அறிவியலுக்கே என்றும் வந்தனை செய்வோம்...

ஆற அமர்ந்தபடி நிதானமாகச் சிந்தித்து எழுதிக்கொண்டு இருந்தவரை எழுந்து நிற்க வைத்தோம். சிலைக்குத் தூசு தட்டுவதில் போட்டி இருக்கட்டும்.
Updated on
4 min read

ஆற அமர்ந்தபடி நிதானமாகச் சிந்தித்து எழுதிக்கொண்டு இருந்தவரை எழுந்து நிற்க வைத்தோம். சிலைக்குத் தூசு தட்டுவதில் போட்டி இருக்கட்டும். யாரேனும் அவர் வாய்மொழியைக் கசடறக் கற்று, அதற்குத் தக நடக்கிறோமா? அவர்தம் கல்வெட்டில் பொறித்த கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், புறங்கூறாமை, பிறனில் விழையாமை, வெருவந்த செய்யாமை என்று எந்த ஆமையையாவது பின்பற்றுகிறோமா? முப்பாலில் முதல் பால் நமக்கு ஒரு பொருட்டு இல்லை. பொருளும் இன்பமும் மட்டுமே நாடுகிறோம். எந்த அறத்தையாவது திருவள்ளுவர் தினத்தின் சபதமாக ஏற்று வாழ்கிறோமா?

இனியேனும் அறிவியல்தான் அறம் என்று உணர்த்துவோம். அறிவியல் சிந்தனையை தேச பக்தியாக மலரச் செய்வோம். பாருங்களேன், நாட்டின் வடக்கு எல்லையில் இந்திய ராணுவ வீரரைக் கொன்று தலையை வெட்டி எடுத்துச்சென்ற அண்டை நாட்டார் கொடூரம் ஒரு பக்கம். உள்நாட்டில் இங்கே ஒரு பிரபல இசை மேதை, இளைஞர்களைத் திரட்டி தாய்நாட்டுப் பாடல்களையோ, அன்னைத் தமிழ் இசையையோ மீட்டுவார் என்று பார்த்தால் ""வாய்ப் புண்ணே மணக்கும்'' என்று முழங்குகிறார். இதற்கு ஏன் இந்தக் கூப்பாடு?

இதற்கு மத்தியில் சோம்பலாக இருக்கும்போது அவ்வப்போது அரசியல் "புலிகள்' நட்சத்திர ஓட்டல்களிலும் சர்வதேச மேடைகளிலும் உலா வரும், போகும்.

கடந்த நூற்றாண்டில் புலிகள் குறித்த ஆய்வு செய்த விஞ்ஞானி ஒருவர் தண்டிக்கப்பட்டார் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். இது அரசியல் அல்ல. நாம் சொல்ல வந்தது நாலு கால் புலி இனம் பற்றியது. புலியின் உடம்பில் வரிகள் தோன்ற என்ன காரணம் என்பதே அந்த அப்பாவியின் ஆராய்ச்சி.

ஆலன் ரூரிங் என்னும் அந்த ஆங்கிலக் கணினியாளர் 1952-ஆம் ஆண்டு "அமைப்பு உருத்தோற்றத்தின் வேதியியல் ஆதாரம்' என்ற நூலை வெளியிட்டார். கணித உயிரியல் துறை ஆவணம் அது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானிய நாஜிப் படையின் கணினி அந்தரங்கத்தைத் தோலுரித்த அறிவாளி. நிஜப் புலிகளின் மஞ்சள் தோலில் கருப்பு வரிகளையும் உரித்துப் பார்த்தார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? கணினியியலில் மட்டுமா, வேதியியலிலும் புலிதான்.

ரெஜினால்டு இன்னஸ் போக்கோக் என்னும் பிரிட்டிஷ் விஞ்ஞானி இந்த இனத்துக்கு "பாந்தேரா' என்று பெயர் சூட்டினார். வழக்கம்போல கிரேக்கம், லத்தீன், தொல் பிரெஞ்சு மொழிகளில் இந்தச் சொல்லுக்கு மஞ்சள் என்று பொருள். "பாண்டாரா' என்றாலும் வெண் மஞ்சள் என்றுதான் அர்த்தம். பாண்டாக் கரடி என்றால் வெள்ளைக் கரடி. "பாண்டிய' - "பாண்டு பிடித்த' என்ற சொற்களுக்கு இடையே மொழியியலார் உறவு கண்டுபிடிக்கலாம்.

