/

குழந்தைகள் மனதை அறிவோம்

அண்மையில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த நண்பரின் நான்கு வயது குழந்தை என்னைப் பார்த்ததும், "வாங்க அங்கிள்.. வாங்க' என்று வரவேற்றது.

Updated On :14 மே 2014, 8:25 pm

அண்மையில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த நண்பரின் நான்கு வயது குழந்தை என்னைப் பார்த்ததும், "வாங்க அங்கிள்.. வாங்க' என்று வரவேற்றது. எனக்கு வியப்பாக இருநதது. பொதுவாக வீட்டிற்கு வெளி மனிதர்கள் யாராவது வந்தால் ஓடி ஒளிவதுதான் பெரும்பாலான குழந்தைகளின் பழக்கம்.

இந்நிலையில் வீட்டிற்கு வருபவர்களை வாங்க என அன்புடன் அக்குழந்தை அழைப்பதை பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. நண்பரிடம் இது பற்றி கேட்டேன். "குழந்தைகளுக்கு இது போன்ற சின்னச்சின்ன பழக்கங்களை பழக்கிவைக்க வேண்டும் என எனது பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். அதன்படி, குழந்தைகளை பழக்கி வைத்திருக்கிறேன்' என்றார்.

இதுபோல அனைவரும் குழந்தைகளுக்கு சின்னச்சின்ன நல்ல பழக்கங்களை கற்றுத்தந்தால் நன்றாக இருக்கும். சிறு குழந்தைகள் மனதில் பதியும் நல்ல பழக்கம், தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் செல்லும்.

ஆனால், சிலர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள கடைக்குச் சென்று ஏதேனும் பொருள் வாங்கிவரச் சொல்வார்கள். குழந்தைகள் மறுத்தால், "உனக்கு ஒரு மிட்டாய் வாங்கிக்கொள்' எனக் கூறுவார்கள். இங்கு குழந்தைகளுக்கு ஓர் எதிர்பாப்பு உண்டாகி விடுகிறது. அப்படிக் கூறாமல் "நம் வீட்டிற்கு நீ வாங்கிவரா மல் வேறு யார் வாங்கி வருவார்கள்' என குழந்தைகளிடம் கூற வேண்டும்.

பல வீடுகளில் பள்ளிப் பிள்ளைகளிடம், தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிட்டால், அருகில் உள்ள வீட்டுப் பிள்ளைகளைக் குறிப்பிட்டு, "அவனும் உன் வகுப்புத்தான் படிக்கிறான். அவன் எடுத்திருக்கும் மதிப்பெண்களைப் பார். நீயும் எடுத்திருக்கிறாயே' என அடுத்த ஒப்பிட்டுப் பேசும் பழக்கம் உள்ளது. இது நல்லதல்ல.

பல வீடுகளில் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் கண்டிப்பதில்லை. இதனால் அக்குழந்தைகள் வேறு வீட்டிற்கு சென்றால் அங்கும் சேட்டை செய்வதை நிறுத்துவதில்லை. குழந்தைகள் என்றால் சேட்டை செய்யத்தான் செய்யும். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகும்போது தர்மசங்கடமாகிவிடுமல்லவா?

பிள்ளைகளுக்குப் புத்தகம் மற்றும் பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை தொடக்கத்திலேயே ஏற்படுத்திவிட வேண்டும். நமது வீட்டிற்கு வரும் தினசரிப் பத்திரிகைகளைக் கொடுத்து, இதனைப் படித்துப் பார் எனக் கூற வேண்டும். இப்படியே தொடர்ந்து செய்தால் பிள்ளைகளுக்கு வாசிக்கும் ஆர்வம் வந்துவிடும்.

பிள்ளைகள் பாடங்களை படிக்கும்போது, பெற்றோர் டி.வி. பார்க்கக் கூடாது. இதனால் குழந்தைகளின் கவனம் சிதறும். எந்த ஒரு பழக்கத்தையும் குழந்தைகளாக இருக்கும்போதே கொண்டு வந்து விட்டால், பிற்காலத்தில் நிச்சயம் உதவும்.

எனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த நான்கு வயது குழந்தை பால்பாயின்ட் பேனாவால், தனது கையில் ஏதோ கிறுக்கியது. அங்கிருந்தவர்கள் குழந்தையை அடிக்கவில்லை, கடிந்து கொள்ளவில்லை. "உனது கையில் கத்தரிக்காய் படம்தானே போட்டாய்' என அக்குழந்தையின் தாய் கேட்டார். அக்குழந்தை சிரித்தபடியே, கையை விரித்துக் காட்டியது. உண்மையில் அது வெறும் கிறுக்கலாக இருந்தது.

ஆனால் அந்தத் தாய், "இது என்ன படம் என்பது தெரியவில்லை. நீ எது வரைந்தாலும் காகிதத்தில்தான் வரைய வேண்டும்' என அன்போடு கூறினார்கள். இதுபோன்று குழந்தைகள் விஷயத்தில் நாம் சற்று மாற்றி யோசித்தால் நல்லது.

எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்தான். இதனைக் கவனித்த பெற்றோர், அவனுக்கு மேல்நிலைப் பள்ளியில் ஓவியத்தை தனிப் பாடமாக எடுத்து பயிற்றுவித்தார்கள். இப்போது அவர் ஒரு சிறந்த ஓவியராக உள்ளார்.

எனவே, குழந்தைகளிடம் உள்ள விளையாட்டுத் திறமை, கல்வித் திறமை மேலும் எதில் ஆர்வம் உள்ளது என கவனித்து பெற்றோர்கள் செயல்பட்டால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

ஒரு நண்பரின் தோட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த நண்பர் ஒரு மரத்தைக் காட்டி, "இங்கே எல்லா மரங்களும் காய்க்கின்றன. இந்த ஒரு மரம் மட்டும் காய்ப்பதில்லை. எனவே இதனை வெட்டிவிடப் போகிறேன்' என்றார்.

அந்த நண்பரின் தந்தை அந்த மரத்தைத் தடவிக் கொடுத்தார். அந்த மரத்துடன் அவர் பேசினார். "நீ அழகான மரம், பூக்க வேண்டாமா, காய்க்க வேண்டாமா' எனப் பேசி அன்புடன் தடவிக் கொடுத்தார். "ஓராண்டு பொறு. இந்த மரம் நிச்சயமாக காய்க்கும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தந்தை கூறியது போலவே அடுத்த ஆண்டு அந்த மரம் அமோகமாக பூத்தது, காய்த்தது. நண்பருக்கோ வியப்பு.

இதுபோலத்தான் குழந்தைகளும். அவர்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். தோல்வி வரலாம். அதை அன்புடன் அணுகுங்கள். பேசுங்கள். வெற்றி வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உற்சாகமாக உறவாடுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.