சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர் வாழ்வுக்கும் பாதிப்பில்லாத மரபு-சாரா மின்சக்தியை காற்றாலை மூலம் பெறலாம். மின்வெட்டு நேரத்தைப் போக்கும் அல்லது குறைக்கும் வல்லமையுள்ள காற்றாலை ஆற்றலைத் தமிழ்நாடு சரிவரப் பயன்படுத்தாத விஷயம் ஏனோ வெளிச்சத்துக்கு வருவதில்லை.
மின்வெட்டு நேரம் கூடும்போதெல்லாம் சொல்லப்படும் ஒரு பொய்யான காரணம், ""காற்றாடி சுற்றவில்லை'' என்று மாநில மின்வாரியம் கூறுவதுதான். உண்மை அதுவல்ல. காற்றாலை உற்பத்தி செய்யும் ஆற்றலை மின்சாரமாகக் கடத்தும் "கிரிட்' என்று சொல்லப்படும் மின்கடத்தும் கம்பிகளின் குறைந்த ஆற்றலே நிஜக்காரணம் என்று இந்தியக் காற்றாலை ஆற்றல் சங்கத் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் கூறுகிறார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடன் சுமையால் தத்தளிக்கிறது. இதன் நஷ்டக்கணக்கு 53,000 கோடி ரூபாய் என்பதால் உற்பத்தியாகும் காற்றாலை ஆற்றலை மின்சார சக்தியாகச் சேமிக்கும் கொள்திறன் குறைவாக உள்ளதாம்.
போதிய துணை மின்நிலையங்களோ, மின்மாற்றுத் தடங்களோ இல்லாமல் காற்றாலை ஆற்றல் தமிழ்நாட்டில் வீணாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. காற்றாலைகள் உருவாக்கும் மின்சக்தியை நுகர்வோரிடம் சேர்ப்பிக்கத் தேவையான மின்தடம் இல்லையாம்.
கடந்த ஆண்டில் மட்டும் 350 மில்லியன் வாட்ஸ் - அதாவது மாநிலப் பற்றாக்குறையில் 10 சதவீதம் - கொள்ள இடமில்லாமல் வீணாக்கப்பட்டுள்ளது. அரசுக்கு மட்டுமல்ல, இப்படிக் கொள்முதல் செய்யாததால் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கும் நஷ்டம்.
காற்று வீசியும்கூட உற்பத்தி செய்யப்பட்ட காற்றாலை மின்சாரத்தை வாங்கும் சக்தியில்லாத மின்வாரியம், "காற்று வீசவில்லை' என்று கூறி தப்பித்துக்கொள்ள முயல்கிறது.
பருவகாலத்தில் வேகமாகக் காற்று வீசும்போது காற்றாலை மின்சார உற்பத்தி கூடுதலாக வரும். அப்படி உற்பத்தியாகும் அதிகப்படி காற்றாலை மின்சாரத்தை விற்றுத்தான் காற்றாலைகள் பிழைக்கின்றன. அப்படிப் பிழைக்கும் காற்றாலைகளின் வாயில் மண்ணைப் போட்டால் எப்படி? அவை வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டுள்ள அபாயம் தடுத்து நிறுத்தப்படுமா என்பது புரியவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனங்களான தமிழ்நாடு மின் ஆற்றல் உற்பத்தி வழங்கல் கம்பெனியும் தமிழ்நாடு மின்தடக் கடத்தல் கம்பெனியும் கூறுவது எதுவெனில், ""இந்தியன் எலக்ட்ரிகல் கிரிட் கோட் அறிவுரைப்படிதான் காற்றாலை மின்சாரம் ஆட்கொள்ளப்படுகிறது; ஒரு குறிப்பிட்ட அளவு சமநிலையைத் தாண்டும்போது காற்றாலை ஆற்றலை ஏற்க இயலாது; அப்படி ஏற்றால் கிரிட் இயக்கம் தடைபட்டு வழங்கல் தடைபடும்''.
