சைக்கிள் முதல் சந்திரன் வரை

அடுத்த ஐந்தாண்டுகளில் தற்போதைய விண்வெளி வணிக நாடுகளுடன் வர்த்தக ரீதியில் போட்டியிடும் அளவுக்கு இந்தியா முன்னேறி விடும் என்பது விரும்பத்தகாத உண்மை.
Updated on
4 min read

அடுத்த ஐந்தாண்டுகளில் தற்போதைய விண்வெளி வணிக நாடுகளுடன் வர்த்தக ரீதியில் போட்டியிடும் அளவுக்கு இந்தியா முன்னேறி விடும் என்பது விரும்பத்தகாத உண்மை. இல்லையென்றாலும் மேலை நாட்டு விண்வெளி உற்பத்தியாளர்கள் அலட்சியப்படுத்துகிற அல்லது விலை அதிகப்படுத்தி விட்ட செயற்கைக் கோள் நுட்பங்கள் பலவற்றையும் மூன்றாம் உலக நாடுகளுக்கு அல்லது வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்ய முயலும் என்று எதிர்பார்க்கலாம்' என்று மார்க் வில்லியம்ஸன் என்கிற விண்வெளிப் பொருளாதார நிபுணர் கணித்துரைத்தார் (நல்ஹஸ்ரீங் & இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்ள், செப்டம்பர் - அக்டோபர் 1996). கருத்தளவில் அவரது கணிப்பு முற்றிலும் உண்மை.

கடந்த ஜூன் 30 அன்று பி.எஸ்.எல்.வி - சி 23 என்ற ஏவுகலன் முதன்முறையாக 5 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை ஒரே பயணத்தில் அவற்றின் தனிச் சுற்றுப்பாதையில் கொண்டு சேர்த்து சாதனை படைத்து இருக்கிறது.

இன்றைக்கு சரியாக 33 ஆண்டுகளுக்கு முன்னால், 1981 ஜூன் 19 அன்று இந்தியாவின் "ஆப்பிள்' செயற்கைக்கோள் ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் "ஏரியன்' ஏவுகலனால் விண்ணில் செலுத்தப் பெற்றது. ஏரியன் பயணப் பயன்சுமைப் பரிசோதனைச் செயற்கைக்கோள் ("ஏரியன் பாசஞ்சர் மேலோடு எக்ஸ்பெரிமண்ட்') அது. அந்த செயற்கைக்கொள் "மீட்டியோசாட்' எனும் ஐரோப்பிய வானிலை ஆய்வுச் செயற்கைக்கோளுடன் சக பயணியாகப் பறந்து சென்றது. பிரெஞ்சு நாட்டின் தலைமையில் ஆன ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தில் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது சிறப்புச் செய்தி.

இன்றைக்கு அதே பிரெஞ்சு நாட்டு "ஸ்பாட் - 7' செயற்கைக்கோளை நம் பி.எஸ்.எல்.வி. உதவியால் விண்ணில் செலுத்தி இருக்கிறோம். ஜெர்மனியின் "ஏ.ஐ.சாட்' (14 கிலோ), கனடா நாட்டின் "நானோ செயற்கைக்கோள்' அமைப்பில் இரு செயற்கைக்கோள்கள் (ஒவ்வொன்றும் 15 கிலோ), சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகத்தின் "வெலாக்ஸ் - 1' (7 கிலோ), ஸ்பாட் - 7 உடன் சக பயணிகளாக ஏவப்பெற்றன.

ஏற்கனவே "ஸ்பாட் - 6' என்ற செயற்கைக்கோளினை 2012 செப்டம்பர் 9 அன்று பி.எஸ்.எல்.வி. - சி 21 ஏவுகலன் செலுத்தியது. பிரெஞ்சு மொழியில் "ஸ்பாட்', "புவி கண்காணிப்பு விண்கருவி' என்பதன் சுருக்கப் பெயர்.

