ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நீரோட்டமல்ல, இதய ஓட்டம்

கோயமுத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 1970 ஜூன் 19-ஆம் நாள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டையும், விவசாயிகள் குண்டடிபட்டு இறந்ததையும் எவராலும் மறக்க இயலாது.

News image
Updated On :9 அக்டோபர் 2014, 7:56 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

கோயமுத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 1970 ஜூன் 19-ஆம் நாள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டையும், விவசாயிகள் குண்டடிபட்டு இறந்ததையும் எவராலும் மறக்க இயலாது.

நாராயணசாமி நாயுடுவின் இயக்கத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கள பலியானதன் விளைவாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்தது. நெல், கரும்பு போன்ற பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.

இப்படிப்பட்ட சலுகைகள் கிடைத்

தாலும், தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு நிலவும் வறட்சிக்கும், பாசன நீர் - குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கும் முடிவு காண முடியவில்லை.

ஆழ்துளைக் கிணறு தோண்டவும் தடை என்பதால், வாடிய பயிருக்கும் வறளும் தொண்டைக்கும் என்ன பதில் என்று கேட்டபோது, ஒருவர் மேடையில் ஏறி "தேசிய நீர்வழிச் சாலையே தாகம் தீர்க்கும் அருமருந்து' என்றார். "தேசிய நீர்வழிச் சாலையே நிஜமான தேசிய நீரோட்டம்' என்றார்.

லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகளை ஒரு கணம் எண்ணிப் பார்க்கும்போது, தேசிய நீர்வழிச் சாலை தேசிய நீரோட்டம் இல்லை. இந்தியாவின் இதய ஓட்டம், இந்திய ரத்த ஓட்டம். இப்படித்தான் சிந்தனை சென்றது.

நம்மில் பலருக்கும், படித்தவர்களுக்கும், சூழல் போராளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்திற்கும், தேசிய நீர்வழிச் சாலைத் திட்டத்திற்கும் வேற்றுமை தெரியாமல் உள்ளது. அது வேறு. இது வேறு.

செயல்படாமல் உள்ள மத்திய அரசின் நதிகள் இணைப்புத் திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறியாளர் ஏ.சி. காமராஜால் உருவாக்கப்பட்ட திட்டமே தேசிய நீர்வழிச் சாலைத் திட்டம். அப்துல் கலாமின் பாராட்டைப் பெற்று, மாநில அளவில் நதிநீர் இணைப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பிகார் மாநில முதல்வரும் ஏற்றுச் செயல்பட்டாலும், தேசிய அளவில் எழுச்சி பெறவில்லை.

"மேக் இன் இண்டியா' என்ற கோஷத்தை எழுப்பியுள்ள பிரதமர் மோடியின் மெகா உற்பத்தி திட்டத்தில் தேசிய நீர்வழிச் சாலைத் திட்டம் இடம் பெறாதது ஏன் என்று தமிழ்நாட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் சிந்திப்பது நல்லது.

கங்கை - காவிரி பழைய இணைப்புத் திட்டத்தில் தண்ணீரை பம்பிங் செய்து கொண்டு வரவேண்டும். அவ்வாறு பம்பிங் செய்து நீரேற்ற ஒவ்வொரு ஆண்டும் மின்சாரச் செலவு அதிகமாக ஏற்படும் என்பதால் மாநில அரசுகள் புறக்கணித்துவிட்டன.

தவிரவும் பழைய திட்டத்தால் கங்கை - பிரம்மபுத்திரா வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த நவீன நீர்வழிச் சாலை திட்டத்தில் பம்பிங் வேலை இல்லை.

மின்சாரத்தை மிச்சப்படுத்தும் திட்டமாக விளங்கும். மின் செலவுக்கும் வழி இல்லை. நவீன நீர்வழிச் சாலை காமராஜ் திட்டத்தில் நதிநீர் கங்கையில் தொடங்கி குமரி வரை இணைப்பைப் பெற்று கங்கா - குமரி நீர்வழிச் சாலைத் திட்டமாக இயங்கும்.

