மனிதர்களைத் தேடுவோம்!

நாட்டு நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்டவர்கள் இப்போது கவலைப்பட
Updated on
3 min read

நாட்டு நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்டவர்கள் இப்போது கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். சத்தியம், அகிம்சை, நாகரிகம், பண்பாடு என்னும் இந்த வார்த்தைகள் பொருளற்றுப் போய் விட்டனவா? இவற்றைப் பற்றியே கவலைப்படாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறதா? நாடு இப்படியே போய்க் கொண்டிருந்தால் எதிர்காலம் என்ன ஆகும்?

இந்த பூமி எவ்வளவு பழமையானதோ அந்த அளவுக்குக் கடலும், மலைகளும் பழமையானவை. மக்களின் நாகரிகமும், பண்பாடும் கூட அப்படித்தான். இவற்றைப் பழமையானவை என்று ஒதுக்கலாமா? இது ஒரு சமுதாய முன்னேற்றத்தின் அடையாளமா, சமுதாயச் சீர்கேட்டின் அறிகுறியா?

இந்தியாவின் தலைநகரம் தில்லியில் கடந்த டிசம்பர் 16 அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஊசலாடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிகழ்வு நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த மாணவிக்கு நீதி கேட்டு மாணவர் சமுதாயமும், மகளிர் அமைப்புகளும் தலைநகரில் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அவசரம், அவசரமாக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தியாவுக்கே திரும்பக் கொண்டுவந்து ரகசியமாக இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தை தில்லி அரசும், காவல் துறையும் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.

இவ்வளவுக்கும் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் மெüனத்தைக் கலைத்துத் திருவாய் மலர்ந்துள்ளார். ""ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் வெறுக்கத்தக்க செயல்; இந்தச் சம்பவம் உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் பாதித்தது போலவே, மூன்று மகள்களைப் பெற்றுள்ள என் மனதையும் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது சார்பிலும், என் குடும்பத்தினர் சார்பிலும் கவலையை தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தில்லி மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான குழு, பணியைத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாலியல் வன்கொடுமை குறித்துச் செய்ய வேண்டிய சட்டத்திருத்தம், நடவடிக்கைகள் பற்றி மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க குழு வேண்டியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கு, ஜனவரி 4 அன்று மாநிலத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாகப் பாலியல் குற்றங்களைத் தடுப்பது, விசாரணையை விரைவுபடுத்துவது உள்ளிட்டவை பற்றி இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறை மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி உஷா மெஹ்ரா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகரில் நிகழ்ந்ததினாலும் செய்தி ஊடகங்கள் இதில் தீவிரம் காட்டியதாலும் இந்தச் சம்பவம் விரைவில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. நாடு முழுவதும் நாள்தோறும் நிகழும் இத்தகைய சோக நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுகின்றன. குடும்ப அவமானம் கருதி, பாதிக்கப்பட்டவர்களே வெளியில் வந்து வெளியிட மறுத்து விடுகின்றனர்.

அப்படியும் துணிந்து வருகிறவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளுக்கு அளவேயில்லை. காவல்துறையும், நீதித் துறையும் அவர்களை அலைக்கழித்து "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்' நிலையை உருவாக்கி விடுகின்றன.

பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு, வயதான முதியவரையும், மூதாட்டியையும் கொலை செய்யும் நிகழ்ச்சிகளுக்குக் குறைவில்லை. முதியவர்களை "பெரிசு' என்று கேலி பேசும், பொது இடங்களில் அவர்களுக்கான இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு "குத்தாட்டம்' போடும் இளைஞர்களை என்னென்பது?

இளம் வயதிலேயே போதைப் பொருள்களுக்கு அடிமையாவதும், மேலைநாட்டு போகங்களுக்குத் தம்மையே விற்றுக் கொள்வதும் நாகரிக நடைமுறையாகிவிட்டன.

ஒரு பெண் தன்னைக் காதலிக்கவில்லை என்பதற்காக அவள் முகத்தில் திராவகத்தை ஊற்றிய அதிசயக் "காதலன்', அவள் தன்னை விரும்பவில்லை என்பதற்காக அவளைக் கத்தியால் குத்திய மனநோயாளி, ஒழுங்காகப் படிக்கச் சொன்ன ஆசிரியையே வகுப்பறையில் குத்திக் கொன்ற மாணவன், இவர்கள் எல்லாம் சமுதாயச் சீர்கேட்டின் அடையாளங்கள்.

கல்விக் கூடங்கள் என்பவை ஒழுக்கமும், பண்பாடும் கற்றுக் கொடுக்கும் அறிவாலயங்கள். அந்தக் கல்லூரிகளில் கல்வி பயில வரும் புதிய மாணவர்களைக் கேலி செய்வதும், நிர்வாணப்படுத்தி ஆட வைப்பதும், அந்த அவமானத்தைத் தாங்க முடியாத சிலர் படிப்பையே துறந்து போவதும், மற்றும் சிலர் தற்கொலைவரை துணிந்து போவதும் அறியும்போது வருத்தமும், கோபமும் மாறி மாறி வருகின்றன.

