கலப்புப் பொருளாதாரமா? கலப்படமா?
""மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி, வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு, பசும் தழையைப் போட்டு


""மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி, வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு, பசும் தழையைப் போட்டு பாடுபடு செல்லக்கண்ணு'' என்ற பாடலையோ அது எழுதப்பட்ட காலத்தையோ நம்மால் மறக்க முடியுமா?
"மணப்பாறையாவது மாடாவது... டிராக்டர் வந்த பின்னே ஏரை மூட்டை கட்டியாச்சு மாயவரத்திலே...'.
மருதகாசி உயிருடன் இருந்தால், ""பொன்னு விளையிற பூமியடா...'' என்று தொடங்கும் "மக்களைப் பெற்ற மகராசி' படப்பாடலை மாற்றி எழுதவேண்டிய சூழ்நிலையில் இந்திய விவசாயம் உள்ளதை உணர்ந்திருப்பார், உணர்ந்து நொந்துமிருப்பார்.
கொண்டைக்கடலையைப்போல் பழுப்பு நிறக்கல், தனியாவைப்போல் கருப்பு மண்கட்டி, உளுந்தைப்போல் கருப்புக்கல், கடலைப் பிண்ணாக்கில் மாக்கல் மாவு என்றெல்லாம் மனசாட்சியின்றி "சில வியாபாரிகள்' கலப்படம் செய்வதுண்டு. அத்தகைய வியாபாரிகளிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிறையக் கற்றுக் கொண்டுள்ளார்.
ஜவாஹர்லால் நேரு உருவாக்கியது கலப்புப் பொருளாதாரம்; சோஷலிச சமுதாய அமைப்பு என்பது நேருவின் கனவு.
1956-இல் வகுக்கப்பட்ட தொழில் கொள்கையில் கனரகத் தொழில்கள் பொதுத்துறைக்கும் (அரசுத்துறை), சிறு தொழில்கள் தனியார் துறைக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் டாட்டா, பிர்லா போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே இரும்பு, எஃகு போன்ற கனரகத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். முக்கியமாக இரும்பு, எஃகு, நிலக்கரி, சுரங்கம், பிற கனிமப்பொருள்கள் போன்ற இயற்கை வளங்கள் தனியாருக்கு விட்டுத்தரப்படவில்லை. சிமென்ட் விட்டுத்தரப்பட்டது. ஜவுளி, நூற்புத் துணி ஆலைகள் தனியாருக்கு விட்டுத்தரப்பட்டன.
இப்படி தொழில்துறைகளை வேற்றுமைப்படுத்தி, தனியார் லாபங்களைக் கட்டுப்படுத்தும் மார்க்கமாக நேருவின் கலப்புப் பொருளாதாரம் திகழ்ந்து வந்தது. நேருஜியின் கலப்புப் பொருளாதாரத்தில் கமிஷனுக்கோ ஊழலுக்கோ வழி காணப்படவில்லை. நேருவுக்குப் பின்னர் இந்திராகாந்தி வரை பொதுத்துறையின் செயல்பாடு நிறைவு தரும்படி இருந்தன. அன்று தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஆர். வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம் போன்றோர் இந்திரா காந்தி அமைச்சரவையில் பணிபுரிந்து நற்பெயரைத் தேடித் தந்தனர். இப்போது அப்படியா?
பொதுத்துறையும் கலப்புப் பொருளாதாரமும் இந்தியாவைத் தலை நிமிர வைத்தது.
நரசிம்மராவ் பிரதமரான காலகட்டத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். "கலப்புப் பொருளாதாரத்தை', "கலப்படப் பொருளாதாரமாக்கும்' அரிய கலையைக் கற்றுத் தேர்ந்தார்!
கலப்புப் பொருளாதாரத்தில் பொதுத்துறையும் தனியார் துறையும் போட்டி மனப்பான்மையில் செயல்பட்டு நாட்டுக்கு நன்மையை விளைவித்தன.
கலப்படப் பொருளாதாரத்தில், பொதுத்துறைக்குள் தனியார் அத்துமீறி நுழைந்து அதிகாரம் செய்து நாட்டைப் பலவீனப்படுத்துகின்றனர். வலுவான பொதுத்துறையை நாசமாக்கி நாட்டைக் கடனாளியாக்குவதுவே கலப்படப் பொருளாதாரம்.
நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டப் பொதுத் துறைப் பங்குகளை விற்றுவிட்டுக் குறைந்த பங்குகளை வைத்துக்கொண்டு அதிகாரம் செய்யும் பங்குதாரர்களுக்கு அடிபணிதலே கலப்படப் பொருளாதார இலக்கணம். இந்தியப் பிரதமரின் கலப்படப் பொருளாதாரம் வழங்கும் காட்சிகள் நிறைய உண்டு. ஒரு சில உதாரணங்களை மட்டும் கவனிக்கலாம்.
