தவறு செய்தவர்கள் தப்ப முடியாதா?

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரதநாடு'' என்று பெருமையுடன் பாடினார் பாரதி. இந்த நாட்டின் மக்கள் என்று கூறிக் கொள்வதற்கு ஒரு பெருமை இருக்க வேண்டும்; அப்போதுதான் நாம் செருக்குடன் தலைநிமிர்ந்து நிற்க முடியும்; நடக்க முடியும்.
Updated on
4 min read

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரதநாடு'' என்று பெருமையுடன் பாடினார் பாரதி. இந்த நாட்டின் மக்கள் என்று கூறிக் கொள்வதற்கு ஒரு பெருமை இருக்க வேண்டும்; அப்போதுதான் நாம் செருக்குடன் தலைநிமிர்ந்து நிற்க முடியும்; நடக்க முடியும்.

தந்தையைப் பற்றிய பெருமையினால்தான் தனயன் அவரது பெயரை முன் எழுத்தாகப் போட்டுக் கொள்ளுகிறான். "என் தந்தை இவர்' என்று பலர் முன் சொல்லிக் கொள்வதில் பெருமிதமடைகிறான். தந்தை சிறுமையுறுகிறபோது அவன் சோர்ந்து போகிறான். தளர்ந்த நடையும், தள்ளாட்டமும் ஏற்பட்டு விடுகிறது.

தாய்நாடு என்றும், தந்தையர் நாடு என்றும் பேசப்படும் இந்த பூமிக்குப் பெருமை என்ன? ஞானியர் பிறந்ததும், மகான்கள் திரிந்ததும், தியாகிகள் வாழ்ந்ததும், வள்ளல்கள் நடமாடியதும்தான். இமயமும், குமரியும் எல்லைகள் மட்டுமல்ல, இந்த தேசத்தின் அங்கங்கள்; கங்கை, கோதாவரி, காவிரி ஆறுகளின் ஓட்டங்கள் நீரோட்டங்கள் அல்ல, அவை நாட்டின் நாடி நரம்புகள். எல்லோரையும் வாழ வைக்கும் ரத்த ஓட்டங்கள்.

காந்தி பிறந்த நாடு; நேரு ஆண்ட தேசம்; தாகூரும், பாரதியும் பாடிப் புகழ்ந்த பூமி; விவேகானந்தரும், வள்ளலாரும் பெருமைப்படுத்திய மண்; பகத்சிங்கும், நேதாஜியும் கனவு கண்ட தேசமா இது? இந்தத் தேசம் இப்படிக் கொள்ளை போவதற்கா இவ்வளவு பாடுபட்டனர்? உடல் பொருள் உயிரை அர்ப்பணித்தனர்?

அண்மைக் காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிற லஞ்சம், ஊழல்கள் இந்த நாட்டின் பெருமைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. "பொதுநலம்' என்ற பெயரில் தன்னலமே தனியரசு நடத்துகின்றன. "எனது நாடு' என்று பெருமையோடு கூறிக்கொள்ள முடியாமல் தடுக்கின்றன.

நாட்டை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்துள்ளனர். அத்துடன் கூட்டணி அரசின் சாதனை அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்துள்ளார்.

பல்வேறு ஊழல் புகார்கள், இரண்டு மத்திய அமைச்சர்கள் பதவி விலகல் போன்றவற்றின் எதிரொலியாக அரசின் மேல் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், மே 22 அன்று நான்காம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர், "தவறு செய்தவர்கள் தப்ப முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் அரசும், அரசு சார்ந்த அறிவிக்கைகளும் இப்படித்தான் கூறுகின்றன. இவ்வளவு காலம் மக்களும் இதையே நம்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஏமாற்ற முடியும்? தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என்றால் சிறைக் கூடங்களில் இடமே இருக்காது. இந்திய அரசியலில் ஊழல் செய்து தண்டனை பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? பிரதமர் மீதே நிலக்கரி ஊழல் புகார் இருக்கிறதே!

2ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரிச் சுரங்கப் பிரச்னைகள் உருவாகக் காரணமாக இருந்த விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடக்கிறது. குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடக் கூறியுள்ளார்.

மத்திய அரசின் நான்காண்டு சாதனைப் பட்டியல், "சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களின் கனவை நனவாக்குவதற்காக அரசு பாடுபட்டு வருகிறது' என்றுதான் தொடங்குகிறது. ஏழைகளுக்கு ஆதரவான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளால் கிராமப்புறங்களில் மக்களின் நுகர்வு சக்தி 3.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும், இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து இருப்பதையே காட்டுகிறது என்றும் கூறுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை தாற்காலிகமானதுதான் என்றும், இந்த நிலை விரைவில் மாறி பொருளாதாரம் மீண்டும் எழுச்சிபெறும் என்றும், அடுத்த ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 8 விழுக்காடு வளர்ச்சியை எட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த அரசாங்கம் அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கு முன்னோடியாக இந்தச் செயலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களால் தேசத்தின் பொருளாதாரமே சுரண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சியை 8 விழுக்காடாக உயர்த்தப் போவதாக வாக்குறுதி தரப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதி எத்தனையாவது தடவையாகத் தரப்படுகிறது என்பதும் மக்களுக்கு மறந்துவிட்டது.

பெற்றோரையே கொலை செய்த ஒரு மாபாதகன், ""தான் தாய் } தந்தையில்லாத அனாதை என்றும், தனக்குக் கருணை காட்ட வேண்டும் என்றும்'' நீதிபதியிடமே முறையிட்டானாம். இந்தியாவின் பொருளாதாரத்தையே சிதைத்துவிட்ட ஓர் அரசாங்கம், அதை மேம்படுத்தப் போவதாகக் கூறுவதும் அப்படித்தான் இருக்கிறது.

நேருவின் ஆட்சிக்காலத்தில் எழுந்த முந்திரா ஊழல் மிகப்பெரிய செய்தியாக இந்தியாவையே உலுக்கியது. இப்போது ஊழல்கள் பல மடங்காகப் பெருகி பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. அதனை மூடி மறைக்கவும் அரசியல் அதிகாரங்கள் புதுப்புது முகமூடிகளை அணிந்து வருகின்றன.

"பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்' என்று மத்திய நிதியமைச்சர் ஊர் ஊராகச் சொல்லி வருகிறார். இதனால் ஏழை எளிய மக்கள் அடைந்த நன்மை என்ன?

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடும், பெட்ரோல், டீசல் விற்பனையைத் தனியாரிடம் ஒப்படைத்ததும், விலைவாசியை விண்ணைத் தொட உதவியதே தவிர, வாக்களித்த மக்கள் வாழ உதவவில்லையே!

பொதுத்துறைகளையெல்லாம் தனியாரிடம் விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றப் போகிறோம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஊழலின் ஊற்றுக்கண் இங்கேதான் ஆரம்பமாகிறது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதரையே கடித்ததுபோல இப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை விற்பதற்கு முனைந்திருக்கிறது; கேட்டால் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது புதிய நடைமுறையல்ல என்று ஓர் அமைச்சர் கூறுகிறார். இது மத்திய அரசின் கொள்கை முடிவாம்; இதில் யாரும் தலையிடக் கூடாதாம்.

உலக நாகரிகத்தின் உச்சத்தில் இருந்த கிரேக்க நாடு இன்று வறுமையின் உச்சத்தில் வாடுகிறது. அங்குள்ள குழந்தைகளில் 6 லட்சம் குழந்தைகள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர் என்று "யுனிசெப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

""கடும் பொருளாதார நெருக்கடியில் ஐரோப்பிய நாடுகள் சிக்கியுள்ளன. குறிப்பாக, கிரேக்க (கிரீஸ்) நாடு நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இதன் விளைவாக அரசாங்கம் எடுத்திருக்கும் சிக்கன நடவடிக்கையால் கிரேக்கத்தில் மேலும் நிலைமை மோசமடைந்திருக்கிறது. வங்கிகள் அனைத்தும் மூழ்கும் நிலையில் இருக்கின்றன. நாட்டில் இருக்கும் இளைஞர்கள் பாதிப்பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் கிரேக்க நாட்டின் சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. தொடர்ந்து நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருபவர்களின் எண்ணிக்கையும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வும் அதிகரித்து வருகிறது''. இவ்வாறு "யுனிசெப்' தலைவர் கூறியுள்ளார்.

