அடித்தட்டு மக்களின் நலனுக்கென்றே புதிய வங்கிகள் திறக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். அந்த அடித்தட்டு மக்கள் எப்படிப் பணம் சேமிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவது நன்று. ஒரு அவசரத்திற்கு பணத்தை வங்கியிலிருந்து எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் பெற முடியாது. ஆகவே அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சீட்டுக்கட்டுவது மரபாகிவிட்டது. 50,000 ரூபாய் சீட்டு, 1 லட்சம் ரூபாய் சீட்டு என்று மாதம் ரூ. 3,000, ரூ. 4,000 என்று கட்டுகிறார்கள். ஏலத்தில் தள்ளி எடுக்கிறார்கள். அது முதலாக மாறி வண்டி வாங்கவோ, வீடு கட்டவோ, திருமணத்திற்கோ செலவாகிறது. மற்றபடி அவர்களிடம் வங்கிக் கணக்கு இருப்பினும் சீட்டுப்பணம் கட்டுவது தொடர்கிறது. பெரும்பாலான சீட்டு நிறுவனங்கள் உரிமமோ - அரசுக் கட்டுப்பாடோ இல்லாதவை. உரிமம் பெற்றுள்ள சீட்டு நிறுவனங்களில் புழங்கும் பணம் ஆண்டுக்கு 1,50,000 கோடி என்றும், ஏழைகளின் கடன் தேவை இருபது லட்சம் கோடி என்றும், இத்தகைய சீட்டு நிறுவனங்கள் 20,000 கோடி மட்டுமே கடன் வழங்குவதாகச் சொல்லப்படுவதால் புதிய வங்கிகள் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பது நிதியமைச்சரின் கணிப்பாக இருக்கலாம். ஆனால் புதிய வங்கிகளைத் திறக்க கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி வழங்குவதால், உரிமம் பெறாத சீட்டு நிறுவனங்களையோ, கந்துவட்டிக்காரர்களையோ ஒழித்துவிட முடியாது. ஏனெனில் கந்துவட்டிக்காரனுக்குத்தான் கார்ப்பரேட்டுகள் கடன் தருவார்கள். இன்றைய இந்தியாவில் சுமார் 2,000 கூட்டுறவு வங்கிகள் செயலற்று இருக்கின்றன. நிதி பலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதைவிட புத்துருவாக்கம் செய்யப்பட்ட நகர - கிராமியக் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கி சேமிப்பாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதுதான் இந்திய நாட்டுக்கு ஏற்ற வங்கிக் கொள்கையாக இருக்கும்.