முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு எந்த நோக்கத்திற்காக அன்று திட்டக் குழுவை உருவாக்கினாரோ, அந்த நோக்கம் இன்றைய சூழ்நிலையில் நிறைவேற வில்லை.
முதல் உலகப் போருக்குப் பின் ரஷியாவில் போல்ஷ்விக் புரட்சி ஏற்பட்டது. போல்ஷ்விக் - அதாவது தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் அரசாட்சியைக் கைப்பற்றிய பின் மார்க்சும், ஏங்கல்சும் எல்லா சமூகக் கொடுமைகளுக்கும் தனியார் சொத்துரிமையே காரணம் என்றும் முன்னேற்றத்திற்குரிய ஒரே வழி பொதுவுடைமையே என்று கருதியதைத் திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று லெனின் விரும்பினார்.
உண்மையில் திட்டமிட்டப் பொருளாதாரம் என்பது ரஷியக் கண்டுபிடிப்பு. ரஷிய மாதிரியில் இந்தியாவும் திட்டமிட்டப் பொருளாதார அடிப்படையில் முன்னேற வேண்டும் என்று நேரு நினைத்ததில் வியப்பு இல்லை.
ரஷிய மாதிரியைப் பின்பற்றி ஐந்தாண்டுத் திட்டங்களை இந்தியாவில் வகுத்து, இந்திய வளர்ச்சிக்காக ஜனநாயக வழியில் பலம் பொருந்திய அடித்தளம் அமைக்க நேரு ஆசைப்பட்டார். நேருவின் சிந்தனைக்கு பி.சி. மகலநபிஸ் (ட.இ. ஙஹட்ஹப்ஹய்ஹக்ஷண்ள்) வடிவம் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில், விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டு மாபெரும் அணைக்கட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், இரும்பு, நிலக்கரி போன்ற பல கனரகத் தொழில்கள் பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்டு, "சோஷலிச வழி சமுதாயம்' என்ற கோஷம் எழுப்பப்பட்டது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில், வர்த்தக வங்கிகள் தேசிய உடைமைகளாக மாற்றப்பட்டன.
திட்டமிட்டபடி வளர்ந்த இந்தியாவுக்கு திட்டம் போட்ட பொருளியல் மேதைகளில் பி.சி. மகலநபிஸ் தவிர, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, கே. சிவராமன், கே. சந்தானம், காட்கில், வி.கே.ஆர்.வி. ராவ், சி. சுப்பிரமணியம் போன்றோர் பணியாற்றிய வரை இந்தியா ஒழுங்காக வளர்ந்தது.
மிக முக்கியமாக, ராஜாஜியின் அரிய கண்டுபிடிப்பான சி. சுப்பிரமணியத்தின் அயராத உழைப்பின் பலனாகப் பசுமைப் புரட்சி வெற்றி பெற்றது.
உணவு இறக்குமதி அவமானம் துடைத்தெறியப்பட்டது. பி.எல். 480 மூலம் அமெரிக்கப் பிச்சை கோதுமை இறக்குமதிக்கு மூடு விழா நடத்தினோம்.
எல்லாம் இனிதாக முடியும் வேளையில், உலகமே அங்காடியின்மையால் தவித்தது. 1980-க்குப் பின் பொருளாதார வீழ்ச்சி உலகளாவியதாக இருந்தபோது, உலகமயமாதல் என்கிற "குளோபலிசேஷன்' தத்துவம் மலர்ந்தது.
1980-களில் சோஷலிசம் ஆட்டம் கண்டது. சோவியத் யூனியனின் பொறுப்பற்ற அரசியல், ஊழல், உழைக்காதத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, உற்பத்தியில் தேய்மானம் போன்ற காரணங்களினால் நாட்டின் வளமையை உருவாக்க வேண்டிய பொதுத் துறை நாளாவட்டத்தில் நாட்டுக்கே சுமையானது.
இந்த சமயத்தில்தான் "உலகமே ஒரே அங்காடி' என்ற "குளோபலிசேஷன்' நுழைந்தது. அந்நிய முதலீடுகளுக்கு ஆதரவு பெருகின. சோவியத் யூனியன் சிதறியது. கிழக்கு - மேற்கு ஜெர்மனி ஒன்றானது. ஹங்கேரி பிரிந்தது. யுகோஸ்லோவியா பழையபடி குரோஷியா, போஸ்னியா என்று பிரிந்தது.
ரஷியப் பிரதமர் மைக்கேல் கோர்பச்சேவ் அரசியல் திறப்பு (கிளாஸ்நாஸ்ட்), அமைப்பு மாற்றம் (பிரஸ்த்ராய்க்கா) அறிக்கைகளை வெளியிட்டு ரஷியாவின் இரும்புத் திரையைக் கிழித்தார். ஸ்டாலின் செய்த கொடூரங்கள் அம்பலத்திற்கு வந்தன. முடிவில் அமெரிக்கா வழிவகுத்த அதே முதலாளித்துவக் கோட்பாடு உலக வியாபகமானது.
கம்யூனிச நாடுகளில் அந்நிய முதலீடுகளுக்கும், சுதந்திர வணிகத்திற்கும் சோஷலிசம் வழிவிட்டது. 1990-2000 ஆண்டுகளில் மாறிவிட்டப் பொருளாதார நடைமுறைக்கு ஏற்ப இந்தியாவும் உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகித்து கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு அடிகோலியது. பொதுத்துறை பலவீனமானது.