ஒரு ரகசியத்தையும் சொல்லிவிடுகிறேன். துருவப் பிரதேசங்களில் வாழும் வெள்ளை நிறப் பாண்டாக் கரடியின் அடித்தோல் கருப்பு. மெலானின் என்ற வேதிமம் செறிந்தது.

உள்ளபடியே கார்ல் லின்னேயுஸ் என்ற சுவீடன் தாவரவியலார் 1758 ஆம் ஆண்டு புலி இனத்திற்கு வைத்த அறிவியல் பெயர் கூட "ஃபெலிஸ் டைகிரிஸ்' (புலி டைகர்) தானே. ஒரு வகையில் இது "கேட் வாசல்', "நடு சென்டர்' மாதிரியான இருமொழிச் சொல் என்றும் கருதலாம். அந்தச் சொல் ஆராய்ச்சி கிடக்கட்டும்.

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து உடம்பைக் காத்து அருள்வது இந்த மெலானின்தான். வெயில்பட்ட புறத்தோலில் மெலானின் உற்பத்தி பெருகுவதால் தோல் கறுத்துவிடும். அதனால்தான் வெப்பப் பிராந்திய உழைப்பாளி மக்கள் இந்தியக் கருப்பு. சூரிய பகவானுக்கு ஸ்டுடியோ செட்டுக்குள் பொங்கல் படைக்கும் சொகுசுப் பேர்வழிகள் அமெரிக்க வெளுப்பு.

அதனால் மெலானின் குறைந்த மேனாட்டு வெள்ளையர்கள் சூரியக் குளியல் என்ற பட்டப் பகலில் சுட்ட வெயிலில் ஜட்டியுடன் மல்லாந்து கிடக்கிறார்கள். அதிலும் நேரடி புற ஊதா கதிர்களாலும் ஆபத்து என்பதால் உடம்பில் ஒருவித எண்ணெய்த் தடுப்பும் பூசிக்கொள்கிறார்கள். நாம் அந்த வெண்தோல் மேனிக்காக எத்தனை ஏங்குகிறோம். விளம்பரங்கள் பார்த்துக் கண்டதையும் வாங்குகிறோம்.

அதிலும் மனிதத் தோல் ஒவ்வொரு கணமும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. குளிக்காத உடம்பில் திரளும் மெலானின் பழந்தோல்தான் அழுக்கு. இதைத்தான் வாசனை சோப்புகளால் அங்கணக் குழியில் பத்துப் பாத்திரம் மாதிரி தேய்த்துக் கழுவுகிறோம்.

சரி, புலிகள் சங்கதிக்கு வருவோம். அவை பொதுவாக, பதுங்கித்தான் வாழும் அல்லது பாயும். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் பகலிலும் அடர்ந்து உயர்ந்த புல் புதர்களில் மறைந்து வாழ்ந்தன. பிறகு என்ன, உடம்பில் வெயில்பட்ட இடங்களில் மெலானின் செறிந்ததால் கருப்பு வரிகள் மேலிட்டன. இத்தகைய படிமங்கள் கால வட்டத்தில் அவற்றின் மரபணுவிலும் பதிவாகிவிட்டன. பரிணாம வளர்ச்சி என்பது சார்லஸ் டார்வினின் புற ஆதாரங்களைத் தாண்டி மரபணு அளவுக்கு நுட்பமாகி வருகிறது. வரட்டும்.

புலிகள் மட்டுமா, அணில்களுக்கும் இதே உயிரியல் விளக்கம் பொருந்தும். என்னவோ இன்றைய புலியும், பண்டைய அணிலும் அண்டை நாட்டுப் பக்கமான தகவல்களாகவே வருகின்றன.