பொன்விழா (2013) கண்ட இந்தியா விண்வெளியின் சாதனைகளை ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம். 1963 நவம்பர் 21 அன்று முதன்முறையாகத் திருவனந்தபுரம் அருகே தும்பா தளத்தில் இருந்து "நைக்கி அப்பாச்சி' வானிலை ஆய்வூர்தி செலுத்தப்பட்டது.

நாம் நாட்டிலேயே தயாரான உந்து எரிபொருளால் முதலாவது "ஆர்.எச். - 75' (தஏ - 75) என்ற "ரோகிணி வானிலை ஆய்வூர்தி' 1967 நவம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. முழு எடை வெறும் 32 கிலோ. மனித எடையில் பாதி. ஆனால் சுமார் 7 கிலோ பயன்சுமையினை 10 கிலோமீட்டர் உயரம் வரை கொண்டு சென்றது.

அன்னிய நிதி கிடைக்கப் பெறாத போதிலும் அமெரிக்கா, ரஷியா, பிரான்சு, ஜப்பான், இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி போன்ற பன்னாட்டு வானிலை ஏவூர்திகள் செலுத்தும் வசதியாகத் திகழ்கிறது தும்பா ஏவுதளம். அந்நாளில் ராக்கெட்டுகளே கூட சைக்கிளில் வைத்துத்தான் மெல்ல உருட்டிச் செல்லப்படும் என்றால் மற்றவற்றைப் பற்றிச் சொல்வானேன்?

வானிலை ஆராய்ச்சிக்காக இந்தியா முழுமையும் கண்காணிப்பதற்கு உலகைச் சுற்றும் செயற்கைக்கோள்களே கைகொடுக்கும். பிறகென்ன, செயற்கைக்கோள் ஏவுகலன் அரங்கிலும் அடியெடுத்து வைத்தோம். அவ்வகையில், சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டா, "சத்தீஷ் தவான் விண்வெளி மையம்' சிறப்பிடம் பெறுகிறது.

1971 அக்டோபர் 9 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதன்முறையாக "ரோகிணி - 125' எனும் வானிலை ஆய்வூர்தி பறக்கவிடப்பட்டது. அன்று தொடங்கி இன்றுவரை உலக விண்வெளி வரைபடத்தில் இந்தியப் பெருமை பேசும் தளம் இது.

டாக்டர் அப்துல் கலாம் திட்ட இயக்குநராக வழிநடத்திய "எஸ்.எல்.வி. - 3' செயற்கைக்கோள் ஏவுகலன் 1980 ஜூலை 18 அன்று செயற்கைக்கோள் ஏவுதலில் முதல் வெற்றி. ஏறத்தாழ 35 கிலோ 'ரோகிணி - இ - 2' என்ற உள்நாட்டுச் செயற்கைக்கோளினை 250 கிலோமீட்டர் உயரத் தாழ்புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தியது. விண்வெளி நாடுகளின் வரிசையில் இந்தியா ஆறாம் இடம் பெற்றது.

தொடர்ந்து, தகவல் தொடர்புத் துறைக்கென, "இன்சாட்' செயற்கைக்கோள் திட்டம் 1982 ஏப்ரல் மாதம் துவங்கிற்று. இதனை புவிநிலை வட்டப்பாதையில் கொண்டு சேர்க்க சொந்தமாகவே "ஜி.எஸ்.எல்.வி' தயாரித்து உள்ளோம். இதற்குரிய "அதிகுளிர் நீர்ம உந்துபொறி நுட்பம்' (கிரையோஜெனிக் எஞ்சின்) உள்நாட்டிலேயே தயாரித்து 2014 ஜனவரி 5 அன்று வெற்றியும் பெற்றோம்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பொருத்தமட்டில், முதன்முதலில் 1975 ஜூன் மாதம் "ஏ.டி.எஸ். - 6' எனும் அமெரிக்காவின் "பயன்பாட்டுத் தொழில் நுட்பச் செயற்கைக்கோள்' உதவியது. "சைட்' எனப்படும் "செயற்கைக்கோள் வழி கல்வி புகட்டும் தொலைகாட்சிப் பரிசோதனை'யும் நடத்தினோம். அது, அமெரிக்கப் பாடமுறைக் கல்வி அல்ல.

