புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

எழுத்தாளனின் அடையாளம் இவர்

சரஸ்வதி தேவியின் அருள் பெற்று அவள் கைப்பிடித்து நடந்த எண்ணற்ற கலைக் குழந்தைகளில் கடைசிப் புதல்வனாகவேனும் நான் சென்றால் போதும்!

Updated On :24 ஏப்ரல் 2013, 10:14 pm

சரஸ்வதி தேவியின் அருள் பெற்று அவள் கைப்பிடித்து நடந்த எண்ணற்ற கலைக் குழந்தைகளில் கடைசிப் புதல்வனாகவேனும் நான் சென்றால் போதும்! அந்த லட்சுமி தேவி என் பின்னால் கை கட்டி வருவதானால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்'- இப்படி தனது இலக்கியக் கோட்பாட்டை தான் எழுத ஆரம்பித்த நாள்களிலேயே துல்லியமாக வரையறைத்துக் கொண்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

இவருக்கு முன்னர் தமிழ்ச் சிறுகதைகளில் மின்சாரம் பாய்ச்சிய எழுத்தாளரான புதுமைப்பித்தனின் கதைகளில் காணப்பட்ட வாழ்க்கை குறித்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை வறட்சியை இவர் தனது கதைகளில் முற்றாகத் தவிர்த்தார். குடிசை மனிதர்கள், பிளாட்பாரவாசிகள், பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள், குஷ்டரோகிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை மனிதர்களிடம் ஒட்டியிருக்கும் மகோன்னதமான பண்புகளை எடுத்துக் காட்டினார்.

"சரஸ்வதி'யில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் தமிழின் எல்லா பத்திரிகைகளிலும் நிலை கொண்டது என்றாலும் இவரது எழுத்துலக வாழ்வை சரஸ்வதி காலம், ஆனந்தவிகடன் காலம், தினமணி கதிர் காலம் என மூன்று பகுதிகளாகப் படித்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

"சரஸ்வதி'யில் இவர் எழுதிய கதைகளில் சக மனிதர்கள் மீதான அக்கறை, மனிதாபிமான உணர்வு மிகுந்து காணப்படும். வசிப்பதற்கு வாழ்விடம் என்ற ஒன்று இல்லாதவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் முதல் இரவுகூட எவ்வாறு துன்பகரமானதாக மாறிவிடும் என்பதை எழுத்தில் வடித்திருந்தார். "குழந்தை என்பது கதைப் பொருள் மட்டுமல்ல; அது ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட' என்பதை உணர்த்தினார். "திரஸ்காரம்' "பௌருஷம்' "பால் பேதம்', "நந்தவனத்தில் ஒர் ஆண்டி'. "பிணக்கு' "போர்வை' போன்ற பல அற்புதமான கதைகள் சரஸ்வதியில் வெளிவந்தவையே.

ஆனந்த விகடனில் இவர் எழுதிய முதல் கதை "ஒவர் டைம்' தொடர்ந்து "சுயரூபம்', "மூங்கில்', "நான் இருக்கிறேன்', "பூ உதிரும்', "அக்னிப் பிரவேசம்', "சுயதரிசனம்', "அந்தரங்கம் புனிதமானது' போன்ற சிறந்த கதைகள் விகடனில் வெளிவந்தன.

வணிகப் பத்திரிகையில் இலக்கியத் தரமான கதைகளுக்கு இடமில்லை என்கிற வாதத்தை பொய்ப்பித்தவர் ஜெயகாந்தன். இவர் ஆனந்த விகடனில் எழுதிய பெரும்பாலான கதைகள் முத்திரைக் கதைகளே.

தினமணி கதிர் காலகட்டத்துக் கதைகளில் தனி மனித விஷயம், தனி மனித சுதந்திரம் சார்ந்த கதைகள் அதிகம் எழுதினார். "கண்ணாமூச்சி', "இறந்த காலங்கள்', "சக்கரங்கள் நிற்பதில்லை' போன்றவற்றை இவ்வகைக் கதைகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை வேறு சில எழுத்தாளர்களால் வேறு வேறு வகையில் மாற்றி எழுதப்பட்டது என்றால் அது இவர் எழுதிய "அக்னிப் பிரவேசம்' கதையேயாகும். அப்போது ஒரளவு பிரபலமாயிருந்த எழுத்தாளர்கள்கூட எழுதினார்கள். அவை பத்திரிகைகளில் பிரசுரமும் ஆயின.

ஜெயகாந்தன் கதைகளில் உள்ள தனிச்சிறப்பு அவர் மனித ராசியில் உள்ள சகல பிரிவினருக்கும் ஏற்படும் சகலவிதமான பிரச்னைகளையும் புதிய கோணத்தில் கண்டு தீவிரமாக விமர்சனம் செய்ததுதான்.

