மனிதன் இருக்கின்றானா?

அண்ட சராசரத்தில் உயிருள்ள கிரகம் இந்தப் பூமி மட்டும் தானா? பொன்விழா கண்ட கேள்வி இது.
Updated on
3 min read

அண்ட சராசரத்தில் உயிருள்ள கிரகம் இந்தப் பூமி மட்டும் தானா? பொன்விழா கண்ட கேள்வி இது.

1959 செப்டம்பர் மாதத்தில் கியூசெப்பி கொக்கானி மற்றும் பிலிப் மாரிசன் ஆகியோர் "நேச்சர்' ஆங்கில சஞ்சிகையில் எழுதிய கட்டுரை - "விண்மீன்களிடை தகவல் தொடர்புத் தேடல்'. வானவியலும், உயிரியலும் ஒருங்கிணைந்த "உயிரி-வானவியல்' துறையின் தொடக்கம். விண்வெளியில் எங்கேனும் ஒரு மூலையில் மனிதர்கள் இருக்கிறார்களா என்கிற தேடல் தொடர்கிறது.

இதற்கு இடையில், 2006 செப்டம்பர் 30 அன்று முதன்முறையாக பிரெஞ்சு தேசிய விண்வெளி ஆய்வு மையம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அண்டவெளிக்குள் ஒளிபரப்பியது. 120 இலட்சம் டாலர் செலவில் தயாரான "காஸ்மிக் கனெக்ஷன்' என்ற நிகழ்ச்சி. "ஆர்ட்டி' எனப்படும் பிரெஞ்சு-ஜெர்மன் கூட்டு நிறுவனத் தயாரிப்பு. 11 மீட்டர் அலைபரப்பு. அதில் புகைப்படங்கள், சலனப் படங்கள், வீடியோக்கள் எல்லாம் அடக்கம்.

நம் பூமியில் இருந்து 45 ஒளியாண்டுத் தொலைவில் ஏதேனும் ஒரு விண்மீனுக்கு அருகில் நம் பூமி போன்ற கிரகம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த வேற்றுக் கிரகவாசிகள் இந்த பிரெஞ்சு நிகழ்ச்சியைக் காணலாம். ஆனால் அங்கு இருந்து வரும் நேயர் விமரிசனத்தைக் கேட்க வேண்டுமானால் இங்கு தகப்பன், மகனிடம் சொல்லிவிட்டு இறக்க வேண்டும். ஏனெனில் இந்த ஒளிபரப்பு அந்தப் புதிய உலகைச் சென்ற அடையவே கி.பி.3003 ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

அண்டவெளி, வெற்றிடம் போல் தோன்றினாலும் அது காலியாக இல்லை. "கால்' (காற்று) இல்லை. அவ்வளவுதான். ஆனால் ஹைடிரஜன் அணுக்கருக்கள் வியாபித்து உள்ளன. எங்கேனும் ஹைடிராக்சில் அணுத்தொகுதியோ, தண்ணீர் மூலக்கூறோ இருந்தால் அங்கு உயிரினம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். ஹைடிரஜனின் அடையாளம் மின்காந்த அலைவரிசையில் 21 சென்டிமீட்டர் அலைநீளம்.

நமது சூரிய மண்டலத்திலேயே இன்று பூமி தவிர, செவ்வாய், வியாழன் கோளின் யூரோப்பா எனும் சந்திரன் மற்றும் சனிக் கிரகத்தின் டைட்டன் துணைக்கோள் போன்று ஒரு சில வான்பொருள்கள் முக்கியமானவை. அங்கு உயிரினம் வாழ்வதற்கு அல்லது உருவாக வாய்ப்பு உண்டாம்.

வியாழனை அணுகி ஆராயும் முயற்சியில் 1972, 1973 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவால் இரண்டு "பயனீர்' விண்கலங்கள் செலுத்தப் பெற்றன. சூரியக் குடும்பம் விட்டே வெளியேறிப் பல்லாண்டுகள் ஆயிற்று.

1977 செப்டம்பர் 5 அன்று அமெரிக்கா செலுத்திய வாயேஜர்-1 விண்கலம் மணிக்கு 44,000 கிலோமீட்டர் வேகத்தில் அண்டவெளிக்குள் பாய்ந்து செல்கின்றது. நம் சாலை வாகனங்களின் வேகத்தைவிட ஆயிரம் மடங்கு. என்ன தலைச்சுற்றுகிறதா? ஆனால் மனிதன் பூமியில் தயாரித்த ஒரு பொருள் இன்று சூரிய மண்டலம் தாண்டி 1300 கிலோமீட்டர் அண்டவெளிக்குள் புகுந்துவிட்டது.