"சேது' இணைப்புப் பாதைத் திட்டத்தில் ராமருக்கும் வானர சேனைக்கும் அணில்கள் உதவிய கதை தெரியும். ஹாமில்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் வாராவதி ஆகி "பார்பர்ஸ் பிரிட்ஜ்' ஆனது மாதிரி "இணைப்பு' (சேது) என்பதே நவீன பொறியியல் பாலம் ஆகக் கேலி பேசப்பட்டது. அது மணல், சிறுகல், மரத் துண்டுகளால் நிரப்பப்பட்ட இணைப்புப் பாதை. அவ்வளவுதான்.

அன்றைக்கு கள்ள மணல் லாரி கிடையாதே. அணில்கள்தாம் சரக்கு வண்டிகள். கடற்கரை மணலில் புரண்டு எழுந்து ஓடி வரும். அவை தேவையான இடத்தில் நின்று முதுகு மணலைத் தட்டி உதறிக் கொட்டின. இந்தச் சேவைக்கு ராமர் எழுதிய பாராட்டு "ஹைகூ' தான் அதன் முதுகு வரிகள். அப்படியானால் சீதாப்பிராட்டியின் தேகம் முழுவதும் எத்தனைவரிகளோ என்ற ஒரு "சென்ரியு'ப் புதுக் குறும்பும் இருக்கட்டும்.

உண்மையில் இந்திய அணில்களோ பனைமர அணில் இனம். வால் முளைத்த சுண்டெலிகள் மாதிரி. இந்த அணில்களின் மெலானின் செறிந்த கருநிற உடம்பில் பனை ஓலைகளால் இந்த வெண்கோடுகள் பதிந்தன. தோலின் இந்த மெலானின் நீர்மம் உண்மையில் நிறம் அற்றது. உடலில் மெலானினைத் தூண்டுவிக்கும் வேதிமத்திற்கும், தடுக்கும் வேதிமத்திற்கும் இடையே கடும்போட்டி, அரசியல் மாதிரி.

மெலானின் குறைந்தவை வெள்ளெலிகள். முதுகில் வரி இல்லாத கரிய அணில்களும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உண்டாம். இதற்கு மத்தியில் 13 வரிகளும் புள்ளிகளும் கொண்ட சிறுத்தை அணில்களை வட அமெரிக்காவில் காணலாம். இங்கிலாந்திலோ செந்நிற அணில் இனமே அழிந்து வருகிறது.

ஏதாயினும், இத்தகைய உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவிய ஆலன் டூரிங் தண்டிக்கப்பட்டார் என்றோம். பாவம், தமது அறிவியல் நூல் வெளியிட்ட ஆண்டில் "ஓரினச் சேர்க்கையாளர்' என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. சிறையில் தள்ள வேண்டும்; அல்லது, அவருக்குப் பெண் சுரப்பு நீர்மச் சிகிச்சையால் வேதியியல் முறையில் ஆண்மை இழப்பு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு ஆயிற்று. அதற்கான எஸ்ட்ரோஜன் வகை ஸ்டில்போஸ்ட்ரோல் மருந்து ஊசி வழி அவருக்குச் செலுத்தப்படும்.

இதற்கு எல்லாம் உடன்படாத ஆலன் டூரிங் மானஸ்தன். அன்னைக்குத் தெரிந்தால் அவமானம். 1954 ஜூன் 7 அன்று சயனைடு அருந்தித் தற்கொலை செய்து கொண்டார். அதனால் மின்முலாம் பரிசோதனையின்போது கையாளப்படும் சயனைடு ஆவி முகர்ந்ததால் விபத்து ஏற்பட்ட மாதிரி அறையில் ஜோடனை செய்து இருந்தாராம். படுக்கை அருகே பாதி கடித்த ஆப்பிளுமாகச் சடலமாகக் கிடந்தாராம்.