மரபுசாரா எரிசக்தித் துறையின் கீழ் இயங்கும் காற்றாலை ஆற்றல் தொழில் நுட்ப மையத்தின் சென்னை நிர்வாக இயக்குநர் கோமதிநாயகம் வழங்கும் தகவலின்படி, தமிழ்நாட்டின் மொத்த மின்சக்தி உற்பத்தியில் 30 சதவீதத்தின் பங்கு காற்றாலை மூலம் பெறப்படுவது உலக சாதனை!
உலகிலேயே காற்றாலை ஆற்றலை மின்சாரமாக மாற்றுவதில் முதலிடம் வகிக்கும் டென்மார்க்கில்கூட இந்த அளவு 23 சதவீதமே. அதே சமயம் நாம் இன்னமும் அதிக அளவில் காற்றாலை ஆற்றல்களை மின்சக்தியாக மாற்றிக்கொள்ளும் அளவில் பலமான, அதிக சக்தியும் கொள்திறனையும் கொண்ட கிரிட்டுகளைப் பயன்படுத்தினால் தமிழ்நாட்டில் வீணாகும் காற்றாலை ஆற்றல்களை மின்சாரமாக மாற்றிச் சேமிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
குஜராத்தின் வளர்ச்சியுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்ளும் தமிழ்நாட்டு முதல்வர், இப்படிப் பருவகாலத்தில் வீணாக்கப்படும் காற்றாலை ஆற்றல்களை மின்சாரமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின்தடை நேரத்தைக் குறைக்கலாம் அல்லவா?
இதுமட்டுமல்ல; காற்றாலை மின் உற்பத்தியில் வேறு பல பிரச்னைகளும் உள்ளன. 1993-இல் காற்றாலை நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வருமான வரி மற்றும் உற்பத்தி (எக்சைஸ்) வரிகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. மத்திய அரசு இச் சலுகைகளை நிறுத்தி விட்டதாம்.
இன்று நாட்டிலுள்ள மின்சக்திக்குரிய பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கக்கூடிய காற்றாலை ஆற்றலுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைத் தொடர மத்திய அரசு முன்வருதல் நலம். தவிரவும் 1993-இல் 1 மில்லியன் வாட் உற்பத்தித்திறனுள்ள ஒரு காற்றாலையை அமைக்க 3.5 கோடி ரூபாய் செலவானது.
பணவீக்கம் காரணமாக டர்பைன் போன்ற ஆற்றல் சாதனங்களின் விலைகள் உயர்ந்துவிட்டதால் இன்று 6 கோடியாக உயர்ந்துவிட்டது. மற்றொரு பிரச்னை கிரிட்களுக்கு வழங்கப்பட்ட மின் ஆற்றலுக்கான பணம் வழங்கலில் ஏற்படும் தாமதம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கின்றது.
தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கையாலாகாத நிலைமையை, 2012-13-இல் புதிதாகத் தொடங்கப்பட்ட கூடுதல் காற்றாலை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் காற்று வீச்சு உச்சமாகவும் ஆற்றல் அதிகமிருந்தும் கூடுதல் முதலீடு 700 மில்லியன் வாட்டிலிருந்து 170 மில்லியன் வாட்டுக்குக் குறைந்துவிட்டது. அதேசமயம் மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் காற்றாலை முதலீடுகள் 2012-13-இல் தமிழ்நாட்டைவிட அதிகம்.
இந்தியக் காற்றாலை ஆற்றல் சங்கம் வழங்கும் தகவலின்படி, 2012-13-இல் தமிழ்நாட்டில் இயங்கும் காற்றாலை ஆற்றலை வாங்கிப் பெற்ற வருமானம் 15,065 கோடி ரூபாய்கள். இருப்பினும் காற்றாலை முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தைக் கொடுப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறதாம்.
குஜராத்தில் ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் கிடைக்கும். மகாராஷ்டிரத்திலும் கர்நாடகத்திலும் ஒரு மாதத்தில் கிடைக்கும். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்! ஆனால், முதலீட்டாளர்களுக்கு வழங்கிய காற்றாலை மின்சாரத்துக்கு வரவேண்டிய பணம் வராதாம்.