ஒரு காலகட்டத்தில் "கோல் இந்தியா' லாபகரமாக இயங்கும் பொதுநிறுவனம் என்று விளம்பரப்படுத்தப்பட்டபோது பல தனியார் நிறுவனங்கள் பங்குகளை வாங்கின. ஆஹா, ஓஹோ என்று பேசப்படும் இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் இந்தியா - சைப்ரஸ், இந்தியா - இங்கிலாந்து அடிப்படையில் லண்டனை மையமாகக் கொண்ட "தி சில்ரன் இன்வஸ்ட்மெண்ட் ஃபண்ட்' (டி.சி.ஐ.) பல கட்டங்களில் கோல் இந்தியாவிடமிருந்து 63,599,991 பங்குகளை வாங்கியது. இவை ஒட்டுமொத்தப் பங்குகளில் 1 சதவீதமே. ஆனால், ஒட்டுமொத்த "கோல் இந்தியா'வுக்கும் உரிமை கொண்டாடும் முறையில் பொதுத்துறை நலன்களுக்கு எதிராகப் பல கொள்கைகளை வகுக்கச் சொல்லி அச்சுறுத்தி வருகிறது.
இந்திய-இங்கிலாந்து மற்றும் இந்தியா-சைப்ரஸ் வர்த்தக உடன்பாட்டை மீறிவிட்டதாக இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஐ.நா. வர்த்தக நீதிக் கமிஷனிடம் முறையிட்டு 8,700 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளது.
வளரும் நாடுகளின் பொதுத்துறையை மெல்ல மெல்ல விழுங்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இரு நாட்டு வர்த்தக உடன்பாட்டைச் செய்து கொள்ளும்போதே தோன்றும் இடர்களை தனியார் பங்குதாரர்கள் அறிவார்கள்.
எப்போது தங்கள் லாபம் அடிவாங்குகிறதோ அப்போதே தங்களின் பணபலம் - அரசியல் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தியாவின் நலவாழ்வைப் பிரச்னையாக்கும் விதத்தில் பல்லுயிர்ப் பெருக்கம் - இயற்கை வளமுள்ள சொத்துகளின் மீதுள்ள தடைகளுக்கு விலக்கம் கோருவார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள்தாம் பல்லுயிர் வளப் பாதுகாப்பு - வனப்பாதுகாப்புச் சட்டங்களை இயற்றுகின்றனர். தடை விதிக்கும் நோக்கமே, தடையை மீறுவதுதான்.
"விலக்கு' என்ற பெயரில் தடையை மீறும்போது கைமாறும் டாலர் பணம் எவ்வளவோ இருக்கலாம். ஒரு கலப்படப் பொருளாதாரத்தில் டி.சி.ஐ. போன்ற மோசமான பங்குதாரர்கள் விரிக்கும் வலையில், கமிஷன் பெறத் துடிக்கும் ஊழல் அமைச்சர்கள் விழுந்துவிடுவார்கள். டி.சி.ஐ. பங்குதார இயக்குநரான கிருஸ்டோஃபர் ஹோன் வஞ்சனையில் வல்லவர். டி.சி.ஐ. போட்டுள்ள வழக்கில் "கோல் இந்தியா' நிலக்கரி விலையை உயர்த்தவில்லை என்றும், பங்குதாரர்களுக்குரிய லாபப்பங்கு, பங்குக்குரிய வட்டி வழங்கவில்லை (ரூ. 8,700 கோடி) என்பதுடன் கோல் இந்தியாவின் வளர்ச்சிக்காக, சுரங்கம் மற்றும் உலோக கனிமப்பொருள் ஒழுங்குமுறைச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறுத்தி வைக்கவும் கோரியுள்ளது.
இதன் விளைவாக 28-5-2013 முதல் "கோல் இந்தியா' நிலக்கரி விலையை உயர்த்தியுள்ளது. 10 சதவீத விலை ஏற்றத்தால் நிலக்கரி அதன் தரத்திற்கு ஏற்ப ரூ. 2,200 முதல் ரூ. 6,000 வரை (1 டன்) விலை உயர்ந்துவிட்டது. இதனால் மாநில அரசுகளின் வளர்ச்சி பாதிப்புறும். இந்த லட்சணத்தில் இப்போது தமிழ்நாட்டில் சிறப்புடன் இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி கார்ப்பரேஷனின் (என்.எல்.சி.) பங்குகளைத் தனியாருக்கு விற்க மைய அரசு திட்டமிட்டுள்ளது.
கோல் இந்தியாவுக்கு டி.சி.ஐ. வழங்கியுள்ள சூடு ஆறுவதற்குள் நெய்வேலி பழுப்பு நிலக்கரிப் பொதுத்துறை கலப்படப் பொருளாதாரத்திற்குத் தயாராகிவிட்டது!
