ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சிறிய ரோஜாக்கள்; பெரிய சாதனைகள்

சர்வ சுதந்திர பொருளாதாரம் என்ற போர்வையில் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் குளோபலைசேஷன் என்கிற உலகமயமாதல் அறிமுகமாகி கால் நூற்றாண்டு கடந்துவிட்டது.

News image
Updated On :8 டிசம்பர் 2013, 8:50 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

சர்வ சுதந்திர பொருளாதாரம் என்ற போர்வையில் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் குளோபலைசேஷன் என்கிற உலகமயமாதல் அறிமுகமாகி கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. யார் வளர்ச்சி பெற்றார்கள்? யாரால் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்தது? இதுபோன்ற கேள்விகளுக்கு பொருளாதார மொழியில் பதில் சொல்வதற்கு ஜி.டி.பி. என்று கூறப்படும் ஒட்டுமொத்த உற்பத்தி - வர்த்தகத் தொழில் வருமான மதிப்பின் கீழ் வரக்கூடிய வேலைவாய்ப்புகள் ஒரு முக்கிய அலகு. இந்த அலகின் கீழ் வருமான மதிப்பை உயர்த்தியது அல்லது உயர்த்தியவர்கள், அரசின் உற்பத்தித் துறையா, பன்னாட்டு பகாசூர கார்ப்பரேட்டுகளா, அல்லது உள்ளூர் முதலைகளா என்று கணக்கிட்டுப் பார்த்தபோது குறு-சிறு-நடுத்தர மற்றும் அமைப்பு ரீதியற்ற குடும்பக் கைத்தொழில்களின் பங்கே உயர்ந்து நிற்கிறது. பண பலமுள்ள வலியோர் கீழே நிற்பதும் பண பலமற்ற மெலியோர் மேலே நிற்பதும் இன்றைய இந்தியக் காட்சி. பொருளாதார அலகைக் கொண்டே இதை மெய்ப்பிக்கலாம்.

பெரிய அளவில் பெரும்புள்ளிகளால் ஏற்படுத்தப்படும் தொழில் வளர்ச்சியே பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் என்று உலகமயத் தத்துவத்தில் ஊறிப் போன நிபுணர்கள் நம்புகின்றனர். "கி.பி. 2025ஐ நெருங்கும்போது பெருந் தொழில் - வர்த்தகம் மூலம் கார்ப்பரேட்டுகளின் கருணையினால் 22 கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும்' என்று திருதராஷ்டிரப் பார்வையில் பிரதமர் முழங்கியுள்ளனர். ஆனால், இன்றுவரை நிகழ்ந்துள்ளவற்றைப் பார்க்கும்போது காந்தி - ஷுமேக்கரின் சத்தியப் பார்வைதான் பலித்துள்ளது.

நம்மிடமுள்ள வேலைவாய்ப்பு பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைப்பு ரீதியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.7 கோடி என்றால் அதில் அரசின் பங்கு 1.7 கோடி. இருந்தும்கூட பொதுத் துறை களவாடப்படுகிறது. உலகமயமாதலில் டங்கல் ஆசீர்வாதத்துடன் தோன்றியுள்ள பன்னாட்டு முதலைகளும், உள்ளூர்ப் பெருந்தொழில் நிறுவனங்களும் 1 கோடி தொழிலாளர்களைத்தான் உருவாக்கியுள்ளனர். இன்னும் 12 ஆண்டுகளில் 2.7 கோடி, 22 கோடி வேலைவாய்ப்புகளாகுமா என்ன? உதாரணமாக ஒடிசாவில் "வேதம்' என்ற சொல்லுக்கே களங்கம் விளைவிக்கும் "வேதாந்தா' என்ற பன்னாட்டு நிறுவனச் சாத்தான் தனது அலுமினியச் சுரங்கச் சுரண்டலுக்கு ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை பலி கேட்கிறது. ஆயிரம் பேருக்கு வேலை தர அற்புதமான காடுகளை அழித்து இரண்டாயிரம் பழங்குடிகளுக்கு மாற்றம் வழங்குவதின் மூலம் இந்தியா முன்னேறிவிடாது. மாறாக, நமது பல்லுயிர் தாவர - விலங்கினம் அழியும். காலநிலை மாற்றத்தின் தாக்கமும் தீவிரமாகும்.

