விருதுகள், பட்டங்கள் அல்ல

ஓரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியம். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான சர். சி.வி. ராமன், அமர்த்யா சென் ஆகியோருக்கும் மற்றும் மோட்ச குண்ட விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருக்கும் நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
Updated on
3 min read

ஓரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியம். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான சர். சி.வி. ராமன், அமர்த்யா சென் ஆகியோருக்கும் மற்றும் மோட்ச குண்ட விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருக்கும் நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

விண்வெளி, அணுசக்தி, தேசப் பாதுகாப்பு ஆகிய முத்துறைகளில் பங்களித்த அறிஞர் டாக்டர் அப்துல் கலாம், எஸ்.எல்.வி. - 3 செயற்கைக்கோள் ஏவுகலன் திட்ட இயக்குநர். இந்தியாவிற்கு 1980ஆம் ஆண்டு உலக விண்வெளி அந்தஸ்து பெற்றுத் தந்ததற்காக இவருக்கு "பத்ம பூஷண்' விருது (1981) வழங்கப்பட்டது.

1989 ஆம் ஆண்டின் முதலாவது "அக்னி' ஏவுகணை வெற்றி. மறு ஆண்டு "பத்ம விபூஷண்' அவரைத் தேடி வந்தது. 1997 ஆம் ஆண்டு "பாரத ரத்னா' விருது பெற்ற டாக்டர் கலாமின் கூட்டு முயற்சியில் பொக்கரானில் "சக்தி வென்றது'. இந்தியாவின் இரண்டாவது அணுகுண்டுப் பரிசோதனை.

மேன்மேலும் பல சாதனைகள் புரியவும் "நாடுதான் முக்கியம், நான் அல்ல' என்று உழைக்கவும் இத்தகைய தேசிய அங்கீகாரங்கள் தேவைதான். இவை இளைய பாரதத்தை ஊக்குவிக்கும். இன்று இளமையின் ஓய்வு ஊதியம் போல ஆடிக் களைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. காற்றில் கரைந்தவர்களையும் விட்டு வைக்கவில்லை.

மேனாட்டுக் கருவிகளுடன் இசையையும் பிரதி எடுத்து மேனாட்டில் தேனிசை பரப்பும் வித்தகரும், இந்தியாவிலேயே வாழ்ந்து இந்திய அறிவியலுக்காக உயிர்நீத்த விஞ்ஞானியும் ஒரே வரிசையில் நிற்கிறார்கள். எஸ்.எல்.வி.-3 திட்ட இணை இயக்குநர் டாக்டர் எஸ். சீனிவாசனுக்கு "பத்ம பூஷண்' அறிவிக்கப்பட்டபோது (2000), அவர் தனியார் மருத்துவமனையின் "அமரர் அறை'யில் இருந்தார்.

பிதான் சந்தன் ராய் (1961), புருஷோத்தம் தாஸ் தண்டன் (1961), பாபு ராஜேந்திர பிரசாத் (1962), லால் பகதூர் சாஸ்திரி (1966), காமராசர், வினோபா பாவே (1983), எம்.ஜி. ராமச்சந்திரன் (1988) ஆகியோர் படிப்படியாக பத்ம விருதுகள் பெற்று, முதிர்ந்த வயதில் பாரத ரத்னா பட்டியலில் உயர்ந்த இடம் பெற்றனர். ஆனால், அவர்களும் விருது பெற்ற ஆண்டிலே அல்லது மறுஆண்டிலே மறைந்தனர்.

இரண்டு முறை (1964, 1966) பதின்மூன்று நாள்கள் பிரதமர் பதவி வகித்தவர் குல்சாரி லால் நந்தா. பிரிக்கப்படாத, பண்டைய பாகிஸ்தானில் பிறந்தவர். நூறு வயது வாழ்ந்தவர் (1898-1998). இந்த இடைக்கால பிரதமரையும், அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டு முன்னதாக நினத்துக்கொண்டு "பாரத ரத்னா' வழங்கினார்கள்.

ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அவரது 20ஆவது நினைவு ஆண்டிலும் (1977), கோபிநாத் பர்தோலோய்க்கு அவரது 49ஆவது நினைவு ஆண்டிலும் (1997) மலர் வளையத்தோடு ரத்ன விருதும் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

இந்திய அரசியல் சாசன மேதை அம்பேத்கருக்கு, அவர் பிறந்த நூற்றாண்டை ஒட்டித்தான் (1990) இந்த விருது வழங்கப்பட்டது. அது அவரது 34ஆவது நினைவு ஆண்டு. மறு ஆண்டில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல் இந்த சிறப்பு பெற்றார். அது அவரது 116ஆவது பிறந்த ஆண்டும் 41ஆவது நினைவு ஆண்டும் ஆகும். நம்மவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி.

இந்த விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு, பிரதமர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். இதுதான் விதி.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தாங்கள் பிரதமராக இருந்தபோது, தாங்களே எழுதி எடுத்துக் கொண்டவர்களும் உண்டு. முன்னாள் குடியரசுத் தலைவர்களில் சிலருக்கும் இது பொருந்தும்.

ஆனால், இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் உயிரோடு இருக்கும்போது அவருக்கு விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தான் தேர்வுக் குழு உறுப்பினர் என்பதால் விருது பெற அவர் மறுத்து விட்டார். அதனால் அவருடைய மறைவிற்குப் பிறகே, 1992 ஆம் ஆண்டு அவருக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டது. தமக்குத் தாமே மாலை அணிந்து கொள்வது அரசியல் அநாகரிகம் என்று கருதிய உயர்ந்த உள்ளம் அவருடையது.

அண்ணல் மகாத்மாவுக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்படவே இல்லை. சுபாஷ் சந்திர போஸ் பெயர் 1992 ஆம் ஆண்டு இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அவர் மறைவு குறித்த சில பூடகத் தகவல்கள் நீதிமன்றம் வரை சென்றதால் விருது அறிவிப்பு பின்வாங்கப்பட்டது.

இதில் என்ன இருக்கிறது? இறந்தாலும் வாழ்ந்தாலும் வழங்கப்படுகிற விருது ஏனோ இவர் விஷயத்தில் மறுதலிக்கப்பட்டது. நாட்டிற்குக் கணிசமான பங்களித்த தொண்டு உள்ளங்களை நாம் இனங்கண்டு கொள்வது இல்லை.

இதுவரை இந்திய "பாரத ரத்னா'க்கள் 43 பேரில் 30 பேர் அரசியல் தலைவர்கள்; சத்யஜித் ரே தொடங்கி, கடந்த சில ஆண்டுகளில் எம்.எஸ். சுப்புலட்சுமி, ரவிசங்கர், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லா கான், பீம்சேன் ஜோஷி எனக் கடைசியாக வாங்கிய 10 பேரில் பாதிப்பேர் இசைக் கலைஞர்கள்; மூன்றாம் நிலையில் விஞ்ஞானிகள் நாலு பேர்; கல்வியாளர் இருவர்; தொழில் அதிபர் ஒருவரே (டாடா).

தமிழ்நாட்டில் முதல் பத்மஸ்ரீ விருது பெற்றவர் மேரி கிளப்வாலா ஜாதவ் (1909-1975) என்ற சமூக சேவகி. சென்னையில் அரசுசாரா நிறுவனங்கள் மூலம், பெண் கல்விக்கும், ஆதவற்ற குழந்தைகளின் நலனுக்கும் பாடுபட்டவர். ஆடவருள் முதல் பத்மஸ்ரீ தமிழகத்தின் மேஜர் குர்பாக்ஷ் சிங் என்பவர்.

