வெள்ளிப் பனி மலையின் மீது உலாவ வேண்டுமானால் இனி விஞ்ஞானிகளின் ஒப்புதல் பெற்றுத்தான் மலையேற வேண்டும்!
"உலகின் மிகப்பெரிய மலை இமயமலை' என்று பெருமைப்படுகிறோம். உள்ளபடியே இது 8,850 மீட்டர்கள்தான் (ஒரு மீட்டர் சுமார் 3.1 அடி) உயரம். ஆனாலும் அடிதொட்டு மிக உயர்ந்து எழுந்த மலை "மெளனா கீ' என்னும் எரிமலைதானாம். பசிபிக் கடலுக்குள் அமுங்கி இருக்கிறது. நீர் மட்டத்துக்கு மேல் 4,200 மீட்டர்களே வெளியே தெரிகிறது, அவ்வளவுதான்! மொத்தம் 10,200 மீட்டர்கள்.
வெளியே தென்படும் ஆரவாரங்களும் ஆர்ப்பரிப்புகளும் வெளிப்படையானவை என்று ஏமாறுவானேன்? எப்படியோ, பனி மலையாய் கம்பீரமாக எழுந்துநிற்கும் இமயமலையின் அடியில் தண்ணீர் குன்றி, வறண்டு வருகிறதாமே?
சமீபத்தில் "கிரேஸ்' எனப்படும் "கிராவிட்டி ரெக்கவரி அண்ட் கிளைமேட் எக்ஸ்பெரிமென்ட்' ஆகிய நிறையீர்ப்பு மீட்பு மற்றும் வானிலைப் பரிசோதனையின் முடிவு இது. இந்தியத் துணைக் கண்டத்தின் கீழ் நிலத்தடி நீரின் அளவு ஆண்டுதோறும் 4 சென்டி மீட்டர் அளவுக்குக் குறைந்து வருவதாகப் பதிவாகி உள்ளது.
அமெரிக்காவின் "நாசா' நிறுவனமும் ஜெர்மனியின் "காற்று விண்வெளி மையமும்' இணைந்து 2002 மார்ச் மாதம் இதற்கான பரிசோதனையைத் தொடங்கின. இதில் 220 கிலோ மீட்டர் இடைவெளியில் இரண்டு செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன. இவை பூமியின் நிறையீர்ப்பினை அளந்து வருகின்றன.
நிலத்தடி நீர்ப்பெருக்கம் பொதுவாக நிறையீர்ப்பில் சிறிதளவு மாற்றங்களை உண்டாக்கும் என்பதால் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு வட கிழக்கு மாநிலங்களில் தண்ணீர் அளவு குறைந்துவிட்டது.
குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தின் மேல் வேங்கங்கைப் பகுதியில் மட்டும் 2002 - 2008 - ஆம் ஆண்டுக்குள் 109 கன கிலோமீட்டர்கள் அளவுக்குத் தண்ணீர் குறைந்துவிட்டதாம். காணாமல் போன இந்தத் தண்ணீரை ஒரு வேளை அப்படியே சென்னைக்குத் திருப்பிவிட்டிருந்தால் நாம் 650 மீட்டர் உயரத் தண்ணீருக்குள் மூழ்கியிருப்போம். அத்தனைக் கன அளவு நிலத்தடி நீர் இன்று இந்தியாவின் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற வட மாநிலங்களில் வற்றிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பெருகிவரும் மக்கள் தொகை, அதற்கு ஈடு கொடுக்கும் பொருளாதார முன்னேற்றம், அதன் விளைவான தொழில்நுட்ப வளர்ச்சிகள், தண்ணீருக்கு ஏங்கும் விவசாய நிலங்கள் எல்லாம் - நிலத்தடி நீரின் 95 சதவீதத்தையும் உறிஞ்சுகின்றன.
ஆனால் ஒரு பிரபஞ்சக் கண்ணோட்டத்தில் பார்ப்போமே? பூமிச்சட்டியில் அனைத்து தாதுக்களும், தனிமங்களும், மூலப்பொருள்களும், தண்ணீரும், காற்றும் எல்லாமே இருக்கிறது. ஆனால், உயிருக்குத் தேவையான ஒளி ஆற்றலும், வெப்ப ஆற்றலும் கணந்தோறும் சூரியனிலிருந்து இறக்குமதியாகிறது.
குறிப்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி வாரங்களில் சூரியன் இமயத்தின் தலை உச்சியில் சஞ்சரித்ததை அறிவோம். அதாவது உத்தராயணத்தின் உச்சம். ஜூன் 22 "கோடை சந்தி' அல்லவா?
அதுவும் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பூமியைவிட 100 மடங்கு பெரிய சூரியன், இரவு பகல் பாராமல் தனது சொந்த ஒளியை இடையறாது பூமி முகத்தில் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறானே; அந்த வெப்பத்தை ஈரத்துணியால் ஒற்றித் துடைத்துக் குளிர்விப்பது யார்? பூமியே தன்னைத்தானே குளிர்வித்துக்கொள்வதற்கு ஒரு வசதி இருக்கிறது. வளிமண்டலமும் அயன மண்டலங்களும்தான் அந்த வசதி.
