பெரியார் எதிர்த்த சாதிவாரி கணக்கெடுப்பு!

'சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம்' என தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இட ஒதுக்கீட்டைச் சரியாக நடைமுறைப்படுத்த அது தேவை என்றும் "சமூக நீதி'க்கு அது வழிவகுக்கும் என்றும் கூறிவருகின்றன.

'சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம்' என தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இட ஒதுக்கீட்டைச் சரியாக நடைமுறைப்படுத்த அது தேவை என்றும் "சமூக நீதி'க்கு அது வழிவகுக்கும் என்றும் கூறிவருகின்றன.

இது சரிதானா என்பதைப் புரிந்து கொள்ள, இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், அதை இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழ்நாட்டிலும் இருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, "இந்துவென்று எங்களைப் பதியாதே' என்று தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வந்தார்கள். அதற்காக மாநாடுகளைக் கூட்டி, தீர்மானங்களை இயற்றினார்கள்.

1929-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னையில் ஆதி திராவிட மக்களால் நடத்தப்பட்ட மாநாடு ஒன்றுக்கு பெரியார் அழைக்கப்பட்டார். அந்த மாநாட்டின் தீர்மானங்களில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த தீர்மானமொன்றும் இடம் பெற்றிருந்தது.

"(இந்தியாவில்) ஆறரை கோடி மக்களடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், இனி அடுத்து வருகின்ற "சென்சஸ்' கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும்படியும், சர்க்காரிலும் எங்களை இந்துக்கள் என்கிற பதிவிலிருந்து நீக்கிவிடும் படிக்கும் செய்யும்படி சர்க்காரையும் சபை அங்கத்தினர்களையும் இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது' என்பதே அந்தத் தீர்மானமாகும்.

அந்தத் தீர்மானத்தின் மீது பேசும்படி பெரியாரை மாநாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டனர். அவர் பேசும்போது, ""இந்தத் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். நான் அநேக தடவைகளில் இதைப்பற்றி எழுதியும், பேசியும் இருக்கிறேன்.

சமீபத்தில்கூட, "எந்த சமயத்தில், எந்தக் கூட்டத்தில் மக்களுக்குச் சமத்துவம் அளிக்கப்படுகிறதோ அந்தக் கூட்டத்திலும் சமத்துவம் அளிக்கக் கூடாத மக்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க முயற்சி செய்யப் போகின்றேன்' என்று எழுதி இருந்தேன்.

சமத்துவம் வேண்டுமென்கிற மனிதனுக்குச் சமத்துவம் உள்ள மதம் எல்லாம் சம்மதமாகும். சமத்துவமில்லாத மதம் எல்லாம் ஆணவமாகும். ஆதலால் இந்தக் கொடுமையான இந்து மதத்திலிருந்து பிரிந்து கொள்ளுகிறவர்களை நான் மிகுதியும் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டார் (பெரியாரின் எழுத்தும் பேச்சும், பெரியார் திராவிடர் கழகம், 2008 தொகுதி 9 பக்கம் 53).

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் மேற்கொண்ட போராட்டங்களை வழி மொழிந்து பெரியார் அறிக்கையொன்றை 1930-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

"ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்! முக்கியமான வேண்டுகோள்' என்ற தலைப்பில் "குடி அரசு' இதழில் (9.11.1930) வெளியான அந்த அறிக்கையில், "இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கையை எடுக்கும் "சென்சஸ்' வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் தங்களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப்படுவீர்கள்.

அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம்தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேராவது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஏனெனில், ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று வேலை செய்யும்போது, நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும், கவலையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.

அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள்தனமாகும்' என பெரியார் வலியுறுத்தியிருந்தார்(பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி 11 பக்கம் 242).

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவெங்கிலும் அதே கருத்து பலராலும் வலியுறுத்தப்பட்டது. இந்திய சமூகத்தைச் சீர்திருத்துவதில் முனைப்பாக இருந்த "ஜட்பட் தோடக் மண்டல்' அதை ஒரு பிரசாரமாக மேற்கொண்டிருந்தது. அதையும் பெரியாரின் வார்த்தைகளிலேயே காண்போம்.

"அடுத்து வருகிற "சென்சஸ்' கணக்கில் (ஜனக் கணிதத்தில்) இந்துக்கள் என்பவர்கள் ஜாதிக் கணக்கைக் கொடுக்கக் கூடாது என்பதாக லாகூர் "ஜட்பட் தோடக் மண்ட'லத்தாரும் மேலும் அநேகர்களும் தீவிர முயற்சியெடுத்து வருகிறார்களென்பது யாவர்க்குந் தெரியும்.

இந்தியாவிலுள்ள சீர்திருத்தவாதிகளென்பவர்களிலும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் முதல் தாழ்ந்த ஜாதியார் என்று பிற

மக்களால் சொல்லப்படும் ஆதி திராவிடர்கள் என்கின்றவர்கள் முதலிய எல்லோராலும் அநேகமாக மேடைகளில் பத்திரிகைகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன.

