ஒரு தேசத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவன கல்வியும் சுகாதாரமுமேயாகும். இவற்றின் வளர்ச்சியில்தான் குடிமக்களின் வளர்ச்சியும் இருக்கிறது. இதனை மத்திய மாநில அரசுகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உணர்ந்து இருந்தால் வரவு-செலவுத் திட்டத்தில் மிகக் குறைந்த அளவு நிதியை இவற்றிற்கு ஒதுக்குவார்களா?
சென்னையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூர், "மருத்துவ செலவுக்காக சாமானியர்கள் கடனாளிகள் ஆக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்...' என்று வலியுறுத்தியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி 1,000 பேருக்கு 4 படுக்கைகளும், 10 ஆயிரம் பேருக்கு 6 டாக்டர்களும் இருக்க வேண்டும். இதன்படி இந்தியாவில் வரும் 2020 ஆம் ஆண்டில் 4 லட்சம் மருத்துவர்கள் கூடுதலாகத் தேவைப்படுவார்கள்.
நம் நாட்டில் உள்ள மொத்த மனித வளத்தில் 65 விழுக்காட்டினர் 35 வயதுக்குக் கீழும், 50 விழுக்காட்டினர் 25 வயதுக்குக் கீழும் உள்ளனர். இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பணியாளர்களின் எண்ணிக்கை 32 விழுக்காடு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இளைய சமுதாயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் மருத்துவர்கள் பங்கு இன்றியமையாதது.
இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் 86 விழுக்காடு வரை மருத்துவத்துக்குச் செலவிடப்படுகிறது. இதுவே இங்கிலாந்தில் 52 விழுக்காடு, பிரான்சில் 32 விழுக்காடு, அமெரிக்காவில் 20 விழுக்காடு என உலக வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தங்களின் மருத்துவ செலவுக்காக சாமானியர்கள் கடனாளிகள் ஆக்கப்படுவது தடுக்கப்பட்டு, அனைவருக்கும் உரிய நேரத்தில் தரமான சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியம்.
இதற்கு மருத்துவ மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் என்பவை நோய்களின் இருப்பிடமாகவே காட்சியளிக்கின்றன. மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப மருத்துவமனைகள் அமைக்கப்படவில்லை. பல மருத்துவமனைகளில் மருத்துவர் முதலிய பணியாளர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படவில்லை; பணியாளர்கள் இருந்தாலும் மருந்து மாத்திரைகள் இல்லை அல்லது எல்லா நோய்களுக்கும் ஒரே மாதிரி மருந்து மாத்திரைகளே தரப்படுகின்றன.
இந்தச் செய்திகள் பத்திரிகைகளிலும், செய்தி ஊடகங்களிலும் வெளிவருமானால் உடனே அரசு தரப்பில் மறுப்பு வெளியிடப்படுகிறது. அமைச்சர்களும் போட்டி போட்டுக் கொண்டு, "அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன' என்று அறிக்கைகள் வெளியிடுகின்றனர். எத்தனை காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியும்? வெற்று விளம்பரங்களாலேயே உண்மையை மூடி மறைத்துவிட முடியுமா?
அரசு மருத்துவமனைகளில் புதிய கருவிகள் பொருத்தும் விழா நடைபெறுகிறது; புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று செய்திகள்; குறைந்த செலவில் எக்ஸ்ரே, ஸ்கேன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றெல்லாம் கூறுகிறார்கள். போய்ப் பார்த்தால் அவை சமயத்துக்குப் பயன்படுவதில்லை. பழுதாகி விட்டதாகவும், வெளியில் சென்று உடனே சோதனை செய்து முடிவுகளைப் பெற்று வரும்படியும் நோயாளிகளை மருத்துவர்களே கட்டாயப்படுத்துகிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளோ ஈவு இரக்கம் இல்லாமல் பணம் பிடுங்குவதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்றன. அரசாங்கம் அவற்றைக் கண்காணிப்பதும் இல்லை, ஆய்வு செய்வதும் இல்லை. காரணம், அரசுத் துறைகளை திருப்தி செய்வது எப்படி என்பதை தனியார் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலும், லஞ்சமும் இங்கும் தலை விரித்தாடுகிறது.
தனியார் நடத்தும் ஆய்வுக் கூடங்களும், அரசு மருத்துவர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது.
அத்துடன் அரசு மருத்துவர்கள் வெளியில் தனி மருத்துவமனை நடத்துகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்வதில்லை என்று நோயாளிகளே வருந்துகின்றனர்.
