சென்னாலஜியும் பகவதினாமிக்ஸூம்
இந்தியாவை சரியான வளர்ச்சித் தடத்தில் இட்டுச் செல்லும் பொருளியல் கொள்கைகளைப் பற்றிய விவாதத்தில் பகவதி வழி நன்றா, சென்வழி நன்றா என்ற விவாதம் நிபுணர்களிடையே நிலவி வருகிறது.


இந்தியாவை சரியான வளர்ச்சித் தடத்தில் இட்டுச் செல்லும் பொருளியல் கொள்கைகளைப் பற்றிய விவாதத்தில் பகவதி வழி நன்றா, சென்வழி நன்றா என்ற விவாதம் நிபுணர்களிடையே நிலவி வருகிறது.
இன்று ஊடகங்களும் இந்த விவாதத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பகவதி வழியை மோடியுடனும், சென்வழியை மம்தா பானர்ஜியுடனும் ஒப்பிடுவது அவ்வளவு சரியாகப் படவில்லை.
சரஸ்வதி சபதம் என்ற சினிமா நினைவுக்கு வருகிறது. கல்வியா? செல்வமா? வீரமா? என்ற டி.எம்.எஸ். பாடல் காலத்தால் வெல்ல முடியாதது. வீரத்தைப் பற்றிய பேச்சு பாதுகாப்பு - ராணுவச்செலவினம். அதில் பெரிய கருத்து வேற்றுமை இல்லை. கல்வியின் கட்சி சென். செல்வத்தின் கட்சி பகவதி என்று பகுத்தறியலாம். கல்வி இருந்தால் செல்வம் வரும் வளர்ச்சி வரும் என்கிறார் சென். முதலில் செல்வம் இருந்தால்தானே கல்வியே பெறமுடியும் என்கிறார் பகவதி. இனி நாம் சுருக்கமாக விவாதத்தைத் தொடர்வோம்.
இருவருமே அமெரிக்காவில் வாழும் இந்தியப் பேராசிரியர்கள். இருவருமே உலகப்புகழ் பெற்றவர்கள். இருவருக்குமே இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்துடன் உறவு உண்டு.
இந்தியப் பொருளியல் விற்பன்னர்கள் சென் கொள்கையை "செனாலஜி' என்கிறார்கள். பகவதியின் கொள்கை "பகவதினாமிக்ஸ்' என்று போற்றப்படுகிறது. அமர்த்தியா சென் எழுதியுள்ள புத்தகம் "உறுதியற்ற புகழ்; இந்தியாவும் முரண்பாடுகளும்'. ஜகதிஷ் பகவதி எழுதியுள்ள நூல் "விதிக்குத் தேதி கொடுத்த இந்தியா'.
வளமையை உயர்த்துவதுதான் வளர்ச்சி என்றும் வளமை உயரும் போது - அதாவது உற்பத்தி மதிப்புகள் உயர்ந்தால் அப்படிப்பட்ட உயர்வே வறுமைக்குரிய தீர்வு என்பதும் பகவதியின் கருத்து. ஒரு பணியை திறமுடன் செய்வது, உழைப்பின் உற்பத்தித்திறன் ஆகியவை போற்றப்படுகிறது.
உழைப்புக்கு ஊதியம் தரலாம். வறுமையை ஒழிப்பதாகக் கூறி சோம்பலுக்கு ஊதியம் தருவதை பகவதி எதிர்க்கிறார். இந்த விஷயம் பற்றிய கருத்தில் சென் வேறுபடுகிறார். "உற்பத்தித் திறன் பற்றியோ வேலைத்திறம் பற்றியோ சென் கவனிக்கத் தவறிவிட்டார்' என்பது பகவதி அணியின் கருத்து.
செனாலஜியின் மையக்கருத்து மனித அதிகாரம் பற்றியது. பெண்ணுக்கு அதிகாரம். ஏழைக்கு அதிகாரம், உணவுப்பாதுகாப்பு என்றறெல்லாம் ஓரளவு இடது சாரிக் கருத்தைச் சென் முன்வைப்பதுடன், நலவாழ்வு, கல்வி, சமுகக்கட்டமைப்பு, மூலதனம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறார்.
செனாலஜியை முன் வைத்து உழைப்பையும் உற்பத்தியையும் மையப்படுத்தாமல் மக்களுக்கு இனாமாக எல்லாவற்றையும் அரசு வழங்கும் போக்கு உச்சகட்டமாகவும், தேர்தல் வெற்றியைக் குறிவைத்தும் செனாலஜி நிகழ்ந்து வருகிறது. ஒரு மனிதனை உழைக்கத் தூண்டாமல் இனாம் வழங்கல் எல்லை மீறிவிட்டது.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் உற்பத்தி மதிப்பு உயராது. உழைக்கும் ஆர்வம் இன்மையால், உழைப்பின் மதிப்பு உயரலாம். உற்பத்தி மதிப்பு இல்லாமல் உபரி மதிப்பு எப்படிப் பெறுவது ? உபரி மதிப்பை முதலாளி சுரண்டுவதாக மார்க்ஸ் போதித்தார். உழைக்காமலேயே உபரி மதிப்பைப் பெறும் வழிமுறையை "புதிய மார்க்சியம்' போதிக்கின்றதோ? இந்தக் கண்ணோட்டத்தில் கவனித்தால் பகவதினாமிக்ஸ் முழு மதிப்பெண் பெறுகிறது. தொழில் உற்பத்திக்குரிய சூழ்நிலையை செனாலஜி புறக்கணித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை புல் முளைக்கவைத்தது ஏன் என்ற கேள்விக்கு இருவரிடமும் விடை உள்ளதாகத் தெரியவில்லை. வேண்டப்பட்ட கார்ப்பரேட்களுக்கு பொதுத்துறை வழங்கும் மூலப்பொருள்களை அள்ளிக் கொள்ள வழங்கும் லைசன்ஸ் ராஜ்ஜியமே இந்திய அரசு என்றும்,இந்த அணுகுமுறை ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும் பகவதினாமிக்ஸ் கூறுவதில் பொருள் உண்டு.