பூமியும், சந்திரனும் இணையாகத் தோன்றும் காட்சியை 1977 செப்டம்பர் 18 அன்று முதன்முறையாக படம் பிடித்தது வாயேஜர். உலகின் முதல் வெளிப்புறக் காட்சிப் படம்.

தொடர்ந்து, 1979 மார்ச்சு 5 அன்று வியாழன் கோளினை ஏறத்தாழ 19,000 கிலோமீட்டர்கள் நெருங்கி ஆராய்ந்தது. சந்திரனையும் படம்பிடித்தது. வியாழன் கோள் ஆகிய குரு பார்வையில் மட்டும் அல்ல, உங்கள் பார்வையிலும் அதைப் பார்த்தால் "ஐயோ' என்றுதான் அலறத்தோன்றும். இன்றைக்கும் எரிமலைக் குழம்பும் புகையுமாகச் சீற்றமுடன் இருக்கும் சந்திரன் அது.

ஏதாயினும், 1990 பிப்ரவரி 14 அன்று 600 கோடி கிலோமீட்டர் தூரத்தில் பறந்தபோது ஆகாய கங்கை ஆகிய நம் பால்வீதி அண்டத்தின் ஒரு புயத்தில் பூமி, "இளம் நீலப்புள்ளி' ஆகத் தென்பட்டதாம். காரல் சாகன் என்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் இதே தலைப்பில் தனிப் புத்தகமே எழுதிவிட்டார். சனிக்கு இடப்பெயர்ச்சி செய்த அமெரிக்காவின் "காசினி' விண்கலமும் இந்தக் காட்சியைப் படம் பிடித்தது.

முதன்முதலில் சனி வளையத்தினை ஒட்டி இயங்கும் புரோமீத்தியஸ், பண்டோரா ஆகிய இரண்டு சிறு சந்திரன்களின் காட்சி ஒருவகையில் விண்வெளிக் கவிதை. அவற்றை "மேய்ச்சல் நிலக் காவல்காரர்கள்' என்றே வர்ணித்தனர் விஞ்ஞானிகள்.

சனியின் என்கெலாதஸ், டையோனி, மிமாஸ், டெத்தைஸ், டைட்டன் போன்ற பல சந்திரன்களிலும் பனி உறைந்து இருப்பதாகச் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விண்கலம் அது.

சும்மாவா, டைட்டன் சந்திர மேல் வளிமண்டலத்தில் இளஞ்சிகப்புப் புகை மூட்டம் பதிவாயிற்று. இதற்கென ஐரோப்பிய விண்வெளிக் கழகம் பின்னர் "ஹியுஜன்ஸ்' என்ற தனியொரு விண்ணூர்தியையே 2005இல் அங்கு தரை இறங்கிற்று என்றால் மேலும் சொல்வானேன்?

சூரிய மண்டலத்தின் எத்தனையோ சுவாரஸ்யமான சந்திரன்களைக் கண்டு அறிவித்த வாயேஜர் அண்டவெளியின் வெப்பப் பிளாஸ்மா மண்டலத்தில் நீந்திச் செல்கின்றது. அத்தனையும் புரோட்டான் சமுத்திரம். அதாவது ஹைடிரஜன் அணுகருக்களின் பிரவாகம்.

1998 பிப்ரவரி 17 அன்று இந்த வாயேஜர்-1, அதற்கு முன்னர் அனுப்பப்பட்ட "பயனியர்-10' விண்கலனையும் கடந்துவிட்டது. பூமியைச் சுற்றிலும் அயன மண்டலம், வளிமண்டலம் ஆகியவற்றுக்கு அப்பால் 64000 கிலோமீட்டர் உயரக் காந்தமண்டலம் போர்த்து இருப்பது பலருக்கும் தெரியாது. சூரியனில் வெடித்துக் கிளம்பும் மின் அதிர்ச்சி அலை முகப்பில் இருந்து நம்மைக் காக்கும் கவசம். அந்தப் புதிய மண்டலத்தினுள் 2012 டிசம்பர் 28 அன்று நுழைந்தது வாயேஜர்-1.

இந்தப் புலத்தைத் தாண்டியதனால் எதார்த்த அண்டவெளிதான். விண்மீன் மண்டலங்களுக்கு இடையிலான ஆற்றல் பிரதேசம். அங்கும் புரோட்டான் இம்மிகளிடையே பயணம். அண்டவெளியில் புரோட்டான் செறிவு என்பது கன சென்டிமீட்டரில் எட்டில் ஒரு பங்கு. அதாவது ஒரு பட்டாணிக்குள் 8 அரிசி வைத்த அளவு.

