உலகத்தில் அனைத்து உயிர்களும் அன்புக்காகவும், அமைதிக்காகவும் ஏங்குகின்றன. இதில் யாரும் விதிவிலக்கில்லை. இந்த அன்பையே தாயாகவும், அமைதியையே தந்தையாகவும் உயிர்கள் கொண்டாடுகின்றன. அன்புக்கும், அமைதிக்கும் ஊறு நேரும்போது போராகிறது; போராட்டமாகிறது; புரட்சியாகிறது.
இந்த அன்புக்குதான் எத்தனையோ பெயர்கள்! பாசம், பற்று, மரியாதை, பக்தி, காதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பெற்றோர் குழந்தையிடம் காட்டும் அன்பு பாசமாகவும், தோழர்களிடம் காட்டுவது நட்பாகவும், மகான்களிடமும், ஆசிரியர்களிடமும் கொள்வது மரியாதையாகவும், இறைவனிடம் கொண்டது பக்தியாகவும், தலைவன் தலைவியிடம் கொண்ட அன்பே காதலாகவும் பேசப்படுகிறது.
"அன்பே சிவம்' என்பதும், "லவ் ஈஸ் காட்' என்பதும் ஆன்மிகம் பேசும் மொழிகள். "எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்பது பரந்த அன்பின் வெளிப்பாடாகும். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்று பாடுவது அன்பின் வழிபாடாகும்; கசிந்து கண்ணீர் மல்க வணங்குவதும் அன்பின் பெருக்கேயாகும்.
இந்த அடிப்படையில் ஒவ்வொரு பிப்ரவரி 14 அன்று உலகமெங்கும் "காதலர் தினம்' கொண்டாடப்படுகிறது. அன்பின் பெருக்கே காதல் என்று கூறப்படுவதால் இது உலக உயிர்களுக்கெல்லாம் பொதுவானது. இதில் விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை. யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது உயிர்களின் உரிமை; உணர்ச்சிகளின் சங்கமம்; இதனை யாராலும் தடுத்திட இயலாது என்பது உலகம் அறிந்த உண்மை.
"பொற்காலம்' என்று வரலாறு கூறும் சங்க காலத்தில் தமிழ் மக்கள் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. அவர்களது வாழ்க்கையில் காதலும், வீரமுமே கருப் பொருளாக இருந்தன. இதனை தொல்காப்பியம் அகம், புறம் என வகுத்து இலக்கணம் கூறியது.
ஒத்த அன்புடைய தலைவனும், தலைவியும் உள்ளம் கலந்து ஒன்று கூடி வாழும் வாழ்க்கை அகப்பொருள் என்றும், போர், வீரம், கொடை, வெற்றி முதலியன புறப்பொருள் என்றும் கூறப்பட்டன. அக வாழ்வு வீட்டு இன்பத்துக்கும், புற வாழ்வு நாட்டுச் சிறப்புக்கும் அழகு செய்தன.
""காதலும், போரும் பழைய இலக்கியங்களின் கருத்தாகவும், சமயமும், தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், அறிவியலும் மனிதவியலும் தற்கால இலக்கியங்களின் பிழிவாகவும் அமைந்துள்ளன'' என்று அறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை குறிப்பிடுவதன் மூலம் பண்டைத் தமிழ் மக்கள், காதல் வாழ்வே வாழ்ந்தனர் என்பது புலப்படும்.
இன்று உயர்தனிச் செம்மொழியாகப் போற்றப்படும் தமிழ்மொழிக்குச் சிறப்புச் சேர்க்கும் சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவையும் அகம், புறம் என்றே பகுக்கப்பட்டுள்ளன. சங்கப் பாடல்களின் தொகை 2381 என்று கணக்கிட்டுள்ளனர். அவற்றுள் 1862 பாடல்கள் அகப்பொருள் பற்றியே பாடப்பட்டுள்ளன.
""இச் செய்யுள்களில் காணப்படுவனவாகிய தலைவன் தலைவியரிடையே வளரும் அன்புநிலை, அவர் இல்லறம் நடத்தும் முறை முதலியன உலகியலைச் செம்மைப்படுத்தும் தன்மையன...'' என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் என்னும் "தமிழ்த் தாத்தா' குறுந்தொகை என்னும் எட்டுத்தொகை நூலின் முன்னுரையில் கூறுகிறார்.
