கண்ணில் தூசி விழுந்தால் கசக்கக்கூடாது

அண்மையில் பள்ளி மாணவர்கள் இருவரின் கண்ணில் ஏற்பட்ட காயம் குறித்தும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட நிறமிலி இழைம பார்வை இழப்பு (கார்னியல் பிளைண்ட்நெஸ்) குறித்தும் செய்திகள் வெளியாகின. சென்னை தாசப்பிரகாஷ் அ

அண்மையில் பள்ளி மாணவர்கள் இருவரின் கண்ணில் ஏற்பட்ட காயம் குறித்தும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட நிறமிலி இழைம பார்வை இழப்பு (கார்னியல் பிளைண்ட்நெஸ்) குறித்தும் செய்திகள் வெளியாகின.

சென்னை தாசப்பிரகாஷ் அருகிலுள்ள பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் எறிந்த பேனா மற்றொரு மாணவரின் கண்ணைக் குத்திப் பார்வை இழப்பை ஏற்படுத்தியது. இன்னொன்று, சென்னை பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியர் கோபத்தால் வீசிய குச்சி ஒரு மாணவியின் கண்ணைப் பாதித்து பார்வை இழப்பை ஏற்படுத்தியது.

இவைதவிர ஊடகத்தில் வெளியாகாத செய்தி ஒன்றும் உள்ளது. திருச்சிக்கு அருகில் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்ட பார்வை இழப்பு அது. (ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆசிரியை, கரும்பலகையில் எழுதும்போது சாக்பீஸிலிருந்து சிதறிய துகள் அவரின் கண்ணில் விழுந்து, அவருடைய தவறான சுய மருத்துவத்தால் பார்வை இழப்பை ஏற்படுத்திவிட்டது. கண்ணில் தூசி விழுந்ததும், குழாய் நீரால் கண்ணைக் கழுவியிருக்கலாம். அதைச் செய்யவில்லை. மாறாகக் கண்ணைக் கசக்கியிருக்கிறார். பின் வீட்டுக்குச் சென்று வீட்டில், அவரது பாட்டியின் கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தியதுபோக, மீதியிருந்த கண் சொட்டு மருந்தை அந்தக் கண்ணில் போட்டிருக்கிறார். இதுவே அவருக்குப் பார்வை இழப்பை ஏற்படுத்திவிட்டது.

முதலில் கண்ணில் தூசி விழுந்ததும் அவர் கண்ணைக் கசக்கியதிலேயே நிறமிலி இழைமம் பாதிக்கப்பட்டு புண் ஏற்பட்டுவிட்டது. அத்துடன் ஆசிரியை அவரது பாட்டி பயன்படுத்திய "ஸ்டீராய்டு' சொட்டு மருந்தைப் போட்டிருக்கிறார். நிறமிலி இழைமப் புண்ணுக்கு இந்த மருந்து தீவிர எதிரி.

எந்த சொட்டு மருந்தையும் பாட்டிலைத் திறந்த பிறகு ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் சொட்டு மருந்து கெட்டுப்போய் விடும். இது சொட்டு மருந்தின் அட்டையிலேயே குறிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ஆசிரியை பயன்படுத்தியதோ அவர்களது பாட்டி 3 மாதத்துக்கு முன், பயன்படுத்தியதுபோக மீதியிருந்த கெட்டுப்போன சொட்டு மருந்து. ஆக மருந்தும் தவறான மருந்து. அதுவும் கெட்டுப்போன மருந்து.

இதனால் ஆசிரியையின் நிறமிலி இழைமப் புண் தீவிர பூஞ்சைத் தொற்றாக மாறி நிறமிலி இழைமப் பார்வை இழப்பை ஏற்படுத்திவிட்டது. தேவைதானா இது என்று ஒரு கணம் சிந்தியுங்கள்.

நிறமிலி இழைமப் பார்வை இழப்பை மருந்தால் நலப்படுத்த முடியாது. நிறமிலி இழைமப் பார்வை இழப்பை, இறந்தவர்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் கண்ணின் நிறமிலி இழைமத்தைக் கொண்டு செய்யப்படும் நிறமிலி இழைம மாற்று அறுவை சிகிச்சை மூலமே சரிசெய்து பார்வை அளிக்க முடியும்.

ஏற்கெனவே 1.20 கோடி பேர் நிறமிலி இழைமப் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் புதிதாகப் பார்வை இழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகச் சேருகிறது. ஆனால், நமக்கு கண்தானம் மூலம் கிடைக்கும் கண்களோ ஆண்டுக்கு 40,000 தான். தேவையோ அதிகம். கிடைப்பதோ மிகக் குறைவு. இந்நிலையில் மேலும் நிறமிலி இழைமப் பார்வை இழப்பு ஏற்படுவதைக் குறைத்து, அதன் மூலம் கண் தானத்தின் தேவையை நம்மால் கணிசமாகக் குறைக்க முடியும். எப்படி?

நிறமிலி இழைமப் பார்வை இழப்பில் 75 விழுக்காடு குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. எனவே, தீவிர நலக்கல்வி மூலம் அவர்களிடையே ஏற்படும் பார்வை இழப்பைக் குறைக்க முடியும்.

குச்சி, கம்பு எறிந்து விளையாடுதல், கில்லி விளையாடுதல், வில் அம்பு விளையாட்டுகளால் கண்ணுக்கு ஏற்படக்கூடிய நிரந்தரப் பார்வை பாதிப்புகளை குழந்தைகளுக்கு முறையாகச் சொல்லித்தர வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்திலேயே இதைச் சேர்க்கலாம்.

கண்ணில் தூசி விழுந்தால் கண்ணைக் கசக்கக்கூடாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். பெரியவர்களும் இதை உணர வேண்டும். கண்ணில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. கண்ட கண்ட சொட்டு மருந்துகளைப் போட்டுவிட்டு, "சரிப்படாவிட்டால் மருத்துவரிடம் செல்வது' என்ற போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வீட்டில் யாருக்கேனும் கண் நோய்க்கு சொட்டு மருந்தைப் போடும்படி மருத்துவர் பரிந்துரைத்திருந்தால் பிரச்னை சரியான பிறகு, பயன்படுத்தியது போக மீதி இருக்கும் மருந்தை, "வீணாகப் போகுமே' என்று பாதுகாக்காமல் தூக்கி எறிந்துவிட வேண்டும். இதன் மூலம் அதைப் பிறர் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போகும்.

கண் ஒரு நுட்பமான உறுப்பு என்பதால், அதை முறையாகக் காக்க வேண்டும். இதன் மூலம் பார்வையிழப்பு ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியும். வந்தபின் வருந்துவதைக் காட்டிலும் வருமுன் காப்பது நமக்குத்தானே நல்லது!

(ஆகஸ்ட் 25 - செப்டம்பர் 8 தேசிய கண்தான இரு வார விழா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com