பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உணவு ஏற்றுமதியில் சாதனை

இன்றைய உலகப் பொருளாதார அரங்கில் ஒரு நாட்டின் வளர்ச்சி, ஏற்றுமதியையே நம்பியுள்ளதை நாமறிவோம். ஏற்றுமதியை உயர்த்தவே இறக்குமதி அனுமதிக்கப்பட்டது. இறக்குமதியின் வடிவங்கள் பல.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 9:11 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இன்றைய உலகப் பொருளாதார அரங்கில் ஒரு நாட்டின் வளர்ச்சி, ஏற்றுமதியையே நம்பியுள்ளதை நாமறிவோம். ஏற்றுமதியை உயர்த்தவே இறக்குமதி அனுமதிக்கப்பட்டது. இறக்குமதியின் வடிவங்கள் பல. அன்னிய முதலீடுகளை வரவேற்பதும் இதில் அடங்கும். இயந்திரங்கள், பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள், கார் உதிரிகள் என்று எவ்வளவோ உண்டு. யூரியா, பொட்டாஷ் போன்ற ரசாயனப் பொருள், டீசல், பெட்ரோலுக்குரிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவையும் அடக்கம். இவ்வளவு அனுமதிக்கப்பட்ட பின்னரும்கூட ஏற்றுமதி உயரவில்லை. தொழில்துறை ஏமாற்றிவிட்டது. தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) ஏற்றுமதியும் குறைந்து வருகிறது.

புள்ளிவிவர அடிப்படையில் கூறவேண்டுமானால் கடந்த ஓராண்டில் ஏற்றுமதி மதிப்பு 3.04 லட்சம் மில்லியன் டாலர் என்றால், இறக்குமதி மதிப்பு 4.09 லட்சம் மில்லியன் டாலர். வர்த்தகப் பற்றாக்குறையோ 1,84,794 மில்லியன் டாலர். இப்படிப்பட்ட வர்த்தகப் பற்றாக்குறையைப் பெறுவதற்கு ஒவ்வோராண்டும் இந்திய / பன்னாட்டுத் தொழில் முதலைகளுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகள்; "வாராத கடன்களுக்கு' எல்லையே இல்லை!

கல் பதித்த தங்க நகை, வைர நகை ஏற்றுமதி என்று தங்கம் இறக்குமதியாகிப் பதுக்கி வைத்ததால் தங்கமுகம் "பித்தளை'யானது. மூலதனப்பொருள் - முதலீட்டுப் பொருள் என்றெல்லாம் பெயர் சூட்டி ஏற்றுமதி வியாபாரத்தில் "வெள்ளியாக விளையும்' என்று எதிர்பார்த்தவை "ஈய'மானது. ஆனால், தொழில் துறையோடு ஒப்பிட்டால் குறைந்த உதவியுடன் வளர்ந்த பசுமை முதலீடான உணவு விவசாயமே ஏற்றுமதியில் தங்கத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. வியப்பாக உள்ளதா? பொய்யல்ல, நிஜமே.

உணவு ஏற்றுமதி மூலம், அதாவது அரிசி, கோதுமை, மக்காச்சோளம், மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் 2013-14-இல் 40 பில்லியன் டாலர் இலக்கை எட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. நமக்குக் கிடைக்கக்கூடிய புள்ளிவிவரம் 2011-12 கணக்குப்படி உணவு ஏற்றுமதி 37.1 பில்லியன் டாலர்கள். இறக்குமதி 17.2 பில்லியன் டாலர். உபரி சுமார் 20 பில்லியன் டாலர்கள். அதேசமயம் நமது ஒட்டுமொத்த ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரத்தில் பற்றாக்குறை 190 பில்லியன் டாலரில் உணவு ஏற்றுமதியால் 20 பில்லியன் டாலர் உபரி அடக்கம். இந்த உபரி இல்லாவிட்டால் வர்த்தகப் பற்றாக்குறை 210 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கும். வர்த்தக இழப்பில் ஒரு சிறு ஒளிக்கீற்றாக உணவு ஏற்றுமதி உள்ளது.

