டாலர் என்னும் கடன் ரசீது

அமெரிக்காவின் டாலர் என்பது "நாணயம்' இல்லாத நாணயம். அமெரிக்க அதிபர் "நாம் நம்பும் கடவுளின் பெயரால்' (இன் காட் வி ட்ரஸ்ட்) என்று குறிப்பிட்டு தனது நாட்டுக் குடிமகனுக்கு வழங்கும் கடன் ரசீது.
Updated on
3 min read

அமெரிக்காவின் டாலர் என்பது "நாணயம்' இல்லாத நாணயம். அமெரிக்க அதிபர் "நாம் நம்பும் கடவுளின் பெயரால்' (இன் காட் வி ட்ரஸ்ட்) என்று குறிப்பிட்டு தனது நாட்டுக் குடிமகனுக்கு வழங்கும் கடன் ரசீது. "டாலர் பில்'. அவ்வளவுதான். அதனாலேயே கடன் வசூலிப்பவரை "பில் கலெக்டர்' என்கிறோம்.

அந்த டாலரை அரசிடம் திருப்பித் தந்து அமெரிக்கக் கருவூலத்தில் இருந்து அதற்கு ஈடான தங்கம் தாருங்கள் என்று யாராவது கேட்டுப் பார்த்தால் கிடைக்காது. இன்னொரு வெள்ளைத் தாளில் கடன் ரசீது கையெழுத்துப் போட்டுத் தருவார்களாம். பொன்னும் வராது. ஒரு மண்ணும் கிடைக்காது. இந்த வெள்ளைத் தாள் ரசீதை வைத்துக் கொண்டு இந்த உலகில் கடன்களை வாங்கிப் பெருக்கியதே டாலர் செய்த மாயம்.

1520 ஜனவரி 15 அன்று பொஹிமியா நாட்டில் ஜோவாஷிம்ஸ்தால் என்ற இடத்தில் இருந்து வெள்ளி வெட்டி எடுக்கப்பட்டது. அது ஜோவாஷிம்ஸ்தாலர் ஆகி- சுருக்கமாக "தாலர்'-டாலர் ஆயிற்று. வெள்ளியில் தொடங்கிய டாலர் இன்று வெற்றுத்தாளில் வந்து நிற்கிறது.

"விட்ட குதிரை விசைப்பின் அன்ன' என்ற சங்கப்பாடல் சுட்டுவது விசை. இயற்பியலில் இது எடையையும் குறிக்கும். ஸ்பானிய-அமெரிக்க ஆங்கிலத்தில் அதே எடை-விசை-பிஸா (பைசா?) ஆனது. இதன் பிரதான இரு ஆங்கில எழுத்துகள் - பி, எஸ். இந்த இரண்டு எழுத்துகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக எழுதினால் வரும் குறியீடே டாலரைச் சுட்டுகிறது (இந்தி மொழியின் "ர' எழுத்தின் குறுக்காகக் கிடைக்கோடு இட்ட தோற்றமே இந்திய ரூபாயின் தேசியக் குறியீடு).

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் மாய இந்தியர்கள் வாழ்ந்த அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய ஸ்பானியரின் கண்டுபிடிப்பே டாலர் ரசீது.

1619 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க அடிமை அமெரிக்காவில் வெர்ஜீனியா, ஜேம்ஸ்டவுனில் கால் வைத்தது முதல் அமெரிக்க வளர்ச்சி தொடங்குகிறது.

உழைப்பினைக் கடனாகக் கொடுத்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த ரசீது தான் டாலர் "பில்'.

நம் நாட்டில் இருந்து மேலைநாடுகளுக்குப் போகிற இன்றைய இளைஞர்களுக்கும் இதே கடன் ரசீதுதான். மாதம் 5000 டாலர் சம்பளம் என்றால் "உனக்கு 5000 டாலர் நான் கடன்பட்டிருக்கிறேன்' என்று அரசு தந்த ரசீது. இதை வைத்துக்கொண்டு அந்த நாட்டில் மீண்டும் மீண்டும் பரிமாற்றாகப் புதிய கடன் ரசீதுதான் கிடைக்குமே தவிர பொன் கிடைக்காது.

"திஸ் நோட் இஸ் லீகல் டெண்டர் ஃபார் ஆல் டெப்ட்ஸ், பப்ளிக் அண்ட் பிரைவேட்' என்றால், "இந்த தாள், பொது மற்றும் தனியாரின் அனைத்துக் கடன்களுக்கான சட்ட ரீதியான ஒப்பந்தக் கோரிக்கை' என்று தான் அமெரிக்கக் கருவூலச் செயலர் அறிவிக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு, உலக வங்கிக் கடன் கணக்கிற்கு இந்தக் கடனே ஆதாரம்.

இந்தியப் பொருளாதாரத்திற்கு பொன்னே ஆதாரம். இந்தியாவின் ஒவ்வொரு ரூபாய் தாளிலும் என்ன எழுதி இருக்கிறது? அரசின் கருவூலத்தில் இருந்து "இந்தப் பணத்தை வைத்து இருப்பவர்க்கு இதன் மதிப்பு ரூபாய்களைத் தொகையாக வழங்க உறுதிமொழிகிறேன்' என்கிற ரிசர்வ் வங்கி ஆளுநர் கையொப்பம் உண்டே.

அதாவது, அந்தப் பணத்தினை ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் திருப்பிக் கொடுத்தால் எந்த நேரமும் அதன் மதிப்புக்கு ஈடான பொன் தருவார்.

