ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சில புத்திமதிகள் கண்ணே!

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே, சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே...'' படம் - "பானை பிடித்தவள் பாக்கியசாலி'. பாடியவர் - திருச்சி லோகநாதன். இனிமையான குரலில் கருத்தாழமுள்ள அப்பாடலை எப்போது கேட்டாலும் இனிக்கும்.

News image
Updated On :26 ஜூன் 2013, 8:49 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே, சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே...'' படம் - "பானை பிடித்தவள் பாக்கியசாலி'. பாடியவர் - திருச்சி லோகநாதன். இனிமையான குரலில் கருத்தாழமுள்ள அப்பாடலை எப்போது கேட்டாலும் இனிக்கும்.

இவ்வாறே கே.பி. சுந்தராம்பாள் "ஒளவையாரில்', ""பொறுமையென்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்...'' என்று உச்ச ஸ்தாயியில் பாடியுள்ளார்.

ஏ.எம். ராஜா சளைத்தவரா என்ன? அவருடைய மென்மைக் குரலில்... ""பழகத் தெரியவேணும் பெண்கள் பார்த்து நடக்கவேணும்... பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது...'' - மிஸ்ஸியம்மாவை மறக்க முடியுமா என்ன?

இப்படிப்பட்ட பாடல்களின் உட்கருத்து ஒன்றே. ""புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டும். மாமியார் பேச்சை மதிக்க வேண்டும். பிறந்த வீட்டை மறந்துவிட்டு, புகுந்த வீட்டை மதிக்க வேண்டும்...'' இத்தகைய புத்திமதிகள் அந்தக் காலத்திற்குச் சரிப்படலாம். இந்தக் காலத்திற்கு ஒத்து வரும் என்று தோன்றவில்லை. "பெண் அடிமைத்தனம்' என்றுகூடப் பேசலாம்.

வாழ்க்கையில் மற்றவர்களுக்காக நீங்கள் விட்டுக் கொடுக்கலாம், பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். ஆனால், உணவு விஷயத்திலும் உண்ணும் விஷயத்திலும் பெரியவர்கள் கடைப்பிடிக்கும் சில நல்ல விஷயங்களை ஏற்கலாம். விஞ்ஞானத்தை "சாஸ்திரம்' என்று கூறுவார்கள். சாஸ்திரம் மறந்தாலும் பழக்கம் மாறாது. சுத்தி என்ற சுத்தத்திற்கு அடிப்படையான தண்ணீர், எப்படி சுத்தியாகச் செயல்படுகிறது என்று பெரியவர்கள் எப்போதும் சொல்வதுண்டு. உணவை உண்ணும் முன்பு கை கால்களைக் கழுவி சுத்தம் செய் என்பார்கள். பழம், காய்கறி ஆகியவற்றை நீரால் சுத்தப்படுத்து என்பார்கள். கடையில் வாங்கும் பழத்தை அப்படியே உண்ணக் கூடாது. நீரால் சுத்தம் செய் என்பர்கள். தானியங்களை நன்கு தண்ணீர் விட்டுக் களையச் சொல்வார்கள். வாழைப்பழத்தைக்கூட நன்கு நீரால் கழுவிவிட்டுத்தான் தோலை உரித்து உண்பார்கள். தண்ணீரில் அப்படி என்ன விசேஷம்? தண்ணீர் திரவமாக உள்ளதால் சுத்தமாகிறது என்பது மட்டுமல்ல. விஞ்ஞான அடிப்படையில் தண்ணீரில் காற்றுவடிவாக - "ஆக்சிஜன்' உள்ளதால் தண்ணீரை ""உயிர் நீர்'' என்பார்கள். நமது உயிர் பிழைக்கவே நீரில் கழுவுகிறோமோ?

