எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மண்மகள் அறியா வண்ணச் சீரடி

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள இடம் மங்கலதேவிக் கோட்டம். தேனி மாவட்டம் கூடலூர் வண்ணாத்திப் பாறை காப்புகாடு வனப்பகுதியில் பளியன்குடியில் இருந்து ஆறாவது கிலோமீட்டரிலும், கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் இருந்து பதினைந்தாவது கிலோமீட்டரிலும் அமைந்துள்ளது மங்கலதேவிக் கோவில். இதுவே கண்ணகிக் கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

Updated On :3 ஜூன் 2014, 8:14 pm

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள இடம் மங்கலதேவிக் கோட்டம். தேனி மாவட்டம் கூடலூர் வண்ணாத்திப் பாறை காப்புகாடு வனப்பகுதியில் பளியன்குடியில் இருந்து ஆறாவது கிலோமீட்டரிலும், கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் இருந்து பதினைந்தாவது கிலோமீட்டரிலும் அமைந்துள்ளது மங்கலதேவிக் கோவில். இதுவே கண்ணகிக் கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

கி.பி.144ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் (கி.மு. சுப்ரமணியம் பிள்ளை கணிப்பின்படி) ஆடிமாத தேய்பிறையின் வெள்ளிக்கிழமையன்று மதுரையை எரித்த கண்ணகி பதினான்கு நாள்கள் நடந்துவந்து சேர்ந்த இடமே இந்த மங்கலதேவிக் கோட்டம்.

தலைவிரி கோலமாக அழுது வந்தவள் ஒரு வேங்கை மரத்தடியினில் நின்று தன் கணவனுடன் சேர வேண்டுகிறாள். அப்பொழுது அங்குப் புஷ்பக விமானத்தில் வந்த கோவலனுடன் கண்ணகி விண்ணுலகம் சென்றாள் என்று சிலப்பதிகாரம் சொல்லுகிறது.

கண்ணகி விண்ணுலகம் செல்வதைப் பார்க்கும் பளியர் இன மக்கள் பயம்,ஆச்சர்யம்,துயரம் எனப் பலவித உணர்ச்சிகளில் தத்தளிக்கின்றனர். கண்ணகி வானேகிய சில நாட்களில், அங்குத் தன் பட்டத்தரசி வேண்மாளுடன் மலைவளம் காணவந்த தங்களின் மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் நடந்ததைச் சொல்லுகின்றனர். மன்னன் உடனடியாக அந்தச் சம்பவத்தைப் பற்றி முழுமையாக அறிய விரும்புகிறான். அப்பொழுது மன்னனுடன் வந்த புலவர் சாத்தனார் மன்னனுக்கும், மன்னனின் இளவல் இளங்கோவடிகளுக்கும் கண்ணகியின் வரலாற்றைக் கூறுகின்றார்.

கண்ணகியின் வரலாற்றைக் கேட்ட இளங்கோவடிகள் அவள் வரலாற்றைக் காவியத்தில் வடிக்க முடிவு செய்கிறார். மன்னன் செங்குட்டுவன் இமயம் சென்று கல் கொண்டு வந்து கண்ணகிக்குச் சிலை வடிக்க முடிவு செய்கிறான். சேர நாட்டின் சகோதரர்கள் இருவரும் கல்லிலும் காப்பியத்திலும் பதிந்து வைத்துவிட்டுப் போனதே கண்ணகியின் வரலாறு.

எழுத்தில் வடிக்கும் ஏடுகூடத் தொலைந்து போகலாம். கல்லில் வடிப்பதே காலத்தைக் கடந்தும் நிற்கும் என்பார்கள். வாழ்க்கையின் எல்லா முரண்களாலும் பெருந்துயருக்கு ஆளான கண்ணகிக்கு இதிலும் முரணே நிகழ்ந்துள்ளது. சிலப்பதிகாரம் நம் கையில் உள்ளது. சேரன் செங்குட்டுவன் வடித்த சிலை எங்குள்ளது?

