மரபை மறந்தோம்

தமிழகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் "வேட்டி தினம்' என்று ஒரு நாள் அறிவிக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட நாளில் அந்தந்த நிறுவன ஊழியர்கள் வேட்டி அணிந்து வருவதும் அது போலவே பல கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் குறிப்பிட்ட நாளில் வேட்டி அணிந்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் "வேட்டி தினம்' என்று ஒரு நாள் அறிவிக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட நாளில் அந்தந்த நிறுவன ஊழியர்கள் வேட்டி அணிந்து வருவதும் அது போலவே பல கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் குறிப்பிட்ட நாளில் வேட்டி அணிந்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

அதே வேளையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை உடுத்துவதற்குக்கூட, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கென ஒரு தினத்தை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு சென்றுவிட்டதே எனும் வருத்தமும் ஏற்படுகிறது.

ஓர் இனம் அழிவதற்கு அந்த இனத்தின் மொழி அழிவது எவ்வாறு முக்கிய காரணமோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது அந்த இனத்தின் கலாசாரமும் பண்பாடும் மறக்கப்படுவது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் தமிழகத்தில் மொழி மீது மட்டுமன்றி, உடை அணியும் முறை, வாழ்க்கை முறை, உணவு முறை என பல பிரிவுகளிலும் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.

நமது பகுதியின் தட்பவெப்பநிலைக்குப் பொருந்தாத உடைப் பழக்கங்களும் உடலுக்கு தீங்குசெய்யும் உணவுப் பழக்கங்கள் நம்மிடையே பெருகிவிட்டன. மறத்தமிழன் எனப் பெருமை பேசிய நாம் இன்று பழைமையை"மறந்த' தமிழனாகி விட்டோம்.

அலுவலகச் சூழல், பயணத்துக்கு ஏற்றது போன்ற காரணங்களால் பேன்ட், சர்ட், சுடிதார் போன்றவை தவிர்க்க முடியாத உடைகளாகி விட்டன. சரி, இந்த "வேட்டி தின'த்தைத் தவிர மற்ற நாள்களில் எத்தனை இளைஞர்கள் வேட்டியும், எத்தனை இளம்பெண்கள் சேலையும் அணிகிறார்கள்? வேட்டியும், சேலையும் அணிவதில் உள்ள பாரம்பரியம் பற்றி ஏன் அவர்களுக்குத் தெரிவதில்லை? பெரியவர்களாகிய நாம் ஏன் சொல்லித்தர தவறுகிறோம்?

வரலாறு குறித்தோ பண்பாடு பற்றியோ அறிந்துகொள்ளும் அக்கறை எதுவுமின்றி இன்றைய இளைய தலைமுறை பொழுதுபோக்குகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது, அவர்களை மதிப்பெண்களை நோக்கி விரட்டுவதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறது.

நமது பாரம்பரிய பண்டிகைகளை, உற்சாகத்துடன் கடந்துபோகும் ஒரு விழாவாக மட்டுமே இன்றைய தலைமுறை பார்க்கிறது. ஒவ்வொரு பண்டிகையும் எதற்காகக் கொண்டாடப்படுகிறது, அதன் பெருமைகள், பாரம்பரியம் என்ன என்பதை அறிந்துகொள்வதில் பெரும்பாலான இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஆர்வமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு கோயிலின் எட்டடுக்கு கோபுரத்தின் உள்ளே ஏறிச்சென்று அதன் கடைசி அடுக்கில், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமைவாய்ந்த மூலிகை ஓவியங்களைக் காணும் வாய்ப்பு எனக்கு அண்மையில் கிடைத்தது.

மகாபாரதம், ராமாயணக் கதைகளின் காட்சிகள், இயற்கையான வண்ணங்களில் கண்முன்னே கதைசொல்லிக் கொண்டிருந்தபோது அதன் அருகில் யாரோ யாரையோ காதலிப்பதாக கரித்துண்டால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகம் கண்களில் பட்டு இதயத்தைக் குத்திக் கிழித்தது. எப்போதோ அங்கு வந்து சென்ற ஓர் இளைஞனின் கைவண்ணம் அது.

இந்த ஒரு கோயிலில் மட்டுமன்று, அநேகமாக எல்லா கோயில்களிலும் கோயில் என்று மட்டும் இல்லை, பாரம்பரியமாகக் கொண்டாடப்பட வேண்டிய சின்னங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் இதுபோன்ற கரித்துண்டு வாசகங்களைக் காணலாம்.

வரலாறு பற்றியோ, அதன் முக்கியத்துவம்குறித்தோ எந்தப் புரிதலும் இல்லாமல், பொதுக் கழிப்பிடங்களில் எழுதுவதுபோல கரித்துண்டால் எழுதி அதன் மதிப்பைக் கெடுப்பது மிகவும் கொடுமை. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கோயில்களைக் கட்டிய அந்தத் தமிழனின் வழித்தோன்றல்தான் இவர்களும் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது.

பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரிகத்தைக்கூட குழிதோண்டிப் புதைக்கும் நிலை இன்று உள்ளது. சாலை விதிகளை மதிக்காதது, "விளம்பரம் செய்யாதீர்' என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் சுவர்களில், "எழுதினால்?' என பதிலுக்கு எழுதுவது, கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பஸ் நிலையங்களில் பலரது மத்தியில் புகை பிடிப்பது, மது அருந்துவது என அலட்சியங்கள் பெருகிக்கொண்டே செல்கின்றன. தனிமனித ஒழுக்கம் இல்லாத, இத்தகைய செயல்களை சட்டம் போட்டு மட்டும் தடுப்பது கடினம்.

தமிழ்நாட்டில்தான் இந்த நிலைமை அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெறும் பிற மாநில மக்களின் உடைகளைப் பாருங்கள், பெரும்பாலும் அது அவர்களது பாரம்பரிய உடையாகத்தான் இருக்கிறது.

பெருமை என்பது பாரம்பரியத்தைக் கொண்டாடுவதுதானே தவிர, அதனைத் தவிர்ப்பது அல்ல.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுஉடையது இல்.

குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

திருக்குறள் (எண் 1021) அதிகாரம்: குடிசெயல் வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com