இதைப் பற்றி நமது "குடி அர'சிலும் அநேக அறிஞர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதோடு, சுயமரியாதை மகாநாடு, பார்ப்பனரல்லாதார் மகாநாடு. சீர்திருத்த மகாநாடு முதலிய மகாநாடுகளில் இதைப்பற்றி பல தீர்மானங்கள் செய்யப்பட்டு அதை அநுசரித்தே அநேக கனவான்கள் ஜாதிக் குறிப்பைக் காட்டும் பட்டம் முதலியவைகளையும் விட்டிருப்பது யாவருக்கு தெரியும்.

ஆகவே ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக்கூடாதென்பது இந்தியாவின் ஒருமுகப்பட்ட அபிப்ராயமென்பதும் கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்' (பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி 11, பக்கம் 257).

சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு எதிராக பெரியார் பேசியதன் நோக்கம், இந்தியச் சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் வித்தியாசங்களும் இருக்கக்கூடாது என்பதுதான்.

"இதே வாதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பொருந்துமல்லவா? அவர்களையும் சாதி அடிப்படையில் கணக்கெடுக்கக்கூடாது என்று ஏன் சொல்லக்கூடாது' என்ற கேள்வி எழலாம்.

இப்போது அல்ல, இந்தக் குரல் 1911-ஆம் ஆண்டே எழுந்துவிட்டது. 1911-ஆம் ஆண்டு குடிக்கணக்கெடுப்புக்கு முன்னர்வரை தாழ்த்தப்பட்ட மக்கள் தனியே கணக்கெடுப்பு செய்யப்படவில்லை.

இந்துக்கள், முஸ்லிம்கள் என இரண்டு பிரிவாக மட்டும்தான் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. 1911-இல்தான் முதன்முறையாக இந்துக்களுக்குள் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தனியே கணக்கெடுப்பு செய்து, அவர்கள் 4.19 கோடி பேர் இருக்கிறார்கள் என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அறிவித்தனர்.

1921-ஆம் ஆண்டின் குடிக்கணக்கெடுப்பிலும் 1929-இல் சைமன் கமிஷன் அறிக்கையிலும் இந்திய மக்கள்தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினராக தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருந்தது.

1911-இல் இந்தியாவின் மாகாணங்களில் மொத்தமிருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 791. அதில் தாழ்த்தப்பட்டோர் வெறும் ஏழு பேர் மட்டுமே. அதாவது தாழ்த்தப்பட்டோரின் அரசியல் பிரதிநிதித்துவம் ஒரு விழுக்காடு கூட இல்லை.

பிரிட்டிஷ் இந்தியாவில் மட்டுமின்றி, சுதந்திர இந்தியாவிலும்கூட இந்தப் பிரதிநிதித்துவக் குறைபாடு தொடரவே செய்கிறது. அதனால்தான் உள்ளாட்சி அமைப்புகளிலும், சட்டமன்ற நாடாளுமன்ற அவைகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தனித் தொகுதிகளின் எண்ணிக்கையை மட்டுமல்லாது, அதை சுழற்சி முறையில் நிர்ணயிப்பதற்கும்கூட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களைக் கணக்கெடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், இந்தத் தேவை மற்றவர்களுக்கு இல்லை.

"அரசியல் இட ஒதுக்கீடு இல்லாவிட்டாலும், தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதே, அதன் அளவை நிர்ணயிப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்தானே' என்று சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால், இட ஒதுக்கீட்டின் அளவை இனிமேல் ஒருபோதும் உயர்த்த முடியாதபடி உச்சநீதிமன்றம் 50 விழுக்காடு என வரம்பு நிர்ணயித்து விட்டது.

இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கிடையே போட்டியையும், பகைமையையும், மோதலையும் உருவாக்கும். அது கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் ஒதுக்கீடுகளுக்கான கோரிக்கையாகவும், அரசியல் தளத்தில் எண்ணிக்கை பலம் கொண்ட சாதிகளின் சர்வாதிகாரமாகவும் வெளிப்படும்.

இதனால் சாதி வெறி அதிகரித்து நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு இந்தியச் சமூகம் பின்னோக்கிச் செல்லும்.

சாதி தொடர்பாக முன் வைக்கப்படும் கோரிக்கை எதுவாக இருந்தாலும், அது சாதி வெறியைக் குறைக்க உதவுமா? சாதி ஒழிப்புக்கு உதவியாக இருக்குமா? ஜனநாயகப் பண்புகளை வளர்த்து நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவுமா என்பதையெல்லாம் ஆராய்ந்தே அதை ஆதரிக்கவேண்டும்.

அதுதான் அம்பேத்கரின் அணுகுமுறை; பெரியாரின் அணுகுமுறை; அவர்களைப் பின்தொடர்கிறவர்களின் அணுகுமுறையாகவும் அதுதான் இருக்க முடியும்!

கட்டுரையாளர்: பொதுச் செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com