1950 பதிற்றாண்டுக் காலகட்டத்தில் விவசாயத்தில் விஷம் இல்லை. பூச்சிமருந்து அடிக்கும் பழக்கம் இல்லை. இயற்கை உரம் கொண்டு விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளைக்கூடப் பெரியவர்கள் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும் என்பார்கள். புழுதி, எச்சில் துளி, இருமல் துளி, தும்மல் துளி, மண் போன்ற மாசுகள் உண்டு.

ஊட்டச்சத்து நிபுணர்கள் தோலியில் உள்ள சத்துகளைப் பற்றிக் கூறுவதுண்டு. ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைத் தோலியோடு சாப்பிட வேண்டும் என்பார்கள். அரிசியை, பருப்பைக் களைவதுகூட தவறு, "பி' வைட்டமின் இழக்கப்படும் என்பார்கள்.

ஆப்பிளில் இப்போது ஒருவித மெழுகைத் தடவுகிறார்கள். அது நச்சுப்பொருள். பழைய ஆப்பிளைப் புதிதுபோல் பளபளப்பாகக் காட்டுமே தவிர அழுகாமல் காப்பாற்றாது. இப்படிப்பட்ட நச்சு தடவப்பட்ட ஆப்பிளின் தோலைச் சீவாமல் தோலுடன் சாப்பிட்டால் கல்லீரல் - மண்ணீரல் பழுதுறும். தோலுடன் உண்டாலும் தோலை நீக்கி உண்டாலும் மாம்பழம் தின்றால் சிலருக்கு வயிறு ஓட்டம் (வயிற்றுப் போக்கு) ஏற்படும். ஏனெனில் சிலர், "கார்பைட்' விஷக்கல்லைப் பயன்படுத்தி வேகமாக மாங்காய்களை மாம்பழமாக்கி விற்கிறார்கள். தண்ணீரில் கழுவுவதால் நச்சு நீங்காது. இதற்கு ஒரே வழி முற்றிய மாங்காய்களை வாங்கி நாமே பழுக்க வைத்து உண்பதுதான். பத்திரிகைக் காகிதங்களைக் கிழித்துப் போட்டு மாங்காய்களைப் போட்டு வைத்தால் மெதுவாகப் பழுக்கும். பழுக்கப் பழுக்க ஒவ்வொன்றாக எடுத்து உண்ணலாம்.

திராட்சைப்பழம் அறுவடையாகும் முன்னர் பல தடவை பூச்சிமருந்து அடிப்பார்கள். திராட்சைப் பழத்தை வாங்கியதும் நன்கு கழுவிவிட்டு 6 மணிநேரம் தண்ணீரில் ஊறப் போட்டுப் பின்னர் வெளியே நீரை வடியவிட்டு உண்டால், சுமார் 80 சதவீதம் விஷம் இறங்கிவிடலாம்.

அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களில் வண்டு பிடிக்காமல் இருக்க போரிக் பவுடர், கந்தகம் கலந்த தூள் போட்டிருப்பார்கள். இவை நச்சு என்பதால் வைட்டமின் "பி' ஐப் பற்றிக் கவலைப்படாமல் பல தடவை நீர்விட்டுக் களைந்து சமைப்பது நல்லது. நீரில் மற்றொரு சிறப்பு உண்டு. முதல் நாள் சமைத்த சாதத்தை வீணாக்காமல் மறுநாள் பழைய சோறாகச் சாப்பிட நிறைய நீரை ஊற்றி மூடி வைத்தால் சோறு கெட்டுப்போகாது. உயிர் நீரில் உயிரிகள் பெருகும். மேலும் ஒருநாள் நீரில் வைத்திருந்தால் புளிப்பு ஏற்படும். அதில் ஈஸ்டு உருவாகும். இது இயல்பான ஈஸ்டு. உளுந்தை இட்லி தோசைக்கு நீரில் ஊறவைத்துவிட்டுப் பின்னர் அரைக்கிறோம். அரிசியையும் அவ்வாறே. நீரில் ஊறவைத்து அரைப்பதால் வயிற்றுக்கு நன்மை செய்யும் உயிரிகள் வளர்கின்றன. அரைத்த மாவை ஒன்றுகலந்து ஒரு இரவுக்குப் புளிக்க வைத்தால் மறுநாள் காலை மாவு பொங்கி வழியும். இதிலும் இயல்பான ஈஸ்டு உருவாகிறது. திடீர் இட்லி மாவு, திடீர் தோசை மாவு என்று விற்பதை வாங்கக் கூடாது. ரசாயன செயற்கை ஈஸ்டு கலக்கப்படலாம்.