இமயம் சென்று பத்தினி தெய்வத்திற்குச் சிலை வடிக்க வேண்டும் என்று சேரன் செங்குட்டுவன் புறப்பட்டுச் செல்கிறான். அங்குத் தமிழர்களை இழிவாகப் பேசிய ஆரிய மன்னர்களை வென்று, தோற்ற மன்னர்களான கனகன், விஜயனின் (கனக விஜயன் ஒருவனே என்போரும் உள்ளனர். நம் பிரச்னை இப்பொழுது அதுவல்ல) தோள்களின்மேல் கல் கொண்டு வந்து மங்கலதேவிக் கோட்டத்தில் கண்ணகியின் படிமம் வடித்துக் கோவில் கட்டுகிறான்.

கட்டப்பட்ட கோவிலின் குடமுழுக்கு விழாவிற்குத் தன்னுடைய நேச நாடுகளின் மன்னர்களை அழைக்கிறான். அந்த விழாவிற்கு இலங்கை மன்னன் கயவாகுவும் வருகை தருகிறான். கயவாகு கண்ணகியின் பெருமையை அறிந்து, மங்கலதேவிக் கோட்டத்தில் இருந்து, ஒரு காற் சிலம்பு கொண்டுபோய் இலங்கையில் பத்தினி தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறான்.

கயவாகுவின் காலத்தை வைத்தே சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தை இரண்டாம் நூற்றாண்டு (கி.பி.144) என்று கணிக்கின்றனர் (இன்று காரவேலனின் அதிகும்பா கல்வெட்டுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சிலம்பின் காலம் கி.மு.80 முதல் கி.மு.75-க்குள் என்போரும் உள்ளனர்).

அன்று தொடங்கி இன்று வரை இலங்கையில் குறிப்பாக வட இலங்கைப் பகுதி முழுவதிலும் கண்ணகி வழிபாடு பத்தினி தெய்யோ என்ற பெயரில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெண் தெய்வ வழிபாடு இல்லாத பெüத்தத்தில் கண்ணகி மட்டும் இன்றும் விதிவிலக்காக வழிபடப்படுகிறாள்.

கேரளாவின் கொடுங்களூரிலும் சேரன் செங்குட்டுவன் காலத்தில் தொடங்கப்பட்ட கண்ணகி வழிபாடு பகவதி அம்மன் வழிபாடாக இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், வழிபாடு தொடங்கப்பட்ட நம் தமிழகத்தின் கண்ணகி கோவில் வழிபாடு என்ன ஆயிற்று?இன்றைக்கு மங்கலதேவிக் கோவிலின் நிலை என்ன?

மங்கலதேவிக் கோட்டத்தில் நான்கு கோவில்கள் உள்ளன. சேரன் சிலை வடித்து வழிபட்ட கல் மண்டபமே முதல் கோவில். அங்குச் செங்குட்டுவன் வடித்த சிலை இல்லை. (கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இன்றைக்குள்ளதைப் போல் முழுமையான சிலையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நடுகல்லாகவோ, உருவப் படிமமாகவோ இருந்திருக்கலாம்.

பின் வந்த மன்னர்கள் காலத்தில்கூடக் கண்ணகிக்கு சிலை வடிக்கப்பட்டிருக்கலாம்.) பிற்காலத்தில் வைக்கப்பட்ட கண்ணகிச் சிலையும் சிதைக்கப்பட்டுப் பீடத்தில் இருந்து கால்பகுதி மட்டுமே உள்ளது. இரண்டாவது சிவனுக்கு ஒரு கோவிலும், இன்னும் இரண்டு கற்கோவில்களும் உள்ளன. அதற்குள்ளே சிலைகள் காணப்படவில்லை. மண்டபத்திற்கு வெளியே பெரிய விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

மங்கலதேவிக் கோவிலின் உண்மையான பிரச்னை பழுதடைந்திருக்கும் கட்டிடங்கள் மட்டுமல்ல. மங்கலதேவியை வழிபடுவதே பிரச்னையாக உள்ளது. காரணம் கோவிலின் அமைவிடம். மங்கலதேவி மலையும் கோவிலும் கோவிலுக்குச் செல்லும் பாதையும் நம்முடைய தமிழகத்தின் வண்ணாத்திப் பாறையின் பாதுகாக்கப்பட்ட வனத்துறையில் இருக்கிறது.