காமராஜ் தேசிய நீர்வழிச் சாலைத் திட்டத்தில் மூன்று தேசிய நீர்வழிச் சாலைகள் உள்ளன. முதலாவதாக, இமயத்தில் தொடங்கும் வடக்கு நீர்வழிச் சாலை.

இதில் புவியியல் அமைப்புப்படி கடல்மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் கங்கை - பிரம்ம புத்திரா கிளை நதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 4,500 கி.மீ. தூரத்திற்கு சமச்சீர் கால்வாய்கள் உருவாகி மேடு பள்ளம் இல்லாமல் நீரோட்டம் கட்டுப்பட்டு நீர்வழிச் சாலை உருவாகி, சரக்குப் படகுப் போக்குவரத்து ஏதுவாகிறது.

இரண்டாவதாக, மத்திய நீர்வழிச் சாலை. இது கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் 5,750 கி.மீ. தூரம் தெற்கு கங்கை, மகாநதி, நர்மதை, தபதியுடன் அவற்றின் கிளை நதிகளையும் இணைத்து சமச்சீர்க் கால்வாய்கள் வடிவமைக்கப்படுகின்றன.

மூன்றாவதாக, தெற்கு நீர்வழிச் சாலை. இதுவும் கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரவருணி, இவற்றுடன் கேரளத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் அனைத்து நதிகளையும் இணைத்து 4,650 கி.மீ. தூரத்திற்கு சமச்சீர்க் கால்வாய்கள் வடிவமைக்கப்படும்.

தேசிய நீர்வழிச் சாலையின் அகலம் 120 மீட்டர், ஆழம் 10 மீட்டர். மூன்று மண்டல நீர்வழிச் சாலைகளும் ஒருங்கிணைக்கப்படும். மண்டல நீர்வழிச் சாலைகளின் முகப்புகள் மாபெரும் அணைக்கட்டுகளாக அமைந்து வெள்ள நீரை உள்வாங்கி, நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தி ஆண்டுதோறும் 20,000 டி.எம்.சி. வெள்ள நீர் கடலில் கலக்காமல், நன்னீராக நீர்வழிச் சாலைகளில் நிற்கும்.

ஒட்டுமொத்தமாக தேசிய நீர்வழிச் சாலையில் தங்கும் நீர் 450 பில்லியன் கியூபிக் மீட்டர். இது 2050-இன் இந்திய நீர்த் தேவையை நிறைவு செய்யும்.

"ஓடுகின்ற நீரை நடக்கச் செய்ய வேண்டும். நடக்கின்ற நீரை நிற்கச் செய்ய வேண்டும். நிற்கின்ற நீரை நிலத்திற்குள் செலுத்த வேண்டும்' என்ற ஒரு இயல்பான நீர் நிர்வாகப் பணியை தேசிய நீர்வழிச் சாலைகள் செய்யும்.

இந்த தேசிய நீர்வழிச் சாலைத் திட்டத்தில் ஒரு மாநிலத்தின் உபரி நீரை அடுத்த மாநிலத்திற்கு வழங்க வேண்டிய சிக்கல் இல்லை. இதனால், மாநில உபரிநீர் உயருமே தவிரக் குறையாது. வெள்ள நீர் மட்டுமே பற்றாக்குறை மாநிலங்களுக்குப் பயனாகும்.

நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 246 அட்டவணை எண் 7 வரிசை எண் 1/24, எவ்வாறு தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புக்கு வழிசெய்துள்ளதோ, அவ்வாறே தேசிய நீர்வழிச் சாலைக் கட்டமைப்பையும் செயல்படுத்தும். ஆகவே, இதைச் செயல்படுத்த நதிகளை தேசியமயமாக்கும் சட்டம் தேவையில்லை.

இன்றைய விலைவாசி அடிப்படையில் தேசிய நீர்வழிச் சாலை வடிவமைக்க சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் செலவாகலாம். அதேசமயம் இதன் பலனாக ஆண்டு வருமானம் சுமார் 3 லட்சம் கோடி பெறலாம். ஆகவே, இந்தத் திட்டத்தை உலக வங்கி உதவியுடன் ஆமஐகஈ - ஞரச - ஞடஉதஅபஉ விதிமுறைப்படி கட்டி முடித்த பின் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆகவே, நிதிச் சுமை பெரிதாக இல்லை.