இப்போதெல்லாம் சப்பாத்தியைக்கூட பாலித்தீன் கவரில் போட்டு ரெடிமேடாக விற்கிறார்கள். கோதுமை மாவை நீரில் பிசைந்து உருட்டித்தட்டி அடித்து உருண்டையாக்கிச் சற்றுப் புளிக்க வைத்தோ - புளிக்க வைக்காமலோ அவரவர் ருசிப்படி எளிதில் இட்டு அடுப்பில் போட்டு சப்பாத்தி செய்ய முடியாதவாறு - பெண்களும், சில சமயங்களில் ஆண்களும் மாலை தொடங்கி இரவுவரை டி.வி.யில் சீரியல் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவழிப்பது நோய்க்குறியே. மனநோயாளியாக மாறவும் வாய்ப்புள்ளது. உடலையும் உள்ளத்தையும் கெடுக்கக்கூடிய டி.வி. விளம்பரதாரர் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க இயலுமானால் தேக சுகம், மன அமைதி கிட்டும்.

பாலைப் பற்றியும் பஞ்சகவ்ய மருந்தைப் பற்றியும் அறிவது பயனுடைத்து. பசும்பாலில் 88 சதவிகிதம் நீரில் 12 சதவிகிதம் திடப்பொருள் உண்டு. எருமைப்பாலில் 82 சதவிகிதம் நீரில் 18 சதவிகிதம் திடப்பொருள் உள்ளது. கொழுப்பு 3 முதல் 5 சதவிகிதம், புரதம் 9 சதவிகிதம் முதல் 13 சதவிகிதம். வெண்மை நிறம் தரும் கால்சியம் பாஸ்பேட்டும் புரதத்தில் அடக்கம். எலும்பை வலுவாக்கும் சத்து கால்சியம் பாஸ்பேட். நன்மைதரும் பாக்டீரியாக்கள் உண்டு. பால், வைரஸýக்கு எதிரி. பால் தயிராகவோ கெட்டி மோராகவோ மாறும்போது "லாக்டால்புமின் லாக்டிக்' அமிலமாகிறது. வயிற்றோட்டத்தை நிறுத்தும் இயல்பை மோர் பெறுகிறது.

பாலில் உள்ள மருத்துவக் குணத்தை வைத்து சித்தர்கள் பஞ்சகவ்யம் தயாரித்து உட்கொண்டு நோயின்றி வாழ்ந்தாக ஒரு மரபு உள்ளது. முற்காலத்தில் சிவன் கோயிலில் பசும்பாலை மையமிட்ட பஞ்சகவ்ய அபிஷேகம் செய்யப்பட்டது.

சித்த மருத்துவ நெறிப்படி தினம் 100 மில்லி பஞ்சகவ்யம் அருந்தினால் எந்த நோயும் வராது என்று கொடுமுடி டாக்டர் கே. நடராஜன் கூறுகிறார். மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர்களுக்கும் பஞ்சகவ்ய சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நடராஜன் உண்மையில் அலோபதி - ஆங்கில மருத்துவம் படித்த எம்.பி.பி.எஸ். டாக்டர் என்றாலும் இயற்கை விவசாயிகள் இவருக்கு "பஞ்சகவ்ய சித்தர்' என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் பஞ்சகவ்யத்தின் பயனைப் பரப்பி பல லட்சக்கணக்கான விவசாயிகளைப் பஞ்சகவ்யத்தைப் பூச்சிமருந்தாகப் பயன்படுத்தத் தூண்டியவர். மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் நோய் நிவாரணியாகவும் பயனாகும் பஞ்சகவ்ய ஃபார்முலா வேறு. பயிர்களுக்கு வழங்கும் ஃபார்முலா வேறு.