பணம் தரவில்லையே என்று வழங்கிய மின்சாரத்தைத் திரும்பப்பெற முதலீட்டாளர்கள் விரும்பினால் யூனிட்டுக்கு 95 பைசா கட்ட வேண்டுமாம்.
காற்றாலை முதலீட்டாளர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கும் வழக்கு விசாரணைகள் உள்ளன. மேல்முறையீடுகளை முதலீட்டாளர்கள் செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியம் 2006-இல் யூனிட்டுக்கு ரூ. 2.75 என்று நிர்ணயித்தது. இதை எதிர்த்துப் போராடிய பின்னர் ரூ. 2.90 என்று நிர்ணயமாயிற்று.
தமிழ்நாடு எனர்ஜி ஒழுங்குமுறை கமிஷன் பின்னர் 2.90-லிருந்து ரூ. 3.39-க்கு உயர்த்தி வழங்கினாலும் காற்றாலை முதலீட்டாளர்களுக்கு எதுவும் நியாயம் கிடைத்ததாகத் தெரியவில்லை. காற்றாலை மின்சாரத்தின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டு முதல்வர் நன்கு உணர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது.
இப்போது தமிழ்நாடு மின்சார வாரியம் 400 கிலோ வோல்ட்ஸ் சக்தியுள்ள நான்கு துணை மின் நிலையங்களும் 230 கிலோ வோல்ட்ஸ் சக்தியுள்ள மூன்று துணை மின் நிலையங்களையும் 765 கிலோ வோல்ட்ஸ் சக்தியுள்ள விசைப்பரிமாற்றத் தடமும் உருவாக்கித் திட்டமிட்டுப் பணிகள் நிகழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அனைத்துலக நிதியம் வழங்கும் கிளீன் எனர்ஜி ஃபண்ட் மத்திய அரசிடம் உள்ளது. அதிலிருந்து தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய 4,160 கோடி ரூபாய் வழங்கக் கோரியுள்ளது.
"கிளீன் எனர்ஜி ஃபண்ட்' என்பது "கார்பன் கிரெடிட்'. அதாவது காற்றாலை மின்சாரத்தைப் பசுமை எரிசக்தி என்று மாற்றிக் காற்று மின் ஆலைகளால் கட்டுப்படுத்தக்கூடிய மாசு அளவுதான் "கார்பன் கிரெடிட்'. "இதுவே கிளீன் எனர்ஜி ஃபண்ட்' என்ற கணக்கில் அனைத்துலக நிதியத்தில் வரவாகி மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
இந்தியாவிலேயே அதிகம் காற்று வழங்கும் பகுதி மேற்குத் தொடர்ச்சிமலை இந்து மகா சமுத்திரத்தைத் தொடும் கணவாய்தான். முப்பந்தல் என்று சொல்லப்படும் ஆரல்வாய்மொழிக் கணவாய்ப் பகுதியில் மட்டும் 3,000 காற்றாலைகள் உள்ளன.
ஆசியாவிலேயே மாபெரும் காற்றாலைக்கூட்டம் இதுவே. இதுதவிர கம்பம் கணவாய் அடங்கும் தேனி, செங்கோட்டை தவிர கோவை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் காற்றாலைகள் நிறைய உண்டு.
பூத சக்திகளில் வாயுவின் அருள் தமிழ்நாட்டுக்கு எல்லையில்லாமல் கிட்டுகிறது. ""மனோஜபம் மாருத துல்லிய வேகம்'' என்று ராமாயண காலத்தில் அனுமன் விண்ணில் பறந்து சீதாப்பிராட்டியைப் பார்த்துக் கணையாழியை வழங்க தமிழ்நாட்டு மாருதம் உதவிய ஒளிமயமான வரலாறு இருந்தும், இருட்டு ஏனம்மா?
இருள் விலகித் தமிழ்நாட்டில் ஒளிபெற மனமோகன கிருஷ்ணர் உதவுவாரா? எல்லாம் சிவமயம். "தில்லையம்பலம்' உதவுமா? ஆண்டவனுக்கே வெளிச்சம். மனிதனுக்கு இருள்தானோ? வாழ்க பாரதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.