நாம் எவ்வளவு உணவு ஏற்றுமதி செய்துள்ளோம்? 2012-13 ஆண்டில் 2.4 கோடி டன்கள் வரை ஏற்றுமதி செய்துள்ளோம். இதில் 1.3 கோடி டன்கள் அரிசி. 65 லட்சம் டன்கள் கோதுமை. மக்காச்சோளம் 46 லட்சம் டன்கள்வரை ஏற்றுமதியாகியுள்ளது. நான்காவதாக, மாட்டிறைச்சி ஏற்றுமதி 16 லட்சம் டன்கள். 2013-14-இல் கோதுமை ஏற்றுமதி 80 லட்சம் டன்கள் வரை உயர வாய்ப்புள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா என்றால், வாசனைத் திரவிய ஏற்றுமதி நாடு என்பார்கள். மிளகு, ஏலக்காய், கிராம்பு, முந்திரிப்பருப்பு, தேயிலை, காபி, உலர்த்திய மீன் வகைகள், இறால் ஆகியவை முக்கியப் பங்கு வகித்தன.

இவற்றுக்குமேல் இன்று உணவு ஏற்றுமதியிலும் பருத்தி ஏற்றுமதியிலும் சாதனைகள் நிகழ்த்தியுள்ளோம். இன்று இந்தியா என்றால் அரிசி, கோதுமை, மக்காச்சோளம், மாட்டிறைச்சி, பருத்தி, சர்க்கரை, பிண்ணாக்கு, கொத்தவரை எண்ணெய் என்று சொல்லும் அளவில் புதிய தடம் மட்டுமல்ல, பல பொருள்களில் முதலிடம் பெற்றுள்ளது.

அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா இன்று முதலிடம். மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா முதலிடம். பருத்தி ஏற்றுமதியில் இரண்டாவது இடம். விவசாயம் என்பது அரசால் புறக்கணிக்கப்பட்ட துறை. தொழில் துறையில் டாடாவும் அம்பானியும் சாதிக்க முடியாததை எந்த வரிச்சலுகையும் இல்லாமல் இந்திய விவசாயிகள் சாதித்துள்ளதை எண்ணித் தலைவணங்க வேண்டும்.

இப்படிப்பட்ட சாதனைகளில் சில நெருடல்களும் உண்டு. உணவு உற்பத்தி, மக்கள்தொகை, தலா நபரின் உணவுத்தேவை ஆகிய புள்ளிவிவர அடிப்படையில் "உணவுப் பற்றாக்குறை நாடாக' ஐ.நா. உணவு நிறுவனம் நம்மை வகைப்படுத்தியுள்ளது.

உணவு விலை உயர்வு, உண்மையில் ஏற்றுமதியால் ஏற்பட்டது என்பதைவிடப் பொதுவான பணவீக்கக் கருவைத்தான் காரணப்படுத்த வேண்டும். பசுவின் பாதுகாப்பு பற்றி மத அடிப்படையில் மாடுகளைப் புனிதமாக எண்ணிய புத்தரும் அசோகமன்னனும் வாழ்ந்த பாரதநாடு இன்று இறைச்சி ஏற்றுமதியில் - குறிப்பாக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் - பிரேசிலை வீழ்த்தியுள்ளதை எண்ணிப் பெருமைப்படுவதா, தலைகுனிவதா என்ற சென்டிமெண்டுக்குப் பொருளியல் இடம் தராது. எனினும் இன்றைய இந்தியா உணவுப் பற்றாக்குறை நாடா, உணவு உபரி நாடா என்ற விவாதத்திற்குள் நுழைந்து விடை காண்பது கடினமல்ல.

இந்தியாவில் உள்ள பொருளியல் நிபுணர்களுக்கு இன்னமும் ஒரு நபர் உணவுத்தேவை பற்றிய கணக்கை மதிப்பிடத் தெரியவில்லை. மிகவும் அடிப்படையான ஒரு தவறைப் பற்றிய அரசியல் விமர்சனம் தவிர்க்கப்படுகிறது. இதை ஊட்ட உணவு நிபுணரின் பகுத்தறிவைக் கொண்டு நிர்ணயிக்க வேண்டும். ஊட்ட உணவுப் பற்றாக்குறையை ரேஷன் அரிசியோ கோதுமையோ ஈடு செய்யாது.