வானில் இருந்துவரும் "காஸ்மிக்' அண்டக் கதிர்வீச்சு, காற்றின் நீராவி மூலக்கூறிலிருந்து ஒரு சில "எலக்ட்ரான்' துகள்களைப் பிய்த்து எறிந்துவிடும். அதனால் அந்த நீர் மூலக்கூறு வெறும் தூசி மாதிரிச் செயல்பட்டு தண்ணீர் மூலக்கூறுகளை ஒன்றன்மேல் ஒன்றாக ஒட்டித் திரளச் செய்து நீர்த் திவலைகள் உண்டுபண்ணும். பூமியின் சிலத் தலங்களில் எழும் வெடிப்பு மழைக்கும் இந்த விண் நடவடிக்கையும் காரணம் ஆகலாம்.
சமீபத்தில் ஜெனீவா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவினர், "வானில் மேகத்தை மழை முகிலாக விதைப்பதற்கு' இது போன்ற ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இயற்பியல் ஆராய்ச்சிக் கூடங்களின் "மேக அறை'யில் நடத்தப்பெற்ற பரிசோதனை இது.
பனி உறைநிலைக்கும் கீழே 24 பாகைக் குளிர்ந்த நிலையில் இருக்கும்போது, ஈரப்பதத்தில் "லேசர்' கதிர்வீச்சினைச் செலுத்தி ஆராய்ந்தனர். லேசர் கதிர் பட்டு தண்ணீர் மூலக்கூறு "எலக்ட்ரானை' இழந்து கருக்களை உருவாக்கிற்று. அவற்றின் மேல் தண்ணீர் மூலக்கூறுகள் 50 மைக்ரோ மீட்டர் அளவிலும் பின்னர் உருப்பெருகி 80 மைக்ரோமீட்டர் அளவிலும் திரண்டு பனித்துளிகள் உருவாயின. (இங்கு ஒரு மைக்ரோ மீட்டர் என்பது ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு!)
ஏதாயினும், உயர்வளிமண்டலத்தில் நீராவி மூலக்கூறுகள் ஹைடிரஜன் அயனி (புரோட்டான்) மற்றும் ஆக்சிஜன் அயனி (ஓசோனின் உறுப்பு) என்று பிரிகின்றன. அவை குளிர்ச்சியான விண்வெளிக்குள் கரைந்து பரவும். புவியும் சுயமாக தனது "அகவெப்பக் கனற்சி'யைத் தணிக்க முயல்கின்றது. வெப்ப பூமி அண்டவெளியின் அதிகுளிர் நிலையில் அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறது. திரவ ஹீலியத்தின் "கொதிநிலை' இது. பனி உறைநிலைக்கும் 269 பாகை தாழ்வானது என்றால் பாருங்களேன்.
இதற்கு மத்தியில் பூமியின் அடிவயிற்றில் பழுக்கக் காய்ச்சிய இரும்பும், நிக்கலும் கொதித்துக்கொண்டிருக்கின்றன. அதன் மேல் அடுக்கில், பூமிப்பொருக்கின் கீழே எரிமலைக் குழம்புகள் உள்ளே மூச்சு முட்டும்போது தரையில் குப்புறப்படுத்து ம(ன)லத் துவாரங்களின்வழி பீறிடுகின்றன. எரிமலைகளைத்தான் சொல்கிறேன்! நல்லவேளை, இந்தியாவுக்கு அந்தத் தொல்லை இதுவரை இல்லை.
எப்படியோ, இமய "மழை'யும் இடிபாடுகளும் பல்லாயிரம் உயிர்களை அழித்த சோகம். இதில் மனிதர்களை மீட்கச் சென்ற ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளானதே?
திக்குதெரியாத அத்வானக் காட்டில், பாலைநிலத்தில் அல்லது உள்கடலில் ஏதேனும் ஆபத்தில் சிக்கியவர்களைத் தேடி மீட்க விண்வெளித் தொழில்நுட்பம் பல வகைகளில் உதவுகிறது.
அவ்வாறே கடல்வழிப் பயணங்களில் பாதைகளில் பிறழாமல் கப்பல்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதிலும் செயற்கைக்கோள்களின் பங்கு அசாத்தியமானது.
பூமியின் இடுப்பில், 20,000 கிலோ மீட்டர் உயரப்பாதையில் - 60 பாகை இடைவெளியில் - 24 செயற்கைக் கோள்களைச் சுற்றவிடும் திட்டம் 1973-ஆம் ஆண்டுவாக்கில் உதயமானது. "ஜி.பி.எஸ்.' எனும், "உலகளாவிய இருப்பிடம் காட்டும்' அமைப்பு இதுவே. இதற்குரிய "நாவ்ஸ்டார்' செயற்கைக்கோள்களின் தலைமையகம் கலிஃபோர்னியாவில் இயங்கிவருகிறது.