விவசாயம் சாராத - அமைப்பு ரீதியற்ற குறுந்தொழில் - தங்களின் வேலையைத் தாங்களே தேடிக் கொள்ளும் குடும்ப அமைப்புகளின் பங்கு சுமார் 70 சதவீதம். தறி, நெசவு, கட்டிலுக்கு நாடா, முறுக்கு - வடை சுடுதல், அப்பளம், வடாம், சின்னஞ்சிறு பலகாரக் கடை, ஒன்று அல்லது இரண்டு கூலிக்காரர்களை வைத்துக் கொண்டு பலதரப்பட்ட தையல், மணி வேலை என்று எது வேண்டுமானாலும் செய்யலாம்.

10 முதல் 15 சதவீத வேலைவாய்ப்புகளை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றுத் தரலாம். ஆகக்கூடி, ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளில் எட்டு சதவீதம் மட்டுமே அரசு - பெரிய தொழில் நிறுவனங்கள் பெற்றுத் தருகின்றன. இந்த எட்டில் ஐந்து சதவீதம் அரசின் பங்கு போக மீதி மூன்று சதவீதம் மட்டுமே பெரிய தொழில் நிறுவனங்களின் பங்கு.

குறு-சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வரையறை என்ன? அவை தொழிற்சாலை சட்டப்படி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஐந்து தொழிலாளர்களுடன் மின்சக்தியைப் பயன்படுத்தும் தொழில்கூடமாயிருக்கலாம். மின்சக்தி உதவி இல்லாமல் பத்து தொழிலாளர்களுக்குப் பணி வழங்கப்படலாம். குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் தகுதி முதலீட்டு அடிப்படையில் வங்கிக் கடன் / ஓவர் டிராஃப்ட் அளவு, ரூபாய் 1 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் என்று 50 லட்சம் வரை வரையறை இருக்கலாம்.

உலகமயமாதல் தொடங்குமுன் 1980-1990களில் சுறுசுறுப்புடன் சென்னையில் சிட்கோ, கிண்டி மற்றும் ராணிப்பேட்டை, பெங்களூரு, ஹெüரா, புணே போன்ற பல இடங்களில் இயங்கிய நூற்றுக்கணக்கான தொழில்பேட்டைகள் தற்போது வெறிச்சோடிவிட்டன. புதிய பொருளாதார மண்டலத்தில் உரிமம் பெற்ற பெரிய நிறுவனங்கள் நிறைய முளைத்திருக்கலாம். குறைந்த தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கி, பலவித சலுகைகள் பெற்று வருமான வரித்துறையை ஏமாற்றிய பணத்தைக் கருப்புக் கணக்கில் ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றும் கார்ப்பரேட்டுகளின் காலமிது. இப்படிப்பட்ட பெரு நிறுவனங்களின் ஜி.டி.பி. பங்களிப்பைவிட வேளாண் விளைபொருள்களின் மொத்த - சில்லறை வர்த்தகம், மளிகை, ஷாப்புக் கடை, செருப்புக் கடை, நகைக் கடை, ஜவுளிக் கடை, தையல், பின்னல், லேத் பட்டறை, தொண்டு நிறுவனங்களாகச் செயல்படும் கதர் - காதி - சோப்பு நிறுவனங்கள், சர்வோதய சங்கத் தொழில்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களில் ஒரு சில ஆகியவற்றின் ஜி.டி.பி. பங்களிப்புகளே அதிகம்.