இந்த தேசிய நீர்வழிச் சாலைத் திட்டத்தின்மூலம் 60 கோடி மக்களுக்குக் குடிநீர் கிடைக்கும். 6 கோடி ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். இந்தியா முழுவதும் நிலத்தடி நீர் உயரும். தமிழ்நாட்டின் வறட்சிக்கு முடிவு ஏற்படும்.

வேளாண்மையுடன் நன்னீர் மீன் வளர்ப்பு, உப்பங்கழிகளில் தாய் இறால் வளர்ப்பு மூலம் மீன் ஏற்றுமதியில் புதிய எல்லைகளைத் தொடலாம். சுமார் 60,000 மெகாவாட் நீர் மின்சாரம் பெறலாம். ஆண்டுதோறும் 10 லட்சம் கோடி அன்னியச் செலாவணியை } எண்ணெய் இறக்குமதியை - கனரகப் படகுப் போக்குவரத்து மூலம் மிச்சப்படுத்தலாம்.

வெள்ளத்தாலும் புயலாலும் ஏற்படும் பயிர்ச்சேதத்தைத் தவிர்க்கலாம். லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றலாம். தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியபோது இழந்த மரங்களைப் போல் பத்து மடங்கு மரங்களை தேசிய நீர்வழிச் சாலையின் இரு மருங்கிலும் பயிரிட்டுப் பசுமையைக் காப்பாற்றி பூமி உஷ்ணமாவதால் ஏற்படும் காலநிலை மாற்றச் சீரழிவிலிருந்தும் விடுதலை பெறலாம்.

வேளாண் ஏற்றுமதியை மேலும் உயர்த்தலாம். இதனால், உலக உணவுப் பஞ்சத்திற்கே தீர்வு கிட்டும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நதிகளின் இணைப்புக்கு உகந்த திட்டம் வழங்கும்படி அன்றைய நீர்வளத் துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி 1982-இல் தேசிய நீர்வள மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது.

மேற்படி குழு உருவாக்கிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை பம்பிங் செய்து கொண்டு வர, மின் செலவைக் காரணம் காட்டி மாநில அரசுகள் ஏற்கவில்லை என்பது பழைய கதை.

இன்று தேசிய நீர்வள மேம்பாட்டு ஏஜென்சி, தேசிய நீர்வழிச் சாலைத் திட்டமே சரியான மாற்றுத் திட்டம் என்று புகழ்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த தேசிய நீர்வள மேம்பாட்டுக் குழு விரைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது.

இதுநாள் வரை "தாஜ்மஹால்' உலகின் ஏழாவது அதிசயமாக இருந்தது. ஆனால், இந்த தேசிய நீர்வழிச் சாலைத் திட்டம் வடிவமைக்கப்பட்டு இமயம் முதல் குமரி வரை இணைப்பு ஏற்படும்போது, உலகம் இதை எட்டாவது அதிசயமாகப் போற்றும்.

இந்த தேசிய நீர்வழிச் சாலைத் திட்டம் அப்துல்கலாம், நிதின் கட்கரி, பொன். ராதாகிருஷ்ணன் போன்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் இந்த அற்புதத் திட்டத்தை மேக் இன் இந்தியா மெகா உற்பத்தித் திட்டத்தில் சேர்ப்பார்களேயானால், இந்தச் சாதனை மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஓட்டு வங்கியை வலுப்படுத்தலாம்.

பூமி உஷ்ணமாகி ஏற்படப் போகும் காலநிலை மாற்றப் பேரிடருக்கே மருந்தாகக்கூடிய இந்தியாவின் இதய ஓட்டமான இமயம் - குமரி நீர்வழிச் சாலைத் திட்டத்தைப் புறக்கணித்தால், பா.ஜ.க.வை காலம் மன்னிக்காது!

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.