எப்படியோ, "சைட்' திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல், மேடக், பிகாரில் சாம்பரான், மத்தியப் பிரதேசத்தில் பீசல்பூர், ஒடிஸாவில் தென்கானல், ராஜஸ்தானில் ஜெய்பூர் என ஏறத்தாழ 2400 கிராமங்கள் பயன்பெற்றன. நம் நாட்டில் விண்வெளி அறிவியல் வளரவும், வேளாண்மை, குடும்ப நலம், தேசிய ஒருமைப்பாடு போன்ற நலத்திட்டங்கள் பெருகவும் உரியதோர் தொடக்க முயற்சி இது.

1977ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மன் நாட்டு "சிம்ஃபனி' உபயத்தால் "செயற்கைக்கோள் தொலைத்தகவல் தொடர்புப் பரிசோதனைகள் திட்டம்' ஈடேறியது. இதனை சுருக்கமாக, "ஸ்டெப்' என்று குறிப்பர்.

இதற்கிடையில் பாரதத்தின் முதலாவது செயற்கைக்கோள் "ஆரிய பட்டா' 1975 ஏப்ரல் 19 அன்று சோவியத் ரஷியாவின் "காஸ்மாஸ்' ஏவுகலத்தினால் விண்ணில் ஏவப்பெற்றது. இந்தியாவின் "பாஸ்கரா - 1' (07-06-1979) மற்றும் "பாஸ்கரா - 2' (20-11-1981) ஆகியவையும் விண்ணேறின.

ஆனாலும், "ஐ.ஆர்.எஸ்.' ரக இந்தியத் தொலையுணர்வுச் செயற்கைக்கோள்கள் பூமியினைத் துருவங்கள் வழி சுற்றிப் பறக்கவிட்டு வருகிறோம். இந்த வகையில் இந்தியா உலக அரங்கில் ஐந்தாம் இடம் வகிக்கிறது.

பி.எஸ்.எல்.வி. ஏறத்தாழ 16 மாடிக் கட்டட உயரம். 10 அடி குறுக்களவு, கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோ எடை. பிரம்மாண்ட ஏவூர்தி. பாருங்கள், துருவப் பாதைக்கு 1600 செயற்கைக்கோளை அனாயாசமாக எடுத்துச்செல்லும். 400 கிலோமீட்டர் உயரத்தில் தாழ்புவி வட்டப்பாதைக்கு என்றால் 3250 கிலோ எடையும் இதற்கு சர்வ சாதாரணம். 1993 செப்டம்பர் 21 தொடங்கி இன்றுவரை இருபது ஆண்டுகளில் 27 பயணங்களில் 26 முறை வெற்றி என்றால் சும்மாவா? மேனாடுகளும் கீழை நாடுகளும் இந்தியாவை வாய் பிளந்து அண்ணாந்து பார்க்கத்தான் செய்யும்.

அதிலும் முதன்முறையாக வர்த்தக ரீதியில் கொரியா தொழில்நுட்பப் பயிற்றகத்தின் 110 கிலோ "கிட்சாட்', ஜெர்மனியின் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் 45 கிலோ "டப்சாட்' என இரண்டு செயற்கைக்கோளையும் நம்நாட்டு ஐ.ஆர்.எஸ். - பி4ஏ செயற்கைக்கோளுடன் 1999 மே 26 அன்று பி.எஸ்.எல்.வி. - சி2 ஏவுகலனை விண்ணில் செலுத்தினோம்.

2008 ஏப்ரல் 28 அன்று வரலாற்றில் முதன்முறையாக பி.எஸ்.எல்.வி. - சி9 ஒரே விண்கலனால் 8 அயல் செயற்கைக்கோள்களுடன் மொத்தம் 10 செயற்கைக்கோள்களை ஒரே பயணத்தில் புவி சுற்ற அனுப்பினோம்.

