ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குளத்து வேலைக்கு குப்பை வேலை மாற்று

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை காப்புறுதித் திட்டம் என்ற பெயரில் ஆண்டுதோறும் ரூ.50,000 கோடி முதல் ரூ.1,00,000 கோடி வரை செலவழிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 8:05 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை காப்புறுதித் திட்டம் என்ற பெயரில் ஆண்டுதோறும் ரூ.50,000 கோடி முதல் ரூ.1,00,000 கோடி வரை செலவழிக்கப்பட்டு வருகிறது. கிராம மக்கள் இந்தத் திட்டத்தின் பெயரைச் சுருக்கமாகக் குளத்து வேலைத் திட்டம் என்று அழைக்கிறார்கள். இப்படி அழைப்பதைவிட ""உறக்கப் பணித் திட்டம்'' என்றும் கூறலாம். ஏழை விவசாயிகள் மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே இத்திட்டத்தில் பங்கேற்கப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

காலையில் ஆஜர் பட்டியலில் பெயர் கொடுத்து விட்டுக் குளத்துக் கரையருகில் ஒரு மரத்தடியில் உறங்கிவிட்டுச் செல்வதுதான் முக்கியப் பணி.

இப்படிப்பட்ட சோம்பேறித் திட்டத்தைக் கண்டுபிடித்து ஐ.மு. கூட்டணி அரசுக்குச் சொன்ன மேதாவிகளை ""பொருளாதார மோசடிப் பேர்வழிகள்'' என்று பழி சுமத்தி இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் ஒரு புதிய ஷரத்தை உருவாக்கி, உகந்த பரிசுகளை வழங்கலாம்.

மக்களின் வரிப்பணம் இப்படி வாக்கு வங்கியை மனதில் வைத்து உற்பத்தித் தன்மையில்லாத செலவுகளுக்கு அள்ளி விடுவது சரிதானா? ஏற்றத்தாழ்வைப் போக்க ""இறைச்சி எனக்கு, எலும்பு உனக்கு'' என்று பல லட்சம் கோடியை கருப்புப் பணமாக விழுங்கிய விஷயத்தையும், இறக்குமதி என்ற பெயரில் ""ஓவர் இன்வாய்சிங்'' செய்து ராணுவத் தளவாடங்களையும், முதலீட்டு இயந்திரங்களையும் வாங்கி பல லட்சம் கோடிகளுக்கு நாணயச் செலாவணி மோசடி செய்து வர்த்தகப் பற்றாக்குறையை உருவாக்கியதையும் மூடி மறைக்கும் கவசமாக ""குளத்து வேலை உறக்கப் பணி திட்டம்'' பயனாகிறது.

இப்படிப்பட்ட குளத்து வேலைத் திட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் நிபுணர்களின் கருத்துப்படி, இப்பணி குளத்தில் தூர் எடுத்து குளத்தின் கொள்ளளவு உயர்ந்து விவசாயத்திற்கு உதவுகிறதாம். குளத்தைத் தூரெடுப்பது, நீர்வரத்துக் கால்வாய்களைத் தூரெடுப்பது போன்ற பணிகளை ஜே.சி.பி. உதவியால் ஒரே வாரத்தில் முடிக்கலாம். குளத்து வேலைக்குச் செல்லும் பெண்களால் ஓராண்டு வேலை செய்தும் அந்த வேலை முடிந்தபாடில்லை. விவசாயத்திற்கு இந்தத் திட்டம் உதவவே இல்லை. பெண்களை உறங்க வைத்தே அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் விவசாய வேலைகளுக்கு பெண் கூலித் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. போதிய வேலையாள்கள் கிடைக்காததால் விவசாய உற்பத்தி குறைகிறது. நிலச் சொந்தக்காரர்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்தக் குளத்து வேலைத் திட்டம் விவசாயத்தை அழிக்கப் பிறந்ததே தவிர ஆக்கப் பிறக்கவில்லை.

