ஜோடி. குரூஸ் எழுதிய "கொற்கை' நாவலுக்கு கடந்த ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனது முதல் நாவலான "ஆழிசூழ் உலகு' வெளியானபோதே தமிழ் வாசகருலகில் பரவலான கவனம் பெற்ற குரூஸ், ஒரு பிரக்ஞைபூர்வமான எழுத்தாளர்.
எந்தவொரு விருதுமே அதனைப் பெறுபவரைப் பொருத்தே பெருமை கொள்கிறது. அவ்வகையில் இவ்வாண்டு விருது பெறும் ஜோ.டி. குரூஸ் விருதுக்குத் தக்கார் என்பதில் ஐயமில்லை.
ஆனால் தங்களின் செயல்பாடுகளால் தமிழ் மொழியில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் அசலான முன்னோடிக் கலைஞர்கள் அகாடமியால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
ஜோ.டி. குரூஸூக்கு "கொற்கை' இரண்டாவது நாவல். இரு ஆண்டுகளுக்கு முன்பு விருது பெற்ற "காவல் கோட்டம்' நாவலின் ஆசிரியர் சு. வெங்கடேசனுக்கு அது முதல் நாவல். (அடுத்த ஆண்டு சிறந்த நாவல் எழுதப்படும் முன்பே விருது அறிவிக்கப்பட்டால் வியப்படைய வேண்டாம்.)
முன்பெல்லாம் ஓர் எழுத்தாளர் தனது அந்திப்பொழுதில் இருக்கும்போது அவருக்கு அகாடமி விருது அறிவிப்பார்கள். "இப்படி ஓய்வூதியம் போல் கொடுக்கப்படுவதல்ல விருது' என்று பல தரப்பினரும் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, "அப்படி இல்லையென்றால் இப்படி' என்கிற பாணியில் மூத்த கலைஞர்களைப் புறக்கணித்து இளைய கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டது அகாடமி.
அகாடமி விருது பெறும் ஒரு படைப்பு, பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் வாய்ப்பைப் பெறுகிறது. ஆனால் தமிழின் மிகச்சிறந்த கலைஞர்களின் மிகச்சிறந்த படைப்புகள் பிற மொழிகளுக்குப் போய்விடாமல் அகாடமி பார்த்துக் கொள்கிறது.
அகாடமியைப் பொருத்தவரை தமிழ் மொழியில் பாரதிதாசன் சிறந்த நாடக ஆசிரியர்; லா.ச.ரா.வும் வல்லிக்கண்ணனும் பி.எஸ். ராமையாவும் சிறந்த கட்டுரையாளர்கள்; கி.வா.ஜ. சிறந்த விமர்சகர்;
அ. சீனிவாச ராகவன் சிறந்த கவிஞர்; கண்ணதாசனும் வைரமுத்துவும் சிறந்த நாவலாசிரியர்கள் - எப்படியிருக்கிறது பாருங்கள்!
வாசக ரசனையும் தேர்வுக் குழுவினரின் முடிவும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும் என்பது அவசியமில்லைதான். ஆனால், ஒரு துறையில் மகத்தான சாதனை புரிந்த ஒருவருக்கு மற்றொரு துறையில் விருது தருவது என்பது ஒரு குரூர ரசனையல்லவா?
ஒவ்வோர் ஆண்டும் விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்களின் பெயர்கள், பரிசீலனைக்கு வந்த படைப்புகள், நிராகரிக்கப்பட்ட படைப்புகள், நிராகரிக்கப்பட்டதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குமான காரணங்கள் போன்ற விவரங்களை ஊடகங்களில் அகாடமி வெளியிட்டால் என்ன?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, பிரதமரையே கேள்வி கேட்க முடியும் என்றால், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அகாடமியின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டாமா?
மேலும் தற்போதைய உலகமயச் சூழலில், குறிப்பிட்ட பகுதியின் குறிப்பிட்ட இனத்தின் வாழ்க்கை முறையை அவர்களின் பேச்சு மொழியில் பதிவு செய்கிற ஒரு படைப்பு, பிற மொழிகளுக்குச் செல்லும்போது அந்நாவலின் ஜீவரசமே நீக்கப்பட்டு ஒரு தட்டையான படைப்பாகத்தான் அது பிற மொழிகளில் அறிமுகமாகும். அது அப்படைப்பாளிக்கு இழைக்கப்படும் துரோகமேயாகும். தமிழ் மொழியிலேயே வட்டார வழக்கு என்பது தற்போது "அவசர சிகிச்சைப் பிரி'வில்தான் உள்ளது.
அது மட்டுமல்ல, அகாடமியின் விருதுக்கு பரிசீலிக்கப்பட வேண்டுமானால் அந்த படைப்பாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏதாவது படைத்திருக்க வேண்டும் என்கிற விதி உள்ளதாம்.
எழுத்தாளன் என்பவன் ஒரு மணி நேரத்துக்கு ஆறு சட்டைகள் தைக்கக்கூடிய "எக்ஸ்போர்ட்' நிறுவன தையல்காரன் அல்ல. படைப்பின் தரமும் வீரியமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, எண்ணிக்கையும் அண்மையும் அவசியம் என்னும் நிலை மாற்றப்பட வேண்டும்.
ஒரே ஒரு பாடல் எழுதிய கணியன் பூங்குன்றனார்தான் தமிழின் ஆகச்சிறந்த கவிஞரே தவிர, வக்கீல் வீட்டு அலமாரி போல காலிகோ பைண்டிங் அட்டை போட்ட தனது கவிதைப் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் கல்வியாளர் எவரும் இல்லை; இருபத்து மூன்று சிறுகதைகளே எழுதிய மௌனியின் பெயரை விட்டுவிட்டு தமிழ் சிறுகதை வரலாற்றை தொடங்கக்கூட முடியாது; இரண்டே நாவல் எழுதிய ப. சிங்காரத்தைத்தான் தமிழின் முக்கிய படைப்பாளனாக காலம் குறிக்குமே தவிர, ஆயிரம் நாவல் எழுதிய "ஸோ கால்ட்' எழுத்தாளர்களை அல்ல.
"படைப்பு' என்பது ஒரு தந்திரமான வார்த்தை. காகிதத்தில் எழுதி அச்சு வாகனத்தில் ஏற்றிவிட்டால் அதன் பேர் படைப்பா? தரம் என்ற ஒன்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?
கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் இவை தவிர பிற துறைகளில் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்கள் படைப்பாளிகள் இல்லையா? அவர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்க வேண்டிய கடமை அகாடமிக்கு இல்லையா?
உ.வே.சாவும் ஆறுமுக நாவலரும்
ஆ. சிங்காரவேலு முதலியாரும் வையாபுரிப் பிள்ளையும் இன்று இருந்திருந்தால் அவர்களின் பெயர்கள் அகாடமி விருதுக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது. காரணம் அகாடமியின் பார்வையில் அவர்கள் "படைப்பாளி'கள் இல்லையே. ஐயோ அகாடமியே!
எழுத்தாளர் சுந்தர ராமசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு, சாகித்திய அகாடமி குறித்து எழுதிய ஒரு கட்டுரையின் இறுதிப்பகுதியில் எழுதிய ஒரு வரி ஏனோ இப்போது நம் நினைவுக்கு வருகிறது. அது, "காண்டாமிருகங்களை ஈர்க்குச்சியால் குத்திக் காயப்படுத்த முடியாது!'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

