பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

போலியான "பொற்காலங்கள்'!

"பொற்காலம்' என்பது கற்பனைக் கனவு. எனினும் தங்க நாணயங்களின் புழக்கத்தை வைத்து வரலாற்று ஆசிரியர்கள்

News image
Updated On :5 ஏப்ரல் 2013, 7:55 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

"பொற்காலம்' என்பது கற்பனைக் கனவு. எனினும் தங்க நாணயங்களின் புழக்கத்தை வைத்து வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவில் குப்தர் காலத்தைப் பொற்காலம் என்றனர். அவ்வாறே ரோமாபுரி மன்னர்களின் காலத்தைப் பொற்காலம் என்றனர். தங்க நாணயங்களின் புழக்கம் அப்படி மதிப்பிட வைத்திருக்கும். வரலாற்றை நுணுகிப் பார்த்தால் அப்படிப்பட்ட பொற்காலத்தில் ஆடம்பர வணிகம் மேலோங்கி சரக்கு வணிகம் சீரழிந்துள்ளது. பண்டைய இந்திய வரலாறைச் சீரமைத்து எழுதிய டி.டி. கோசாம்பி, ""ஆடம்பர வணிகத்திற்கோ, பொன் பழக்கத்திற்கோ மதிப்பு தராமல் ஏழைகளின் நன்மைக்கும் சரக்கு வணிக மேம்பாட்டுக்கும் மெüரியர் காலத்து அர்த்த சாஸ்திரம் (பொருளியல்) அடித்தளம் இட்டதாகவும், ஜான் மேனார்டு கீன்ஸýக்கு முன்பே பண மதிப்பைக் குறைத்துப் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த நிக்கல் கலந்த வெள்ளி நாணயங்கள், செப்புக் காசுகள், தோல் நாணயங்கள்கூட வெளியிட மெüரிய முதலமைச்சர் சாணக்கியர் காரண கர்த்தாவாக இருந்தார்'' என்றும் போற்றியுள்ளார்.

÷இப்படிப்பட்ட முடியாட்சிக் காலங்கள் எவையுமே பொற்காலங்கள் இல்லை. தங்க நாணயங்களை வைத்துத்தான் பொற்காலம் மதிப்பிடப்படும் என்பதுதான் வரையறை என்றால் இன்றைய இந்தியாவே பொற்காலத்திற்குரிய தகுதியைப் பெறுகிறது. உலகிலேயே தங்கத்தின் தேவையும் தங்க நாணயங்களின் புழக்கமும் இன்றைய இந்தியாவில்தான் அதிகம். அதில் இந்தியாவுக்கு முதலிடம் என்று உலகத் தங்க ஆலோசனைக் குழு ஆதாரத்துடன் கூறுகிறது. எல்லாம் சொந்தத் தங்கமல்ல, இறக்குமதித் தங்கமே. தங்கத்தின் இறக்குமதி குறைவதாகத் தெரியவில்லை. அன்னியச் செலாவணி இருப்பு பூஜ்ஜியத்தைத் தொடக்கூடிய நெருக்கடி வந்தபோதும், டாலர் சேமிப்புகள் தங்க சேமிப்புகளாக மாற்றப்பட்டுத் தங்க வணிகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறப்பது நல்ல அறிகுறி ஆகுமா?

÷1968-இல் இயற்றப்பட்ட தங்கக் கட்டுப்பாடு சட்டம் 1990-லிருந்து தளர்த்தப்பட்டது. இதுவும் உலகமயமாதல் தீவினைகளில் ஒன்று. இறக்குமதி வரிகள் தளர்த்தப்பட்டதற்குக் காரணம், ஏற்றுமதிகளை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான்; தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்ததின் நோக்கம் அது "கச்சாப் பொருளாக'க் கருதப்பட்டு, இறக்குமதியான தங்க நாணயம் கொண்டு "மதிப்புக் கூட்டப்பட்ட' தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதின் மூலம், "வர்த்தக உபரி' ஏற்படும் என்று எண்ணப்பட்டது. அப்படி எதுவும் நிகழவில்லை. அதிகப்படியான வர்த்தகப் பற்றாக்குறையே ஏற்பட்டது. ஏற்றுமதி குறைந்தும் இறக்குமதி கூடியும் நிலைமை தலைகீழானது. அதுபற்றிய புள்ளிவிவரத்தை கவனிக்கும் முன்பு, இவ்வாறு ஏற்றுமதி குறைந்து இறக்குமதி கூடிய காரணத்தினால் தங்க வணிகம் மிகவும் கெüரவமான, ஏய்த்துப் பிழைக்கும் தொழிலாகிவிட்டதையும் கவனிக்கலாம்.