பெண்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்றால் குளத்து மேட்டில் உறங்க வைப்பதற்கு பதிலாகக் குப்பை மேட்டில் உறங்க வைக்கலாம். குப்பை மேடுகளில் பொங்கி வரும் வாசனைகள் மூக்கைத் துளைக்கும். மூக்குக்கு கவசமும், கைகளில் உறைகளும், குப்பைகளைத் தரம் பிரிக்கும் கொத்திகளையும் அள்ளிகளையும் வழங்கி மண்வெட்டி, கடப்பாரை, பாண்டுக் கூடைச் செலவுகளையும் தவிர்க்கலாம்.

மகாத்மா காந்தி தேசிய வேலைக் காப்புறுதித் திட்டத்தை நிஜமாகவே குப்பையில் தூக்கி எறிந்தால் தேசமும் சுத்தமாகும். செல்வத்தை அள்ளித் தரும் குப்பைகள் நோய்களை அள்ளித் தருகின்றனவே. ஒவ்வொரு ஊராட்சியிலும், நகராட்சியிலும் குப்பை பிரிக்கும் பணிகளில் போதிய ஆள்கள் இல்லாமல் முடங்கியுள்ளனவே. இப்படிப்பட்ட பணிகள் உள்ள இடங்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? மகாத்மா காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் வார்தா முறைக் கழிப்பிடங்கள் அமைத்து, மனித மலத்தைச் சுமந்து கம்போஸ்ட் உரம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டியவர் என்பதால், மேற்படி திட்டம் கம்போஸ்ட் உரத் தயாரிப்பு திட்டமாக மாற்றினால் நன்மை பிறக்கும். மகாத்மா காந்தியின் பெயரைப் பயன்படுத்தும் ஒரு திட்டத்திற்கு மகாத்மா விரும்பிய பணியை ஏன் நிறைவேற்ற முடியாது? இப்படிப்பட்ட முயற்சி இல்லாமல் போகவில்லை. கி.பி. 2005-இல் ஜவாஹர்லால் நேரு தேசிய நகரப் புத்தாற்றல் திட்டம் தொடங்கப்பட்டு ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் நகரத்துக் குப்பைகளை கம்போஸ்ட் செய்வதும் அடங்கும். காந்தி பெயரிலும், நேரு பெயரிலும் திட்டம் போட்டு அமைச்சர்கள் எவ்வளவு கூறு போட்டனர் என்பது விளங்கும் புதிர்தான். திட்டம், நிதி ஒதுக்கீடு என்றால் குளத்தின் பெயரில் கொள்ளை, குப்பையின் பெயரிலும் கொள்ளைதான் கண்ட பலன். பழைய தில்லியில் உள்ள மாபெரும் குப்பைக் குழியில் தில்லி நகராட்சியின் கம்போஸ்டு தொழில் கூடம் அமையப் பெற்று பணி நடந்தது.

தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் தரமில்லையென்பதால் இனாமாகக்கூட விவசாயிகள் வாங்க மறுக்கின்றனர். காரணம், மனித ஆற்றல் பற்றாக்குறை, தொழில்நுட்பப் பயிற்சியின்மை என்று பல காரணங்கள் உண்டு. இந்தியாவில் உள்ள விவசாயத் துறை - விவசாய அமைச்சரகம் - விவசாயப் பல்கலைக்கழகங்கள் இவற்றில் அக்கறை காட்டாமல், பி.ட்டி. போன்ற மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விஷ வித்துகளில் அல்லவா அக்கறை கொண்டுள்ளனர். மண்ணை வளப்படுத்தும் அரிச்சுவடியை மறந்துவிட்டனர். இதற்கெல்லாம் எம்.எஸ்ஸி. விவசாயப் பட்டம் வேண்டாம். ஐந்தாம் வகுப்பு இயற்கைப் பாடம் போதும். மண் புழுவின் ஆற்றலை மறந்துவிட்டனர். கொட்டப்படும் குப்பைகளில் உள்ள மக்கும் பொருளைப் பிரித்து எடுத்து கம்போஸ்ட் செய்ய வேண்டும். மக்காத பொருள்களிலிருந்து புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி உற்பத்தி செய்யலாம். உலர்த்தி இயந்திரங்கள், சல்லடை இயந்திரங்கள் என்று மேலை நாடுகளில் பயன்படுத்தும் இயந்திரத் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்யலாம். தரமான கம்போஸ்டும், மறுசுழற்சிப் பொருள்களும் கிட்டும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கழிக்கப்படும் குப்பைகள் ஒட்டுமொத்தமாக பல டன்கள் தேறும். இவற்றைக் கொட்ட இடமில்லாமல் நகராட்சிகள் திணறுகின்றன. குப்பைகளைக் கொட்டி ஏரி குளங்களைத் தூர்த்துவிடும் ஆட்சியாளர்களுக்கு மறுசுழற்சி பற்றிய சிந்தனையே இல்லை.

