இன்றைய ஆட்சியாளர்களில் 260 உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளனவாம். மரபணு சோதனை வழி அவை நிரூபிக்கப்படும் வரை அந்த மகாத்மாக்களுக்கு மலர்க்கொத்து மரியாதை செய்யலாம். அவர்களில் ஆளும் கட்சியும் (26) பிரதான எதிர்க்கட்சியும் (24) முன்னணியில் இருக்கின்றன. அதிலும் இரண்டு முக்கிய சமாஜ் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு 18 மற்றும் 16 வீதம் கற்பழிப்பு ஆசாமிகளை வேட்பாளர்கள் ஆக்கி வேட்கை தணித்துக்கொண்டன.
மாநிலம் வாரியாகக் கவனித்தால் "உண்மையான சிவாஜி' வாழ்ந்த மகாராஷ்டிரத்துக்குப் பாலியல் வீம்பில் முதல் இடம். அந்த காம வேட்பாளர்கள் 41 பேர். பலாத்கார வழக்குகளின் வில்லன்கள். உத்தரப் பிரதேசமும் (37), மேற்கு வங்கமும் (22) அவரவர் தகுதிக்கு ஏற்ப இரண்டாம், மூன்றாம் இடங்கள் வகிக்கின்றன.
எப்படியோ, பாலியல் வன்முறையாளர்கள் பலரும் அரசியல் திமிர் பிடித்தவர்கள். சம்பந்தப்பட்ட பெண் இறந்தால் "ஆழ்ந்த இரங்கல்' தெரிவிக்கும் இயந்திரங்கள் அல்லவா?
"ஜன லோக் பாலு'க்குப் போராடிக் களைத்தோம். இனி "பெண் பால்' ஜனங்களுக்கு வழக்கம்போலப் போராடுவோம்.
இதற்குக் காவல் துறையைச் சொல்லியும் குற்றம் இல்லை. காவலர்கள் அரசியலாரின் ஏவலர்கள்தாம். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமான மகாராஷ்டிரத்தில் காவல் துறைப் பணியாளர்கள் எண்ணிக்கை நாட்டிலேயே மிக உச்சம். ஏறத்தாழ 1,63,181 பேர். அதிலும் மும்பையில் மட்டும் ஏறத்தாழ 47,000 பேர். அவர்களில் 5,000 பேர் பெரும்பாலும் விடுப்பில்தானாம். மிச்சம் இருப்பவர்களில் 30,000 பேர் ஆட்சியாளர்களைக் கைது ஆகாமல் பாதுகாக்கும் அருஞ்சேவகர்கள். எஞ்சிய வெறும் 12,000 பேர் மட்டுமே மக்களின் காவல் தெய்வங்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
சொல்லப்போனால், மும்பை மாநகரில் மொத்தம் 2,250 அரசியல்வாதிகள். ஒருவருக்கு சராசரியாக 12 பாதுகாவலர்கள். சாதாரணக் குடிமக்களில் 1,200 பேருக்கு ஒரு காவல் பணியாளர். இது இந்திய அளவில் சராசரி 780 பேருக்கு ஒரு போலீஸ் என்ற கணக்கிலும் பாதி தான். இந்த வகையில், தனி ஒருவனைவிட அரசியல்வாதி உயிர் 15,000 மடங்கு உசத்தி என்று ஆகிறது. நாம் எவ்வளவு கேவலம் ஆனவர்கள் பாருங்கள்! பிறகு என்ன, இவர்களுக்கு "சர்வதேச இரும்பு மனிதர்' பட்டம் தகும். இதயமும் அல்லவா இரும்பு?
தேர்தல்தோறும் தலைக்கு 500 ரூபாய் வாக்காளர் கட்டணம் செலுத்தி, மக்கள் தலையிலேயே அரியணை மஞ்சம் போடுவது சாமர்த்தியமா, சாணக்கியமா?
ஆட்சிமன்ற அங்கத்தினர் ஒருவரோ, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரை விமர்சிக்கிறார். "நெளிசல் தட்டிப் பெயிண்ட் அடித்த' மேனி மினுக்கிகளாம். "இவர் தந்தை என் நோற்றான் கொல்' என்கிறீர்களா? இந்த அருமந்த புத்திரரின் தகப்பனாரைத் தானே "முதல் குடிமகனார்' ஆக்கித் துதிக்கிறோம். அதுவும் மறந்து போயிற்றா?
பெண் தலைமை ஆட்சியில், முன்னாள் முதல் குடிமகளோ, பாலியல் தீவிரவாதிகள் மீது இரக்கப்பட்டு 5 பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தாராமே, அவர்தம் கருணையே கருணை!
பஞ்சாபில் பாலியல் கொடுமை என்றால், "அது பெண்கள் தாங்களே தேடிச்சென்று கற்பை இழக்கிறார்கள்' என்கிறார் இன்னொரு அரசியல் விவேகி.