மக்களுக்குத் தேவையான கல்வியைத் தனியாருக்கு விட்டுவிட்டு, மக்களுக்குத் தேவையில்லாத மதுக் கடைகளைத் திறந்து வைப்பது ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்துக்கு அழகாகுமா? பல்வேறு குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக இருப்பதுவும் இதுவே. "குடி குடியைக் கெடுக்கும்' என்று எழுதி வைத்துவிட்டு குடிக்கச் செய்து, அரசாங்கக் கருவூலத்தை நிரப்பிக் கொள்வது பாவச் செயல் இல்லையா?

நாட்டில் உயிர்கள் வாழ்வதற்கு உணவே தேவை. அந்த உணவு உற்பத்திக்காக விவசாயம் செய்துவிட்டு, கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளுவது சமுதாயச் சீர்கேட்டின் உச்சமாகும்; ஒரு நாகரிகச் சமுதாயத்துக்குத் தலைகுனிவாகும்.

இந்திய விஞ்ஞானிகளின் ஏவுகணைகளோடு, ஏழை மக்களுக்கான விலைவாசிகள் போட்டி போடுகின்றன. கேட்டால் திட்டங்கள் எல்லாம் அவர்களுக்காகத்தான் போடப்படுகின்றனவாம்; அவர்களைக் கேட்டுதான் போடப்படுகின்றனவாம். உயிர் வாழும் மருந்துகளில் கலப்படம், குழந்தைகள் குடிக்கும் பாலில் கலப்படம், குடிக்கும் குடிநீரில் கலப்படம் என இவர்களுக்கு இதயமே இல்லாமல் போனது எப்படி?

இயற்கை இலவசமாகத் தந்த இணையற்ற செல்வங்கள் கொள்ளைபோய்க் கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் சில மலைகளையே காணவில்லை; விலை போய்விட்டன. மணல் கொள்ளை, காடுகள் அழிப்பு, தோல் மற்றும் சாயக் கழிவுகளால் ஆறுகளைச் சாக்கடையாக்குதல் ஆகிய சமூக விரோதச் செயல்களைச் சட்டங்களால் தடுக்க முடியாமல் போனது ஏன்?

லஞ்சமும், ஊழலும் புரையோடிப்போன நாட்டில் காவல் துறையால் இந்தச் சீர்கேடுகளுக்குத் தீர்வு காண முடியுமா? ஆளும் அரசாங்கமே நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு திரைமறைவில் விலை பேசுகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஓர் அன்னிய வணிக நிறுவனம், இந்தியாவில் இடம் பிடிப்பதற்காக ரூ.125 கோடி செலவழித்ததாக வெளிப்படையாகக் கணக்கு காட்டுகிறது. மேலும் 15 அமெரிக்க நிறுவனங்கள் பணப் பரிமாற்றம் நடத்தியதாக அறிக்கைகள் அளிக்கின்றன.

அன்று ஒரு "கிழக்கிந்திய கம்பெனி' வந்து நமது நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தியது. இன்று ஏராளமான அன்னியக் கம்பெனிகளை அரசாங்கமே அறைகூவி அழைக்கிறது. இதன் விளைவுகளை நாளைய தலைமுறை எதிர்கொள்ள வேண்டும.

""உண்மையான நாகரிகம் என்பது நம்முடைய தேவைகளைப் பெருக்கிக் கொண்டு போவதில் இல்லை. அவைகளைச் சுருக்கிக் கொண்டு மற்றவர்களுக்குச் சேவை செய்வதே'' என்றார் காந்தியடிகள்.

நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்பட்ட கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில், பட்டப்பகலில் கையில் விளக்குடன் அறிஞர் டயோ டனிஸ் தேடிக் கொண்டிருந்தார். என்ன தேடுகிறீர்கள் என்று அவரைக் கேட்டபோது, அவர் அமைதியாக, ""மனிதனைத் தேடுகிறேன்'' என்றார். இது ஒரு வரலாற்றுப் பாடம். மனித நேயமும், பண்பாடும் தேய்ந்து போனபோது அவர் கூறிய வார்த்தைகள் இவை. இப்போது நமது நாட்டுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

நாமும் தேடுவோம்; இந்தியர்களைத் தேடினால் மொழிவாரியாகப் பிரிந்து கிடக்கிறார்கள்; தமிழர்களைத் தேடினால் சாதிவாரியாகப் பிரிந்து கிடக்கிறார்கள். எனவே நாம் "மனிதர்களை'த் தேடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com