குடியரசா? முடியரசா?

இந்தியாவின் 64-ஆவது குடியரசு நாள் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தலைநகர்
Updated on
3 min read

இந்தியாவின் 64-ஆவது குடியரசு நாள் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தலைநகர் தில்லி மற்றும் மாநிலத் தலைநகர்களில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் நாட்டின் பாரம்பரிய கலாசார பெருமையையும், நாட்டின் படைபலத்தையும் வெளிக்காட்டும் அழகிய அணிவகுப்புகளும் நடைபெற்றுள்ளன.

குடியரசு தின விழாவில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறையின் முன்னெச்சரிக்கைத் தகவல் காரணமாக தில்லி நகரமே பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. விழாப் பகுதியில் ஹெலிகாப்டரில் வட்டமிட்டபடி வீரர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.

உயரமான கட்டடங்களில் இருந்து கொண்டு தொலைநோக்கி மூலம் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன. சாலை சந்திப்புகள் முதல், விழா நடந்த இடத்தில் ஒவ்வொரு திருப்பத்திலும் ஆயுதம் ஏந்திய படைவீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் காலத்தில் இத்தகைய ராணுவப் பாதுகாப்புகள் தேவைதான்; இருந்தாலும் இந்தப் பாதுகாப்புகள் எல்லாம் தற்காலிகமானவையேயாகும். இவற்றுக்கும் மேலாக மக்களின் பாதுகாப்புதான் நிரந்தரமானது என்பதை அரசியல் தலைவர்கள் உணர வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு மக்களே பாதுகாப்பாக இருக்க  வேண்டுமானால் அது மக்களின் நலம் நாடும் அரசுகளாக இருக்க வேண்டும்; மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதுதான் "குடியரசு' என்ற இலக்கணம் கவனமாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். ஆனால் இக்காலத்தில் இது கடைபிடிக்கப்படுகிறதா? இந்தக் கேள்விக்கு "இல்லை' என்ற பதில்தான் எங்கும் கிடைக்கிறது.

"குடியரசு' பற்றிய சிந்தனையை விதைத்தவர்களும், வளர்த்தவர்களும் சிந்தனையாளர்களான வால்டேர், ரூசோ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர் எனலாம். "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற புதுமை முழக்கங்களை உருவாக்கி மக்களைத் தட்டி எழுப்பினர்.

""மக்களே, விழித்தெழுங்கள்! உங்கள் கைவிலங்குகளை உடைத்தெறியுங்கள்!'' என்ற வால்டேரின் சுதந்திரக்குரல் பிரெஞ்சு மக்களைச் சிந்திக்க வைத்தது. கொடுங்கோலர்களை எதிர்க்கும் துணிச்சலை ஏற்படுத்தியது. "வாழ்வா? சாவா?' என்ற போராட்டமாக உருவெடுத்தது.

மன்னராட்சியைத் தூக்கி எறிந்து, மக்களாட்சியை நிலைநாட்டும் பிரெஞ்சுப் புரட்சியாக  உருவெடுத்தது. உலக வரலாற்றில் "குடியாட்சி'யை அறிமுகப்படுத்தியது. இதற்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்சமல்ல, கோடி என்று சொன்னாலும் குறைவானதுதான். உடல், பொருள், உயிருக்கு விலை ஏது?

""மனிதன் என்பவன், சுதந்திரமாகப் படைக்கப்பட்டான் என்றால் அவன் தன்னைத் தானே ஆள வேண்டும். மனிதர்களுக்கு மேலே கொடுங்கோலர்கள் இருந்தால், அவர்களை ஆட்சி பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்'' என்றார் வால்டேர்.