உலகமயமாதல் அடிப்படையில் கார்ப்பரேட்டுகள் வளரவும், பொதுத் துறை மறையவும் சோஷலிசத் தகுதியுள்ள திட்டக்குழுவின் தேவையே ஜோடனைதான். நியாயமாகப் பார்த்தால் கி.பி. 2000-த்திலேயே திட்டக்குழு கலைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், தனியார்மயமாதல் மற்றும் கார்ப்பரேட்டுகள் வளர்ச்சி தேவை என்ற சூழ்நிலை வந்துவிட்ட பின் திட்டக் குழுவுக்கு வேலை இல்லையே! கடந்த 15 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற நிதித் துறைச் செயலாளர்களுக்ம், வேறு துறை நிபுணர்களும் பழைய செல்வாக்குடனும், அதிகார மிடுக்குடனும் வலம்வரக்கூடிய ஒரு புகலிடமாக மாறிவிட்டது.
குறிப்பாக, மன்மோகன் சிங்குக்கும், சோனியாவுக்கும், சிதம்பரத்துக்கும் வேண்டப்பட்டவரான மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கு திட்டக் குழு தலைமைப் பொறுப்பை வழங்குவது அவர்களது கடமையாயிற்றே!
நல்லவேளையாக இந்தத் திட்டக் குழு அரசியலமைப்புச் சட்ட அதிகார எல்லைக்கு வெளியே இருப்பதால் மோடியின் கலைப்புப் பணி எளிதாகிவிட்டது. திட்டக்குழுவின் பணிகள்,
நடைமுறையில் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மாதிரி ஆய்வுத் துறையும் (National Sample Survey) வழங்கும் புள்ளிவிவரங்களைத் திருத்தும் பணியை திட்டக்குழு செய்கிறது. அரைத்த மாவை அரைப்பதுதான் வேலை.
கடந்த பத்தாண்டுகளில் திட்டக் குழு செய்த பணி என்பது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நியாயமான நிதியைத் தர மறுத்ததுதான்.
ஆண்டுதோறும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை திட்டக் குழு நடத்துவதுண்டு. இது ஒப்புக்குத்தான்.
அப்படி ஒரு முறை அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூட்ட முடிவில் பேட்டி அளித்தபோது, "தில்லிக்கு வந்து திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசிய பிறகு, அலுவாலியா "உங்கள் திட்டச் செலவுக்கான நிதி ஆதாரத்தை நீங்களே தேடிக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறுகிறார். இந்தப் பதிலைக் கேட்க எனக்கு ஒரு தில்லிப் பயணம் தேவைதானா?' என்றார்.
தமிழ்நாடு மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லாத இதர மாநில முதலமைச்சர்கள் எல்லோருக்கும் அதே பதில்தான்.
மோடி முதலமைச்சராயிருந்த காலகட்டத்தில் திட்டக் குழுவுடன் பலமுறை மோதல்கள் நிகழ்ந்ததுண்டு. ஆகவே, திட்டக்குழுவுக்கு மோடி முடிவு கட்டுவார் என்பது எதிர்பார்த்ததுதான்.
அதேசமயம் திட்டக் குழு கலைக்கப்பட்ட பின்னர், அதற்கு மாற்றாக அமையக் கூடிய "திட்ட நிர்வாக சீர்திருத்தக் குழு' எவ்வாறு இயங்க வேண்டும் என்று பிரதமர் மோடி பரிசீலித்து வருகிறார்.
இவ்வாறு அமையவுள்ள புதிய திட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் அதிகார வரம்பு, அந்தந்த அமைச்சரகச் செயலாளர்களின் அதிகார வரம்புக்குள் உள்பட்டதாக விளங்கும்.
ஏனெனில், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நல்லொழுக்கமுள்ள திறமையான துறை சார்ந்த செயலாளர்களுக்கும் திட்டக் கமிஷன் தலைவருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு.
கார்ப்பரேட்டுகளின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு இனி வாராக் கடன் உறுதி செய்யாது என்றும், தன்னிறைவுக் கொள்கையுடன் செயல்படும் பல்வேறு சிறு, குறு பசுமைத் தொழில்கள் காப்பாற்றப்படும் என்றும் நம்புவோம்.
தேசிய உணர்வுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக அமைப்பிலிருந்து மோடி வளர்ந்துள்ள காரணத்தால், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்தைக் கட்டுப்படுத்த தேசியத் தொழில்களில் அதிகம் கவனம் செலுத்துவார் என்று நம்பலாம்.
தேசியத் தொழில் வளர்ச்சி, புத்தூக்கம் பெறும் வழியில் நிதித் துறையும் ரிசர்வு வங்கியும் ஆக்கபூர்வமாகச் செயல்படும் என்றும் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள் புறக்கணிக்கப்படாத வகையில் புதிய திட்ட நிர்வாகக் குழு செயல்படும் என்று நம்புவோம்.
இதுநாள் வரை தண்டச் செலவு செய்துவந்த பழைய திட்டக் குழுவுக்குப் பெரிய கும்பிடு போட்டு விட்டு, மாநில முதல்வர்களின் நியாயமான தேவைகளுக்கு ஏற்ப தக்க நிவாரணம் தரும் அமைப்பாக மையமிட்ட அதிகாரத்தை மாநிலப் பரவலாக்கும் ஃபெடரல் மாதிரியாகப் புதிய திட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு செயல்பட புதிய பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புவோமாக.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.