ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மரங்களிடம் தவறில்லை

வேல் மரங்கள் என்பவை ஒன்றல்ல, இரண்டல்ல; 50, 60 வகைகள் உள்ளன. இந்தியாவில் காணப்படும் வேல் மரங்களில் முக்கியமாக எட்டையும், வேறு குடும்பத்திலிருந்து இரண்டையும் சேர்த்துக் கொண்டு பத்து மரங்கள் எனக் குறிப்பிடலாம்:

News image
Updated On :30 மார்ச் 2014, 8:24 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

வேல் மரங்கள் என்பவை ஒன்றல்ல, இரண்டல்ல; 50, 60 வகைகள் உள்ளன. இந்தியாவில் காணப்படும் வேல் மரங்களில் முக்கியமாக எட்டையும், வேறு குடும்பத்திலிருந்து இரண்டையும் சேர்த்துக் கொண்டு பத்து மரங்கள் எனக் குறிப்பிடலாம்: கருவேல், வெள்வேல், கஸ்தூரி வேல், குடை வேல், இலைக் கருவேல், இஸ்ரேலியக் கருவேல், சீமைக் கருவேல், மான்செவிக் கருவேல் ஆகியவை அக்கேசியா குடும்பம். எனினும் வெள்வேலைப் போல வடிவமைப்புள்ள வன்னி, சூபாபுல் ஆகிய இரண்டையும் சேர்த்தால் பத்து. இப்பத்தும் கால்நடைகளுக்குகான உணவு.

வேல் மரங்களைப் பற்றிய சில கருத்துகள் ஊடகங்களில் விவாதப் பொருளாகிவிட்டன. மரங்களை நாம் வளர்க்கும் முறையில் தவறு உண்டே தவிர, மரங்கள் என்றுமே தவறானவை அல்ல. 1960களில் டென்மார்க் நிதி உதவியுடன் தமிழ்நாட்டின் ஏரிகளில் கருவேல் நடப்பட்டது. கருவேல் நீர் நிலைகளில் வளரக் கூடியது. அதே சமயம் சீமைக் கருவேல் நீரில் வளராது. கருவேல் மரத்தின் வேரும் சீமைக் கருவேல் வேர் போல நீண்டு செல்லக்கூடியது. கருவேல் நடப்பட வேண்டிய இடம் கரிசல் காடு. கரிசல் பூமி தவிர கரைப் பாதுகாப்புக்கு ஏற்ப, நிலப்பகுதியில் நடலாம். ஏரிப்படுகையில் நடுவதை ஏற்க முடியுமா? மனித நலவாழ்வுப் பிரச்னையும் உண்டு.

பல்வகையான வேல் மரங்களில், கருவேலில் மட்டும் அதிகபட்சமாக டானின் என்ற வேதிப்பொருள் உள்ளது. ஏரிகளில் சுத்தமான மழைநீர் சேமிக்கப்படுகிறது. மழைநீர் சாஃப்ட் வாட்டர். கருவேல் மரத்தின் டானின், ஏரி நீரில் கரைந்து, குடிநீர் ஹார்ட் வாட்டராகி விடுகிறது. டானினுடன் இதர உப்புகளும் சேர்ந்து விடுவதால், தொடர்ந்து அப்படிப்பட்ட நீரைப் பருகும்போது சிறுநீரகம் பழுதடையும் வாய்ப்பு உண்டு.

கருவேல் பெரும்பாலும் வெட்டுப்பட்டு விறகாகிறது. நின்று எரியும். செங்கல் சூளைகளுக்கும் பாய்லர்களுக்கும் ஏற்றது. மண்வெட்டிக் காம்பு தவிர இதனால் வேறு பயன் இல்லை. கோந்து எடுக்கலாம். பட்டையிலிருந்து பல்பொடி செய்யப்படுகிறது. "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி'. கருவேலம் பட்டையின் துவர் பல் துலக்க சரிப்படும். இது முள் மரம். குச்சியை ஒடித்துப் பல் தேய்க்க இயலாது.

வேல் மரங்களில் உயரமாக வளர்ந்து கனமான மரத்தை வழங்குவது வெள்வேல். நிறைய நிறையும் தரும். ஏற்றுமதிக்குரிய தரமான கோந்தும் நிறையப் பெறலாம். வெள்வேல் மரப் பட்டை மருத்துவ குணம் உடையது. "வேலம் பட்டை மேகத்தை நீக்கும் - ஆலம் பட்டை பித்தத்தை நீக்கும்' என்பது முதுமொழி.