இவ்வாறு இந்த மக்களாட்சிக்காக மன்னர்களையே தூக்கி எறிந்த குடிமக்களின் இன்றைய நிலை என்ன? மக்களாட்சி முறையும் மன்னர் ஆட்சி முறையாகவே மாறிக் கொண்டிருக்கிறது. மக்களை மதிக்காத எதேச்சாதிகார ஆட்சி முறை, தனக்குப் பிறகு தன் குடும்பம் என்கிற வாரிசு ஆட்சிமுறை இவையே மத்தியிலும், மாநிலங்களிலும் தலைதூக்கி வருகிறது.

"மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று தேர்தல் காலத்தில் மட்டுமே பேசப்படுகிறது. அப்போது மட்டுமே நமது மக்கள் தலைவர்களைப் பார்க்க முடிகிறது. மக்களின் தீர்ப்பு கிடைத்து, ஆட்சியைப் பிடித்து விட்டால் அவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்குமான தொலைவு அதிகமாகிவிடும்; "தரும தரிசன'த்துக்காகக் காத்துக் கிடக்க வேண்டியதுதான். கதவு திறக்கப்படும்போது கண்டுகொள்ள வேண்டியதுதான்; "கைகள்' தட்டினால் கதவுகள் திறக்காது; "காசுகள்' தட்டினால் மட்டுமே கதவுகள் திறக்கும்.

குடியரசு நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் உரையாற்றியுள்ளார்.

""நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். லஞ்சம், ஊழல், முறைகேடுகள் என்பவை வாழ்வியல் அறநெறிகளைப் பின்னுக்குத் தள்ளும் நிலை ஏற்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகிறது'' என்று பேசியுள்ளார்.

இன்று நம்நாட்டு அரசுத் துறையில் லஞ்சம், ஊழல் இல்லாத இடமும் இருக்கிறதா? இயல்பாக நடைபெற வேண்டிய செயல்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. "இதில் ஈடுபடாதவர்கள் நிர்வாகத்தில் நிலைக்க முடியுமா?' என்ற நிலையே எங்கும்.

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதே இங்குள்ள ஊழல்தான். ஊழல் செய்கிறவர்களே ஊழலைக் களைய முடியுமா? "நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்' என்ற நாட்டுப்புற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

ஓர் ஊழலை விசாரித்து முடிப்பதற்குள், அடுத்தடுத்து புற்றீசல்கள் போல புறப்பட்டு வருமானால் எந்த ஊழலை மக்கள் நினைவில் வைத்துக் கொள்வது? எந்த ஊழல் விசாரணையும் முடிவுக்கு வந்துவிடாமல் அரசாங்கமே பார்த்துக் கொள்ளுமானால் இந்த மக்களாட்சியை "குடியரசு' என்று எப்படிக் கூற முடியும்? ஊழல் பணத்தைக் கொடுத்தே மக்களின் வாக்குகளை வாங்கி விடலாம் என்ற நிலை ஏற்படுமானால் முடியரசுக்கும், குடியரசுக்கும் வேறுபாடு என்ன?

""ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக இந்தியாவையும், மற்ற வளரும் நாடுகளையும் தனிமைப்படுத்தக் கூடாது...'' என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பேசியுள்ளார். அதுவும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதாரப் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் பேசியிருப்பது நாட்டின் பெருமைக்கு அறைகூவலாகும்.

கடந்த ஜனவரி 25 அன்று "தேசிய வாக்காளர் தினம்' அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, நமது நாடு முதிர்ச்சி பெற்ற ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது என்றும் இத்தகைய சூழ்நிலையில் நமது தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

""இப்போதைய மக்களவையில் உள்ள உறுப்பினர்களில் 82.68 விழுக்காட்டினர், பதிவான வாக்குகளில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றவர்கள்தாம். தேர்தல்கள் மூலம் நமக்குக் கிடைத்துள்ள உண்மையான தகவல், இப்போதுள்ள தேர்தல் முறையில் குறைபாடுகள் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது...'' என்றும் அவர் விளக்கியுள்ளார்.