தனிமனித அதிகாரம் என்பது இனாம் ராஜ்ஜியமோ லைசன்ஸ் ராஜ்ஜியமோ அல்ல. அண்மையில் நிதியமைச்சர், "பொருளாதார வளர்ச்சிக்காக துணிவுடன் பணியாற்றும் போது விருதுகள் கிடைப்பதில்லை' என்று கூறியுள்ளார். பொருளாதார வரலாற்றில் "துணிவே துணை' என்று செயல்பட்டதற்கு எந்த நாட்டுக்கும் தண்டனைக் கிட்டியதாக சான்றுகள் இல்லை. வெற்றிக் கதைகள் உண்டு.
இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படை வறுமையைக் குறைப்பதுதான் இலக்கு என்றால், இந்தியாவில் உள்ள தொழில் முனைவோர் முயன்றால் தொழில் உற்பத்தி மதிப்பையும், கச்சாப்பொருள் மதிப்பையும் கூட்டி வளமையை உயர்த்தி வறுமையை அகற்றலாம். வேண்டுவதெல்லாம் புதிய கண்டுபிடிப்புகளுடன் கூடிய தொழில் முயற்சிதான்.
வெற்றிகரமான வளர்ச்சி வரலாறு, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்திலும், இதர ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளிலும் தோன்றிய தொழில் புரட்சி. 20ஆம் நூற்றாண்டில் ஜப்பான், தைவான், தென்கொரியா, சீனாவில் நிகழ்ந்த தொழில் முனைவோரின் புரட்சி.
வளர்ச்சிக்குரிய வெற்றிக்கனியை முன்கூட்டியே உறுதி செய்ய மூன்று காரணிகள் முக்கியமானவை. தொழில் வளர்ச்சிக்குரிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல். மின் வினியோகம், நில வினியோகம், சூழல் இடர், சந்தைப் படுத்துதல், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரின் முதலீட்டுத் தேவை, பன்னாட்டு முதலைகளுடன் கூட்டுறவுள்ள பெரிய தொழில் முதலைகளைக் கட்டுப்படுத்துதல், கூட்டுறவு மேம்பாடு என்று பலவற்றை யோசிக்கலாம்.
இரண்டாவதாகத் தனிமனித அதிகாரம். அமர்த்தியாசென் அதிகம் வலியுறுத்தும் விஷயம் இதுவே. இதை தனி மனிதனின் உழைப்பாகப் பொருள் கொள்ளலாம். தொழில் முனைவோர், தொழிலாளர்கள் "செய்யும் தொழிலே தெய்வம்' என்று போற்றி உற்பத்தி மதிப்பை உயர்த்துவதின் மூலம் வளமையை உயர்த்துதல்.
மூன்றாவதாகத் தொழில் வர்த்தகம் பரிமாற்றம் - நடவடிக்கைகளில் திறமையும் அறிவுடமையும் கொண்டு ஏற்றுமதி - இறக்குமதி செய்தல். இந்தக் கோணத்தில் ஜகதீஷ் பகவதி சிறப்பாக சிந்திக்கிறார். லாப நோக்குள்ள வர்த்தக பேரங்களைச் செய்வதே நாட்டுக்கு வளமையைத் தரும்.
ஜகதீஷ் பகவதியானாலும், அமர்த்தியா சென்னானாலும் ஒருவர் மோடி கட்சி என்றும் மற்றவரை மம்தா கட்சியென்றும் அல்லது ஒருவரை வலதுசாரி என்றும் மற்றவரை இடதுசாரி என்றும் முத்திரை குத்தி அணிசேர்ப்பதை விடுத்து, நல்ல கருத்துகளை யார் சொன்னாலும் வரவேற்று நாடு முன்னேற வழி உண்டா என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் சிந்திக்க வேண்டும்.
வளமையை உருவாக்கும் கருத்தும் வறுமையை ஒழிக்கும் கருத்தும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். பூவா தலையா என்று போட்டி வேண்டாம். தலையும் தலையில் முடியும் இருந்தால்தான் பூ அணியமுடியும். தலை இருந்தால் தான் கழுத்தில் மாலையைப் போட முடியும்.
நல்ல சிந்தனைமலர்களை மாலையாகத் தொடுத்து பாரதமாதாவுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கும் மாநில முதல்வர்களுக்கும் உள்ளது.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...