நடுத்தர மக்களுக்கு நல்ல பட்ஜெட்!
ஒரு பட்ஜெட்டின் நோக்கம் அந்த நிதி ஆண்டின் வரவு செலவு கணக்குகளைப் பட்டியலிடுவது மட்டும் அல்ல.


ஒரு பட்ஜெட்டின் நோக்கம் அந்த நிதி ஆண்டின் வரவு செலவு கணக்குகளைப் பட்டியலிடுவது மட்டும் அல்ல. நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்குத் தேவையான புதிய திட்டங்களை வகுப்பதும், அதற்கு ஏதுவாக நிதி ஆதாரங்களைத் திரட்டுவதுமே. அதேநேரம் விலைவாசி மற்றும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது, நிதி பற்றாக்குறையை மட்டுப்படுத்துதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவையும் பட்ஜெட்டில் அடங்கும்.
இந்நிலையில், பதவி ஏற்ற 45 நாள்களில் புதிய பட்ஜெட்டை சமர்ப்பித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு மேலும் ஒரு பொறுப்பு கூடுதலாக இருந்தது. சமீபத்திய தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம்தான் அது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அருண் ஜேட்லி தனது கன்னி பட்ஜெட்டில், சமுதாயத்தின் பல தரப்பு மக்களையும், குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களை கணிசமான அளவு திருப்திபடுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
உதாரணமாக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பயனாக, வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.5,150 வரிச் செலவு மிச்சமாகும்.
வருமான வரிச் சட்டம் பிரிவு 80சியின் கீழ், சிறு முதலீடுகள் செய்கின்ற நடுத்தர மக்களுக்கு தற்போது ரூ.1 லட்சமாக உள்ள உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்களின் சேமிப்பு சாதனங்களான பிராவிடண்ட் ஃபண்டு, பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு, தேசிய சேமிப்பு பத்திரம், 5 ஆண்டுகளுக்கான வங்கி டெபாசிட்டுகள், 5 ஆண்டுகளுக்கான அஞ்சல் அலுவலக டெபாசிட்டுகள், இன்சூரன்ஸ் பிரீமியம், 2004ஆம் ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்தும் தவணைத் தொகை போன்றவற்றிற்கான வரிவிலக்கு வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் ஒருவர் வருமான வரி செலுத்தும் "ஸ்லாப்' 10 சதவீதம், 20 சதவீதம் அல்லது 30 சதவீதம் என்பதைப் பொருத்து அவருக்கு ரூ.5,150 முதல் ரூ.16,995 வரை வருமான வரி குறைய உள்ளது.
வீட்டுக்கடன் வட்டி செலுத்துபவர்களுக்கு வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அடுத்து சம்பளதாரர்களிடையே மிகவும் பலமாக இருக்கக் கூடிய பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்யக்கூடிய தொகை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயருகிறது.
இவை தவிர, எல்லாவித முதலீடு செய்பவர்களும் ஒரே ஒரு "டிமேட்' கணக்கு தொடங்கினால் போதுமானது.
மேற்கூறிய வரிச்சலுகைகளால் இரண்டு வகை நன்மை விளையும். ஒன்று, விலைவாசி மற்றும் பணவீக்கத்தால் அவதிப்படும் நடுத்தர மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
இரண்டாவது, சரிந்து வரும் "ஹவுஸ் ஹோல்டு' சேமிப்பு எனப்படும் குடும்பத் துறை சேமிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். கூடுதல் சேமிப்பு கூடுதல் மூலதன உருவாக்கத்துக்கு வழிகோலும். இது பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமானது.
இது ஒருபுறம் இருக்க, நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) நாடு முழுவதிலும் அறிமுகம் செய்ய அரசு விரும்புகிறது என்றார் நிதி அமைச்சர். அது எப்போது அறிமுகம் ஆகும் என்று கூறவில்லை. இதற்கு அரசியல் சட்டத்திருத்தம் தேவை. ஆனால் அதற்கான மசோதா நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் ஆவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
வரிவிதிப்பு சீர்திருத்தத்தை உள்ளடக்கிய, நேரடி வரி விதிப்பு முறை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
புதிதாக நேர்முக, மறைமுக வரிகள் பெருமளவில் கிடையாது. சில பொருள்களுக்கு உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் உற்பத்தி மந்த நிலையில் இருப்பதால், அதனை ஊக்குவிக்கும் வகையில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது.