புரதச்சத்துள்ள பருப்பு, இறைச்சி, முட்டை தாதுப்புக்கள் நிறைந்த காய்கறி, பழங்களுடன் அரிசி, கோதுமை வழங்கினால்தான் மனிதனின் ஊட்டச்சத்துக் கோளாறு நீங்கும். புஞ்சைத் தானியத் தேவை பற்றிய உணர்வும் இல்லை. இந்தியாவின் திட்டக்கமிஷன் தலைவர் கூற்றுப்படி ஒவ்வோர் இந்தியனும் நாளொன்றுக்கு 600 கிராம் அரிசி அல்லது 500 கிராம் கோதுமை உண்டால் போதும் என்பதே தப்புக்கணக்கு.

ஒரு மனிதனுக்கு வேண்டிய கலோரி உணவை மாவுச்சத்து மூலமே பெறலாம் என்ற அடிப்படையில் அரிசி / கோதுமை அலகை மட்டும் நிர்ணயிப்பது சரியாகுமா? தட்டுத் தட்டாகச் சோறை மட்டும் உண்ணும் மக்கள் யாருமே இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள்கூட பகலில் உழைத்துவிட்டு இரவில் சுடுசோறு உண்ண கால் கிலோ / ஆழாக்கு அரிசி போட்டு உலை வைத்தாலே சிறு பானை அளவு சோறு கிடைக்கும். சில காய்கள் தக்காளி போட்டு காரக்குழம்பு வைத்து உண்டு மிகுந்ததை மறுநாள் பழைய சோறாக உண்ணலாம். சிலர் காலைப்பொழுது சமைத்து மிகுந்ததை மாலையில் உண்ணலாம்.

ஆழாக்கு அரிசியைப் பாழாக்காமல் உண்டு மீதி இலவச அரிசியை இட்லிக்கடைக்கு விற்கலாம். கறவை மாடு உள்ளவர்களுக்கு மிஞ்சுவது அடர்தீவனம். பணிசெய்யும் இடத்தில் டீ, வடை, பன் என்று உண்டு பொழுதுபோகிறது.

பற்றாமைக்கு "மாக்கி', "நெஸ்லே' போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நூடுல்ஸ், விதம் விதமான குக்கீஸ் அமிதாபச்சன், ஐஸ்வர்யாராய், ஜுஹிசாவ்லா, கேத்ரினா கைஃப் உண்பதாக விளம்பரங்களில் காண்பிக்கப்படும் அயிட்டங்கள் எல்லாம் சின்ன ஊர்ப் பெட்டிக்கடைகளில் உள்ளன. இவை ஊட்ட உணவுதானே! கிராமங்களில் தட்டுத்தட்டாக சோறு உண்பவர்களும் அடுக்கு அடுக்காய் சப்பாத்தி உண்பவர்களும் மறைந்துவிட்டபோது நகர மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பலருக்கு வயிற்றுப் புண், சர்க்கரை வியாதி. அவர்களும் ஆழாக்கு அரிசியைத்தான் வடிக்கிறார்கள். ஒரு நபருக்கு 50 கிராம் என்றால் 4 பேர் உள்ள குடும்பத்திற்கு 2 கிலோ அரிசியை உலைவைத்தால் 40 பேர் சாப்பிடலாம். மற்ற அயிட்டங்களையும் உள்ளே தள்ள வேண்டும்!

மனித வயிறு என்றால் அது சோற்றால் அடித்த பிண்டமல்ல. இப்போது சொல்லுங்கள். இந்தியா உணவு உற்பத்தியில் உபரி நாடா? பற்றாக்குறை நாடா? ரேஷனில் தரும் இலவச அரிசி / மலிவு அரிசி "உபரி'யாவதால் இட்லிக்கடைக்கு கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாட்டுக்கு அடர்தீவனமாகிறது.

பொது வினியோகம் போக, எஞ்சி வீணாகும் அரிசி, கோதுமை அல்லது உபரி உணவு ஏற்றுமதியாகிறது. இனியும் இந்தியாவை ஒரு பற்றாக்குறை நாடாக மதிப்பிட்டுக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தேவைதானா? முயன்றால் இன்னமும் உணவு ஏற்றுமதியை உயர்த்தலாம். நாம் பல வழிகளில் வீணாக்கும் உணவை ஏற்றுமதி செய்வதால் ஒன்றும் குடி முழுகிவிடாது.