அப்பாவி மக்களிடம் "கிட்னி'யைத் திருடும் பாவச் செயல்களில் ஒரு சில மருத்துவர் ஈடுபடுவது அத்தொழிலின் மரியாதையையே பாழ்படுத்துகிறது. பல தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் இயல்பாகப் பிரசவம் ஆகும் நிலையிலும்கூட, பணத்துக்காக "அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் ஆபத்து' என்று பயமுறுத்தும்போது ஏதுமறியாத மக்கள் என்ன செய்ய முடியும்?
பண வசதி இல்லையென்று அரசு மருத்துவமனைக்குப் போனால் அங்கு இடவசதியும் இல்லை; கவனிப்பும் இல்லை.
வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்குப் போனால் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு உயிரை மட்டும் கொடுப்பார்கள். பணம் இல்லாமல் உயிரை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? வாங்கிய கடனுக்கு என்ன பதில் சொல்வது? ஏழை மக்களின் ஏக்கம் இது.
உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் மாற்றுத் திறனோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைத் திருமணம், சுகாதாரமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் பாதிப்பு, கர்ப்ப காலத்தில் முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமை, குடும்பம் மற்றும் சமூக சூழல் போன்ற காரணங்களால் மாற்றுத் திறன்களோடு குழந்தைகள் பிறக்கின்றன என கண்டுபிடித்துள்ளனர்.
வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெண்களும், குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. குழந்தைகளுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு அதனைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அந்தக் குடும்பமே பாதிக்கப்படும்.
"மனநல பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டு அறிவதன் மூலம் குணப்படுத்த முடியும். இது தொடர்பாக தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இதனை சாதிக்க முடியும்.
ஆனால் இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குப் போதிய நிதியில்லை' என்று மதுரம் நாராயணன் சிறப்பு குழந்தைகளுக்கான மையத்தின் 4ஆவது சர்வதேச மாநாடு மற்றும் 10ஆவது தேசிய பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எதற்கோ வீணாகப் பணத்தை வாரியிறைக்கும் அரசு இதுபோன்ற மருத்துவ, விஞ்ஞான ஆய்வுகளுக்கு போதுமான நிதியுதவி செய்ய வேண்டாமா? இதனைதான் தற்போது "பாரத ரத்னா' விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் "முட்டாள்தனமானது' என்று கோபத்துடன் கூறினார்.
அறிவியல் துறையில் நமது முதலீடு போதுமானதாக இல்லையென்றும், அறிவியலுக்குப் போதிய நிதி ஒதுக்காத நிலைமை முட்டாள்தனமானது என்றும் ஆத்திரப்பட்டுள்ளார். அறிவியல் துறையின் முக்கியத்துவத்தை அரசு உணர வேண்டும் என்றும், போதுமான முதலீடு செய்தால்தான் இந்தியா ஒளிரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் கருணையுள்ளம் கொண்டவர்களாகவும், மனிதநேயம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. அப்படிப்பட்டவர்களின் தொகை குறைவாக இருப்பதற்குக் காரணம் என்ன? மருத்துவக் கல்வி வணிகமயமானதுதானே.
மருத்துவமும், பொறியியலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எட்டாக் கல்வியாகவே மாறிவிட்டன. இவை தனியாரின் ஏகபோக வணிகமாகவே ஒதுக்கப்பட்டுவிட்டது.
பெட்டி பெட்டியாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்து இடம் பிடித்து, படித்துப் பட்டம் வாங்கி மருத்துவராகும்போது சேவை மனப்பான்மை எங்கிருந்து வரும்? ஒரு சிலர் அப்படியிருந்தால் அவர்கள் நன்றிக்கு உரியவர்கள்.
"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்'
என்பது குறள்.
நோய் இன்னது என ஆராய்ந்து, அதன் காரணத்தையும் ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியையும் ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்று வள்ளுவனார் கூறுகிறார்.
ஆனால் இன்றைய இளம் மருத்துவர்கள் இந்த வழிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுவார்களானால் நம்நாட்டின் எதிர்காலம் கவலைக்குரியதாகவே மாறிவிடும். அரசும் அவர்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் சேவையே நாட்டின் தேவை.
அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இயங்குவதாக மேடைதோறும் பேசும் அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தங்களுக்கு நோய் வருமானால் தனியார் மருத்துவமனைக்கும், வெளிநாடுகளுக்கும் போவது ஏன்? எளிமைக்குப் பெயர் போன காந்தியாரையும், காமராசரையும், கக்கனையும் பற்றி பேசலாம், ஆனால் அவர்களைப் பின்பற்றுவது எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.