சமுதாயத்தின் பல தரப்பினரும், பூகோள ரீதியில், ஜம்மு - காஷ்மீர், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஏதேனும் ஒரு வகையில் வளர்ச்சிக்கு ஏதுவான சிறிய, பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு, நீர்பாசனத்துக்கு ரூ.1,000 கோடி, விவசாயிகளுக்கு சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கு ரூ.5 ஆயிரம் கோடி, நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் வரை கடனுதவி, மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய துறைமுகங்கள், சாலைப் போக்குவரத்து மேம்பாடு, நீர் வழிப் பாதை, நாடு முழுவதும் ரூ.7,600 கோடியில் 100 நவீன நகரங்கள், சென்னையை அடுத்த பொன்னேரியில் தொழிற்பேட்டை, 5 புதிய ஐ.ஐ.டி.கள், 5 புதிய ஐ.ஐ.எம்.கள், 6 இடங்களில் ஜவுளிப் பூங்காக்கள், கங்கை நதி தூய்மைப் படுத்தல், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000ஆக உயர்வு, பார்வையற்றோருக்கு புதிய வசதிகள் மற்றும் கழிப்பறைகள் உருவாக்கம் எனப் பலப்பல சிறிய, பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட்டில் மெச்சத்தக்க விஷயம், முந்தைய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கைவிடப்படவில்லை என்பதே. அதேநேரம், இத்திட்டத்திலிருந்த பல்வேறு குறைபாடுகள் களையப்பட்டு, விவசாயப் பணியுடன் இத்திட்டம் இணைக்கப்பட உள்ளது. இதனால் விவசாயத்துக்கு தொழிலாளர்கள் கிடைக்காத நிலை மாறும்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து, 49 சதவீதமாக அதிகரிப்பது உரிய பலனைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேபோல், ராணுவத் தளவாடங்கள் துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிப்பது பலருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.எனினும், அரசின் விழிப்பும், கண்காணிப்பும் இருக்கும் பட்சத்தில் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
1991-1992ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் அளித்த பட்ஜெட்டுக்குப் பிறகு, மிக நீளமான பட்ஜெட் அருண் ஜேட்லி அளித்த பட்ஜெட் ஆகும். பல விஷயங்கள், திட்டங்கள் விரிவாக இடம்பெற்றுள்ள இந்த பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசின் திட்டம் என்ன என்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
முந்தைய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் 4.1 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. புதிய அரசின் பட்ஜெட்டிலும் 4.1 சதவீத இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜி.டி.பி. (நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு) சரிந்துள்ளது. இந்நிலையில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைப்பது சாத்தியமா?
அடுத்தடுத்த ஆண்டுகளில், அதாவது 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறை முறையே 3.6 சதவீதமாகவும், 3 சதவீதமாகவும் குறைப்பதே இலக்கு என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
பார்க்கப் போனால், நிதிப் பற்றாக்குறையை தற்போதைய அளவில் வைத்திருப்பதுகூட, வருவாய் பெருக்கத்தினால் அல்ல. மாறாக, செலவுக் குறைப்பினால்தான் - திட்டச் செலவு உள்பட!
இப்போதைக்கு நாம் எதிர்நோக்க வேண்டியிருப்பது உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து நிதி ஆதாரத்தை பெருக்குவதுதான் என்பது வெளிப்படை.
அந்த வகையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வண்ணம், முன் தேதியிட்டு வரிகள் விதிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், 2012ஆம் ஆண்டு மேற்கொண்ட சட்ட மாற்றங்களை ரத்து செய்யவில்லை.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, வங்கிகள் நீண்டகால அடிப்படையில் கடன் வழங்கலாம் என்ற அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உந்துசக்தியாக அமையும். இதனால், மின்சாரம், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை மேம்பாடு அடைவதற்கும், வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் உதவிகரமாக இருக்கும்.
பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கு அரசு பரிசீலிக்கும். பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை சிறு முதலீட்டாளர்களும், தனிப்பட்ட குடிமக்களும் வாங்குவதற்கு ஏதுவாக நடைமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார்.
வங்கிகளில், அரசின் மூலதனம் 50 சதவீதத்துக்குக் கீழே குறைக்கும் திட்டம் இல்லை என மாநிலங்களவையில் 8.7.2014 அன்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
மொத்தத்தில், விலைவாசிக் கட்டுப்பாடு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம், கட்டமைப்பு மேம்பாடு ஆகிய நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டமோ, அறிகுறிகளோ தென்படவில்லையென்றாலும் நடுத்தர மக்களை மகிழ்விக்கும் விதமாக இந்த
பட்ஜெட் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...