அப்புறம் என்ன, அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இத்தாலி, இந்தோனேஷியா, இஸ்ரேல், கனடா, கொரியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, டென்மார்க், துருக்கி, நார்வே, நெதர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான், ஜெர்மனி, லக்சம்பர்க் போன்ற பிற நாட்டவரும் ஸ்ரீஹரிகோட்டாவை தேடி வந்து வரிசையில் நின்றனர்.

40 அயல்நாட்டு செயற்கைக்கோள்கள் நம் பி.எஸ்.எல்.வி. ஏவுகலத்தின் தலைக் கூம்பினுள் அமர்ந்து விண்வலம் கிளம்பின.

2008 அக்டோபர் 22 அன்று நமது "சந்திரயான்' நிலாப் பயணம் மேற்கொண்டதும், 2013 நவம்பர் 5 அன்று செவ்வாய் தேசம் நோக்கி "மங்கல்யான்' அனுப்பியதும் இதே வாகனம் தான்.

2011 ஜூலை 15 அன்று பி.எஸ்.எல்.வி. - சி 17 ஏவுகலனில் இடம்பெற்ற "விக்ரம்' கணிப்பொறி முழுக்க முழுக்க நம் சொந்தப் பிள்ளை என்பது பெருமைக்குரிய செய்தி.

2012 ஏப்ரல் 26 அன்று பி.எஸ்.எல்.வி. - சி 19 திட்டத்தில் ஏவப் பெற்ற "ரிசாட்' என்ற ரேடார் பிம்பப் பதிவுச் செயற்கைக்கோள் பகலில் மட்டுமின்றி, இருட்டிலும் புவிமேற்பரப்பை படம்பிடிக்கும் அதிநவீனச் செயற்கைக்கோள்.

உள்ளபடியே, மேலை நாட்டு ஏவுகலன்கள் வழி 1 டன் செயற்கைக்கோள் அனுப்புவதற்கு ஏறத்தாழ இரண்டு கோடி டாலர் செலவு ஆகும்.

ஆனால் இந்திய ஏவுகலனுக்கு அதிக பட்சம் அதில் மூன்றில் ஒரு பங்குதான் கட்டணம். ஆயினும் உலகளாவிய விண்வெளி வணிக நிலவரம் மூன்று வகையில் அமைவதாகக் கொள்ளலாம்.

முதல் நிலை வியாபாரத் தளத்தில், ரஷியா, சீனா போன்ற நாடுகள் தம் தொழில்நுட்பங்களைப் பிற நாடுகளுக்குக் குத்தகைக்கும் வாடகைக்கும் விடுகின்றன. ராணுவத் துறை உளவு அறியவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இரண்டாவது வணிக மட்டத்தில், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளோ நீண்ட காலத் தேசிய முதலீடுகள் வழி உள்நாட்டு தொழில்நுட்பங்களை உலகச் சந்தையில் கொண்டு நிறுத்துகின்றன.

நமது தேவைக்கு உரிய செயற்கைக்கோள்களை நாமே தயாரித்து நமது சொந்த ஏவுகலன்கள் வழி செலுத்துவதன் வழி விண்வெளி நவீனத் தொழில்நுட்பத் துறையில் தன்னிறைவு கண்டு வருகிறோம்.

மூன்றாவது நிலையில், தென்கொரியா போன்ற நாடுகள் அன்னியப் பல்கலைக் கழகங்கள் வழி பயிற்சி பெற்று விண்வெளித் தொழில்நுட்பத் திறமையினை மேம்படுத்திட விழைகின்றன.

ஏதாயினும், "விண்வெளி அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைகளில் கையாளுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும், குடிமக்களுக்கும் உலக அளவில் பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்வதே' ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் விண்வெளி விழாக்களின் நோக்கம்.

அதுவே இந்தியர் விருப்பமும்கூட.

கட்டுரையாளர்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com