ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குப்பைகளல்ல, செல்வம்

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, கனரகத் தொழில்களைப் பொதுத் துறையின் ஏகபோகமாக ஒதுக்கி அவை வளர்ந்தபோது "பொதுத் துறை நிறுவனங்களே புனிதமான இந்தியக் கோயில்கள்' என்று வர்ணித்தார்.

News image
Updated On :14 மே 2014, 8:23 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, கனரகத் தொழில்களைப் பொதுத் துறையின் ஏகபோகமாக ஒதுக்கி அவை வளர்ந்தபோது "பொதுத் துறை நிறுவனங்களே புனிதமான இந்தியக் கோயில்கள்' என்று வர்ணித்தார்.

1990க்குப் பின் "உலகமயமாதல்' என்ற பெயரில் இந்தியாவுக்கள் நுழைந்த பன்னாட்டு பூதங்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சோஷலிச வேர்களில் அமிலத்தைக் காய்ச்சி ஊற்றின. இந்திரா காந்திக்குப் பின் பொதுத் துறை நிறுவனப் பங்குகளை மலிவு விலைக்கு விற்று சோஷலிசத்தை இருக்குமிடம் தெரியாமல் செய்து, நேரு கட்டிய ஆலயங்களை இடித்துத் தரைமட்டமாக்கியது நேரு - இந்திரா வாரிசுகளே.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் சோஷலிசக் கோயில்கள் இடிபட்டாலும், புணே நகர முனிசிபல் கார்ப்பரேஷன் குப்பை மேடுகளைக் கோபுரங்களாக மாற்றி வருவது ஆறுதலான விஷயம்.

இனி இந்தியாவின் எதிர்காலம் குப்பையில் உள்ள செல்வங்களில்தான் என்று புணே நகர முனிசிபல் கார்ப்பரேஷன் புரிந்துகொண்டு குப்பைக் குவியல்களைக் கோயில்களாக மாற்றியது எப்படி?

நாள்தோறும் பல்லாயிரம் டன்கள் என்ற அளவில் நகரங்களைச் சுற்றியுள்ள ஏரி குளங்களில் மலை மலையாகக் குப்பைகளைக் கொட்டி நாலாப் பக்கங்களிலும் காற்று வீசும்போது மூக்கைத் துளைக்கும் நாற்றங்களை ஏற்படுத்தி, நோயைப் பெருக்கி, அக்குப்பைக் குவியலுக்கு அருகில் குடியிருக்கும் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வதுதான் ஒவ்வொரு ஊரிலும் நாம் காணும் காட்சி.

ஆனால் இதற்கு நேர்மாறாக மிகச் சிறந்த முறையில் திடக்கழிவு நிர்வாகம் செய்து குப்பைகளைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும், நிரந்தர வருமானத்தையும் வழங்கி இன்மணம் பரப்பி வரும் புணே முனிசிபல் கார்ப்பரேஷனின் பணி, மற்ற எல்லா இந்திய நகரங்களுக்கும் வழிகாட்டி எனலாம்.

மாதிரிக்கு புணே நகரின் ஒரு இடமாகிய ஆந்த் வார்டு அலுவலகத்திற்குள் நுழைவோம். முன்பு மலைபோல் குப்பை குவிந்திருந்த இடத்தில் இப்போது குப்பையே இல்லை. இங்கு பிரித்து எடுக்கப்பட்ட ஈரமான மக்கும் குப்பைகள் வந்ததும் அங்கு கட்டப்பட்டுள்ள மீத்தேன் எரிவாயுக் கொள்கலனுக்குள் கொட்டப்பட்டு ஜெனரேட்டர் மூலம் மீத்தேன் மின்சாரமாக மாற்றப்பட்டு விடுகிறது.

நாளொன்றுக்கு 5 டன் மக்கிய குப்பைகளைச் சீரணமாக்கும் உயர்ந்த மீத்தேன் எரிவாயுக் கலன், குப்பையில் மலர்ந்த கோயிலாகக் காட்சி தருகிறது. கெட்டுப் போன பழங்கள், காய்கறிகள், கசாப்புக் கழிவுகள், எச்சில் உணவுகள், பச்சை இலைகள் அக்கொள்கலனில் கொட்டப்பட்டாலும் கெட்ட வாசனை இல்லை. ஈக்கள் மொய்க்கவில்லை. கழுகுகள் வட்டமிடவில்லை.