1883ஆம் ஆண்டுக் கூடலூர் மக்கள் கோவிலுக்குச் செல்லும் பாதையைச் சீரமைப்பதற்காக ஆங்கில அரசிடம் அனுமதி கேட்டார்கள். ஆங்கில அரசு 12 அடி அகலத்திற்குப் பாதை அமைத்துக் கொள்ளலாம் என்றும், வேறு காட்டு வெள்ளாமை எதுவும் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.

இதற்கான ஆணை 15.11.1883 தேதியன்று வெளியிடப்பட்ட கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் போலவே 1839, 1896ஆம் ஆண்டுக்கான நில அளவை ஆவணங்களும் இக்கோவில் பகுதி தமிழகத்திற்கே சொந்தம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவைபோல் ஏராளமான ஆவணங்கள் உள்ளன.

இறுதியாக, 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழக அரசின் நில அளவை பதிவேடுகள் துறை இணை இயக்குனர் திரு. கணேசனும், கேரள அரசின் துறைத் தலைவரும் கூட்டாக ஆய்வு செய்து மங்கலதேவியின் கோவில் கேரள எல்லையில் இருந்து 44 அடிதூரத்தில் தமிழக எல்லையில் உள்ளது என்று அறிக்கை அளித்தனர்.

இவ்வளவுக்குப் பிறகும் அந்தக் கோவில் கேரள அரசின் தொல்லியல் துறையினரால் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தக் கோவில் கேரள அரசின் கோவிலாக,அவர்களின் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

கோவிலின் உரிமை அவர்களிடம் சென்று விட்டாலும் தமிழ் மக்கள் ஆண்டுதோறும் சித்ரா பெüர்ணமி அன்று மங்கல தேவிக் கோட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். மங்கலதேவிக் கண்ணகி கோவில் கேரள மாநிலம் குமுளியிலிருந்து ஏழாவது கி.மீ. தூரத்தில் 4380 அடி உயரத்தில் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசு இந்த ஆறு கி.மீ. தூரத்திற்கும் ஒரு ஜீப் பாதை போட்டுள்ளது. தமிழகப் பகுதியான கூடலூர் லோயர் கேம்ப்பிலிருந்து ஆங்கில அரசு அமைத்துக் கொடுத்த 12 அடி அகலமுள்ள நடைபாதையில் நடந்தால் ஏழு கி.மீ. தூரத்தில் கண்ணகி கோவில் உள்ளது. தமிழக எல்லைப் பகுதியான லோயர் கேம்ப் பகுதி பாதையைப் பயன்படுத்தினால் கேரள எல்லைக்குள் போகாமலேயே மங்கலதேவிக் கண்ணகி கோவிலை அடையலாம். ஆனால் ஏழு கி.மீ. நடக்க வேண்டும்.

1983ஆம் ஆண்டு வரை மங்கலதேவிக் கண்ணகி கோவிலுக்குச் செல்ல தமிழக எல்லைக்குள் உள்ள நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மூன்று நாள்களுக்கு இக்கோவிலில் விழா நடக்கும். இந்த மூன்று நாள்களும் கம்பம், கூடலூரிலிருந்து பேட்டரி மூலம் இயங்கும் ஒலிபெருக்கியையும், வண்ண விளக்குகளையும் எடுத்துச் சென்று மங்கலதேவியை வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். ஆடுகள், கோழிகள் பலி கொடுக்கப்பட்டு சமையல் செய்து அங்கேயே மூன்று நாட்களும் தங்குவர்.

இப்போது 3 நாள் விழா 8 மணி நேர விழாவாக்கப்பட்டதோடு ஒலி பெருக்கிகள், வண்ண விளக்குகள் கொண்டு செல்லவும், பலியிடவும் அனுமதி மறுக்கப்படுகிறது. சமையலும் கூட கடந்த முப்பது ஆண்டுகளாக தடை செய்யப்பட்டு விட்டது.

