உளர் என்னும் மாத்திரையர்!

லார்ட் மெக்காலேயால் 1872-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்திய சாட்சியியல் சட்டம் பிரிவு 108-இன்படி, தொடர்ந்து 7 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நபர்களால் கேள்விப்படாமல் இருக்கப்படும் ஒரு நபர், உயிருடன்தான் இருக்கிறார் என்பதை, அப்படிச் சொல்பவர்தான் நிரூபிக்க வேண்டும்.
Published on
Updated on
3 min read

லார்ட் மெக்காலேயால் 1872-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்திய சாட்சியியல் சட்டம் பிரிவு 108-இன்படி, தொடர்ந்து 7 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நபர்களால் கேள்விப்படாமல் இருக்கப்படும் ஒரு நபர், உயிருடன்தான் இருக்கிறார் என்பதை, அப்படிச் சொல்பவர்தான் நிரூபிக்க வேண்டும். அதாவது, இதை எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு நபரைப் பற்றி இயற்கையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நபர்களே அவரைப் பற்றித் தொடர்ந்து 7 ஆண்டுகளாகக் கேள்விப்படவில்லை என்றால், அந்நபர் சட்டத்தின் கண்களில் இறந்தவராகக் கருதப்படுவார் என்பதுதான்.

அநேகமாக உலகின் எல்லாப் பகுதிகளிலும், இப்படி ஒரு சட்ட அனுமானம் அல்லது சட்டக் கூறு காலங்காலமாகவே இருந்து வருகிறது.

நாட்டுக்கு நாடு, அதிலும் அமெரிக்காவில் மாநிலத்திற்கு மாநிலம் இந்தச் சட்ட அனுமானத்தின் கால அளவு மாறுபட்டு இருப்பதுபோல் தெரிகிறது. அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் இதற்கான கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

காணாமல் போன ஒருவரை இறந்தவராக அனுமானிக்கப் பயன்படும் சட்டம், அந்த நபர் ஒரு வேளை திரும்பி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறவில்லை. அதன் விளைவுதான் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியன்று அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில் ஹான்காக் மாவட்ட வாரிசுரிமை நீதிமன்றம் வழங்கிய ஒரு விசித்திரமான தீர்ப்பு ஆகும்.

அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில், ஹான்காக் மாவட்டத்தில், அர்க்காடியா என்னும் கிராமத்தில் அமைதியாக வாழ்க்கையைக் கழித்து வந்த குடும்பம், மில்லரின் குடும்பம். குடும்பத் தலைவனாகிய டொனால்டு யஜின் மில்லர் ஜூனியர், அவரது மனைவி ராபின் மில்லர், அவ்விருவருக்கும் முறையே 1978-லும், 1980-லும் பிறந்த அழகான இரு பெண் குழந்தைகளாகிய ஆட்டம் டி.மில்லர், மிஸ்டி ஆர். மில்லர் மற்றும் ராபினுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த எரிக்கா மில்லர் என்னும் பெண் குழந்தை ஆகிய ஐவர் அடங்கிய குடும்பம் அக்குடும்பம்.

1986-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், திடீரென்று ஒருநாள், டொனால்டு யூஜின் மில்லர் சொல்லாமல், கொள்ளாமல் வீட்டைவிட்டு மறைந்துவிட்டார். தொடர்நது 8 ஆண்டுகள் அவரது மனைவி ராபின் அவரை கண்டுபிடிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின.

கணவரின் துணையில்லாமல், பொருளாதாரப் புயலில் சிக்கித் தவித்த ராபின், தனது இரண்டு மைனர் பெண் குழந்தைகளையும் வளர்க்கும் வழி தெரியாமல் ஹான்காக் மாவட்டத்திலுள்ள வாரிசுரிமை நீதிமன்றத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தன்

கணவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், தன் கணவர் சட்டத்தின் கண்களில்

இறந்ததாகக் கருதப்பட வேண்டுமென்றும், அந்த அடிப்படையில் தன்னுடைய இரு மைனர் குழந்தைகளுக்கும் சமூகநலத்திட்ட உதவித்தொகைகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென்றும் 1994-ஆம் ஆண்டு மனு செய்தார். அந்த மனுவைப் பற்றிய விவரத்தை உள்ளூர் நாளிதழ்களில் நான்கு வாரங்கள் வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து விளம்பரப்படுத்தவும், வழக்கின் விசாரணையை 23.5.1994 அன்று நிர்ணயித்தும் தீதிபதி

உத்தரவிட்டார்.