மீத்தேன் மின்சாரம் எடுத்த பின்பு மிஞ்சும் சேறு வெளியேற்றப்பட்டுத் தரமான கம்போஸ்டாகவும் மண்புழு உரமாகவும் மாற்றப்பட்டு மணம் வீசும் மலர்ச் செடிகளுக்கு வழங்கப்படுவதால், ஒரு கோயிலையும் சுற்றியுள்ள நந்தவனங்களையும் ஒருங்கே காணலாம். அசுத்தங்கள் தூய்மையாகும் இந்த இடத்தை ஆலயமாக மதிப்பதில் என்ன தவறு? ஆந்த் வார்டில் உள்ளதைப் போல் மேலும் 20 ஆலயங்கள் (மீத்தேன் எரிவாயு - மின் கொள்கலன்கள்) புணே நகரில் உள்ளன. மாதிரிக் குடியிருப்பு திட்டமாகவும் இவை செயல்படுகின்றன.

புணே முனிசிபல் கார்ப்பரேஷன் இரண்டு வகையில் திடக் கழிவு மேலாண்மை செய்கிறது. முதல் வகை மேலாண்மையில், மக்கும் குப்பைகளைப் பிரித்து மீத்தேன் மின்சார உற்பத்தியில் 4,000 குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த முதல் வகையை மாதிரிக் குடியிருப்புத் திட்டம் எனலாம். இரண்டாம் வகையில் பிரிக்கப்படாத குப்பை மின் உற்பத்தி.

மாதிரிக் குடியிருப்பு எரிவாயு மீத்தேன் மின் திட்டப் பொருளாதார விவரப்படி நாளொன்றுக்கு 6,750 டன் மக்கும் தன்மையுள்ள குப்பை மேலாண்மை மூலம் 1.56 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யலாம். 22 கி.வா. தாங்கும் சக்தியுள்ள மின் இணைப்புகள் மூலம் 8.58 லட்ச ரூபாய் மதிப்புள்ள கிரிட் மின்சாரம் மிச்சம் பிடித்து கார்பன் கிரெடிட்டும் பெறலாம். 250 தெரு விளக்குகளை எரிய விடலாம். மீத்தேன் நீக்கப்பட்ட சேறு அப்படியே கம்போஸ்டு உரமாகவோ மண்புழு உரமாகவோ மாற்றப்பட்டு சுமார் 7.2 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரசாயன உரப் பயனீட்டைக் குறைக்கலாம்.

குப்பை கொட்டும் இடத்திலேயே மக்கும் குப்பை பிரிபடுவதன் மூலம் 43.87 லட்ச ரூபாய் மதிப்புள்ள போக்குவரத்துச் செலவை மிச்சம் செய்யலாம். இவ்வகையில் மொத்த சேமிப்பு 59.56 லட்சம் ரூபாயில், குடியிருப்பு நிர்வாகச் செலவு 22.50 லட்ச ரூபாய் போக மீதி 37.42 லட்ச ரூபாய் லாபத்தை மாதிரிக் குடியிருப்புத் திட்டம் மூலம் பெறலாம் என்று கணக்குப் போட்டு வழங்கியுள்ள என்புரோ டெக்னிக்கல் சொலுஷன் என்ற பயோ எரிசக்தி நிறுவனத் தலைவர் சஞ்சய் நந்த்ரே என்பவர்தான் புணே வெற்றிக்கதையின் பின்புலம். மராட்டிய மாநிலத்தில் உள்ள பல நகரங்களுக்கு மீத்தேன் எரிவாயு மின்திட்டத்தையும் கார்பன் கிரெடிட்டையும் வழங்கியவரும் இந்த சஞ்சய் நந்த்ரே தான்.

புணேயில் இரண்டு இடங்களில் மட்டும் பிரிபடாத பிளாஸ்டிக் குப்பைக் குவியல்கள் பிரச்னைகளைத் தந்த வண்ணம் உள்ளன. அங்கு அனல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் நீக்கப்பட்டுள்ளதால் இக்குப்பைகளில் ஈரப் பதம் குறைவு. உருலி என்ற இடத்தில் நாளொன்றுக்கு 1,000 டன் எரிக்கும் கொள்கலனும், தெக்காடியில் 700 டன் கொள்கலனும் உள்ள அனல் மின்நிலையங்களின் பிரச்னை தீவிபத்துகள்.

