சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆடிப் பட்டம் தேடி விதை

ஆடி மாதத்தில் ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடும். இதனை ஆற்றுப் பெருக்கு என அழைப்பார்கள்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 8:13 pm

ஆடி மாதத்தில் ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடும். இதனை ஆற்றுப் பெருக்கு என அழைப்பார்கள். பயிர் செழிக்க வளம் அருளி மக்கள் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓட செய்யும் அன்னை காவேரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடி மாதத்தில் 18-ஆம் நாளை ஆடிப் பெருக்கு என்று தமிழக மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள காவேரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடி பதினெட்டு கொண்டாடடுவதை மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள். ஆடியில் விவசாயப் பெருங்குடி மக்கள் விவசாயப் பணிகளைத் துவக்குவார்கள். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப, நாடு செழிக்கவும், தனம் கொழிக்கவும் நீரைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நதியை தெய்வமாக போற்றி வழிபட்டனர் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு திருநாளாக ஆடி பதினெட்டாம் நாளை தேர்ந்தெடுத்தனர். ஆடி வரும் நீரின் மிகையால் இந்த விழா இப்போதும் காவேரிக் கரை மாவட்டங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையினால்தான் பயனடைந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இதுவரை 24 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதாவது சராசரியாக 5 செ.மீ.க்கு பதிலாக 6 செ.மீ பெய்துள்ளது. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் சராசரியை விட மழை அதிகமாக பெய்துள்ளது.

காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழுக் கொள்ளளவை அடைந்துள்ள நிலையில், அந்த அணைகளிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரால் ஓகேனக்கல் காவேரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

2011-ஆம் ஆண்டு முதன்முறையாக ஜூன் 6-ஆம் தேதியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், 2012-இல் தென்மேற்கு பருவழை தவறியதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 36.73 டி.எம்.சி.யாக குறைந்து விட்ட நிலையில் டெல்டா குறுவை சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை.

காவேரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் காவேரி பாசனப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவினை பெருமகிழ்ச்சியுடன் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் தமிழக அரசு 10000 கன அடி நீரினை விடுவித்துள்ளது காவேரி டெல்டா பகுதி விவசாயிகளிடை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் சம்பா சாகுபடிக்கான பணிகளை முன் கூட்டியே மேற்கொண்டிருப்பதை கருத்தில் கொண்டும் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டிருப்பது விவசாயப் பெருங்குடி மக்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவால் 11 டெல்டா மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதனால், தமிழகத்தில் விளைச்சல் பெருகும்.

மேட்டூரின் அணையின் உள்ள நீரின் அளவை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என கருதப்படுவதாலும் தேவையான தண்ணீர் இதன் மூலம் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

தமிழகத்தில் மக்கள் மழை நீர் சேமிப்பு வசதிகளை அமைக்க முன் வரவேண்டும். மேலும், ஆடி வரும் நீரின் மிகையால் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஊருணிகள், திருக்கோயில்களில் காணப்படும் திருக்குளங்கள் நிரம்பி வடியும் வகையில் அவைகளை செப்பனிட்டு, தூர்வாரி நீரை சேமித்தால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பது இருக்காது. குளங்களில் உள்ள ஆகாயத் தாமரை போன்ற செடிகளை அகற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மனிதன் மாறிவிட்டான். ஆனால் இயற்கை இன்னும் மாறவில்லை. இயற்கை என்றுமே பொய்க்காது. கர்நாடகம் நம்மை கைவிட்டாலும், இயற்கை நம்மை கைவிடவில்லை.

விவசாயத்தை லாபம் தராத தொழில் என்று கைவிட்டவர்கள், மீண்டும் விவசாயப் பணியை மேற்கொண்டு அந்தக் கூற்றை பொய்யாக்க வேண்டும். விவசாய மக்கள் இல்லையேல் உலகம் இயங்காது என்பதை நிரூபிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.