"நீ குழல்' இணையத்தின் (அதுதான் "யூ ட்யூப்') திரையில் சல்லாப அசிங்கமாக நின்றவர், ஆறு மாத காலம் தலைமறைவான "மொழுக்கைத் தலைவருக்கு' 23 வயதுப் பெண் பாலியல் வன்மரணம் பற்றிப் பேச என்ன அருகதையோ? கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல், சின்னத்திரையில் தோன்றி வாதாடுகிறார்.
இப்படியே பாலியல் வன்கொடுமை பற்றியே புலம்பத் தேவை இல்லைதான். அறிவியல் ஆராய்ச்சியில் உயிர்நீத்த தியாக வீராங்கனைகளையும் போற்றுவோமே.
பொலோனியம், ரேடியம் ஆகிய புதிய தனிமங்களைக் கண்டுபிடித்த கியூரி அம்மையாரை சர்வதேச வேதியியல் ஆண்டில் (2011) அறியாதவர் இல்லை. இயற்பியலிலும், வேதியியலிலும் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி.
உள்ளபடியே, அந்த முதல் நோபல் பெண் விஞ்ஞானிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வேறுமாதிரி. 1911-ஆம் ஆண்டு பிரெஞ்சு அறிவியல் அகாதெமியில் காலியான ஒரே ஓர் இடத்துக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. நிறுவன அதிபர் எம். அமாகாத் என்பவர், "பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது' என்று பகிரங்கமாகவே அறிவித்தாராமே!
போட்டி வேட்பாளர் எட்வர்டு பிரான்லி ஒரு கத்தோலிக்கர். மேரி கியூரியோ கத்தோலிக்கருக்கு எதிரான யூதப் பெண்மணி ஆயிற்றே? அப்புறம் என்ன, மதம் நுழைந்த அரசியல் கதைதான். கியூரி 2 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆயினும் மேரி கியூரி தன் அறிவியல் ஆய்வுகளைக் கைவிடவில்லை.
முதல் உலகப் பெரும்போரில் கதிர்வீச்சியல் மருத்துவத் துறையின் தலைவியாக செஞ்சிலுவைச் சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். அவர்தம் போர் முகாம் அனுபவங்களை "கதிர்வீச்சியலும் கியூரியும்' என்கிற நூலாக எழுதினார். கதிரியக்கப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சியில் 67-ஆம் வயதில் புற்றுநோயால் காலமானார். இயற்பியல் தியாகி.
ஏதாயினும், கதிரியக்கத் தனிம இனங்கள் (ஐசோடோப்புகள்) இன்றைக்கு மருத்துவ ஆராய்ச்சியில் ஒளி விளக்கு ஏற்றவும் உதவுகின்றன. தைராய்டு நோய் கண்டு அறிய அயோடின் - 125, இதயக் கோளாறுகளைப் படம்பிடிக்க தால்லியம்-201, ருபிடியம்-82 ஆகிய ஐசோடோப்புகள் உண்டே.
கடந்த இருபது ஆண்டுகளாக பல்லேடியம் - 103 மற்றும் இரிடியம் - 192 ஆகியவை புற்றுநோய் கண்டு அறிவதில் கையாளப்பட்டு வருகின்றது. பீற்றாக் கதிர் பாய்ச்சும் யிட்ரியம் - 90 என்னும் ஐசோடோப்பு புற்று செல்களில் நேரடியாக ஒட்டிக்கொண்டு மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுகிறது.
நோபல் பரிசு வரலாற்றில் மேரி கியூரிக்குப் பிறகு ஏறத்தாழ 24 ஆண்டுகள் இடைவெளியில் 1935-ஆம் ஆண்டு அவரது மூத்த மகள் ஐரீன் ஜோலியத் கியூரிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பெற்றது. அவரும் செயற்கைக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுகளில் முழு நேரமும் ஈடுபட்டதால் ரத்தசோகை நோயினால் பீடிக்கப்பட்டார். அதுமட்டுமா?
1946-ஆம் ஆண்டு ஒருமுறை தனது பரிசோதனைச் சாலையில் திடீரென்று ஓர் விபத்து. "பொலோனியம்' சிமிழ் வெடித்தது. கதிர்வீச்சு அவரைப் பலமாகத் தாக்கியது. ஒரு சில சீழ்முறி மருந்துகளின் உதவியால் நோய்க் கொடூரம் ஒருவாறு கட்டுப்படுத்தப்பட்டது.
ஆயினும், 59-ஆம் வயதில் தனது அன்னையாரைப் போலவே ரத்தப் புற்று நோயால் காலமானார். வேதியியல் தியாகி. முதலாம் உலகப் போரின்போது தம் நாட்டு வீரர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தவர். உள்காயங்களைக் கண்டறிவதில் எக்ஸ் - கதிர்வீச்சு உபகரணங்கள் அவருக்குக் கைகொடுத்தன.