 தங்கம், வைரம், பச்சைக்கல், நீலக்கல், பவழக்கல், சிவப்புக்கல் போன்ற ஒரிஜனல் அரிய வகைக் கல் இறக்குமதியினால் வருமான இழப்பு (வரிச் சலுகை / வரி தள்ளுபடி என்ற போர்வையில்) 2005-06-இல் 16,935 கோடி ரூபாயாக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு 5,000 கோடி கூடிக் கூடி 2011-12-க்கு வந்தபோது 65,975 கோடி ரூபாயானது. கடந்த ஏழு ஆண்டுகளில் தங்கம் - வைரம் - அரிய நிறக் கற்கள் இறக்குமதிகளால் ஏற்பட்ட வருமான இழப்பு 2,53,421 கோடி ரூபாய்கள்.

 இன்றைய இந்தியாவில் 48 "பில்லியனீஸ்வரர்கள்' என்ற நிலை மாறி 55 ஆக உயர்ந்துள்ளது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). உலகிலேயே அதிக பில்லியனீஸ்வரர்கள் என்ற கணக்கில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. புதிய ஏழு பில்லியனீஸ்வரர்களில் இருவர் தங்கம் - வைரம் இறக்குமதியாளர்கள். சுமார் 12,000 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பணக்காரர்களை உருவாக்கியுள்ள ஏழை இந்தியாவின் சாதனை பொன்னானது அன்றோ! இது, தங்கமுகம் பூண்டு இந்திய மாதாவுக்குக் கரிபூசிய ஐ.மு. கூட்டணி அரசின் அநியாய சாதனை. மா துஜே சலாம்.

÷உலகத் தங்க ஆலோசனைக் குழு வழங்கும் தகவல் அடிப்படையில் செப்டம்பர் 2011 முடிய ஓராண்டில் தங்கத் தேவை இந்தியாவில் 1059 டன்கள். சீனாவில் 770 டன்கள். அமெரிக்கத் தேவை 214 டன்கள். அதேசமயம் இந்திய மக்களின் நபர்வாரி ஆண்டு வருமானம் 1,410 டாலர். சீனாவில் 4,940 டாலர். அமெரிக்காவில் 48,620 டாலர். நிறைய சம்பாதிக்கும் ஒரு சராசரி அமெரிக்கனோ, சீனாக்காரனோ தங்கத்திற்குச் செலவழிக்கும் பணம், இந்தியன் செலவழிக்கும் பணத்தைவிட மிகக் குறைவு. இது தங்கத்தின் பெருமையா? இந்தியனின் சீரழிவா?

÷2011 செப்டம்பர் வரை ஓராண்டு தங்க - வெள்ளி இறக்குமதி மதிப்பு 61,330 மில்லியன் டாலர். நகை ஏற்றுமதியை மையமிட்டுச் சலுகை (வரிவிலக்கு) விலையில் இறக்குமதி செய்யப்பட்ட வைரம், அரிய நிறக் கற்கள் மதிப்பு 35,000 மில்லியன் டாலர். எனினும் நகை ஏற்றுமதி மதிப்பு 45,000 டாலர் என்றாலும் வர்த்தகப் பற்றாக்குறை 51,330  மில்லியன் டாலர். இந்தியாவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் - (அன்னியச் செலாவணி இழப்பு) 30 சதவீதம் தங்கம், வைரம், அரிய கற்கள் இறக்குமதியில் அடக்கம் என்று அறிக.

÷இந்தியப் பெண்கள் அதிலும் குறிப்பாகத் தென்னகத்துப் பெண்களுக்கு நகைப் பைத்தியம் நிறையவே உண்டு. தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளத் தன்னிடமுள்ள பவுன் எடையை நம்புகிறார்கள். திருமணம் என்றால் கழுத்து நிறைய நகை பூட்டப்படுகிறது. தங்க நகை அந்தஸ்தின் அடையாளம். மற்றபடி பெரும்பாலும் லாக்கரில் பூட்டப்பட்டிருக்கும். ஏழைகளின் நகைகள் - வங்கி அல்லது அடகுக் கடைகளில் திருப்ப வழியில்லாமல் -  ஏலத்திற்குத் தயாராக இருக்கும்.

 ""பொன்னகை எதற்கு உன் புன்னகை போதுமே'' என்று கணவன் கேட்பதுண்டு. அவளோ, முதலில் ""பொன்னகை வாங்கு புன்னகை தருகிறேன்'' என்பாள், இப்படி இருந்தால் தங்கத்தின் மீதுள்ள மோகம் எப்படித் தீரும்?

÷பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கத்தின் மீதுள்ள மோகத்துக்குக் காரணம் அது தரும் அந்தஸ்துக்கு மேல் எந்த அவசரத்திலும் தங்கத்தைப் பணமாக மாற்றக் கூடிய வசதி உள்ளது என்பதால்தான். புதிதாக வீடு வாங்க, மனை வாங்க, அல்லது கட்டுமானச் செலவை சமாளிக்க, டூ-வீலர், ஆட்டோ, கார், லாரி, மினி லாரி போன்ற வாகனம் வாங்க ஒரு சேமிப்பாகச் செயல்பட தங்கம் உதவக் கூடும். இது புதிதல்ல. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் - பணவீக்கம். இன்றைய சூழ்நிலையில் தங்கத்தின் மீதுள்ள மோகம், அதுவே பணவீக்கத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றக் கூடிய பாதுகாப்பாக உதவுவதினால்தான். கையில் ரொக்கமாகப் பணத்தைச் சேமித்தால் விலைவாசி உயர்வதால் பணம் மதிப்பிழக்கிறது. பற்றாக்குறை பட்ஜெட். அளவுக்கு அதிகமாக நிதிப் பற்றாக்குறை, பொருள் உற்பத்தி குறைதல் போன்ற பற்பல காரணங்களினால் பணவீக்கம் ஏற்பட்டுப் பணத்தின் மதிப்பு குறைவதால் தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கைக் கூடுகிறது.