ஒரு தலைவி தன் காதலின் அருமையைக் கூறும்போது, ""இந்தப் பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுத்தாலும், நீயே என் கணவனாகவும், நானே உன் காதல் மனைவியாகவும் இருக்க வேண்டும்'' என்று கூறுகிறார்.
""இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர் என் கணவனை
யானா கியர் நின் நெஞ்சு நேர் பவளே!''
என்று கூறும் காதல் தலைவியைக் காட்டுகிறது ஓர் அகப் பாடல்.
சங்க காலத் தமிழர் வாழ்வே அகம், புறம் என்று இரு கூறுகளாக இருந்தது. அகம் என்பது காதல் வாழ்வையும், புறம் என்பது வீர வாழ்வையும் குறிக்கிறது. ஒத்த தலைவனும், தலைவியும் கொண்ட உண்மைக் காதலே "அன்பின் ஐந்திணை' எனப்பட்டது. ஒருதலைக் காதலை கைக்கிளை என்றும், பொருந்தாக் காதலை பெருந்திணை என்றும் இலக்கணம் வரையறுக்கிறது.
இக்காலத்தில் இந்தக் காதலை திரைப்படங்களும், ஊடகங்களும் கொச்சைப்படுத்துகின்றன. வணிக நிறுவனங்கள் இதனை பொருளீட்டும் வழியாகவே போற்றி வளர்க்கின்றன. இக்கால இளைஞர்களும் இதனை ஒரு பொழுதுபோக்காகவும், உடல் இச்சையின் வடிகாலாகவும் கொண்டாடி வருகின்றனர். நாகரிக சமுதாயம் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இரண்டு அன்பு உள்ளங்களின் அந்தரங்கமாக இருக்க வேண்டியது இந்த அகப்பொருள். இதன் பேரால் வீதிகளிலும், விடுதிகளிலும் குடித்துவிட்டு, கூத்தாடுவதை யாரும் வரவேற்க முடியாது. இன்றைய திரைப்படங்களும், தொலைக்காட்சி முதலிய ஊடகங்களும் இந்த எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி இந்த ஆபாசத்தை வளர்க்கின்றன.
தலைநகர் தில்லி முதல் நாடெங்கும் நடைபெறும் பாலியல் வன்முறைகளுக்கு இவையே காரணங்களாகும். இந்தக் காரணங்களைக் கண்டறிந்து அடக்காமல், அவசரச் சட்டம் போடுவதால் பயன் என்ன? எரியும் அடுப்பை அணைக்காமல் பொங்குவதை எப்படி நிறுத்த முடியும்?
தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பக (என்.சி.ஆர்.பி.) புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு 24 ஆயிரத்து 206 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5,724 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு 22,172 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 5,632 பேர் மட்டுமே தண்டனைகள் பெற்றுள்ளனர். 2009 ஆம் ஆண்டு 21,397 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,316 பேர் மட்டுமே தண்டனைகள் பெற்றுள்ளனர். இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகம் நடைபெறும் நகரங்களில் தலைநகர் தில்லி முதல் இடத்திலும், சென்னை நான்காவது இடத்திலும் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல' என்கிறது திருக்குறள். இப்போது காதல் என்று ஊடகங்களில் சித்தரிக்கப்படுபவையெல்லாம் ஒரு மனநோயாளியின் வக்கிரப் பார்வைகள்; "ஐ லவ் யூ' சொல்லச் சொல்லி ஒரு பெண்ணை வழிமறித்து இம்சிப்பதும், உடன்படாத பெண்ணின் முகத்தில் திராவகம் ஊற்றி அவளைச் சிதைப்பதும் காமக் கொடூரனின் கயமைச் செயல் இல்லையா?