மன்மோகன் சிங்கின் கலப்படப் பொருளாதாரத்தின்கீழ் டி.சி.ஐ. மட்டுமல்ல. 82 பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பொதுத்துறைக்கு எதிராக வழக்குப் போட்டுள்ளனர். எவ்வளவு மில்லியன் டாலர் நஷ்ட ஈடு என்று தெரியவில்லை.
"2-ஜி' ஸ்பெக்ட்ரமை மறக்க முடியுமா? உலகப் பிரசித்த பெற்ற இந்த ஊழலின் விளைவால் பெற்ற வருவாய் இழப்பு ரூபாய் 1.17 லட்சம் கோடி.
2008-இல் முறைகேடாக வழங்கப்பட்ட "2-ஜி' ஸ்பெக்ட்ரம் 121 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதைத் தொடர்ந்து "2-ஜி' உரிமம் பெற்ற ஐந்து பன்னாட்டு நிறுவனங்கள் ஐ.நா. வர்த்தகக் கமிஷனிடம் சுமார் 2,000 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்ட ஈடு கேட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் மையமிட்டுள்ள "பைசல் ஹோல்டிங் ஏஜி' என்ற ரஷிய நிறுவனம் 2-ஜி விஷயத்தில் கேட்டுள்ள நஷ்ட ஈடு 3,100 மில்லியன் டாலர்.
மலேசியாவை மையமிட்ட ஆக்சியாட்டா கேட்கும் நஷ்ட ஈடு தெரியவில்லை.
வோடஃபோன் - டெலனர் நார்வே கேட்கும் தொகை 14,000 மில்லியன் டாலர்.
கொலம்பியா கேபிடல் கேட்பது 340 மில்லியன் டாலர்.
லூப் டெலகாம், லண்டன் கேட்பது ரூ. 1,454 கோடி.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - மன்மோகன் சிங் கண்டுபிடித்த கலப்படப் பொருளாதாரத்தின் கீழ், இருதேச வர்த்தக உறவால் அப்படி எதுவும் அன்னிய முதலீடு உயர்ந்ததா? 2011-இல் 32 பில்லியன் டாலராயிருந்த நிலை 27 பில்லியன் டாலராகக் குறைந்தது மட்டுமல்ல, நஷ்ட ஈடுகள் வழங்கப்படுமானால் 27 பில்லியன் டாலரில் சரிபாதி அம்போ.
ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்திரா காந்தி காலம் வரை லாபமுடன் இயங்கிய பொதுத்துறை நஷ்டமாவது ஏன்? பொதுத்துறைக்குள் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து கலப்படமான காரணத்தால் நமது ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி உயர்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் வரை வழங்கப்பட்ட கணக்குப்படி நமது வர்த்தகப் பற்றாக்குறை 1,84,794 மில்லியன் டாலர். உள்நாட்டு நிதிப் பற்றாக்குறையும் ஓங்கி உயர்ந்து வருகிறது. வளர்ச்சி, வளர்ச்சி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் இந்தியப் பிரதமருக்கு பொதுத்துறை என்ற தேக்குமரத்தூணில் அன்னிய வண்டுகள் ரீங்காரத்துடன் ஆங்காங்கே துளைகளைப் போட்டு உளுக்கவைப்பது தெரியாதா? தெரிந்தாலும் அவரால் என்ன செய்ய முடியும்?
கடுமையான நிதிப் பற்றாக்குறை, கட்டுக்குள் அடங்காத பணவீக்கம், மதிப்பிழந்த ரூபாய் உள்ளவரை அன்னிய முதலீடு வராது. அப்படியே வந்தாலும் வர்த்தக ஒப்பந்த ஷரத்துகளைக் காட்டி நஷ்ட ஈடு கேட்கும் அவலநிலை உயர்ந்து, அன்னிய முதலீடு அன்னியக் கடனாக மாறிவரும் சூழ்நிலையில், இந்திய சொத்துகள் ஏலம் போகும்.
அப்படிப் போனால்தான் என்ன? அமைச்சர்களுக்குக் கமிஷன் வரும். அமெரிக்காவில் வீடு வாங்கி செட்டிலாகிவிடலாம். நஷ்டம் இந்திய மக்களுக்கு.
கலப்பட வியாபாரி வழங்கிய கடலைப்பிண்ணாக்கில் மாக்கல் மாவு சேர்க்கப்பட்டுப் பூஞ்சக்காளான் பிடித்து "அஃப்ளோ டாக்சின்' நச்சும் சேர்ந்து கறவை மாடு உயிர் விடுவதைப்போல், மன்மோகன் சிங்கின் கலப்படப் பொருளாதாரத்தின் விளைவால் காமதேனுவாகிய பொதுத்துறையை மடிய விடலாமா? வாழ்க பாரதம்.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...