தீவிபத்து ஏற்படும்போது கொள்கலன் பழுதாகிக் குப்பை தேங்கி விடுகிறது. இப்பிரச்னை விரைவில் சரிசெய்யப்பட்டு 2015இல் முழுமையான வெற்றி கிட்டும் என்று புணே முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவாதம் தருகிறது. புணேயின் முக்கால் வெற்றியே ஒரு வகையில் முழு வெற்றிதான். ஏனெனில், பல்லாயிரக்கணக்கான இந்திய நகரங்களில் கால்பங்கு வெற்றிகூட இல்லையே. இப்படிச் செய்யலாம் என்ற யோசனைகூடக் கிடையாது.

புணே நகரக் குப்பைக் கழிவு மேலாண்மையில் பல பயோ எரிசக்தி நிறுவனங்களின் இயந்திர ஆற்றலுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்பும் உள்ளது. சுமார் 170 வாகனங்கள் நாள்தோறும் 250 டிரிப் அடிக்கின்றன.

குப்பைகளில் வீட்டுக் குப்பை 40 சதவீதம், ஓட்டல் குப்பை 25 சதவீதம், தொழிலகக் குப்பை 25 சதவீதம், காய்கறி பழ மண்டிக் குப்பை 10 சதவீதம். இவற்றில் ஓட்டல் - காய்கறி மண்டிக் குப்பைகள் மக்கும் தன்மையுள்ளவை.

அவை தனி வாகனங்களில் ஏற்றப்பட்டு மீத்தேன் எரிவாயுக் கொள்கலன்களுக்குச் சென்றுவிடும். வீட்டுக் குப்பை, தொழிற் கூடக் குப்பைகளில் மக்காத பொருள் அதிகம். இவற்றைப் பிரித்து அனுப்பும் பணியில் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. மக்கிய குப்பையைக் கொண்டு மண்புழு உர உற்பத்தி நேர்த்தியாகச் செயல்படுத்தப்படுகிறது.

மாதிரிக் காலனி குடியிருப்புத் திட்டத்தில் பல்வேறு வரிச் சலுகைகள் உண்டு. வீடுகளில் சோலார் அடுப்பு, மண்புழு உரக் கம்போஸ்ட், முறைப்படியான மழைநீர் சேமிப்பு செய்யும் குடும்பத்திற்கு சொத்து வரியில் ரிபேட்டும் வீட்டுவரியில் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ஏமாற்றுவோருக்கு அபராதமும் உண்டு. மாதிரிக் குடியிருப்புத் திட்டத்தில் மீத்தேன் எரிவாயுக் கொள்கலன் மேலாண்மை அலுவலருக்கு மாதம் ரூ.60,000 சம்பளம்.

இன்றைய இந்தியப் பொருளாதார நெருக்கக்கான தீர்வை புணே நகராட்சிக் குப்பைகள் வழங்கி வருவதை கண்டோம். இந்தக் குப்பைப் பொருளாதாரத்தில் மக்கும் ஈரக் குப்பையின் பங்கு 70 சதவீதம். இதைக் கொண்டு மீத்தேன் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

மீதி 30 சதவீதக் குப்பையில் உள்ள பிளாஸ்டிக், உலோகம், காகிதம், பீங்கான், கண்ணாடி போன்ற மக்காத குப்பைகளைக் கொண்டு அனல் மின்சாரமும் தயாரிக்கலாம். எரித்து முடித்த பின்பு கிடைக்கும் பிளாஸ்டிக் கட்டிகள் மூலம் பிளாஸ்டிக் சாமான்கள் செய்யலாம்.

இந்தியாவில் உள்ள பிற நகரங்கள் புணே நகரத்தைப் பின்பற்றினால் 10 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். காற்றாடி மின்சாரம், சோலார் மின்சாரம் என்பதுபோல் மீத்தேன் மின்சாரம், பிளாஸ்டிக் மின்சாரம் உற்பத்தி செய்து கார்பன் கிரெடிட்டை ஐ.நா. மூலம் பெறலாம்.

இந்தியாவின் எதிர்காலம் நாம் கழிக்கும் குப்பைகளில் இருக்கிறது. இது அசுத்தமாக இருந்தாலும் இந்த அசுத்தங்களைத் தூய்மைப்படுத்தும் பணியில் வருமானமும், வேலைவாய்ப்பும் பெறலாம்.

நம்மிடம் ஒவ்வொரு ஊரிலும் மலைபோல் குவிந்து கிடக்கும் அசுத்தங்களைத் தூய்மைப்படுத்தி மின்நிலைய ஆலயங்களாக மாற்றிவிட்டால் இந்தியா வல்லரசாக மாறிவிடும். செய்வார்களா? சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா?

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.