இந்திய ஏற்றுமதிகளில்கூட அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் ரெடிமேட் துணிமணிகள், பின்னலாடை, வைர நகை, தங்க நகை போன்றவை குறு-சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களே. அடுக்குமாடிக் கட்டடங்கள், சாலைகள், வீடுகள் போன்றவற்றைக் கட்டித்தரும் கட்டுமானத் தொழிலாளர்களும் நிரந்தரமற்றவர்களே. அவர்களின் பங்களிப்பும் சிறப்பானதே.

"பெரிது பெரிது புவனம் பெரிது' என்று சொல்லி, பெரிய பெரிய அணைகள் கட்டி பல்லாயிரக்கணக்கான ஏழை - பழங்குடிகளின் வாழ்விடங்களையும் வனங்களையும் அழித்தார்கள். பொருளாதார மண்டலங்களில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் கட்டி பெரிய அளவில் பணத்தினில் உருண்டு, பெரிய பெரிய கருப்புச் சந்தைகளை உருவாக்கினார்கள். பெரிய பெரிய தத்துவங்கள் பேசி, பெரிய பெரிய தலைவர்கள் உருப்பெற்றுப் பெரிய பெரிய தவறுகளையும் செய்தவண்ணம் உள்ளனர். பெரிய பெரிய புவனங்கள் தோன்றியதால் சிறிய மலர்த் தோட்டம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏழைகளின் வாழ்வு பெரிய பன்னாட்டு முதலீடுகளில் இல்லை. "சின்னச் சின்ன ரோஜா' "சின்னச் சின்ன இழை' என்று கவிஞர்கள் பாடியுள்ள சின்னச் சின்ன முதலீடுகளில்தான் ஏழைகளின் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியா வளரவில்லை. பெரும்புள்ளிகள்தான் வளர்ச்சி பெற்றுள்ளனர்.

மன்மோகன் சிங்கும் அல்வாலியாவும் ரங்கராஜனும் ரகுராம் ராஜனும் சிதம்பரமும் போடும் பெரும்புள்ளிக் கணக்கில் மகாத்மா காந்தியும் ஷுமேக்கரும் கண்ணுக்குத் தெரியவில்லை. மகாத்மா காந்தி மூன்று யோசனைகள் கூறியுள்ளார். அவையாவன, முதலாவது, தன்னிறைவு, இரண்டாவது, கதர்-கிராமக் கைத்தொழில், மூன்றாவது, ராம ராஜ்ஜியம்.

இதுபோன்றே, "சிறியதே அழகு' ("ஸ்மால் ஈஸ் பியூட்டிஃபுல்') என்ற தத்துவத்தைப் படைத்த ஷுமேக்கர் கூறிய மூன்று யோசனைகளாவன: சிறுகக் கட்டிப் பெருக வாழ், சேமிப்பு நிறைந்த சிறு முதலீடு, எளிமை ஆகியவை.

இன்றைய எதார்த்தத்தில் சிறு நிறுவனங்களே அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. ஜி.டி.பி.யிலும் முன்னிலையில் உள்ளன. இவ்வாறு சின்ன ரோஜாக்கள் பெருஞ்சாதனை புரிந்திருந்தாலும் கூட, இப்படிப்பட்ட ரோஜாக் கூட்டம் செழிக்க உரம் வைக்காமல், அரசை ஏமாற்றி வாழும் பெரும் நிறுவனங்கள் புதர்களாகவும் எட்டி மரங்களாக வளர்ந்தாலும் கூட, ஊட்டம் புதர்களுக்கு அல்லவா வழங்கப்படுகிறது. இந்நிலை மாறுமா? விவசாயிகளே இந்த நாட்டின் முதுகெலும்பு என்று மேடையில் பேசிவிட்டு, ஆண்டுதோறும் பல ஆயிரம் விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமாகும் இந்த அரசுகள், தொழில் உலகத்தின் முதுகெலும்புகளாயுள்ள குறு-சிறு-நடுத்தரத் தொழில் முனைவோர்களின் மென்னியை முறிக்காமல் இருந்தால் சரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.