ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பணவீக்கம் என்னும் நோய்

இந்தியாவில் முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்திலிருந்தே பற்றாக்குறை நிதி (Deficit Financing) ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வளர்நிலைப் பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிதி இயல்புதான்.

News image
Updated On :8 ஜனவரி 2014, 7:57 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இந்தியாவில் முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்திலிருந்தே பற்றாக்குறை நிதி (Deficit Financing) ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வளர்நிலைப் பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிதி இயல்புதான்.

திட்டச் செலவுகளை வரிகள் மூலமும் பொதுக்கடன் மூலமும் ஈடுகட்ட முடியாத நிலையில் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறப்படுகிறது. புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு அரசு கஜானாவுக்கு வழங்கப்படுகிறது.

இப்படி உருவாக்கப்படும் பணம் நிஜப் பணம் இல்லை. கடன் வரவாக வைக்கப்படுகிறது. இதுவே பற்றாக்குறை நிதியாகும். பற்றாக்குறை நிதியால், பணப்புழக்கம் அதிகமாகி பணம் மதிப்பிழப்பதால் விலைவாசி உயர்கிறது.

முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் பற்றாக்குறை நிதி 333 கோடி ரூபாய் என்று இருந்த நிலை ஐந்தாவது திட்ட காலத்தில் (1974-79) 3655 கோடியாக உயர்ந்தது. இக்கால கட்டங்களில் பற்றாக்குறை நிதியால் தோன்றிய பணவீக்கம் சொற்பமே. புதிய பணம் உருவாக்கப்பட்டாலும் ரூபாயின் வாங்கும் சக்தி காப்பாற்றப்பட்டது.

பணத்தின் மதிப்பு காப்பாற்றப்படும்போது பணவீக்கம் நோயாக மாறாது. அரசு செலவினங்களை சமாளிக்க எந்த அளவுக்குப் பற்றாக்குறை நிதியை உருவாக்க வேண்டும் என்ற வரையறை மீறப்பட்டுவிட்டதால் இன்று பணவீக்கம் ஒரு பெரும் நோயாகிவிட்டது.

1980ஆம் ஆண்டு வரையில் சில ஆயிரங்கோடிகளாக இருந்த பற்றாக்குறை நிதி, ஆண்டுதோறும் உயர்ந்து உயர்ந்து இன்று பல லட்சம் கோடிகளாக உயர்ந்துவிட்டது. 2012-13 ஆம் ஆண்டு பட்ஜெட் கணக்கின்படி இந்தியப் பற்றாக்குறை நிதி 5.2 லட்சம் கோடி ரூபாய். பற்றாக்குறை நிதியை நிபுணர்கள் ஜி.டி.பியுடன் ஒப்பிட்டு பேசுவதுண்டு. அப்படிப்பட்ட கணக்கில் நமது பற்றாக்குறை நிதி ஜி.டி.பியில் 5.3 சதவீதம்.

இந்தப் பற்றாக்குறை நிதிக்கும் ஊழல் தொகைக்கும் கணக்கில் ஒற்றுமையுண்டு. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் இன்னும் வெளியிடப்படாத ஊழல் எல்லாம் சேர்த்தால் அதுவும் ஜி.டி.பியில் 5.3 சதவீதம். இந்த ஊழல் தொகை எல்லாம் மீட்கப்படுமானால் பற்றாக்குறை நிதியை சமாளிக்கலாம்.

அரசுச் செலவினங்களுக்குப் பற்றாக்குறை நிதி, அமைச்சர் செலவுக்கு ஒரு பற்றாக்குறை நிதி, என்றெல்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செலவு செய்தால் பணவீக்கம் நோயாக முற்றாமல் என்ன செய்யும்? பற்றாக்குறை நிதியால் பணவீக்கம் ஏற்படுகிறது.

பணவீக்கம் விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்போது சம்பள உயர்வுக்கு மீண்டும் நோட்டு அச்சாகிறது. பற்றாக்குறை நிதி உயர்ந்து பணவீக்கம் நோயாகிவிட்டது.

பணவீக்க நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், நோயை முற்ற விடாமல் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு உண்டு.

பொதுவாக, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறவுகோல் யாரிடம் என்பதில் கருத்து வேற்றுமை உள்ளது. ரிசர்வ் வங்கியிடமா? நிதியமைச்சரகத்திடமா? பொதுவாகப் பலரும் ரிசர்வ் வங்கியிடம் அதிகாரம் உள்ளதாக எண்ணி விமர்சனம் செய்கின்றனர்.

ரிசர்வ் வங்கி கவர்னர் நாசிக்கில் அச்சாபீஸ் நடத்துகிறார். பற்றாக்குறை நிதி 40,000 கோடி வேண்டும் என்று நிதியமைச்சரக உத்தரவு வந்தால், ""அவ்வளவு அச்சடிக்க முடியாது'' என்று கூற ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அதிகாரம் இல்லை. வட்டி வந்தால் சரி என்று அச்சுப் போட்டு வண்ண வண்ணக் கரன்சிகளாக அரசு கஜானாவுக்கு அனுப்பி வைக்கிறார்.

முன்பு ஒரு காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அதிகாரம் இருந்தது. பணப் புழக்கம் குறைய ரிப்போ வட்டியை மூன்று மாதத்திற்கு உயர்த்துவார். அப்போது ஓரளவுக்கு நோய் கட்டுப்பட்டது.