இந்திய நாணயம் என்பது அச்சிடப்பட்ட உத்தரவாதப் பத்திரம். அதில் ஒரே ஒருவர்தான் இன்றுவரை புன்னகையுடன் இருக்கிறார். அவர்தான் மகாத்மா காந்தி. அமெரிக்க டாலரிலோ ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் கடன் மதிப்பிற்கு ஏற்ப வெவ்வேறு அதிபர்கள் தோரணையாய்க் காட்சி அளிக்கிறார்கள்.

1933 ஆம் ஆண்டு அதிபர் ரூஸ்வெல்ட் டி. ஃபிராங்களின் ஒரு சட்டம் கொண்டு வந்தார். தங்க ஆபரணங்களை குடிமக்கள் தங்கள் வசம் வைத்து இருப்பது சட்டப்படி குற்றம். அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அப்படி அதட்டிச் சேகரித்த தங்கம் அந்நாளில் 400 கோடி டாலர் நிலையில் இருந்து 1200 கோடி டாலராக அதிகரித்தது.

இந்தியக் கருவூலத்தில் கிட்டத்தட்ட 5.6 லட்சம் கிலோ. திருப்பதி ஏழுமலையானிடமோ 8000 கோடி டாலர் மதிப்பு தங்க ஆபரணங்கள். இன்றைய கணக்கில் 20 லட்சம் கிலோவுக்கு குறையாது. கடந்த ஆண்டு 8.6 லட்சம் கிலோ தங்கம் இறக்குமதி வேறு.

இன்று அமெரிக்க நாட்டிலேயே மொத்தக் கருவூல கையிருப்பு ஏறத்தாழ 50 லட்சம் கிலோ. நம் நாட்டில் புழங்கும் வர்த்தகத் தங்கமோ கிட்டத்தட்ட 3 கோடி கிலோ.

கிட்டத்தட்ட 1.3 லட்சம் கோடி டாலர் மதிப்பு வரும். இதற்கு மத்தியில் சீனாவும் கதற ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவில் தங்களின் 1.25 லட்சம் கோடி டாலர் முதலீடு திரும்பி வருமோ என்று கலங்குகிறது.

எப்படியோ, இன்றைய தங்கக் கணக்கைப் பார்த்தால் இந்தியா தான் உலகிலேயே பொன்னான நாடு.

நமக்கு கருவூலத் தங்கமே மதிப்பு. அமெரிக்காவிற்கோ மாற்றான் தோட்டத்தில் ஊறும் பெட்ரோலிய எண்ணெய்க் கடன் மட்டுமே கையிருப்பு. எரிபொருள் வாங்குவதில் டாலர் (கடன் ரசீது) தந்துவிட்டு அந்த நாடுகளில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தருகிறார்கள். அதுவும் கடனுக்கு. இன்னொரு நாட்டுக்கு "கடன் ரசீது' தந்து அந்த வேலை செய்ய பிற நாட்டவரை ஏய்க்கிறார்கள்.

இன்றைக்கு 350 கோடி எண்ணிக்கையில் 100 டாலர் ரசீதுகள் அடித்து தயாராக வைத்து இருக்கிறார்களாம். யார் தலையில் கடன் ஏற்றவோ? அமெரிக்க நாணயக் கல்வி மேலாளர் சோஞ்சா டான்பர்க் அறிவிப்பு இது.

சகுனம் கெட்ட நேரத்தில் இங்கிலாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கி வியூக நிபுணர் டாராக் மாஹெர், "டாலரைத் தவிர்க்கவும்' என்று அறிவிக்கிறார். இதைத்தானே பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள் நம் இந்திய அறிவியல் அறிஞர்கள். அதைக் கேட்காமல், கார்ப்பரேட்டுகள் வாங்கும் அன்னியக் கடன்களுக்கு சாட்சிக் கையெழுத்துப் போடும் நிதி வியூக இந்தியர்களை என்ன சொல்ல?

இந்திய மானத்தை விமானத்தில் ஏற்றி காற்றில் பறக்கவிட திட்டங்கள் வைத்து இருக்கிறார்களாமே. ரூஸ்வெல்ட் பாணியில் இந்திய மக்களிடம் இருந்து தங்கத்தை அபகரிக்கவும் முயல்கிறார்கள்.

"மாண்புமிகு'க்களே, சுய உழைப்பினை முதலீடு ஆக்கி, உள்நாட்டில் சொந்தமாகப் பொருள்கள் தயாரித்து, சந்தையில் மிதமான லாபம் சேர்த்து விற்கலாம். அதை விடுத்து, அன்னிய முதலாளிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்கி, இந்தியர்களை வைத்துத் தயாரித்து, அயல்நாட்டு முகவர்களுக்கு ஏலம் விட்டால் விலைவாசி ஏறுமா? இறங்குமா?

வீட்டு இட்லி லாபமா? கடை இட்லி லாபமா?

தன் முயற்சியில் சற்றும் தளராத மந்திரி மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் மக்கள் உடலை கீழே வீழ்த்தினார்.

பின்னர் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து கேட்ட கேள்வி.

""இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தும் நீ கூறா விட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்'' என்று கூறுமுன்னமே படார் என்ற சத்தம். வெடித்தது என்னவோ கேள்வி கேட்ட வேதாளத்தின் தலைதான்!

நம் நாட்டின் பொருளாதாரத் தலைவர், மன்னர், மந்திரி மூவரும் இன்றும் காந்தியின் கொள்கைகளையே சற்று மாற்றத்துடன் கடைபிடிக்கின்றனர்.

"வாயைத் திறந்து பேசாதே...பத்திரிகைகளைப் பார்க்காதே...விமர்சனங்களைக் கேட்காதே...'

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com