பத்திரிகைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, ஃபாஸ்டோரியா பாப்டிஸ்ட் சர்ச் பாதிரியார் டேவிட் சாப்மன் என்பவர் 27.5.1994 அன்று நீதிமன்றத்திற்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில் டொனால்டு யூஜின் மில்லரை ஃப்ளோரிடா நகரில் உயிருடன் பார்த்த உறவினர் இருவர், தன்னிடம் அச்செய்தியைத் தெரிவித்ததாகவும், அதைக் கேட்டபின், உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்துவிட்டவராக அறிவிக்கக் கோரும் வழக்கைப் பார்த்துவிட்டு, வாளாவிருப்பதற்குத் தன் மனசாட்சி இடம் தரவில்லை என்றும் அப்பாதிரியார் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். நீதிபதி, அக்கடிதத்தின் நகலை, ராபினுக்கும், அவரது வழக்கறிஞர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

அதைப் பார்த்துத் துணுக்குற்ற ராபின் மில்லரின் வழக்கறிஞர்கள் அந்தப் பாதிரியாருக்கு ஒரு அறிவிப்பை அனுப்பினார்கள். அதில், ராபின் மில்லர், தனது கணவரைத் தேடிக் கண்டுபிடிக்க 8 ஆண்டுகள் கடுமையாகப் பாடுபட்டுவிட்டதாகவும், கஷ்டப்பட்டு தனது மைனர் குழந்தைகளை அவர் வளர்த்திருப்பதாகவும், அதனால், அவரிடமிருந்து குழந்தை வளர்ப்பிற்காக முப்பதாயிரம் டாலர்கள் வரவேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

அதைப்போல், ராபின் மில்லரும் அந்தப் பாதிரியாருக்கு ஒரு கடுமையான கடிதத்தை எழுதினார். தனது கணவரைப் பார்த்ததாகப் பாதிரியாரிடம் கூறிய அவரது உறவினர்கள், தான் 8 ஆண்டுகளாகப் பட்ட பாட்டை அறிய மாட்டார்கள் என்றும், அவர்களால் தன் கணவரின் தற்போதைய முகவரியை ஏன் அளிக்க முடியவில்லை என்றும், சின்னஞ்சிறு வயதில், தன் இரு பெண் குழந்தைகளைத் தவிக்கவிட்டுப் போன கணவன், தங்களுக்குப் பொருள்சேதத்துடன், ""தகப்பனில்லாக் குழந்தைகள்'' என்ற மனச்சேதத்தையும் விட்டுப் போனான் என்றும், அதன் காரணமாக அக்கணவர் உண்மையிலேயே உயிருடன் இருந்தாலும், அவர் தன்னையும், தன் குழந்தைகளையும் பொருத்தவரை இறந்தவர்தான் என்றும் அக்கடிதத்தில் ராபின் குறிப்பிட்டார். அதைப் படித்த பாதிரியார், அதோடு அப்பிரச்னையை முடித்துக் கொண்டார்.

எனவே, ராபின் மற்றும் அவரது குழந்தைகளின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 31.5.1994-இல் ஒரு உத்தரவைப் போட்டு, அதன்படி 31.8.1986-லிருந்து டொனால்டு யூஜின் மில்லர் இறந்ததாகக் கருதப்பட வேண்டுமென்றும், அவருக்குப் பிறந்த மைனர் குழந்தைகளுக்கு சமூகநலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 19 ஆண்டுகளுக்குப் பின்னால், டொனால்டு யூஜின் மில்லர் திடீரென்று தோன்றி ஓட்டுநர் உரிமம் வேண்டுமென்று சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுவார் என்று 1994-இல் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட காரணத்தால், அவருக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த சமூகப் பாதுகாப்புக் குறியீட்டு எண் முடக்கப்பட்டு விட்டதாகவும், சட்டத்தின் கண்களில் அவர் இறந்ததாகக் கருதப்படுவதால், அவருக்கு ஓட்டுநர் உரிமம் தர முடியாது என்றும் மாநில நிர்வாகம் அறிவித்தது.