நல்லவேளையாக 2025 வரை இந்த விண்கலம் புவியோடு தொடர்பு கொண்டு இருக்கும். பின்னர் ஆய்வு உபகரணங்கள் அணைத்து வைக்கப்படும். மின் சிக்கன நடவடிக்கைதான். அடுத்த 10 ஆண்டுகள் வாயேஜரின் பயண விவரத் தகவல் பெறவே இந்த ஏற்பாடு. என்ன அரைநாள் காத்து இருக்க வேண்டும். இன்று காலையில் பல்துலக்கிக் கணினித் திரையைத் திறந்தால் தேற்று இரவுத் தகவல் தெரியும்.

இப்படியே, வாயேஜர்-1 விண்கலம், கி.பி.2053ஆம் ஆண்டுவாக்கில் "ஊர்ட் மண்டலத்'தினுள் குடியேறி வெளியேறும். வால்விண்மீன்களின் சரணாலயம் அது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்குப் பிறகு, கி.பி. 40,272ஆம் ஆண்டு வாக்கில் வடக்கே குறுங்கரடி உடுக்கணத்தின் ஒளி மங்கியதோர் விண்மீனுக்குப் பக்கத்தில் போய்விடும். அந்த விண்மீனுக்குப் பெயர் இல்லை. ஏ.சி.+79 3888 என்று சிறைக்கைதி மாதிரி எண் தான்.

இத்தனையும் எதற்காக? சொல்கிறேன். வாயேஜர்-1 விண்கலனில் "புவியோசைகள்' என்கிற இசைத்தட்டு இடம்பெறுகிறது. செம்பினாலான அந்த இசைத்தட்டு "கொலம்பியா ரெக்கார்ட்ஸ்' தயாரிப்பு. அதில் இருந்து அமெரிக்க நாட்டின் அந்நாள் அதிபர் ஜிம்மி காட்டரின் குரலும், ஐ.நா.பொதுச் செயலர் டாக்டர் குர்ட் வால்ட்ஹீமின் உரையும் ஒலிபரப்பாகி வருகின்றன.

அத்துடன், மழைச் சாரல், கொல்லர் பட்டறை இரைச்சல், எரிமலைச் சீற்றம், டிராக்டர் ஓசை, ரயிலின் விசில் சத்தம், சாட்டர்ன் ராக்கெட் கிளம்பும் இடியோசை மட்டும் அன்றி, கப்பல், குதிரை வண்டி, மரம் அறுப்பு இயந்திரம், அழல்விடும் நெருப்பு போன்ற இயற்கை ஒலிகளும் அண்டவெளியில் அலைபரப்பாகி வருகின்றன.

வீட்டு நாய், காட்டு நாய், கழுதைப்புலி, யானை, திமிங்கிலம், மனிதக் குரங்கு, பறவைகள், வெட்டுக்கிளி, தவளை, மேச்சல் ஆடுகள் போன்ற விலங்குகளின் குரல் ஒலிகள், குழந்தையின் மழலை, முத்தம், மனிதச் சிரிப்பு, இதயத் துடிப்பு, காலடிச் சத்தம் - 36 விதப் புவியோசைகள்.

அது மட்டுமா, 27 வகை இசைக் கச்சேரிகளுடன், உலகின் 60 மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் அலைபரப்படுகின்றன. இந்த ஒலிகளைக் கேட்டு அண்டவெளியில் எங்கிருந்தேனும் வேற்று உலக மனிதர்கள் நமக்குச் செவிசாய்க்க மாட்டார்களா என்கிற நப்பாசை தான்.

எந்த மொழியில் அவர்கள் பேச வேண்டும்? இந்தி, வங்காளி, ராஜஸ்தானி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடிஸா, கன்னடம், களிதெலுங்கு ஆகிய எட்டு இந்திய மொழிகள் சிரஞ்சீவியாக அண்டவெளிக்குள் வாழ்த்தொலி எழுப்புகின்றன. அமோய் போன்ற சிறுபான்மை மொழியும், சிங்களமும் கூட இடம்பெறுகின்றன. அண்டவெளி ஆதிமனிதர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று மேனாட்டார் நினைத்தார்களோ என்னவோ, அதில் செம்மொழித் தமிழைக் காணோமே. சமஸ்கிருதமும் இடம்பெறவில்லை என்று யாரேனும் சமாதானம் கூறலாம்.

ஆனாலும் 2013 பாரதி நினைவு நாளை ஒட்டி வாயேஜர்-1 விண்கலம் சூரிய மண்டல விளிம்புகள் தாண்டி அண்டவெளிக்குள் புகுந்தாயிற்று.

கட்டுரையாளர்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com