சிறுவயதில் டூரிங் அறிவியலில் காட்டிய அக்கறை அந்நாள் ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. கணிதத்தில் குப்பை கொட்டி என்ன பயன்? அன்றைக்கு எல்லாம் அங்கு மொழி, இலக்கியம், தத்துவம், வரலாறு என்று எல்லாம் படித்தால் போதும். ""உங்க பையன் இரண்டு ஸ்டூல்களுக்கு மத்தியில் விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்''. இதுதான் பெற்றோரிடம் ஆசிரியர்கள் வழங்கிய நன்னடத்தைச் சான்றிதழ்.

அதிலும் டூரிங்கின் உற்ற தோழன் கிறிஸ்டோஃபர் மார்க்கம் என்பவர் காசநோயால் பீடிக்கப்பட்டு இறந்ததைக் கண்ட டூரிங், நாஸ்திகரும் ஆனார். காசநோய்க் காரணம் தெரியுமா? நண்பர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் நோயுற்ற பசுவின் பால் அருந்தியதுதானாம். அதனால் பசும்பாலும் விஷம் ஆகலாம் என்பதே அறிவியல் பாடம்.

இத்தனைக்கும் மத்தியில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. டூரிங் தாய் கருத்தரித்தபோது பெற்றோர் பிரிட்டீஷ் இந்தியப் பிரஜைகளாம். தாயார் எத்தேல் சாரா, மதராஸ் ரயில்வே துறைத் தலைமைப் பொறியாளரான எட்வர்ட் வால்லர் ஸ்டோனி என்பவரின் மகள். தகப்பனார் ஜூலியஸ் மாத்திசன் டூரிங் இந்தியக் குடிமைப் பணி (ஐ.சி.எஸ்.) நிமித்தம் இந்தியாவுக்கு வந்தபோது டூரிங்கின் தாத்தா வங்காள ராணுவத்தில் அதிகாரி.

ஆனாலும் லண்டன் சென்று, மைதா வாலே என்ற இடத்தில் மகனைப் பிரசவித்தார் எத்தேல் சாரா. குழந்தை இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தால் உருப்படுவான் என்று நினைத்தாரோ என்னவோ? ஆனால், பெற்றோர்க்கு ஏமாற்றம். அவரது அறிவியல் நூல் வெளியான ஆண்டிலேயே இங்கிலாந்தில் ஆர்னல்டு முர்ரே என்ற 19 வயது சல்லிப் பயலால் வந்ததாம் வினை. 1954-ஆம் ஆண்டு ஜனவரியில் மான்செஸ்டர் திரையரங்கிற்கு வெளியே சந்தித்த "தரை டிக்கெட்' ஆசாமியினால் டூரிங்கிற்கு பாலினச் சேர்க்கையாளர் என்ற அவப்பெயர் உண்டானது. தண்டனையும் பெற்றார்.

ஆனால், கதை அத்துடன் முடியவில்லை. பாலியல் குற்றம் சுமத்தியதற்காக பிரிட்டீஷ் பிரதம மந்திரி கார்டன் பிரௌன் சராசரி அரசாங்கங்களைப் போலவே, டூரிங் இறந்து 55 ஆண்டுகளுக்குப் பிறகு, மன்னிப்பு வெளியிட்டார். 2009 செப்டம்பர் 10 அன்று இணையக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், ""அதிர்ச்சி ஊட்டும் வகையில் அவர் (டூரிங்) நடத்தப்பட்டதற்கு'' வருந்தினாராம்.

அத்தனைக்கு டூரிங் என்ன இங்கிலாந்தின் ராணுவ ரகசியங்களை "விக்கி விக்கி'யா அம்பலப்படுத்தினார்? முடியின் நிற பேதங்களுக்கு அறிவியல் காரணம் கண்டு சொன்னார். கணிப்பொறித்துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தினார்.

அவரது அறிவியல் புகழை மறந்துவிட்டோம். இந்தியாவில் கருவுற்று 1912 ஜூன் 23 அன்று இங்கிலாந்தில் பிறந்தவருக்கு நூற்றாண்டும் கடந்து ஆயிற்று. என்றாலும் அதற்காக மதுரை மாநகரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடி "டூரிங் வானவில் திருவிழா' கொண்டாடி நினைவாஞ்சலி செய்தார்களாமே, நிஜமாகவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com