வெள்வேலில் துவர்ப்பு குறைவு. டானின் அளவும் குறைவு. ஆகவே நொதிக்கும் திறன் அதிகம். இனிப்பைச் சேர்த்தால் ஆல்கஹால் உற்பத்திக்குரிய துணைப் பொருளாகச் செயல்படும். திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மனின் ஆலயத் தலமரம் வெள்வேல். "திருவேல்' என்பது வெள்வேலை மட்டுமே குறிக்கும்.

அகேசியாக் குடும்பத்தின் அரியதொரு படைப்பு கஸ்தூரி வேல். நல்ல வாசனை மரம். இது குறுமரம். கஸ்தூரி வாசனை போல் மலர் மணக்கும். இப்பூக்கள் மஞ்சரியாக இருக்கும். மஞ்சரி என்றால் ஒரு மலருக்குள் உருண்டை வடிவில் கேசரங்கள் திரளாயிருக்கும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரும்பும் கடம்ப மலரும் மஞ்சரியே. கடம்ப மலர் என்பது லட்டு வடிவில் பெரிதாயிருக்கும். கஸ்தூரி வேல் மஞ்சரி சீடை வடிவில் உள்ள உருண்டைப் பூ. இந்த மலரிலிருந்து "கேசி பர்ஃப்யூம்' எடுக்கப்படுகிறது.

குடை வேல் என்பது அழகு மரம். இதுவும் ஒரு குறுமரம். 15 அடிக்கு மேல் உயராமல் கிளைகள் திரட்சியாக வளர்ந்து மரத்திற்குக் குடை பிடிக்கும். ஓவியர்கள் வரையும் மர ஓவியம் போல் காட்சி தரும் இம் மரம், முள்களைத் தானாகவே உதிர்க்கும். காலணி இல்லாமல் இம்மரத்தடியில் கால் பதிப்பது கடினம். காங்கேயம் மாடுகள் வளரும் கோரங்காட்டுப் பகுதியில் குடை வேல் மரங்கள் அதிகம்.

இலைக் கருவேல் மரம் என்பது ஆஸ்திரேலிய மரம். இது அபூர்வமாகவே காணப்படும். இதை கத்திக் கருவேல் என்றும் அழைப்பார்கள். சீனாவில் இம்மரம் அதிகம் உண்டு. நகரங்களில் அழகு மரமாக வளர்க்கப்படும் இதில் முள்கள் இராது. இலைக் காம்பே இலைக் கொத்தாகிக் கருக்கரிவாள் போல் காட்சி தரும். இதை நறுக்கி சவுக்கைப் போல் எரிதுரும்பாகப் பயன்படுத்துவார்கள். வேல் என்ற பெயர் இல்லாத பரம்பை, கருங்காளி மரங்கள், அக்கேசியா குடும்பத்தின் மரங்கள்.

இப்போது சீமைக் கருவேல் அல்லது வேலிக்காத்தான் எனப்படும் பாவப்பட்ட மரத்தின் புண்ணியங்களை அறியலாம். ஒரு உயர்ந்த எண்ணத்தில் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சியில் நேருவின் அனுமதியுடன் ஒரு நல்ல காரணத்திற்காக இந்திய ரயில்வே இருப்புப் பாதைகளின் இருமருங்கிலும் சீமைக் கருவேல் விதைகள் தூவப்பட்டன.

1950-60 கால கட்டத்தில் கடுமையான விறகுப் பஞ்சம் நிலவியது. இன்று போல் அன்று கேஸ் அடுப்பு இல்லை. ஏன், மண்ணெண்ணெய் ஸ்டவ் கூட அபூர்வம். சமையலுக்கு விறகும் அடுப்புக் கரியும்தான் வழி. சென்னை நகரில் ஒவ்வொரு வீதியிலும் 2 அல்லது 3 விறகுத் தொட்டிகள் இருந்தன. சவுக்கு விறகு, புளிய விறகு கிடைத்தன. அவை கிட்டாத நிலையில் சீமைக் கருவை விறகாக விற்கப்பட்டன. வறட்சியில்கூட வளரக் கூடிய பாலை நில மரம் இது.

வட அமெரிக்காவின் பாலை நிலப் பகுதியான அரிசோனாவைத் தாயகமாகக் கொண்ட இம்மரத்தை வட இந்தியப் பாலைவனத்தைப் பசுமையாக்கும் நோக்கில் 1876இல் லெப்டினண்ட் கர்னல் ஆர்.எஸ். பெட்டோம் என்பவர் பிரேசிலிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார். இதில் வியப்பான விஷயம் எதுவெனில், சீமைக் கருவேல் விதை சிவப்பிந்தியர் உணவு. மாவாக்கி ரொட்டியாக உண்பார்கள். ஒரு மரம் சராசரியாக 20 கிலோ விதை வழங்கும். செவ்விந்தியர்களைப் போல் பாலை நிலப் பகுதி இந்தியர்களுக்கு இது உணவாகவும் பயனாகும் என்ற நல்லெண்ணம் கர்னல் பெட்டோமுக்கு இருந்திருக்கலாம்.

