"அன்னிய விருதுக்கு' அலைவானேன்?

எதற்கு எடுத்தாலும் மேலை நாடுகளைச் சொல்லி அரசியல் கௌரவம் பேசுவது அறிவியல் மூடத்தனம். அவர்கள் 65 ஆண்டுகளுக்கு முன்னால் விட்டுச்சென்ற அரசியல் அமைப்பு முறை இன்னும் இங்கே நீடிப்பது ஆச்சரியம்தான்.
Updated on
4 min read

எதற்கு எடுத்தாலும் மேலை நாடுகளைச் சொல்லி அரசியல் கௌரவம் பேசுவது அறிவியல் மூடத்தனம். அவர்கள் 65 ஆண்டுகளுக்கு முன்னால் விட்டுச்சென்ற அரசியல் அமைப்பு முறை இன்னும் இங்கே நீடிப்பது ஆச்சரியம்தான். உத்தரப் பிரதேச அளவிலான பிரிட்டனின் மக்கள் தொகையோ தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிடக் குறைவு. அன்றைய நம் "முப்பது கோடி ஜனங்கள்' தான் இன்றைய அமெரிக்க மக்கள்தொகை. இந்நிலையில், பிரிட்டிஷ் நாட்டவர்க்கான ஜனநாயக அரசியல், திரைப்பட அங்கீகாரம், கிரிக்கெட்டுப் பந்தயம் ஆகிய மூன்று துறைகளை நம் இந்தியச் சூழலில் எடுத்தாளுவது பொருத்தமாக இல்லை.

மேலை அறிவியலைக்கூட இந்தியச் சிந்தனையுடன் அணுக வேண்டும். பாருங்களேன் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் என்று வளர்ந்த நாடுகள் அனைத்தும் பூமிக்கோளத்தில் வடபாதியில் இயங்கி வருகின்றன. அங்கு காற்றில் குளோரோ ஃபுளூரோ கார்பன் என்னும் குளிர்பதன வாயு பெருகி இருக்கட்டும்.

அதனால் வடதுருவ ஆர்க்டிக் வளிமண்டலத்தில் அல்லவா பொத்தல் விழ வேண்டும்? அட்லாண்டிக் மீதான ஓட்டையையே எடுத்துக்காட்டுகிற ஆர்வம் ஏன்? அதில் வேறு உள்நோக்கம் உண்டு என்று நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நம் "பூமியின் நண்பர்களும்' சிந்திக்கலாம்.

எந்தத் துறையிலும் "சிந்தனை அலசலே' அறிவியல்; சீர்திருத்த முயற்சியே தொழில்நுட்பம். இவற்றால் நம் நாட்டுக்கும் பயன் உண்டாக வேண்டும்.

உள்நாட்டில் வாழ விரும்பாமல் புலம்பெயர்ந்தவர்கள் ஒருபுறம். நம் நாட்டில் சம்பாதித்த அடிப்படை அறிவை அயல்நாடுகளில் போய் அடகு வைக்கும் டாலர் வியாதிக்காரர்கள் மறுபுறம்.

இதற்கெல்லாம் இங்கே ஊழல், சுத்தமின்மை, திறமைக்கு மதிப்பின்மை, படிப்புக்கு ஏற்ற சம்பளம் இன்மை போன்ற சப்பைக் காரணங்கள். செய்ய வேண்டியதைத் துணிந்து நின்று நாட்டினை மேம்படுத்தத் திராணி அற்ற இளைஞர்களை என்ன சொல்ல? "நீரதன் புதல்வர்; இந்நினைவு அகற்றாதீர்' என்று சொல்ல வேண்டி வருகிறதே.

இதில் இன்னொரு விஷயம். கார்ப்பரேட் பிடியில் உட்கார்ந்து கொண்டு இந்தியக் கலைஞர்களை அங்கு வரவழைத்து, "எங்கள் முன் ஆடிக் காட்டுங்கள், பாடிக் காட்டுங்கள்' என்கிற அவர்தம் கலை ஆர்வத்தை எப்படி வர்ணிப்பது?

முன்னொரு காலத்தில் ஜமீன்தார்கள் உள்ளூர் கிராமியக் கலைஞர்களைத் தங்கள் அரண்மனை முற்றத்தில் ஆடச் சொல்லி ரசிப்பதற்கும், இவர்களின் செயல்பாட்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லைதான். இது கலைச் சுரண்டல்தானே? இந்த உன்னத மகான்மியத்தில் தமிழரும் விதி விலக்கு அல்ல!

நம் நாட்டு இயல், இசை நாடகத்தை ரசிப்பதற்கு அவர்கள் இங்கே வர வேண்டுமே அன்றி, நாம் போய் கூத்தாடுவது தேவையா? தெரியாத்தனமாக நாம் தடம்புரண்டு வருகிறோம்.

இதற்கு மத்தியில், "கட்டாமலே வெச்சுக்கலாமாம்', - எந்த சொப்பன சுந்தரியையோ? ""எத்தனை கோணல் ஆனாலும் என்னுடையதாக்கும்?'' என்ற பெருமை எதற்கு?