கடந்த 2006 ஆம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், இளைஞன் ஒருவனின் காதலை ஏற்கவில்லை என்பதற்காக தில்லி துக்ளக் சாலையில் அப் பெண் மீது மூன்று இளைஞர்கள் திராவகத்தை ஊற்றினர். இதில் அப் பெண்ணுக்கு முகம், கைகள் உள்ளிட்ட பல உறுப்புகள் வெந்து கோரமாகிவிட்டன.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் அப் பெண் தாக்கல் செய்த மனுவில் பெண்ணுக்கு எதிராகத் திராவகத் தாக்குதல் நிகழ்வுகள் பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால் திராவக விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க சிறிய நாடான வங்கதேசத்தில் கூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அவரது இந்த யோசனையை பாராட்டிய உச்ச நீதிமன்றம், திராவக விற்பனையை நெறிப்படுத்துமாறும், பெண்களுக்கு எதிரான ஆயுதமாக திராவகம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மத்திய அரசுக்கு 2012 ஜூலை 2 அன்று உத்தரவிட்டது.
அத்துடன் இதுபோன்ற அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்து தகுந்த திட்டத்தை வகுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
இந்த உத்தரவுகள் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 6 அன்று அதிருப்தி வெளியிட்டது. அத்துடன் இதுபற்றி மத்திய அரசு மெத்தனமாக நடந்து கொள்ளுவதற்குக் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
""தேசிய தலைநகர் தில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகிறது. காவல் துறையினரை தில்லி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை. தில்லியில் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது...'' என்று பேசியிருப்பது அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சித். பெண்கள் வேறு யாரிடம் சென்று பாதுகாப்பு கேட்க முடியும்?
கடந்த நவம்பர் 7 அன்று தருமபுரி மாவட்டத்தில் இரண்டு பேர் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக, மூன்று ஊர்கள் எரியூட்டப்பட்டன. ஒரு தலைமுறை சேர்த்து வைத்திருந்த சொத்துகள் எல்லாம் சூறையாடப்பட்டன. இப்போது ஊரே இரண்டுபட்டுக் கிடக்கிறது. வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. அரசின் நிவாரணம் வந்து பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைத் துடைத்து விடுமா?
"காதல் தினம்' ஏன் கொண்டாடப்படுகிறது? வாலண்டைன் என்பவர் ரோமில் வாழ்ந்த மதபோதகர். அப்போதைய அரசனாகிய இரண்டாவது கிளாடியஸ், திருமணம் ஆகாதவர்களே போரில் திறம்பட பணியாற்ற வல்லவர்கள் என்று கருதி இளைஞர்கள் எல்லாம் திருமணம் செய்வதற்குத் தடை விதித்தான்.
இது கண்டு மதபோதகர் வாலண்டைன் கொதித்தெழுந்தார். மன்னனின் ஆணையைப் புறக்கணித்துவிட்டு இளைஞர்களுக்கு இரகசியத் திருமணங்கள் நடத்தி வைத்தார். இதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு தியாகத் திருநாளை கேளிக்கை தினமாக மாற்றிவிடலாமா? மது போதையிலே ஆடுகிற ஆட்டங்கள் காதலை வளர்க்குமா? எல்லா நல்ல நோக்கங்களும் இந்த அறிவியல் யுகத்தில் கொச்சைப்படுத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை.
திரைப்படங்களிலும், தொலைக்காட்சி முதலிய தகவல் ஊடகங்களிலும் காதலைக் கைதட்டி வரவேற்கிற நம் சமுதாயம், அதுவே தங்கள் வீடுகளில் வந்துவிட்டால் "குய்யோ, முறையோ' என்று கூப்பாடு போடுகின்றன. இந்த இரட்டை நிலை எப்படி வந்தது? காதல் என்ற பெயரால் நடக்கும் கூத்துகளும், ஆபாச ஆட்டங்களும், அத்துடன் சாதி சமயங்களுக்கு ஏற்படுகிற சங்கடங்களும் உண்மையான காதலர்களையும் ஓரம் கட்டுகிறது.
சமூக மாற்றத்தை விரும்புகிறவர்கள் இதில் விழிப்புடன் இருக்க வேண்டும்; பொய்யர்களையும், போலிகளையும் புறம் தள்ள வேண்டும். வெளிச்சம் தரும் விளக்கினால் வீட்டை எரிப்பதா? வீட்டை எரிக்காத விளக்குகளாய் விளங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.