சுற்றுச்சூழலையும், நலவாழ்வையும், சுகாதாரத்தையும் காப்பாற்ற வேண்டிய மைய - மாநில அரசுகள் சரியான குப்பை நிர்வாகம் செய்யாமல் மக்களை நோயுறச் செய்து மரணப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன. டெங்கு ஜுரம், சிக்கன் குனியா, நுரையீரல் நோய்கள், சுவாச நோய், காசம், காமாலை என்று மக்கள் பலியாகின்றனர்.

நகரத்துக் குப்பைகளில் மக்கும் தன்மையுள்ள வாழை இலை, உண்ட சோற்று மிச்சம், ஓட்டல் குப்பை, காய்கறி அங்காடிக் குப்பை, உலர்ந்த இலைச் சருகுகள் போன்றவற்றை மக்க வைத்து போதிய அளவு தொழுவுரத்துடனும், உயிரி உரங்களுடனும் (சூடோமோனஸ், விருடி, அசோஸ்பெரில்லம், பாஸ்ஃபோ பாக்டீரியா) கலந்து ஊட்டம் ஏற்றிப் பார்சல் செய்ய வேண்டும்.

காய்கறி அங்காடிக் குப்பை, ஓட்டல் கழிவுகள், வீட்டில் விழும் சமையல் அறைக் குப்பை எல்லாம் தூள் தூளாக வெட்டப்பட்டு தொழுவுரத்துடன் சேர்த்து மண்புழுக்களையும் விட்டு வளர்க்க நீண்ட தொட்டிகளை அமைக்க வேண்டும். அகலம் 2 அடி ஆழம் 3 அடி, நீளம் 40-50 அடி வரை அமைத்து மண்புழு உரம் எடுக்கலாம். அல்லது கம்போஸ்ட் செய்து உயிரி உரங்கள் (கரிப் பொடியில் கலந்து வேளாண் துறை விற்கும் பாக்கெட்டுகள்) கலந்து நேர்த்தியாக பேக் செய்து கொடுத்தால் விவசாயிகள் வாங்குவார்கள். வருமானமும் கிட்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான கம்போஸ்ட் உரத்தில் ஈரநிலை 15 சதவீதம் முதல் 25 சதவீதம் இருக்கலாம். காபி நிறத்தில் கம்போஸ்ட் இருக்க வேண்டும். கூடுதல் கருமை பரவாயில்லை. கெட்ட வாசனை இருக்கக் கூடாது. கார்பன் நைட்ரஜன் விகிதம் 10:1 என்ற நிலையில் தயார் செய்ய வேண்டும். உயிரிகளின் எண்ணிக்கை பலமும் வேண்டும். ஒவ்வொரு குப்பைக் கிடங்கிலும் ஓர் உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர் பணியில் அமர்த்தப்பட்டு, கம்போஸ்ட் தயாரித்து, உரிய முறையில் சான்றிதழும் இருந்தால் நல்ல விலை போகும். மக்கும் குப்பையையும், மக்காத குப்பையையும் பிரித்தால் மட்டுமே மக்கும் குப்பை உரமாகிவிடாது.