ஆனால், நேரு நினைத்தது வேறு. விறகுப் பஞ்சம் காரணமாக மக்கள் வனத்திலுள்ள மரங்களை வெட்டி விறகாக்கி வந்ததைத் தடுக்கவே, இந்தியாவில் இதைப் பரவச் செய்தார் என்ற கருத்தும் உண்டு. சீமைக் கருவை சரியான நேரத்தில் இந்தியாவில் பரவியிரா விட்டால் இந்திய வனப் பகுதியில் கணிசமான அளவில் மரங்கள் அன்றே அழிந்திருக்கும். இன்று வீட்டுச் சமையலுக்கு விறகு பயன்பாடு குறைந்திருந்தாலும், கிராமங்களில் இன்னமும் கணிசமான அடித்தட்டு மக்களின் எரிபொருள் செலவு இதனால் இனாமாகக் கிடைக்கிறது.

ராஜஸ்தான், குஜராத் மாநில விவசாயிகள் சீமைக் கருவேல் விதைகளை மாவாக்கி கறவை மாடுகளுக்கு வழங்கி கடலைப் பிண்ணாக்கின் தேவையைக் குறைத்துக் கொள்கிறார்கள். விதைகளில் 30 சதவீதம் புரதமும் 60 சதவீதம் மாவுப் பொருளும் உள்ளன.

சீமைக் கருவையை நான் 50 ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள எனது கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விதைத்து மரமாக்கி அப்போது விறகுத் தேவையை சமாளித்தேன். 10 ஆண்டு கழித்து அம்மரங்களை அழித்து எள், நிலக்கடலை விதைத்ததில் அதிக மகசூல் பெற்றேன். அதுமட்டுமல்ல. பி.எச். 9 சதவீதமாக இருந்த களர் நிலம், பி.எச். 7.8 சதவீதமாகக் குறைந்து, மண் வளமுற்றது.

பாலை நிலத்திலும், உவர் நிலங்களிலும் சீமைக் கருவேல் பசுமையாக இருப்பதன் காரணம், இதர வேல் மரங்களை விடவும் அதிக அளவில் மண்ணில் நைட்ரஜனை சேமிப்பது புலனாகிறது. நீர் இல்லாவிட்டாலும் காற்றில் உள்ள நைட்ரஜனை (ஈரப்பசை) சுவாசித்து உயிர் வாழ்ந்து மண்ணுக்கும் வழங்குகிறது.

களர், உவர் நில பிரச்னைகளுக்கும் விடை அளிப்பதால், விவசாயத்திற்கு உதவாத நிலங்களில் இவை வளர்வதை அனுமதிப்பதில் நன்மையும் உண்டு. மெக்சிகோவிலிருந்து அறிமுகமான சூபாபுல்லுக்கும் சீமைக் கருவை போல் அமைப்பு உண்டு. முள் இல்லை. சூபாபுல்லும் விதை கொட்டி அடர்ந்த காட்டை உருவாக்கும். இதரப் பயிர்களை வளர விடாது. அதுவே நிறைய பயன்களைத் தருகிறதே. எனவே அங்கு இதரப் பயிர் தேவையுமில்லை.

சூபாபுல்லைப் போல் வன்னியும் பசுக்களின் கொடை. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் சூபாபுல் தழை, வன்னித் தழை, வேலிக் கருவை விதைகள் இவற்றைக் கொண்டு புஷ்டியான கால்நடைகளைப் பெறுகின்றனர். நெய்வேலி காட்டாமணக்கு, வெங்காயத் தாமரை போல் சீமைக் கருவை நீர் உறிஞ்சி அல்ல. பார்த்தீனியம் போல் விஷமும் அல்ல. சொல்லப் போனால் சீமைக் கருவை மண்ணில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவதாகவும் சொல்லலாம்.

இப்போது சீமைக் கருவை விறகிலிருந்து தூளாக்கி மின்சாரம் தயாரிப்பதால் உவர், களர் நில மறுவாழ்வுக்கு இதைப் பயன்படுத்தி ஆண்டுக்கு ரூ.20,000 வருமானம் பெறலாம்.

ஆண்டவன் படைப்பில் அர்த்தம் உள்ளது. அது அது வளர வேண்டிய இடங்களில் வளருமானால் பிரச்னை ஏது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.