""வைத்யநாத தீக்ஷிதிய ஸ்ம்ருதி முக்தா பலே'' என்ற திராவிட கிரந்த சுவடியில் சிவனுக்கு அபிஷேகம் செய்து மனிதன் ஒளஷதமாக அருந்தக்கூடிய பஞ்சகவ்ய ஃபார்முலாப்படி, அரைக்கட்டவிரல் அளவு பசுவின் சாணி (10 கிராம்), 1 பலம் பசுவின் கோமயம் (120 மில்லி), 7 பலம் பசும்பால் (840 மில்லி), 1 பலம் நெய் (120 மில்லி) 3 பலம் தயிர் (360 மில்லி), 1 பலம் தர்ப்பை ஜலம்.

இந்த ஃபார்முலாவை மேட்டுப்பாளையம் நவநீத கிருஷ்ணன், கம்பாலப்பட்டி முருகேசன் ஆகியோர் கடைப்பிடித்து மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் வழங்கி நோய் நிவாரணம் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். எனினும் டாக்டர் கே. நடராஜன் ஃபார்முலாவில் ஆல்கஹால் அல்லது சுத்தமான கள், தேன், பாதாம், பிஸ்தா, பழச்சாறு உண்டு. ஆரம்பகாலப் புற்றுநோய்க்கும் மருந்தாகிறதாம்.

கடந்த 6, 7 மாதங்களாக போதிய மழை இல்லாமல் காய்கறி விலைகள் உயர்ந்துவிட்டது. நகரங்களில் உள்ளவர்கள் என்னைப் பின்பற்றி உங்கள் மொட்டைமாடியை ஒரு அழகான காய்கறித்தோட்டமாக மாற்றலாமே. தக்காளி, வெங்காயம், கத்திரி, வெண்டை, கறித்தட்டாம்பயறு, கீரை வகைகள், அகத்தி, முருங்கை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெந்தயக்கீரை என்று பயிரிட்டால் உடல் நலத்தைப் பேணலாம். வேண்டுவதெல்லாம் பூந்தொட்டி சிமெண்டு பைப், உடைந்த ஓட்டை பிளாஸ்டிக் டப், தோட்டத்து மண், விதைகள் அல்லது நாற்றுகள். பஞ்சகவ்யத்தின் மூலம் நல்ல விளைச்சல் எடுக்கலாம். நகரத்திற்கு ஏற்ற ஃபார்முலாவில் பசும்பால் கிடைக்காவிட்டால் 500 மில்லி பாக்கெட் பால், 200 மில்லி கெட்டிமோர், 10 வாழைப்பழத்தில் சற்று சர்க்கரையிட்டுப் பிசைந்த துவையல், 1 கிலோ சாணி, 50 மில்லி நெய், 200 கிராம் உளுந்து மாவு எல்லாவற்றையும் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 வாரம் ஊறப் போட்டு தினமும் குச்சியால் கலக்கிவிட்டுப் பயன்படுத்தும்போது 10 லிட்டர் தண்ணீரில் 25 மில்லி கலந்து பயிருக்கு ஊற்றிப் பாருங்கள். நல்ல விளைச்சலை மொட்டை மாடியில் பெறலாம். மாலை நேரம் சிறிது டி.வி. பெட்டிக்கு ஓய்வு வழங்கி, பயிர்களுக்கு நீர் விட்டுப் பாருங்கள். இதயம் வலிக்காது. சத்தான காய்கறி உற்பத்தி செய்து உண்ணலாமே!

புருஷன் வீட்டில் வாழப் போகும் தங்கச்சிக்கண்களும், புக்ககத்தில் வாழும் கண்களும் மாடியில் காய்கறித் தோட்டம் போட்டு இயற்கையை சுவாசிக்கலாமே! வாழ்க பாரதம்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.