அதுதான் பெண்கள் பொது இடங்களில் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம் என்கிறார்கள் அதிநவீனத்துவச் சிந்தனையாளர்கள். இப்போதே ""இங்கு "பார்', வசதி உண்டு'' என்று தான் அறிவிப்புப் பலகை அழைக்கிறது.

ஏதாயினும், பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விவாதங்கள் நம் நாட்டில் தீர்ந்தபாடில்லை. 17 வயது 11 மாதம் 29 நாள் வயதில் ஒரு இளைஞன் இந்தியாவில் யாரையும் பலாத்காரம் செய்யலாம்.

கொலையே செய்தாலும் 18 வயது ஆகாத "பச்சை மண்' என்ற வகையில், சிறு தண்டனையுடன் தப்பித்துக் கொள்ளலாம். சட்டப்படி சில ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, திருந்தியோ திருந்தாமலோ கூட உலா வரலாம்.

வக்கிரம், ஆபாசம் யாவும் காட்டினால்தான் தியேட்டரில் கூட்டம் வரும் என்று பெரிய திரைகள் இளைஞர்களை மாட்டி விடுகின்றன.

குடும்பக் கலவரங்கள், குழப்பங்களைச் சித்திரிக்கும் சின்னத்திரைகளோ பெரியவர்களை (குறிப்பாக, பெண்களை)ச் சிக்க வைக்கின்றன. ஊடக உலகின் எதிர்திசைப் போக்கு விபரீதங்கள் இவை.

சமீபத்தில் "பத்ம' விருது அறிவிக்கப்பட்ட பெண் பாடகியின் தன்மானத்தைக் கௌரவிப்போம்.

நம்மிடையேயும் இருக்கிறார்கள், பணங்கொத்திப் பறவைகள். இந்தியப் பணத்தையும், மனத்தையும் வெளிநாட்டு லாக்கர்களில் பூட்டி வைக்கும் பேர்வழிகள். அவர்கள் ஆட்சியாளர்களின் சொந்தக்காரர்களைச் சொந்தம் ஆக்கிக் கொள்பவர்கள். மளிகைச் சாமான்கள் மாதிரி கைச்செலவு பண்ணி வாங்கப்படுவது விருதே அல்ல. பிறர் தாமாக வழங்கினால் "பரிசு'. நாமாகக் கேட்டு வாங்கினால் "சரக்கு'.

அதிலும் ஆஸ்கார் விருது வெறும் மாயை. தம் நாட்டுக் கலைஞர்களுக்கு அமெரிக்க அகாதமி வழங்கும் அங்கீகாரம் நமக்கு ஏன்? அதற்கு ஆலாய்ப் பறப்பவரிடம் ஒரு சொல். ஆஸ்கார் தகுதி பற்றி இன்று மேனாட்டு ஊடகங்களில் இப்போதுதான் சர்ச்சை அடிபடுகிறது. வேறு ஒன்றுமில்லை. அரைகுறையாகவேனும் ஆபாசக் காட்சிகள் இருந்தால் போதும் என்கிறது ஒரு பகுப்பாய்வு.

அமெரிக்காவின் "சலனத் திரைப்படக் கலைகள் மற்றும் அறிவியல் அகாதமி' தணிக்கை வரையறைகள் முன்பு எல்லாம் நெருக்கடி ஆனவை. திறந்த மார்புடன் தோன்றிய நாயகியரை அகாதமி தன் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கவே செய்யாது.

இன்று காலம் மாறிப் போயிற்று. அப்படி எல்லாம் கடினத் தோல் எருதுபோல் வந்து நின்று காட்டினால்தான் விருது. அந்த ஆஸ்காருக்குத்தான் எத்தனை ஆடம்பர விளம்பரங்கள்.

ஜேம்ஸ் காரோனின் "டைட்டானிக்' (1977) தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரின் உழைப்பு என்றாலும், அதில் அந்நாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் அரைகுறை உடையில் அவதரித்தார் நிர்வாண நாயகி கேத் வின்ஸ்லெட். விடாப்பிடியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு "த ரீடர்' (2008) திரைப்படத்திற்கு ஆஸ்கார் வாங்கியே விட்டாராமே!

பால் தாமஸ் ஆண்டர்சனின் "பூக்கி நைட்ஸ்' (கும்தலக்கடி இரவுகள், 1997) நாயகன் பர்ட் ரேனால்ட்ஸிற்கு அகாதமி அங்கீகாரம் வாய்த்தது. இந்தப் படத்தில் பூரண நாயகி நினா ஹார்ட்லி நடித்தது இருக்கட்டும். இன்றைக்கு 52 வயதாகும் ஜூலியன் மூர் தமது 27-ஆம் வயதில் இந்தப் படத்துக்காக ஆஸ்கார் பட்டியலில் ஏறினார் என்றால் வேறு சொல்வானேன்? இவரது தகப்பனார் ராணுவ நீதிபதி. தாயார் உளவியல் நிபுணர். இந்த நடிகையோ சிறந்த குழந்தை எழுத்தாளராமே. நாடு உருப்பட்டால் போலத்தான்.