ஆனால், எக்ஸ் - கதிர்வீச்சுக்கு ஆளாகி, உயிர் இழந்த தியாகப் பெண்மணி பற்றிப் பலருக்கும் தெரியாது. எலிசபெத் ஆஷ்சீம் ஓர் அமெரிக்கர். கணவர் ஊல்ஃப் ஒரு மருத்துவர். அவரது ஆய்வுகளில் ஒத்துழைப்பதற்காகவே தமது புத்தக வணிகத்தைக் கைவிட்டவர் எலிசபெத். சான் ஃபிரான்சிஸ்கோவில் முதலாவது எக்ஸ் கதிர் ஆய்வுக் கூடத்தைத் தொடங்கினார். அன்றைக்கு எல்லாம் கதிர்வீச்சு குறித்த விழிப்புணர்வு கிடையாதே. அதனால் பாவம், புற்றுநோய்க்கு ஆளாகி இறந்தார். மருத்துவத் துறைத் தியாகி.
அவ்வாறே விண்வெளித் தியாகிகளில் இந்தியவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவுக்கு நினைவாஞ்சலி செய்வோம். சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னம் 2003 பிப்ரவரி முதல் தேதி "கொலம்பியா' விண்வெளி ஓடத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது.
ஆனாலும் 1986 ஜனவரி 28 அன்று விண்ணில் கிளம்பிய சில நொடிகளில் "சாலஞ்சர்' விண்வெளி ஓடம் நடுவானில் வெடித்துச் சிதறியதையும் சிலர் மறந்து இருக்க முடியாது. அதில் பள்ளி ஆசிரியை கிறிஸ்டா மக் ஆலிஃப், அமெரிக்க இரண்டாவது விண்வெளி வீராங்கனை ஜூடித் ஏ.ரஸ்னிக் ஆகியோர் உள்பட ஏழுபேர் இறந்த சோகம், இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.
அறிவியல் விபத்துகளில் தியாகம் செய்த வீராங்கனைகள் இருக்கட்டும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாலியல் பலாத்கார வழக்குகள் பன்மடங்காக உயர்ந்துள்ளன. வலுவான சட்டங்களும்தாம் என்ன செய்யும்? அவையும் பழுதாகிவிட்டனவே.
தமிழகத்தில் 1992-ஆம் ஆண்டு தர்மபுரியில் தினவெடுத்த 269 பேரில் தலித் பாஞ்சாலிகளைத் துகில் உரித்த திருதராஷ்டிர புத்திரர்கள் 17 பேர். பலரும் வனத் துறை உத்தமர்கள், காவல்துறை அண்ணல்கள், வருவாய் ஆய்வாளர் பெருமக்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது என்னவோ வாஸ்தவம். அவர்களில் சிறை செல்ல வேண்டிய 54 பேரைக் காணோம். சிதையில் அஸ்தியாகிப் போனவர்களைக் காற்றில்தான் தேட வேண்டும்.
வயதுக்கு வந்துவிட்டால் உடன்பிறந்த சகோதரியைக் கூடத் தொட்டுப் பேச அனுமதிக்காத குடும்பப் பாங்கு இன்று மங்கிற்று. ஐரோப்பியக் கல்வியோடு, கலவியையும் இறக்குமதி செய்து மரத்துப் போனோம்.
சுயநலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக ஆடவர்களை மிரட்டி வாழும் சின்னத்திரை ரசிகைகளால் கலாசாரம் உயருமோ?
காப்பி குடிப்பது முதல் கக்கூஸ் கழுவுவது வரை அனைத்து விளம்பரங்களிலும் மகளிர் அணியைக் காட்டுகிறார்கள்.
குற்றம் செய்தவனோடு, குற்றம் செய்யத் தூண்டியவருக்கும் தண்டனை என்கிற அச்சம் பரவ வேண்டும். இந்திய நற்சிந்தனைகள் மேனாட்டார் போற்றும் வகை செய்தல் வேண்டும். அன்றி, அன்னியர் தொழில்நுட்பத்தில் அவர்களைப் போலவே நடித்து, அடித்து உதைப்பதை அவர்களுக்கே திருப்பிப் போட்டு "விஸ்வரூபம்' காட்டுவதால் என்ன உலகப் புகழோ?
நவீன நாயகியரோ உள்நாட்டைக் குட்டைப் புழுதி ஆக்கி ஆயிற்று. வெளிநாட்டு தமிழர்களையும் விட்டால்தானே. உலகு உவப்ப எங்கும் உள்ளாடை தெரிய, புறம் காட்டி ஆடுகிறார்களே. அந்த நடன சிகாமணிகளின் நிஜக்கால் குதிரை ஆட்டத்தை மகளிர் உரிமைக் குழுக்களும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அத்தகைய திரைப்படங்களின் இயக்குநர், தயாரிப்பாளர், வெளியீட்டாளர், தணிக்கைச் சான்றில் கையெழுத்து இட்ட "கலைத் தொண்டர்கள்' அனைவர்தம் வீடுகளின் முன் மெழுகுவர்த்தி தர்ணா எந்நாளோ? அவர்களில் பலரையும் பாலியல் வன்தூண்டல் குற்றத்திற்கு உடந்தை என்றேனும் தண்டிக்கலாம்.
சமுதாயத்தில் குற்றங்களைப் பதியம் இடும் ஆணி வேர்களை அறுக்காமல் ஆடும் விழுதுகளை நறுக்கி என்ன பலன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.