இப்போது அப்படியெல்லாம் இல்லை. கடந்த 18 மாதங்களில், 13 தடவை ரிப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. ஆனால் பணவீக்கமும் குறையவில்லை; விலைவாசியும் குறையவில்லை. ரிசர்வ் வங்கிக்கு பணம் அச்சடிக்கத் தெரியுமே தவிர பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாது என்பது தெளிவு. நிஜவில்லன் நிதியமைச்சரகமே.

ரிசர்வ் வங்கி ஒரு பக்கம் வட்டிவீதத்தை உயர்த்தி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயல்கிறது. ஆனால் உயர்ந்த வட்டிக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து வரம்பற்ற முறையில் நிதியமைச்சரகம் கடன் வாங்கி ரொக்கமாக பட்ஜெட் பற்றாக்குறை நிதியை ஈடு செய்து வருகிறது.

அரசு வங்கிகளிடம் வாங்கிய கடனைத் தராமல் கார்ப்பரேட்டுகள் ஏமாற்றுவதைப் போல் அரசும் ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கிய கடனைச் செலுத்துவது இல்லை. ரிசர்வ் வங்கியிடமிருந்து பற்றாக்குறை நிதியைப் பெற்று அரசு என்னதான் செய்கிறது?

இந்தியாவில் மானியங்களுக்கு அளவே இல்லை. விவசாய மானியம், உர மானியம், உணவு மானியம் ஆகியவற்றாலும் பற்றாக்குறை நிதி வளர்கிறது. விவசாயிகளைக் காரணம் காட்டிப் பல லட்சம் கோடி மானியங்கள் டிராக்டர் நிறுவனங்களுக்கும் உர நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், விவசாய மானியமோ, விவசாயக் கடனோ, விவசாயிகளை தற்கொலையிலிருந்து காப்பாற்றியதா? உணவு மானியம் வழங்கியதால் வறுமை ஒழிந்ததா? அச்சடித்த கரன்சி நோட்டுகளால் வளர்வது உரம், டிராக்டர் பங்கு நிறுவனங்களே தவிர விவசாயிகள் இல்லை. விவசாயிகளுக்கு விலையுமில்லை; வாழ்வுமில்லை.

தமிழ்நாடு நீங்கலாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வான்மழை பொய்க்கவில்லை. அரிசியும் கோதுமையும் அபாரமாக விளைந்து பண்டசாலைகள் நிரம்பி வழிகின்றன. இவ்வளவு விளைந்தும், இவ்வளவு இருப்பு இருந்தும் வெளி அங்காடிகளில் உணவு விலை குறையவில்லை.

பால், காய்கறிகள், முட்டை, ஆடு கோழி இறைச்சி விலைகளின் ஏற்றமே பணவீக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுவது நகைப்பாயுள்ளது. நோட்டடித்து நோட்டடித்துப் பணவீக்கத்தை அதிகப்படுத்தினால் எவ்வளவு விளைந்தாலும் விலை குறையாமல் இருப்பதில் வியப்பில்லை!

இருப்பினும் நிபுணர் கருத்துப்படி, தேவை உயர்ந்த அளவுக்கு வழங்கல் இல்லை. இப்படிச் சொல்லித்தான் பணத்தை வீங்க வைத்து உற்பத்தி இல்லை என்று விவசாயத்தை பலிகடாவாக்குவார்கள்.

உள்நாட்டைப் பொருத்தவரை பற்றாக்குறை நிதியினால் உருவாக்கப்படும் பணம், வீக்கத்தை ஏற்படுத்தி (பணப்புழக்கம் மிகுந்து) ரூபாயை மதிப்பிழக்க வைக்கிறது. இது ஒருபுறம். மறுபுறம், ஏற்றுமதி - இறக்குமதியில் நிலவும் வர்த்தகப் பற்றாக்குறையினாலும் பணம் மதிப்பிழக்கிறது. ஏற்றுமதி சுருங்கி இறக்குமதி விரியும்போது வர்த்தகச் சமன்பாடு பிரச்னையாகி, அந்நியச் செலாவணி இருப்பு குறைகிறது.

நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு, டாலர்களாக ரூபாயை மாற்றி வழங்கும்போது டாலர் விலை ஏற்றத்தால் இந்திய ரூபாய் மதிப்பிழந்து நஷ்டமும் விலை உயர்வும் தவிர்க்க இயலாமல் போகிறது.

இறக்குமதியாகும் பருப்பு, பாமாயில், கச்சா எண்ணெய் போன்ற பல்வேறு தொழில் முதலீட்டுப் பொருள்களின் விலை தாறுமாறாக ஏறி, பணவீக்கம் நோயாகிறது. எரிபொருள் விலை எகிர்கிறது. உணவு உற்பத்தி உயர்ந்தும்கூட, போக்குவரத்துச் செலவினால் உணவு விலை உயர்கிறது. அரசு செய்யும் பல்வேறு தண்டச் செலவுகள், ஊழல் செலவுகளை மூடிமறைக்க ""உணவுப் பணவீக்கம்'' என்று ஒரு அடைமொழி வேறு.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஊழல் அரசு தன்னைத் தக்கவைத்துக்கொள்ள விலைவாசிகளைக் கட்டுப்படுத்தினால்தான் முடியும். பணவீக்க நோயைக் கட்டுப்படுத்தினால்தான் விலைவாசி குறையும். பற்றாக்குறை நிதி குறைக்கப்பட்டால்தான் பணவீக்கம் தீரும்.

இவை குறித்த சரியான பாதையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வகுக்காவிட்டால் முகம் தெரியாத சேதத்தை வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.