ஜெனிஃபர் எஸ்பொசித்தா ("கிராஷ்' - முட்டி மோதல், 2004), ஜோபக் ("மிட்நைட் கௌபாய்' - நடுராத்திரி மாடு மேய்ப்போன், 1969), டஸ்டின் ஹாஃப்மானின் காதலி (கிராமர் வி. கிராமர், 1979), கேத் வின்ஸ்லெட் (டைட்டானிக், 1997), மேனா சுவரி மற்றும் தோரா பர்ச் ("அமெரிக்கன் பியூட்டி', 1999), சிமோனத்தா ஸ்டீஃபனல்லி ("த காட்ஃபாதர்', 1972), க்வைனத் பால்த்ரோ ("ஷேக்ஸ்பியர் இன் லவ்', 1998), ஜூலியத் பினோச்சி மற்றும் கிறிஸ்டின் ஸ்காட் தாமஸ் ("த இங்கிலிஷ் பேட்டன்ட்', 1996), எம்பெத் டேவிட்ஸ் மற்றும் மக்தலேனா கோர்மோர்னிக்கா ("ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்', 1993), கிளாரா பௌ ("விங்க்ஸ்', 1927 - 1928) ஆகியோர் ஆஸ்கார் விருதுபெற்ற "டாப் டென்' ஆபாச நாயகியர் என்கிறது மேனாட்டுப் புள்ளிவிவரக் கணிப்பு.

ஆடை இன்றிப் பிறந்தோம் என்பதற்காக ஆடை இன்றி வாழ்வோமோ? இந்தக் கலைஞர்கள் தங்கள் "கட்டணத்தை' உயர்த்துவதற்காக விருதுபெற மல்லுக் கட்டுகிறார்கள். துணிச்சலாக "முதலீடு'ம் செய்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த ஊடக உலகம் ஓர் அரைக்கோளம் மாதிரி. அடிமட்டத்தில் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்துவதே நம் கலைஞர்கள் கவலை. அவர்தம் அறிவு அல்லது கலைநுட்ப மட்டத்தை உயர்த்துவது பற்றிய அக்கறை எல்லாம் கிடையவே கிடையாது.

அடுத்தபடி, சற்றே உயர்ந்த தளத்தில் வயது வரம்பின்றி அறிவார்ந்த அனைவர்க்கும் பாடம் புகட்டும் பழைய "பாமா விஜயம்' போன்ற திரைப்படங்கள். பாமரருக்கும் பயன்தரும் பொது நூல்கள் போன்றவை. இத்தகைய நல்ல திரைப்படங்களுக்குப் பல்லாயிர, லட்சக்கணக்கில் கூட்டம் இராது.

மூன்றாம் உச்ச நிலையில், அறிவியல் புனைகதைப் படங்கள் அறிஞர் தளத்திற்கே உரியவை. ஆவணப் படங்கள் போன்றவை. ஊடகத்தின் அறிவு உச்சத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருக்கும். ஆராய்ச்சி நூல்கள், அறிவுப் பொக்கிஷங்கள் மாதிரியான திரைப்படங்களுக்கு அத்தனை மலிவாகவும் உயர்ந்த விருதுகள் கிடைக்காது அல்லவா?

வெளிநாட்டு உத்திகளுடனும், ஆதரவுடனும் இந்திய மாநிலங்கள்தோறும் அரங்கேறும் விளம்பரங்களும், அலைமோதும் ஊடகங்களும் - யாருக்கு ஊழியம் பார்க்கிறார்கள்? அதனாலேயே அவற்றின் பிரம்ம ரிஷிகளுக்கு அன்னிய நாட்டுத் தனியார் பட்டங்களும், விருதுகளும் வாய்ப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

உள்நாட்டில் நம் தோளோடு ஒட்டி நிற்கும் சக இந்தியர்களின் ஒரு பகுதியினர் மதிப்பையேனும் பெற இயலாதபோது, அயல்நாட்டு அங்கீகாரங்களுக்குக் கண்டம் விட்டுக் கண்டம் தாவுகிறார்கள்.

அம்மா அப்பாக்களை உள்நாட்டில் அகதிகள் ஆக்கி, அயல்நாடுகளில் அடிமை வேலை செய்யும் யோக்கியர்கள் நம்மிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கே சொந்த மண்ணில் வாழும் அண்டை அயலாருக்கு உதவாத அல்லது தெரியாத இலக்கியவாதியையோ, கலைஞனையோ வெளிநாடு போற்றுமாம். அதனால் உலகப் புகழாம்.

"அட கஸ்மாலங்களா, உங்கள் ரசனையை என்ன சொல்ல?' என்றுதான் கேட்கத் தோன்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com