எனவே, 2013-ஆம் ஆண்டு ஜூலை 15-இல், டொனால்டு யூஜின் மில்லர், அதே வாரிசுரிமை நீதிமன்றத்தில் 31.5.1994-இல் தான் இறந்ததாக அனுமானிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஒரு வழக்கைத் தொடுத்தார். அந்த வழக்கை

விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மில்லரின் மனைவி ராபினுக்கு ஒரு அறிவிப்பை அனுப்பினார்.

அந்த அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட ராபின், தனது கணவர் தாக்கல் செய்த மனு, ஒஹையோ மாநிலத்தின் காலாவதிச் சட்டத்தின்கீழ், தீர்ப்பு வெளிவந்த 3 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும், ஆனால், 31.5.1994 அன்று வெளியிடபப் ட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 19 ஆண்டுகளுக்குப் பின்னால் ஜூலை 2013-இல் அம்மனு தாக்கல் செய்யப்பட்டதால், அம்மனு நிலை நிற்கத்தக்கதல்ல என்றும் பதில் வழக்காடினார்.

இதில் ஒரு வேடிக்கையான அம்சம் என்னவென்றால், அம்மனுவைத் தாக்கல் செய்தது தன் கணவனாகிய டொனால்டு யூஜின் மில்லர் அல்ல என்பது ராபினின் வாதமல்ல. வந்திருப்பது தன் கணவர்தான் என்று ஒப்புக்கொண்ட ராபின், தனது கணவரது மனு காலங்கடந்து தாக்கல் செய்யப்பட்டதால் காலாவதிச் சட்டத்தால் பாதிக்கப்பட்டது என்று மட்டும்தான் வாதிட்டார். அதற்குக் காரணம், ஒருவேளை தனது கணவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுவார் என்று நீதிமன்றத்தால் 31.5.1994-இல் வெளியிடப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால், தான் அரசிடமிருந்து அதுவரை பெற்ற உதவித் தொகைகளைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்குமோ என்ற அச்சம்தான்.

டொனால்டு யூஜின் மில்லரின் மனுவையும் அவரது மனைவி ராபினின் ஆட்சேபணையையும் பரிசீலித்த நீதிபதி, கண்ணெதிரே ரத்தமும், சதையுமாக நிற்கும் மில்லரைப் பார்த்தார். அதன் பின்னர், அம்மாநிலத்தின் காலாவதிச் சட்டத்தைப் பார்த்தார்.

பின்னர் உதடுகளைப் பிதுக்கிவிட்டு, மில்லரின் மனு காலாவதிச் சட்டத்தால் பாதிக்கப்பட்டது என்று கூறி, அதைத் தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை மில்லரின் மனைவி, மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

தற்போது டொனால்டு யூஜின் மில்லருக்கு எழுந்துள்ள பிரச்னை என்னவென்றால், உலகத்தின் கண்களில் அவர் உயிருடன் இருந்தாலும், சட்டத்தின் கண்களில் அவர் இறந்தவர்தான். அவர் உண்மையாகவே ஒருமுறை இறக்கும்வரை, அவரது நிலை என்ன என்பது ஒரு புரியாத புதிர். தற்போது அவர் ஒரு கொலை செய்தாலும், அவரைத் தூக்கிலிட முடியுமா என்பது கேள்விக்குறிதான். காரணம், சட்டத்தின் கண்களில் இறந்தவனைச் சட்டத்தின் மூலம் தூக்கிலிடுவது சாத்தியமல்ல.

கல்லாமையைப் பற்றிக் கூற வந்த திருவள்ளுவர், ""கல்லாதவர்கள் பெயரளவுக்குத்தான் இருப்பவர்கள் - மற்றபடி அவர்கள் இல்லாதவர்க்கே சமம்'', என்பதை ""உளர் என்னும் மாத்திரையர்'' என்று குறிப்பிட்டார். டொனால்டு யூஜின் மில்லர் தற்போது உளர் என்னும் மாத்திரையருள் ஒருவர்தானே?

கட்டுரையாளர்:

நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com