அன்னை தெரசா இந்தியாவில் வாழ்ந்து உழைத்தவர். கான் அப்துல் கஃபார் கான் (1987), நெல்சன் மண்டேலா (1990) போன்ற அயல் நாட்டவர்க்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இன்னும் உள்நாட்டில் முன்னாள் பாரதப் பிரதமருக்கு வழங்குவதில் சர்ச்சை நீடிக்கிறது.

ஏற்கெனவே சென்ற ஆண்டு மட்டை அடி விளையாட்டில் ஒருவருக்கு பத்ம பூஷண் அளிக்கப்பட்டது. ஆ. சிவதாணுப் பிள்ளை, பி.என். சுரேஷ் போன்ற இந்திய விண்வெளி ஏவுகணை விஞ்ஞானிகள் கூடவே கர்நாடகத்தில் அந்த மட்டையடி வீரரும் பெற்றதுதான் அதிசயம். நேற்று இந்தியாவில் முளைத்த மட்டை விளையாட்டுக்கு இந்த தேசிய கெüரவம்.

"ராஜீவ் காந்தி கேல் ரத்னா', "அர்ஜுனா', "துரோணாச்சார்யா' ஆகிய பெயர்களில் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விளையாட்டிற்குப் புகழ் சேர்த்த தியான் சந்த் என்றால் யாருக்கும் தெரியாது. அவர் பெயரிலேயே 2002 ஆம் ஆண்டு முதல் தேசிய விருதும் நிறுவப் பெற்று இருக்கிறது. ஆனால், இவர் "பாரத ரத்னா' விருதுக்குத் தகுதி அற்றவராம். பாவம், இறந்த பிறகும் விவாதம் தொடர்கிறது.

இன்றைக்கு இந்தப் "பாரத ரத்னா' எடுத்த எடுப்பில் 40 ஆம் வயதிலேயே தனிப்பட்ட விளையாட்டில் மட்டையடி வீரர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. அவருடன் 80 வயது மூத்த விஞ்ஞானியும் இதே சிறப்புப் பெறுகிறார்.

பொதுவாக, விதிமீறல்கள் தேசிய அமைப்புகளில் சர்வ சாதாரணம். இலக்கிய அகாதமிகளிலும் அவ்வப்போது நடந்து வருவதுதான்.

முதனிலைத் தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளர் புறவாசல் வழி நிற்பார். தேர்வாளர்களுடன் கை குலுக்கி, பை குலுக்கி, கால் பிடிப்பார். விருதினைக் கைப்பற்றிய பிறகு, போட்டியில் விட்டுக் கொடுப்பதாவது என்கிற வசனம் வேறு. லட்சியத்திற்கா, லட்சத்திற்கா விருது என்று நடுநிலையாளர்கள்தாம் சொல்ல வேண்டும்.

பாருங்களேன், தனியார் பல்கலைக்கழகத்தின் அறிவியல் இலக்கிய பரிசுகளுக்கும் கூட இதே நிலை. உப்பு சப்பு இல்லாத எழுத்துக்கு வழங்குவோமே தவிர, எழுத்தாளனின் ஒட்டுமொத்த பங்களிப்பை மறந்துவிடுவோம். எதார்த்தப் படைப்பாளிகளை வாழும்போது வசை பாடிவிட்டு இறந்த பிறகு அவரைப்பற்றி துதி பாடுவது நம் மரபு.

எது எப்படியாயினும், இந்த "பத்ம' விருதுகள் அரச பட்டங்கள் அல்ல. பெயருக்கு முன்னும் பின்னும் ஒட்ட வைத்து கொள்ளக் கூடாது. அறிமுக அட்டை, கடிதத் தலைப்பு, அழைப்பு இதழ், சுவரொட்டி, புத்தகங்கள் எதிலும் தாங்களாக இந்த விருதுகளை அச்சிட்டுக் கொள்ளக் கூடாது. இது அடிப்படை விதி. இதனை மீறினால் விருதுகள் பறிக்கப்படும். ஆனால் இங்கே நிலைமை என்ன? பலரின் பெயர்களைவிட பட்டங்களே பிரபலமாகியிருக்கின்றன. இது சரியா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com