ஒவ்வொரு ஆண்டும் கண்ணகி விழா நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தமிழகத்தின் சார்பில் தேனி மாவட்ட அதிகாரிகளும், கேரளத்தின் இடுக்கி மாவட்ட அதிகாரிகளும், இரு மாநிலத்திற்கும் பாதிப் பாதிச் சொந்தமான குமுளி நகரில் முகாமிட்டு கண்ணகி விழா குறித்து ஆலோசிக்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குத் தமிழகத்திலிருந்து மங்கலதேவிக் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளும் கேரள, தமிழகப் பிரமுகர்களும் அழைக்கப்பட்டு அவர்களது கருத்தும் பதிவு செய்யப்படுகிறது.

மங்கலதேவிக் கண்ணகி அறக்கட்டளையினர் விழாவில் எத்தனை வாழை மரம் கட்டலாம் என்பது போன்ற சிறு நிகழ்வுகள் கூடக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் டிராக்டர்களில் உணவைக் கொண்டு வந்து அறக்கட்டளையினர் அன்னமிட முன் அனுமதி பெறவேண்டும்.

இதுவரை ஏழு டிராக்டர்களில் (ஏறக்குறைய 2200 கிலோ அரிசி) கொண்டுபோக அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த ஆண்டாவது சித்ரா பெüர்ணமி விடுமுறை நாளில் வந்து விட்டால் கூட்டம் அதிகமாக வரும் என நினைத்து எட்டாவதாக ஒரு டிராக்டரில் சமைக்கப்பட்ட உணவு எடுத்து வந்தால் அந்த டிராக்டர் தடுத்து நிறுத்தப்படும்.

கேரள வனத்துறை சார்பில் மூன்று பெரிய சின்டெக்ஸ் டாங்கில் தண்ணீர் வைக்கப்படும். மழை வந்தால் அண்டிக் கொள்ள மூன்று டென்டுகளைக் கேரள வருவாய்த்துறை அமைக்கும். இதில் ஒரு டென்ட்டில் தமிழக அதிகாரிகள் கேரள வருவாய்த்துறை அதிகாரிகளோடு சேர்ந்துப் பயன்படுத்தலாம். விழா முடிந்தவுடன் கோவில் முழுவதையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து தர வேண்டியது கண்ணகி அறக்கட்டளையினரின் பணி. அனைத்தையும் முடித்து மாலை 5 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும்.

இவ்வளவு கெடுபிடிகளையும் கடந்து, சித்ரா பெüர்ணமியன்று, வருடத்தில் ஒரு நாள் சுமார் எட்டு மணிநேரம் நடக்கும் இந்தக் கோவில் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் மக்கள் கூடுகிறார்கள்.

கேரள, தமிழக அதிகாரிகள், கோவிலுக்குச் செல்லும் சுமார் 40,000 பொது மக்களைக் குமுளியிலிருந்து ஜீப்புகளில் அசுர வேகத்தில் ஆறு கி.மீ. மலைப் பாதையில் ஓட்டிச் சென்று கண்ணகிக் கோவிலில் விட்டு, பின்பு திரும்பவும் அவர்களைக் குமுளியில் இறக்கி விடும் குமுளி ஜீப் டிரைவர்கள், இந்த நிகழ்ச்சியைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க விழையும் பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் படும்பாட்டைச் சொல்லி மாளாது.

கண்ணகியைத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாகச் சிலாகித்துக் கொண்டிருக்கும் நம்மால் அந்தக் கண்ணகியை அமைதியாக வழிபடக்கூட முடியவில்லை என்பதே இன்றைய நிதர்சன உண்மை.

செல்வச் செழிப்பான கண்ணகியின் வண்ணச் சீரடி மண்மகள் பார்த்திலள் என்று எந்த நேரத்தில் பாடினானோ இளங்கோ... புலவன் வாக்குப் பொய்யாகாது என்பார்கள். ஆமாம், மங்கலதேவிக் கோட்டத்தில் கண்ணகியின் வண்ணச் சீரடியை மண்மகள் பார்க்கவே முடியாதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.