இதனை இந்திய நாடு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெரிய நாடாக இருப்பினும், சிறிய நாடாக இருப்பினும் தவறான புள்ளிவிவரங்களைக் கூறி நாட்டு மக்களை எத்தனை காலம் ஏமாற்ற முடியும்?

இந்தியாவில் மனிதவளம் இருக்கிறது. இந்நாட்டிலுள்ள மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஏதேனும் உண்டா? இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களையும் விற்று விட்டால் வேலைவாய்ப்பு தருகிற கடமைகளையும் கை கழுவி விடலாம் என அரசு எண்ணுகிறது; அப்படித்தானே!

நாட்டின் நிதிப் பற்றாக்குறையும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. 2012-13 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத வகையில் 6.7 விழுக்காடாகவே அதிகரித்திருக்கிறது.

இதற்கிடையே நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறி வருகிறார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் ஒவ்வொரு நாடாகப் போய் அழைப்பு விடுகிறார்.

இப்போது எங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் சூதாட்டம் பற்றியே பேசப்படுகிறது. விளையாட்டில் சூதாட்டத்தைத் தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். அரசு நடத்த வேண்டிய லாபம் தரும் நிறுவனங்கள் தனியாருக்கு விடப்படுவதும், அவர்கள் செய்யும் தவறுகளுக்கும், தலைகுனிவுகளுக்கும் துணைபோவதும் மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.

இப்போதும் கூறப்படுகிறது: "தவறு செய்பவர்கள் தப்ப முடியாது' என்று. திருடர்கள் எல்லாம் சேர்ந்து திருடனைத் துரத்துவது போன்ற கதை இது! சில நாள்களுக்கு இதுபற்றியே பேச்சாக இருக்கும். பிறகு ஊடகங்களுக்கு வேறொரு பிரச்னை கிடைத்ததும், இது மறக்கப்பட்டுவிடும். மக்களும் புதிய பிரச்னை பற்றிப் பேச ஆரம்பித்து விடுவர்.

1984-ஆம் ஆண்டு போபால் நச்சுவாயு படுகொலைகள் நினைவிருக்கிறதா? இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளி யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் எப்படி இந்தியாவிலிருந்து தப்பிப் போனார்? அத்துடன் ஃபோபர்ஸ் பீரங்கி ஊழலில் தேடப்படும் குற்றவாளி என்ன ஆனார்? தேசத்துக்கே மாபெரும் இழப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரிச் சுரங்க ஊழல் குற்றவாளிகள் நாட்டில் உல்லாசமாக உலவி வலம் வந்து கொண்டிருக்கும்போது, "தவறு செய்தவர்கள் தப்ப முடியாது' என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

""அரசியல் விவகாரம் இன்று நாகத்தைப் போன்று நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவர் என்னதான் முயன்றாலும் அதிலிருந்து விடுபட்டுவிட முடியாது. இந்த ஒரே காரணத்தினால்தான் நான் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளுகிறேன். எனவே நாகத்துடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்...'' என்றார் காந்தியார்.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இப்போது பாம்புடன் போராடுவதுபோல அரசுகளுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். நாடு விடுதலை பெற்ற பிறகும் மக்கள் விடுதலை பெறவில்லை. ஆளும் அரசுகள் மக்களை அடிமைகள் போலவே நடத்துகின்றன. மக்களுக்கு விரோதமான திட்டங்களை "மக்கள் நலத் திட்டங்கள்' என்ற பெயரால் செயல்படுத்துவதன் காரணமே ஊழல்தான். இப்போது கூறுங்கள்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

கட்டுரையாளர்:

பணி நிறைவுபெற்ற பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com