ஊழல் செய்யும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். பதிவான வாக்குகளில் மிகக் குறைந்த வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெறுபவர் எண்ணிக்கை இப்போது கூடுதலாக உள்ளது. எனவே பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்றவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கும் முறையினைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதும் பல காலமாக இருந்து வருகிற கோரிக்கைகளாகும்.

இதே நாளில் தமிழக ஆளுநர் கே. ரோசய்யா பேசுகையில், "ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் இளைஞர்களும், நகர்ப்புற வாக்காளர்களும் வாக்களிக்காமல் புறக்கணிப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனநாயகக் கடமையைச் செய்யாமல் புறக்கணிப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. அண்மைக் காலமாக நமது நாட்டில் மக்களாட்சித் தத்துவமே மதிக்கப்படவில்லை. ஆட்சியைப் பிடித்த அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது; ஆனால் இங்கு கட்சிகளின் அரசாங்கமாகவே செயல்படுகிறது. வேலைகளும், விருதுகளும் ஆளும் கட்சிக்காரர்களுக்கும், ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் என்பது எழுதப்படாத சட்டம்.

இந்தப் போக்கு இளைஞர்களை அதிருப்தியடைய வைத்திருக்கிறது; நாட்டின் நலம் நாடும் நடுநிலையாளர்களையும் மக்களாட்சியின் மேல் நம்பிக்கையிழக்கச் செய்திருக்கிறது.

நமது பொதுத் தேர்தலில் பண பலமும், குண்டர்களின் ஆதிக்கமும் போட்டியிடுகின்றன. நாடாளுமன்றத்தில் கோடீஸ்வரர்களும், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களும் கணிசமானவர்கள் என்பதை அனைவரும் அறிவர். நாட்டில் செல்வாக்குபெற்ற தொழிலதிபர்களிடம் பணம் பெற்றே அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கின்றன என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா?

இந்தியத் தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படாத சுயேச்சையான அமைப்பு என அறிவிக்கப்பட்டால் போதாது; செயல்படவும் வேண்டும். ஆளும் கட்சிகளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் துணை போகாமல் துணிவுடனும், நடுநிலையோடும் பணியாற்ற வேண்டும் என்பது தேசநலனில் அக்கறை கொண்டவர்களின் விருப்பமாகும்.

குடியரசு என்பது குடிமக்களின் நலனையே எதிரொலிப்பதாக இருக்க வேண்டும். இந்திய விவசாயிகள் தற்கொலை, தமிழக மீனவர் பிரச்னை, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, விலைவாசி உயர்வு ஆகிய மக்கள் பிரச்னைகளில் மக்களுக்கு எதிராகவே மத்திய அரசு முடிவெடுக்கிறது. ஆனால் மக்களின் ஒப்புதலோடு முடிவெடுப்பதாக ஒரு நாடகம் நடத்தப்படுகிறது.

""உண்மையில் அதிகாரம் மக்களிடத்தில்தான் உள்ளது. இப்போதைக்கு அந்தப் பிரதிநிதிகள் என்று யாரைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இல்லாமல் சுயேச்சையாக நாடாளுமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை; அது இருக்கவும் இயலாது...'' என்பது காந்தியாரின் கருத்து.

ஆனால், இன்றைய அரசியல்அரங்கம் இந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறதா? மன்னர் ஆட்சியை மக்கள் வெறுத்ததற்குக் கூறப்பட்ட காரணங்கள் எல்லாம் இப்போதுள்ள மக்கள் ஆட்சிக்கும் பொருந்துகிறது. பரம்பரை அரசும், குடும்ப ஆட்சியும் மத்திய, மாநில அரசியல் அரங்கில் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு தலையெடுத்துள்ளன. மக்கள் இங்கே ஊமைச் சாட்சிகளாகவே உள்ளனர்.

"குடி'யரசு, "முடி'யரசு என்னும் சொற்களில் மட்டுமே வேறுபாடு தெரிகிறது. மற்றபடி இன்றைய அரசியலில் இரண்டும் ஒன்றுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com