சாதனைக்குரிய ஏற்றுமதி அரிசியில் நிகழ்ந்துள்ளது. இதுநாள்வரை இந்தியா பாசுமதி அரிசியை மட்டுமே ஏற்றுமதி செய்தது. இன்னமும் மதிப்பு அடிப்படையில் பாசுமதி வழங்கும் அன்னியச் செலாவணியே அதிகம். 2012 ஏப்ரல் - டிசம்பர் கணக்குப்படி 9 மாதத்தில் 24.10 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் 12.92 பில்லியன் டாலர் பெற்றுத் தந்துள்ளது.

2010-11-இல் (இதரவகை) வெள்ளை அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டதன் விளைவால்தான் தாய்லாந்தை இந்தியா புறம் தள்ளியது. வெள்ளை அரிசி 50 லட்சம் டன் ஏற்றுமதி மூலம் 10.80 பில்லியன் டாலர் வரவு உண்டு. எனினும் கடந்த மூன்று மாதக்கணக்கும் சேர்க்கப்பட்டால் நமது அரிசி ஏற்றுமதி அளவும் மதிப்பும் இன்னும் அதிகமே. கோதுமை ஏற்றுமதி 80 லட்சம் டன் எட்டப்படலாம். அரிசி ஏற்றுமதி மொத்தம் 1 கோடி டன் இலக்கை எட்டிவிட்டது.

வாசனை அரிசி என்ற முறையில் பாசுமதி பெற்றுள்ள மதிப்பை நம்ம ஊர் சீரகச்சம்பா பெறாதது ஏன்? பாசுமதி கல்லரிசி. சீரகச்சம்பா மெல்லரிசி. பாசுமதி கல்லரிசி என்பதால் கொதிநிலை தாங்கும். சீரகச் சம்பா மெல்லரிசி என்பதால் சற்று கவனமுடன் சமைத்து பிரியாணி செய்யலாம். பாசுமதி பிரியாணி / புலவ் எவ்வளவு ருசிக்குமோ அவ்வாறே சீரகச்சம்பா.

உள்ளூர் அங்காடியில் வெள்ளைப் பொன்னியைவிட விலை அதிகமாயுள்ள சீரகச்சம்பாவை "நடுத்தரம்' என்றும், பொன்னியையும் ஐ.ஆர். 20-யும் "சன்ன ரகம்' என்றும் அரசு நாளேட்டில் (கெசட்டில்) அறிவித்து 1960-களில் ஆட்சி செய்த பக்தவத்சலம் காங்கிரஸ் அரசு செய்த தவறை இன்றுவரை சரிசெய்யவில்லை.

சன்னம் என்றால் ஆறு மி.மி. நீளம் வேண்டும். சீரகச்சம்பாவின் நீளம் நான்கு மி.மி. என்பதால் நடுத்தரமானது. இவ்வாறே மருத்துவக்குணமுள்ள கருப்பு, சிவப்பு அரிசிகள் "மோட்டா'வானது. அகலம் அதிகமானால் "மோட்டா' ருசி, அங்காடி மதிப்பு கணக்கில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பசுமைப்புரட்சியின் விளைவால் ஏராளமான பாரம்பர்ய நெல் ரகங்கள் அழிந்தாலும் சீரகச்சம்பா அழியவில்லை. குறிப்பாக காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். தவிரவும் ஏராளமான இயற்கை விவசாயிகள் சீரகச்சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பாசுமதி அரிசிக்கு இணையான சீரகச்சம்பாவுக்கு நல்ல ஏற்றுமதிச் சந்தையைத் தமிழ்நாடு அரசு உருவாக்கித் தருமானால் மேலும் நாம் ஏற்றுமதி மதிப்பை மட்டுமல்ல; தமிழ்நாட்டில் சீரகச்சம்பா சாகுபடியாளர்களையும் வாழ்விப்போம் அல்லவா? வாழ்க பாரதம்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.