இவரது கதைகளுக்கு நிகராகப் புகழ் பெற்றது கதைத் தொகுதிகளுக்கு இவர் எழுதும் முன்னுரை. முன்னுரையை ஒரு இலக்கியப் பிரதி ஆக்கியவர் இவரே. இவரது முன்னுரைகளே தனித்தனி தொகுதிகளாக வெளி வந்துள்ளன. ஒரு நாவலின் (பாரீஸýக்குப் போ) முன்னுரையில் இவர் இலக்கியம் பற்றி குறிப்பிடும்போது, "ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.... ஓர் எழுத்தாளன் ஆத்ம சுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம்! நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்! என்று குறிப்பிடுகிறார்.

இவர் அவ்வப்போது கவிதைகளும் எழுதியிருக்கிறார். 1972இல் "தீபம்' ஆண்டு மலரில் இவர் எழுதிய "சென்று நீராடிய துறைகளெல்லாம் திரும்பி வந்தாட விரும்புகிறேன்' என்கிற கவிதையும் 1970இல் "ஞான ரதம்' இதழில் எழுதிய "வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன் செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்' என்கிற கவிதையும் பிரபலமானவை.

இவை தவிர இவருடைய கதைகள் படமாக்கப்பட்டபோது அப்படங்களுக்கு பெரும்பாலும் இவரே பாடல்கள் எழுதியிருக்கிறார். "தென்னங்கீற்று ஊஞ்சலிலே.....'. "அழுத கண்ணீர் பாலாகுமா?....(பாதை தெரியுது பார்) "பொறப்பதும் போறதும் இயற்கை' (காவல் தெய்வம்) "கண்டதைச் சொல்லுகிறேன்', "வேறு இடம் தேடிப் போவாளோ?' (சில நேரங்களில் சில மனிதர்கள்), "நடிகை பார்க்கும் நாடகம்' (ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்) போன்றவை இவர் எழுதிய பாடல்களே.

கதை கவிதை தவிர கட்டுரைகளிலும் இவர் தனது முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார். "சுதந்திரச் சிந்தனை', "முன்னோட்டம்', "யோசிக்கும் வேளையிலே' "ஒரு பிரஜையின் குரல்' போன்றவை அவற்றுள் சில. இவருடைய கட்டுரை நூல்களில் மிகவும் புகழ் பெற்றது "நினைத்துப் பார்க்கிறேன்'. அதற்கு நிகராக எளிமையானதும் வலிமையானதுமான கட்டுரை நூல் இதுவரை தமிழில் மற்றொன்று வரவில்லை.

இவர் எழுதிய "உன்னைப் போல் ஒருவன்' கதையை இவரே திரைப்படமாக எடுத்து இயக்கினார். தமிழில் வெளிவந்த முதல் கலைப்படம் என்று இதனைக் கூற வேண்டும். இப்படத்துக்கு விமர்சனம் எழுதிய "ஆனந்த விகடன்' இதழ் "சினிமாத் துறையில் சற்றும் அனுபவம் இல்லாத கதாசிரியர் ஜெயகாந்தனே இப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அனுபவம் பெற்ற டைரக்டர்கள் எல்லாம் ஒரு முறை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்' என்று எழுதியது. இப்படம் அந்த ஆண்டில் சிறந்த மூன்றாவது படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்றது. இருந்தும் ஜெயகாந்தன் தொடர்ந்து தன்னை திரைப்படத்துறையில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. தான் ஒரு முழு நேர எழுத்தாளன் என்பதிலேயே உறுதியாக இருந்தார்.

"நான் ஏன் எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் வானொலியில் இவர் 24-5-1977இல் உரையாற்றியபோது, "எழுத்தாளன் என்பவன் ஏதோ கதை எழுதி எல்லாரையும் மகிழ்வூட்டுகிற சாமானியக் கலைஞன் அல்லன். ஒரு சிறப்பான காரியம் பலரையும் ஆனந்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு சிறப்பான எழுத்து என்பது ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாய் படிப்பவனை அல்லற்படுத்தவும் செய்யும். மனசாட்சியைக் குத்திக் கிளறி சித்ரவதை செய்யும்' என்று குறிப்பிடுகிறார். இவருடைய எழுத்துகள் எல்லாமே அப்படித்தான்.

ஜெயகாந்தன் - எழுத்தாளனின் அடையாளம். அவர் பல்லாண்டு வாழ்க!

(ஏப்ரல் 24, 2013 ஜெயகாந்தனின் 80ஆவது பிறந்த நாள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.