ஜி.பி.எஸ். அமைப்புக்கு இணையான ரஷியத் திட்டம் "குளோநாஸ்' எனப்படும். 1967 ஆம் ஆண்டு "காஸ்மாஸ்-192' எனும் விண்கலம் இதைத் தொடங்கிவைத்தது. ஐரோப்பாவும் இதே தொழில்நுட்பத்தைக் கையாண்டு புதிய முயற்சியில் ஈடுபட்டது. இ.என்.எஸ்.எஸ். என்கிற ஐரோப்பியப் பயண அமைப்புச் செயற்கைக்கோள் நிறுவனம் உருவாயிற்று.
பயண அமைப்புச் செயற்கைக்கோள் பற்றிய கருத்தாக்கம் 1960 ஏப்ரல் 13-அன்று செலுத்தப்பெற்ற அமெரிக்காவின் "டிரான்சிட்-1பி' என்னும் செயற்கைக்கோளால் உதயமானது. 380 கிலோமீட்டர் புவி அருகிலும் 705 கிலோமீட்டர் புவிக்கு அப்பாலுமான நீள்வட்டப் பாதையில் சுற்றும் இச் செயற்கைக் கோளின் வானொலி சமிக்ஞைகளால் கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும்.
1978-ஆம் ஆண்டு அமெரிக்க வர்த்தக விமானமொன்று தனியார் விமானத்தோடு சான் டியாகோ அருகே நடுவானில் மோதிச் சிதறியது. இந்தச் சம்பவம் முனைவர் ஜெரார்டு கே.ஓ. நீல் என்கிற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் மனதில் ஒரு பொறியைக் கிளப்பியது. அதன் பயனாக கப்பல்கள் மட்டுமின்றி, விமானங்களுக்கும் உதவிட "ஜியோ-ஸ்டார்' செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டன. முதலாவது "ஜியோ-ஸ்டார்' 1986 மார்ச் மாதம் ஏவப்பெற்றது.
பூமியில் 3 மீட்டர் முதல் 10 மீட்டர் வரையிலான இடைவெளியைக் கூடத் துல்லியமாகக் கண்டறியும் தொழில்நுட்பம் அடங்கிய திட்டங்கள் இவை. ஏதாயினும், வேற்று நாட்டுச் செயற்கைக் கோள்களை நம்பி எத்தனை நாளுக்குத்தான் காலத்தை ஓட்டுவது?
காற்றுவெளியிலோ, கடல்வெளியிலோ ஆபத்துக்கு உள்ளாகித் தவிப்போரைத் தேடிக்காப்பாற்றும் "சார்சாட்' பூர்வாங்கச் செயல்திட்டத்தில் நம் நாட்டின் "இன்சாட்' செயற்கைக்கோளும் பங்களித்தது.
வானிலை அளப்புக்கென "தானியங்கும் தரவு சேகரிப்பு மேடைகள்' நிலப்பகுதியில் நூறும், கடல்பகுதியில் பத்தும் நிறுவப்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் காற்றழுத்தம், காற்றுவீசும் திசை, வேகம், வெயில், மழை, ஈரப்பதம், கடல்பரப்பின் வெப்பநிலை ஆகிய அளவீடுகள் பதிவாக்கப் பெறுகின்றன. இயற்கைச் சீற்றம், கடல் கொந்தளிப்பு, புயல், வெடித்துக் கிளம்பும் கன மழை, வெள்ளப் பெருக்கு போன்ற நாச விபரீதங்கள், அவசர கால நடவடிக்கைகளுக்கு போதிய முன்னறிவிப்பு வழங்கிடவும் "ஆரம்ப அபாய முன்னறிவிப்பு அமைப்பு' "இன்சாட்'டில் இடம் பெறுகிறது.
2013-ஆம் ஆண்டு இந்திய ஏவூர்தியின் பொன்விழா வேறு. 1963 நவம்பர் 21 அன்றுதான் திருவனந்தபுரம் அருகே தும்பா தளத்தில் இருந்து மண்ணிலிருந்து "நைகி அப்பாச்சி' என்ற இந்திய முதல் ஏவூர்தி செலுத்தப்பட்டது.
இந்த 2013 ஜூலை முதல் நாளில் நம் நாட்டின் முதலாவது பயண அமைப்பு செயற்கைக்கோள் "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ' ஏவப்பட்டது. "இந்தியன் ரீஜினல் நாவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தின்' ஏழு செயற்கைக்கோள்கள் வரிசையில் முதல் வீரன். இந்திய விண்வெளி வரலாற்றில் இதுவே முதல் இரவுப் பயணம். வெற்றிபெற வாழ்த்துவோம்.
கட்டுரையாளர்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.