உகந்த முறையில் கம்போஸ்ட் செய்து நல்ல / புதிய நைலான் பையில் நிரப்பித் தைக்க வேண்டும். இப்படிப்பட்ட கம்போஸ்ட் கிலோ ரூ. 5/-க்கு விற்றாலே கணிசமாக லாபமும் பெறலாம். அதற்குத்தான் குளத்து வேலைத் திட்டத்தை குப்பை வேலைத் திட்டமாக மாற்றிச் செயல்பட வைக்க வேண்டும்.

மக்காத குப்பையை என்ன செய்வது? குப்பையைச் செல்வமாக்க இரண்டு உத்திகள்தாம். ஒன்று- கம்போஸ்டிங். இரண்டு- கம்பஸ்ஷன். மக்காத குப்பைகளில் அதிகபட்சம் பிளாஸ்டிக் பைகள், கண்ணாடித் தூள், பீங்கான், பிளாஸ்டிக் பாட்டில்கள், ஹக்கி, மாதவிடாய் பஞ்சு, கிழிந்த துணிகள், பீங்கான், கண்ணாடி, உலோகம் ஆகியவற்றை நீக்கிவிட்டு மற்றவற்றை எரிக்க வேண்டும். இந்த எரிபொருள்களில் மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கலாம். மக்காத பிளாஸ்டிக் பை, துணி, பஞ்சு ஆகியவை எரியும்போது காற்று மாசாகும். ஆகவே, வெட்ட வெளியில் எரிப்பதை அனுமதிக்காமல் எரி அறை நிறுவி, மாசைக் கட்டுப்படுத்தி எரிக்கலாம். பிளாஸ்டிக் - நைலான் பொருள் எரியும்போது கார்சினோஜெனிக் டையாக்சின் என்ற நச்சு காற்றில் கலக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேலைநாடுகளில் மக்காத குப்பைகளை எரிசக்தி இயந்திரங்கள் மூலம் எரித்து மின்சக்தி எடுக்கப்படும்போது ஆண்டுக்கு 1.60 கோடி டன் மக்காத குப்பையிலிருந்து 4 கிராம் நச்சு, காற்றில் கலக்கிறது.

இந்தியாவில் மும்பையில் மட்டும் திறந்தவெளி எரிப்பால் 10,000 கிராம் நச்சு, காற்றில் கலக்கிறது. ஆகவே, குளத்து வேலைக்குச் செலவழிக்கும் பணத்தை குப்பைக்குச் செலவழிப்பதன் மூலம், இந்திய மக்களுக்குத் தூய காற்றை சுவாசிக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி ஏழை மக்களின் மருத்துவச் செலவைக் கட்டுப்படுத்தவும் வழிபிறக்கும். மக்காத குப்பைகளை எரிப்பதற்கான இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்து, தேவையான தொழில்நுட்பங்களை வளர்த்து மீண்டும் புதிப்பிக்கக் கூடிய மின்சக்தி உற்பத்திக்கு வழிகாண வேண்டும்.

இதுநாள்வரை இந்தியாவில் குப்பைகள் மனித ஆற்றலை வென்று நோய்களைப் பரப்புவதுதான் உண்மை. ""குப்பையில் செல்வம்'' என்று வேதாந்தம் பேசிப் புண்ணியம் இல்லை. குப்பை நம்மை வெல்வதை மாற்றி, நாம் குப்பையை வென்றால்தான் செல்வம். அதற்கான முதலீடுகளைப் பெற மகாத்மா காந்தி திட்டத்தை ஜவாஹர்லால் நேரு திட்டமாக மாற்றி வெற்றி பெறலாம். குளத்து வேலைத் திட்டம் நின்றாலே போதும். விவசாயமும் செழிக்கும். குப்பை வேலைத் திட்டமாக மாறிவிட்டால், குப்பையில் நோய்க்கு மாறாக செல்வம் பெறலாம்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.