  2004-ஆம் ஆண்டில் 6,856 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கமே இறக்குமதியானது. 2012-க்கு வரும்போது படிப்படியாக உயராமல், மூட்டை மூட்டையாக உயர்ந்து 61,334 மில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி கடந்த எட்டு ஆண்டுகளில் நூறு மடங்கு உயர்ந்ததற்குக் காரணம் பெண்களின் நகை மோகம் மட்டுமே அல்ல. பெரும் பணக்காரர்களின் கருப்புப் பணம் தங்கமாக மாறியிருக்க வாய்ப்புண்டு. ஆகவே, பற்றாக்குறை பட்ஜெட், நிதிப் பற்றாக்குறை நீடிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் உலகிலேயே அதிகப் பணவீக்கமுள்ள நாடாக இந்தியாவை மாற்றிய ஐ.மு. கூட்டணியின் தவறான பொருளியல் கொள்கையே, பொன் இறக்குமதி உயர்வின் அடிப்படைக் காரணம் என்று அறிக.

÷"உலகம் ஒன்றே. எல்லா நாடுகளுமே ஒரே உலகம். இறக்குமதி வரி ரத்து. எந்த நாடும் எந்த நாட்டிலும் தொழில் செய்யலாம்' என்ற சித்தாந்தத்தை வரையறை செய்த டங்கலின் திட்டமே உலகமயமாதல். இந்த கோஷத்துடன் "காட்' ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பானது. இந்தியா கையெழுத்திட்டபோது நிதியமைச்சராயிருந்த மன்மோகன் சிங்குக்குப் பொருளாதாரம் தெரிந்திருந்தது. பிரதமரான பின்பு பொருளாதாரத்தை மறந்துவிட்டு, "பொம்மலாட்டத்தில்' கவனம் செலுத்தினார். இழுக்கும் இழுவைக்கேற்ப ஆடுவதில் நிபுணரானார். வெளிநாடுகளில் இந்திய வேலைப்பாடுள்ள தங்கம் - வைரம் - அரிய நிறக்கல் பதித்த நகைகளுக்கு நல்ல தேவை இருந்ததால் தங்க இறக்குமதி அனுமதிக்கப்பட்டது. தங்கக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. நினைத்தது ஒன்று, நடந்தது வேறு.

 உலகமயமான பொருளாதாரத்தில் ஏற்றுமதி உயர்ந்து இறக்குமதி குறைந்தால் லாபம் உண்டு. மாறாக இறக்குமதி உயர்ந்து ஏற்றுமதி குறைந்தால் இரட்டை நஷ்டம். இறக்குமதியால் வருமான இழப்பு முதல் நஷ்டம். அன்னியச் செலாவணி இழப்பு இரண்டாவது நஷ்டம். நகை ஏற்றுமதி உயரும் என்று எதிர்பார்த்து தங்கக் கட்டுப்பாடு சட்டத்தைத் தளர்த்தியதால் உலகமயப் பொருளாதாரத்தில் இந்தியா லாபம் பெறாதபோது பழையபடி தங்கக் கட்டுப்பாடுச் சட்டத்தை மிகவும் கடுமையாக்கினால்தான் நாட்டுக்கு நன்மை. பொற்காசுகள் நமக்கு நன்மை தராது. உலகமயப் பொருளாதாரத்தின் கீழ் பொன்னை இறக்குமதி செய்து பணவீக்கத்தின் வேலியாகச் செயல்பட்டால், நாட்டுக்குத் தேவையான முதலீடும் பூட்டப்பட்டு விடும். மாறாக மிக அத்தியாவசியமான முதலீட்டை இறக்குமதி செய்வதின் மூலம் ஏற்றுமதியை உயர்த்த முடியுமா என்று சிதம்பரம் யோசிப்பது நல்லது.

 இந்திய நாட்டுப் பிரதமரும் ஆட்டுவித்தால் ஆடும் கலையைப் பயிலாமல் தான் கற்ற பொருளாதாரப் பாடங்களைப் பழையபடி புரட்டிப் பார்த்துச் சரி செய்து கொண்டு, போலியான பொற்காலத்தைப் புறக்கணிப்பது நல்லது. இந்தியத் தாயின் ரணங்களைப் பொன்னால் குணப்படுத்த முடியாது.

÷வாழ்க பாரதம்.

(கட்டுரையாளர் - வேளாண் விஞ்ஞானி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.