சொத்து' என்ற அடிப்படையில் 2000-ஆவது ஆண்டில் "தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன மேலாண்மைச் சட்டம்' உருவாக்கப்பட்டிருந்தும் இன்றுவரை இச்சட்டம் ஏரிப்பாசன விவசாயிகளைச் சென்றடையவில்லை. அதாவது இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெருவாரியான ஏரிப்பாசன விவசாயிகளுக்குத் தெரியவில்லை.

இரண்டு, மேற்கூறப்பட்ட நீர்ப்பாசன மேலாண்மை சட்டப்படி ஏரிப்பாசன சங்கங்களுக்கு அவைகளின் பயன்பாட்டுக்காக (பராமரிப்பு மற்றும் நிர்வாகம்) பல்வேறு வகையான நிதி ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தும் அவைகளில் ஒன்றைக்கூட இதுவரை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் நிலை இல்லை.

ஏனெனில் சட்டங்களும், அரசு ஆணைகளும் ஏரிகள் மேம்பாட்டுக்காக பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் கைகட்டி, வாய்மூடி மௌனிகளாக உள்ளனர்.

இச்சூழலில் ஏரிப்பாசன விவசாயிகள் எதுவும் செய்வதறியாது இயற்கையின் கொடையாகிய மழை நீரைத் திறம்படச் சேமிக்க இயலாமல் கிடைத்தவரை லாபம் என்ற மனப்போக்கில் செயல்பட்டு "கடமை விவசாயம்' செய்து வருகின்றனர்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் என்ன செய்ய வேண்டும் என்பதை மேலும் தீவிரமாக அவர் ஆய்வுக் கூட்டங்களில் விவாதித்து காலவரம்புடன் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களைத் தயாரித்து அவை கால அட்டவணைப்படி நிறைவேறுகின்றனவா என்று மேற்பார்வை பார்த்தாலே பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

தகுதியும், திறமையும் உள்ள அமைச்சர்களையும், அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்து அவர்களிடம் முழு அதிகாரத்தையும், செயல்படக் குறைந்தபட்ச கால அவகாசத்தையும் அளித்து, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் சரியான நிர்வாகமாக இருக்கும். அடிக்கடி நிகழும் அமைச்சரவை, அதிகாரிகள் மாற்றம் பிரச்னைகள் தீராமல் தொடர்வதற்குத் தலையாய காரணம் என்பதை முதல்வர் உணர்ந்து செயல்பட வேண்டும்.

விவசாயம், தொழில்துறை, நெசவாளர்கள், சிறுதொழில், வர்த்தகம், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மோட்டார் வாகனப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளோர், தொழிற்சாலை அதிபர்கள் ஆகியோரை குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரில் சந்தித்து விவாதித்துவந்தால் பிரச்னைகளை உடனுக்குடன் களையவும் தேவைப்படும் உதவிகளை அளிக்கவும் பேருதவியாக இருக்கும்.

மின் பற்றாக்குறையும், நீர்ப்பாசன மேலாண்மையும்தான் தமிழகம் எதிர்கொள்ளும் இரண்டு மிகப்பெரிய சவால்கள். இவை இரண்டும் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தவும் நேர்மையும் அனுபவமும் உள்ளவர்களை சிறப்பு ஆலோசகர்களாக நியமிப்பதும் நிர்வாகத்தை நன்கு நடத்த உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.