ஆனால் அண்ணாவின் அறிவிப்புக்கு ஏ.எல். முதலியார் போன்ற அறிஞர் பெருமக்களிடமிருந்தும் ஆட்சியைக் கைப்பற்றப் பேராதரவாக இருந்த மாணவர் சமுதாயத்திடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பின் கடுமையையுணர்ந்த அண்ணா, ஐந்தாண்டுகள் என்னும் காலக்கெடுவை மாற்றி, படிப்படியாக - என அறிவித்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்டு நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அண்ணாவின் பெயர் சொல்லும் கழகங்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனால், அண்ணா அறிவித்த படிப்படியாக என்பது இன்றளவும் கீழ்ப்படியாகவே இருக்கின்றது. அதேசமயம், கல்லூரி, பல்கலைக்கழகம் என்னும் நிலையிலிருந்த ஆங்கிலப் பயிற்றுமொழி என்பது தொடக்கப் பள்ளி வரை நீண்டுவிட்டது. முப்பெரும் சாதனை படைத்த அண்ணா ஒரு வேதனையையும் படைத்தார். அவர் நடைமுறைப்படுத்திய இருமொழிக் கொள்கை என்னும் திட்டமானது, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழை விருப்பப் பாடமாகவும், ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாகவும் ஆக்கியது. நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, தமிழ்ப் பயிற்று மொழி படிப்படியாக நிறைவேற்றப்படும் என்பதற்கு மாறாக, தமிழ்ப் பாடமொழி படிப்படியாக நிறைவேற்றப்படுதல் பெருஞ் சோகக் கதை.